அப்துல்கலாம் என்ற நவீன சிலை !

அப்துல்கலாம் நமக்கு மாபெரும் ஆளுமையாக முன்னிறுத்தப்பட்டவர். மிக எளிய பின்னனியில் இருந்து விஞ்ஞானியாக முன்னேறியவர் என அறியப்பட்டவர். எளிமை, நேர்மை, உழைப்பாளி என பலவிதங்களில் இவரது பிம்பம் நம்மிடையே எழுந்தது.

இந்தியாவின் 90களின் காலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலிலும், அடிக்கடி கலைக்கப்படும் அரசுகளும், குற்றம்சாட்டப்பட்டு புறக்கணிக்கப்படும் அரசியல்வாதிகளும் நிறைந்து நின்ற காலத்தில் இந்தியாவின் போலி முகமாக இருந்த நடுத்தரவர்க்கத்தின் நம்பிக்கையை நாட்டின் மீதும் , நிர்வாகம்-அரசியல் மீதும் எழுப்புவதற்கு தேவைப்பட்ட ஒரு பிம்பமாக அப்துல்கலாம் முன்னிறுத்தப்பட்டார்.

ஒரு ஆய்வு எஞ்சினியராக வளர்ந்தவர், டெக்னோகிராட் எனும் அதிகாரவர்க்கத்தின் கிளையாக இருக்கும் தொழிற்நுட்ப துறையினராக வளர்ந்தது இந்திய அதிகாரவர்க்கம் தன்னை தோல்வியிடமிருந்து காத்துக்கொள்ள பெரிதும் உதவியது. அவர் விஞ்ஞானிஎன்பதாக சொல்லப்பட்டது. மாறாக அவர் அடிப்படையில் பொறியியல் துறைசார்ந்தவராக இருந்தார் இறுதி வரையில். விஞ்ஞானி என்பது வேறு வகை. இந்தியாவில் விஞ்ஞானிகள் அரசுத் துறையில் உருவாவது யானைக்கு கொம்பு முளைப்பது போன்றது. வேண்டுமானால் தந்தங்கள் கொம்புகளாக காட்டப்படும். மன்மோகன் சிங் எனப்படும் அதிகாரவர்க்க நேர்மை ஆபிசரும், அப்துல்கலாமும் இப்படியாகவே இந்தியாவின் தோற்றுக்கொண்டிருக்கும் ஜனநாயகத்தை காக்க முன்னிறுத்தப்பட்டவர்கள். மன்மோகனின் நேர்மை ஈழ இனப்படுகொலையை பிரசவிக்க செய்தது. குஜராத் இனப்படுகொலையும் ஏபிஜே கலாமின் கனவுகாணுங்கள் முழக்கங்களுக்கு பின்னால் மறைந்து போனது.

இந்தியா துணைக்கண்டத்தில், குறிப்பாக மத்திய ஆசியப் பகுதியில் ஆயுதப்போட்டியை வளர்க்க அணுகுண்டு ஆய்வு பெரிதும் துணை செய்தது. இந்தியாவும், பாகிஸ்தானும், சீனாவும் அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகளாக மாற்றப்பட்ட தருணத்தில் ஆயுதப்போட்டி முன்னெடுக்கப்பட்டு நாட்டின் பட்ஜெட் ராணுவத்திற்கு பெரும் தொகை ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டது. இது பின்னாளில், தனியார் நிறுவனத்திடம் ராணூவ தளவாடங்கள் தயாரிப்பு கொண்டு சேர்க்க ஏதுவாகியது. மோடி அரசு 60% அதிகமாக வெளிநாட்டு முதலீடுகளை ஆயுத உற்பத்தி துறையில் ஈடுபடுத்தி இருக்கிறது.

அப்துல்கலாம் சுய உற்பத்தி, இந்தியாவின் சுதேசி என்றெல்லாம் பேசிய பேச்செல்லாம் நம்முன் அழகிய கனவுகளாக காட்டப்பட்டு பின்வாசல் திறக்கப்பட்டு தனியார்மயம் கொண்டு வரப்பட்டது. ஒரு கட்டத்தில் அணு ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் பேச அப்துல்கலாமும் பயன்படுத்தப்பட்டதையும் நினைவில் கொள்வோம். அவர் எந்த இடத்திலும் அவர் முன்மொழிந்த சுய உற்பத்தி தொழிற்நுட்ப கொள்கை கொலை செய்யப்படுவதை எதிர்த்து குரல் எழுப்பவில்லை. மாறாக அதிகாரவர்க்கம் செய்யும் மக்கள் எதிர்ப்பு நடவெடிக்கைக்கெல்லாம் பிராண்ட் அம்பாசிடராக மாறிப்போனார்.

இந்த பின்னனியில் நடுத்தரவர்க்கத்தினை ஏமாற்றவும் போலியான தேசபக்தியில் ஈடுபடுத்தி தொழிற்நுட்ப அடிமைகளை உற்பத்தி செய்ய அப்துல்கலாம் போன்றவர்கள் தேவைப்பட்டார்கள். அப்துல்கலாம் தனியார்மயப்பட்ட கல்வியை எந்தவிதத்திலும் கேள்விக்குள்ளாக்கவில்லை. மாறாக அவர் அடுத்தடுத்து படியேறி கனவுகளை விற்ற இடங்கள் தொழிற்நுட்ப கல்லூரிகளே. தொழிற்நுட்ப படிப்பே நாட்டின் முன்னேற்றத்திற்கான கல்வி என்பதான பிம்பம் 1990களில் அப்துல்கலாமினை முன்வைத்து அதிகம் விற்பனை செய்யப்பட்டது. இதன் பலனாக இன்று பலலட்சம் பி.இ பட்டதாரிகளை சென்னை வீதிகளில் காணலாம். ஒரு சமமான, பல்துறைகளில் எழுந்திருக்கவேண்டிய அறிவு எழுச்சி இல்லமலேயே காயடிக்கப்பட்டது. எத்தனைபேர் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ, ஏ.டி.ஏ, ஐ.எஸ்.ஆர்.ஓ என்ற ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர்களானார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். ஆனாலும் கனவுகள் இந்தியாவை வளர்க்க விற்கப்பட்டது. மென்பொருள் துறை, உலகமயத்தின் மூலமாக உள்ளே நுழைந்த தொழிற்சாலைகளில் நம் இளைஞர்கள் ஏகத்திற்கும் அடிமையானார்கள். சுயசார்பு என்பது மறைந்து போனது. அப்துல்கலாம் என்ன செய்வார் பாவம், அவர் பின்னால் இருந்து இயங்கியவர்களின் அரசியலை எல்லாம் கேள்விக்குள்ளாக்கும் அரசியல் வல்லமை கொண்டவரல்ல. அப்படியான பண்பிற்கு பழக்கப்பட்டிருந்தால் இந்தியாவின் ஆராய்ச்சி நிலையங்களில் குமாஸ்தா வேலையிலேயே காலம் கழித்திருக்கவேண்டும். எந்த இடத்திலும் அரசின் தவறான கொள்கைகளுக்கு அவர் சிரமம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளவில்லை.

இந்த பின்னனியில் தான் அவர் அணு உலையை நம் தலையில் கட்ட பிராண்ட் அம்பாசிடராக முன்னிறுத்தப்பட்டார். 6 மணி நேரத்திற்குள் அணு உலையை ஆய்வு செய்து பாதுகாப்பானது என்று நம்மை மூளைச்சலவை செய்ய பயன்படுத்தப்பட்டார். எந்தவித ஆய்வு-அறிவியல் நேர்மையுமின்றி மக்கள் விரோத நிகழ்ச்சி நிரலை அங்கீகரித்தார். அணு ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம் அடிபணிந்து போவதை கண்டும் காணாமல் தவிர்த்தவர், கூடன்குளம் அணு உலைக்கு தனது பாரபட்சமற்ற ஆதரவை வழங்கினார். அவர் அணுவிஞ்ஞானி இல்லையெனும் போதிலும் அவரின் வார்த்தைகளை அணு விஞ்ஞானியின் வாக்குமூலமாகவே கருதியது அப்பாவி சுயநல நடுத்தரவர்க்கம். இதற்காகவே வளர்த்தெடுக்கப்பட்டவர்காகவே அவர் இதுநாள் வரை இருந்தார். அவரது எளிமை, நேர்மை, கனவுகள் எல்லாம் இந்தியாவின் பாசிசத்தினை போர்வை கொண்டு மூடி ஒரு தேவதை நம்மை அணைப்பதைப்போன்ற ஒரு போலி பிம்பத்தை வளர்க்கவே உதவியது.

குஜராத் படுகொலைகள், ஈழப்படுகொலைகள், அவரது ஊரைச்சார்ந்த மீனவர் படுகொலைகள் என எதுவும் அவரை துன்புறுத்தியது கிடையாது என்பது போலவே அமைதிகாத்தவர். அணு உலைக்காகவும், நியூட்ரினோவிற்காகவும் திறந்த அவரது குரல், மக்களுக்காக எழுப்பப்படவே இல்லை. கூடன்குளத்தில் அணு உலைப்பூங்கா அமைக்கப்படவேண்டுமென்றவர். போராட்டக்காரர்களை சந்திப்பதினை எது தடுத்தது என்பது நமக்கு தெரியாது. மீனவர் சமூகத்திடம் வாழ்ந்தவராக சொல்லப்படுபவருக்கு மீனவர் போராடும் சமூகத்திடம் ஏன் பேச இயலவில்லை எனத்தெரியவில்லை.

அவர் இறுதிவரை மக்களுக்கான விஞ்ஞானியாக மாறவே இல்லை. அவரது அறிவும், உழைப்பும், நேர்மையும் சராசரி ஏழை இந்தியனுக்கு பயனற்றதாகவே இருந்தது. மக்களுக்கான விஞ்ஞானம் என்பது அவரது கவனத்திற்கு எட்டியதில்லை. மக்களில் இருந்தே ஆட்சி என்பதை மறைத்து அரசின் கொள்கைகளுக்காகவே மக்கள் என்பதான பிம்பத்தை வெற்றிகரமாக எழுப்பினார். ஒரு ’மோட்டிவேசனல் ஸ்ப்பீக்கர்’ எனும் ’உன்னால்முடியும் தம்பி’ என்பதன் நவீன வாசகத்தையே அவர் பரப்புரை செய்திருந்தார். அதற்கு அவரது அணுகுண்டு வெடிப்பும், ஜனாதிபதி பதவியும் மாணவர்களிடத்தில் உரையாட உதவியது. அவர் இளைஞர்களுக்கு முன்னேறவேண்டுமென்று அறிவுறுத்தினார். வாழ்க்கையில் வேலையில் முன்னேறி சாதனை செய்யவேண்டுமென்று சொன்னார். எந்த கட்டத்திலும் அவல நிலையை முறியடிக்க போராடுங்கள் என்று சொல்லவில்லை. ஊழலை-நேர்மையற்ற அரசியலை எதிர்கொள்ளுங்கள் எனும் குரல் எழுப்பவில்லை. ஒரு உற்சாகபானத்தையே நமக்கு அவர் வழங்கிகொண்டிருந்தார். எந்த காலத்திலும் அவரது அறிவையும், நமது வாழ்வையும் சுரண்டிகொண்டிருந்த இந்திய அரசை அவர் அம்பலப்படுத்தவில்லை. மாறாக அதன் பிம்பத்தை வளர்த்தெடுக்கவே உதவினார்.

ஒரு ஏழை எளிய மனிதனின் அறிவு உழைப்பினை, அவரை உருவாக்கிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்பட்டுவிடாமல் சுரண்டிய அரசினை காக்கும் முகமூடியாக இறுதிவரை பயன்படுத்தப்பட்டார். இதை அவர் அறிந்திருக்கவும் செய்தார். இல்லையெனில் அவர் அந்த இடத்திற்கு வளர்ந்திருக்கவும் முடியாது. தொலைக்காட்சியில் இரங்கல் செய்தி சொன்ன அவரது உதவியாளர், அப்துல்கலாமின் இறுதி , நிறைவேறாத ஆசை குறித்து கேட்டபொழுதில் அவர் சொன்னது, “ இந்தியாவின் ஜி.டி.பி 10% உயர்ந்தால் தான் பொருளாதாரம் வளரும்” என்று கவலைப்பட்டதாக சொன்னார். பெரு நிறுவனங்களுக்கு பயனுடையதாகவும், அன்னிய முதலீடுகளுக்கு ஏதுவாக இருக்கும் குறியீடுகளே அவரது கனவுகளுக்கு தீனியாக இருந்திருக்கிறது. ஒரு கார்ப்பரேட் நிர்வாகிக்குரிய பண்பும், ஒரு ராணுவ யுத்த தளவாடங்கள் தயாரிப்பாளருக்குரிய கனவும், ஒரு அரசு அதிகாரிக்குரிய மக்கள் மீதான பார்வையும் கொண்டவராகவே இறுதிவரை இருந்திருக்கிறார். அவரிடமிருந்து வரும் ஆசிர்வாதங்களை நாம் சுமந்து பயனடையவேண்டுமென்பதே அவரது விருப்பமாயிருந்தது. வெளியேற்றப்படும் ஆதிவாசிகளோ, புறக்கணிக்கப்படும் விவசாயிகளோ, நசுக்கப்படும் உள்நாட்டு சிறு தொழில் உற்பத்தியாளர்களோ, கொல்லப்படும் தேசிய இனமக்களோ அவரது சிந்தனையை தொந்தரவு செய்யவில்லை என்பதைவிட பெரிய ஏமாற்றம் என்ன இருக்கமுடிகிறது. இந்த நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரும் இனப்படுகொலை அவரது காலத்தில், அவரது கனத்த மெளனத்தை சாட்சியாக வைத்து நடந்தது. விவசாயிகளின் தற்கொலைகளோ, ஆதிவாசிகளின் படுகொலைகளோ இவர்களை துன்புறுத்தியது இல்லை. இறுதிகாலத்தில் மரணதண்டனை நீக்கவேண்டுமென்று மென்மையாக தனது கருத்தினை பதிவு செய்துவிட்டு நகர்ந்து சென்றிருக்கிறார்.

அப்துல்கலாம் நடுத்தரவர்க்கத்தினரால் கொண்டாடுவார் என்பதற்கு முகநூலே சாட்சி. ஏனென்றால் அவர் இந்த வர்க்கத்திடம் வெற்றிகரமாக வெற்று கனவுகளையும், வலிமையான இந்தியா எனும் பாசிசத்தையும் விற்றவர். ஏழை –எளிய பாட்டாளிகள் சிறிதும் அதிர்ச்சியடையாது கடந்து சென்றுகொண்டிருப்பார்கள். அவர்களை அப்துல்கலாம் எந்தவிதத்திலும் தொடவில்லை எனும் உண்மை நம் முன் அரங்கேறவதையும் பார்க்கவே போகிறோம்.

அப்துல்கலாம் தனது சுயசிந்தனையை முன்வைக்க இயலாத ஒரு ஏழைக்குடியானவனின் தோல்வியுற்ற மகனாகவே அவர் இச்சமூகத்தின் எளிய மக்களிடம் இருந்து விடைபெற்றார். நம்முடைய ஆழ்ந்த அறிவும், உழைப்பும் யாருக்கானது, எவரின் நலனை பிரதிபலிக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் அரசியல் அறிவினை நம்மிடம் கொடுக்காமல் நமக்கு அறிவை கற்றுக்கொடுக்கும் இந்திய கல்வியின் தந்தையான ’வெள்ளைக்காரன் மெக்கல்லே’ இந்தியர்களை அடிமையாக்க வேண்டுமென்கிற தனது குறிக்கோளில் வெற்றிபெற்றதற்கு இதைவிட பெரும் உதாரணம் இருக்கமுடியாது என்பதற்கு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மற்றுமொரு உதாரணமாகவே இருப்பார்.

பார்ப்பன இந்தியா எவரையும் பயன்படுத்தி தனது ஆதிக்கத்தை தக்கவைக்கும் என்பதை இவரின் வாழ்வின் மூலமாக அறிய முடியும். இந்திய பார்ப்பனியத்திற்கு உதவும் ஒருவரை சாதிமத வேறுபாடின்றி ஏற்றுக்கொள்ளும் என்பதை நம்க்கு அப்துல்கலாம் உணர்த்தினார் என்பதற்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

– திருமுருகன் காந்தி

பின்குறிப்பு :

(திருமுருகன் காந்தி அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு எழுதிய அவரின் முகநூல் கருத்துக்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது)