எப்படி இயங்குகிறது அமெரிக்க அரசு இயந்திரம்?

அமெரிக்காவில் அரசு தலையீடே இல்லாமல் மக்கள் இயங்க முடியும் என்பது பொதுவான நமது புரிதல்.

சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் என்னைப் போன்றவர்களுக்கு அமெரிக்காவைப் பற்றிய அறிதல் ஏற்பட்டது நாவல்கள், திரைப்படங்கள் மூலம் என்று சொல்லலாம். நாவல்களில் மாணவர்கள் மத்தியில் புகழ் பெற்றவை ‘வெஸ்டெர்ன்’ என்று அழைக்கப்படுபவை. ஆலிவர் ஸ்ட்ரேஞ்ச், லூயீ லாமோர் போன்றவர்கள் எழுதியவை. அவை அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் மக்கள் குடியேறத் துவங்கிய சமயத்தில் அரசின்மையால் ஏற்பட்ட குழப்பங்களையும் வன்முறையையும் பற்றிப் பேசின. மற்றொரு வகை நாவல்கள் துப்பறிபவர்களையும் நீதிமன்றங்களில் குற்றம் புரிந்தவர்களுக்காக வாதாடுபவர்களையும் பற்றியவை. இவற்றில் மாணவர்களைக் கவர்ந்தவை பெரும்பாலும் பெரிமேசன் தொடர்கள். எர்ல் ஸ்டேன்லி கார்டனர் எழுதியவை. கையில் பெரிமேசன் புத்தகத்தை வைத்துக் கொண்டு திரிந்தால் பெண்கள் மயங்கிவிடுவார்கள் என்று என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் கனவு கண்டுகொண்டிருந்தனர். அந்தக் காலகட்டத்தில் திரையரங்குகளில் பத்து மணி காட்சிகளில் பெரும்பாலும் அமெரிக்கத் திரைப்படங்கள்தான் காட்டப்படும். அனேகமாக வெஸ்டர்ன் அல்லது துப்பறியும் திரைப்படங்கள். இவை அனைத்தும் கையில் துப்பாக்கி வைத்திருப்பவனே அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துபவன், அரசு அதிகம் தலையிடாது என்ற எண்ணத்தைத் கொடுத்தன.

இன்றும் தாராளச் சந்தையின் மையம் அமெரிக்கா என்று பேசும்போதெல்லாம் நாம் நினைப்பது அமெரிக் காவில் அரசு தலையீடே இல்லாமல் மக்கள் இயங்க முடியும் என்பதுதான்.

நுணுக்கமான வரையறுப்பு

ஆனால் உண்மையில் அமெரிக்க அரசு இயந்திரங்கள் உலகத்திலேயே மிகவும் சிக்கலானவை. அமெரிக்க மக்களுக்குச் சுதந்திரங்கள் பல இருந்தாலும் மக்கள் சமூகத்தில் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை அவை மிகவும் நுணுக்கமாக வரையறுத்துச் செயலாற்றுகின்றன. எளிமையாகச் சொல்லப்போனால் அமெரிக்காவில் இருவகை அரசு இயந்திரங்கள் இயங்குகின்றன. ஒன்று ‘ஃபெடரல்’ அரசு என்று அழைக்கப்படும் மைய அரசின் இயந்திரம். மற்றொன்று மாநில அரசின் இயந்திரம். பிறப்பிலிருந்து இறப்பு வரை மக்களின் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் விதிகளையும் சட்டங்களையும் அமைத்து அவை பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பவை அவை. பெரும்பாலும் அமைதியாக, திறமையோடு கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுபவை. அதற்காகவே அமெரிக்காவில் 2.2 கோடி அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். மக்கள்தொகையை வைத்துக் கணக்கிட்டால் இந்தியாவில் இருப்பதைவிட ஐந்து ஆறு மடங்காவது அதிகம் இருப்பார்கள். அரசுத் துறைகளும் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன. உதாரணமாக கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 342 துறைகள் மாநில அளவில் இயங்குகின்றன.

மைய, மாநிலச் சட்டங்கள்

மைய அரசின் சட்டங்களை மீறுபவர்களைக் கைதுசெய்து வழக்கு நடத்த மையச் சட்ட ஒழுங்குத் துறை இருக்கிறது. தேசத்துரோகம், வரிஏய்ப்பு, கடத்தல், குழந்தைகளை வைத்து பாலுறவுப் படங்களை எடுத்தல், போதைப் பொருள்களை விற்றல், விமானங்களைக் கடத்தல் போன்ற பல குற்றங்களுக்கு எதிராக மைய அரசினால் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இதே போன்று மாநில அரசுகளுக்கும் தனியாகச் சட்டங்கள் இருக்கின்றன. உதாரணமாக வரி ஏய்ப்புச் செய்பவர்களுக்கு 1 லட்சம் டாலர்கள் வரைக்கும் அபராதம் விதிக்கலாம், ஐந்து வருடங்கள் வரைக்கும் சிறைத் தண்டனை கொடுக்கலாம் என்று மையச் சட்டம் சொல்கிறது. இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். மையச் சட்டங்களை மீறுபவர்களுக்கு மரண தண்டனைகூட விதிக்கப்படலாம். ஆனால் கொலை போன்ற குற்றங்களுக்குத் தண்டனை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. உதாரணத்திற்கு அலாஸ்கா மாநிலத்தில் கொலை செய்பவருக்கு மரண தண்டனை கிடைப்பது சாத்தியம் இல்லை. ஏனென்றால் அங்கு மரண தண்டனையே கிடையாது. இதே போன்று 19 மாநிலங்களில் மரண தண்டனை கிடையாது. ஆனால் அலபாமா மாநிலத்தில் கொலை செய்தால் மரண தண்டனை கிடைக்கலாம். 31 மாநிலங்கள் மரண தண்டனையை இன்னும் வைத்திருக்கின்றன.

மைய, மாநிலக் காவல் துறையினர்

மைய அரசைச் சார்ந்த காவல் துறையினர் மட்டும் – ஆயுதம் தாங்குகிறவர்கள், கைதுசெய்யும் உரிமை படைத்தவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் அமெரிக்காவில் இயங்குகிறார்கள். இவர்கள் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே யாரையும் கைதுசெய்யலாம். நமது மத்தியப் புலனாய்வுத் துறையை எடுத்துக்கொண்டால் மொத்தம் 7,000 பேர்கூட இல்லை என்பதையும் துறையில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவு என்பதையும் நாம் நினவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மாநிலக் காவல் துறையினர் விவகாரமும் சிக்கலானது. இவர்கள் சாலை விதிகளை மீறுவது, மாநிலத் தலைநகரம் மற்றும் கவர்னர் போன்றவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போன்ற பணிகளைச் செய்கிறார்கள். ஆனால் கவுண்டி என்று அழைக்கப்படும் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கைப் பரமாரிக்கும் பொறுப்பு இவர்கள் கையில் இல்லை.

ஷெரிஃப்

கவுண்டிகளில் சட்டம் ஒழுங்கைப் பரமாரிப்பவர் ஷெரிஃப். இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். எத்தனை வருடங்கள் பதவியில் நீடிப்பார் என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. சில கவுண்டிகளில் ஐந்து ஆறு போலீஸ்காரர்களை வைத்து ஷெரிஃப் தனது பணியைச் செய்ய முடியும். ஆனால் லாஸ் ஏஞ்சலீஸ் போன்ற பெரிய நகரங்களில் ஷெரிஃபின் கீழ் பதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். இந்தப் பதவிக்கும் தேர்தல்கள் மிகவும் மும்முரமாக நடைபெறுகின்றன. சமீபத்தில் அரிசோனா மாநிலத்தில் இருக்கும் மரிகோபா கவுண்டியில் ஜோ அர்பையோ முன்னால் ஆறு முறை வெற்றி பெற்று ஏழாவது முறை தோல்வி அடைந்தார். இவர் மெக்சிகோவிலிருந்து சட்ட விரோதமாக வருபவர்களைச் சுற்றி வளைத்து பிடித்துப் ‘புகழ்’ பெற்றவர். இவர் அரிசோனாவின் டொனால்ட் ட்ரம்ப் என்று அழைக்கப்படுபவர். இவரைப் போல பல ட்ரம்புகள் அமெரிக்கா முழுவதும் ஷெரிஃபுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறுபான்மையினரின் பாடு திண்டாட்டம்தான்.

– பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

நன்றி -தி  ஹிந்து