சவூதியில் நடப்பது என்ன ?

கடந்த வார இறுதியின்போது சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் தனது உறவினர்களான சக இளவரசர்கள் 11 பேரின் கைதுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அவர்களில் சிலர் சவூதி அரேபியாவின் பிரபல முன்னணி தொழிலதிபர்கள் ஆவர். அதிகாரம் மிகுந்த ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை உயர் மட்ட அமைச்சுக்களில் ஏற்படுத்தினார். ஏன்? இது ஒரு திடீர் அரசியல் புரட்சியா? அல்லது தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முன்னெடுப்பின் பதில் நடவடிக்கையா? களையகற்றல் செயன்முறையா? என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போதைய அமைச்சர்கள் சிலர், சில முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். சவூதி கடற்படைத் தளபதி, தேசிய காவற்படைத் தலைவர், நிதி அமைச்சர் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜித்தா உள்ளிட்ட முக்கிய நகர விமான நிலையங்களிலிருந்து தனியார் விமானங்கள் புறப்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் விமானம் மூலம் எவரும் வெளிநாட்டுக்குத் தப்பிவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரிப்பணம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை பாதுகாக்கவும், பதவிகளை தவறாகப் பயன்படுத்தி பயனடைபவர்களை தண்டிக்கவும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு அமைக்கப்பட்டதாக சவூதி அரசு தெரிவித்திருந்தது.கடந்த 2009 ஆம் ஆண்டு சவூதி ஜித்தாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு, புனரமைப்பு நிதி ஒதுக்கீடு என்பவற்றில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் தொடர்பில் இவ்வாணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.

அதிரடி முன்னெடுப்புக்களின் பின்னணி
சவூதி மன்னரின் புதல்வர்களில் ஒருவரான முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் அவர்களின், தன்னகத்தே அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளின் நீட்சியாகவே மேற்படி அதிரடி முன்னெடுப்புக்கள் அமைந்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு பிரிவின் மிக முக்கியமான பதவிகளை கையகப்படுத்திக் கொண்டுள்ள வகையில், முடிக்குரிய இளவரசர் ஆட்சி அரசின் பிரதான இயக்குநராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தனது 32 ஆவது வயதிலேயே முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் நாட்டின் பதில் பிரதமராகவும் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகவும் விளங்குகிறார். (சல்மான் மன்னரும் நாட்டின் பிரதமரும் ஆவார்)
அனைத்து இளவரசர்களினதும் ஏகோபித்த ஆதரவின் அடிப்படையில் மொஹம்மத் பின் சல்மான் முடிக்குரிய இளவரசராக தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இதனடிப்படையில் மொஹம்மத் பின் சல்மானின் மேற்படி வெளிப்படையான பலவந்த அதிகாரக் கைப்பற்றல்கள் அரச குடும்பத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாரிய எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொண்டுள்ளது. சவூதி மன்னராட்சி முறைமையின் பிரகாரம், நவீன சவூதி இராச்சியத்தின் ஸ்தாபகர் எனக் கருதப்படும் இப்னு சஊத் 1953 இல் மரணித்தது முதல் சவூதியின் ஆட்சி அதிகாரம் அவரது மகன்களுக்கு மத்தியிலேயே கைமாற்றப்பட்டு வருகின்றது. மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பல தசாப்தங்களாக தேசிய பாதுகாப்பு துறையின் தலைவராக விளங்கினார். அவரது மறைவுக்கு பின்னர் அவரது மகன் மிதேப் பின் அப்துல்லாஹ் அப்பதவியைப் பெற்றுக் கொண்டார். மறைந்த இளவரசர் நாயிப் 37 வருடங்களாக உள்ளக விவகார அமைச்சராகப் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் அவரது மகன் பதவியேற்றார். மறைந்த இளவரசர் சுல்தான் பாதுகாப்புத்துறை அமைச்சராக சுமார் அரை நூற்றாண்டு காலம் பதவி வகித்தார். அவரது மகன் காலித் பதில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
ஏனைய அரச குடும்பத்தினரை பதவி நீக்கம் செய்து, குறித்த பதவிகளை தான் கைப்பற்றிக் கொண்டதன் மூலம் காலாகாலமாக பின்பற்றப்பட்டு வந்த இந்நடைமுறைக்கு முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் முடிவு கட்டினார். அனைத்து ஆட்சி அதிகாரங்களையும் தனது பரம்பரைக்கு (தனக்கும் தனது தந்தைக்கும் தனது நெருங்கியவர்களுக்கும்) பெற்றுக் கொண்டார். இவரது சகோதரர் அமெரிக்காவுக்கான சவூதியின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த மன்னர் அப்துல்லாஹ்வின் மகனும் ஆலோசகராகவும் தேசிய பாதுகாப்புத்துறை தலைவராகவும் விளங்கிய இளவரசர் மிதேப்பின் பதவி நீக்கம் குறிப்பிட்டுக் கூறக் கூடியதொன்று. இந்த பதவி நீக்க முன்னெடுப்பின் உள்நோக்கத்தை அறிந்து கொள்வது பாரிய கடினமான விடயமல்ல. இராச்சியத்தின் அதியுயர் இராணுவ பதவியில் சரி நிகர் சமமான நபரை பதவியில் நீடிக்க விடக் கூடாதெனும் எண்ணமே உட்கிடக்கையாகும். இது போலவே, இராச்சியத்தின் மிகப் பெரும் செல்வந்தரும், சர்வதேச முதலீட்டாளருமான வலீத் பின் தலாலின் கைது நடவடிக்கையும் இராஜதந்திர நடவடிக்கையாகும். இதன் மூலம் அவரது ஆளுமையைக் கடிவாளமிடுவதும், எவரும் பிடியில் இருந்து நழுவ முடியாது எனும் போக்கை வெளிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த வளர்ந்த 36 சகோதரர்கள் மாத்திரம் இருந்த காலக்கட்டத்தில் அரச பதவி வயதின் பிரகாரம் சகோதரரிடம் இருந்து சகோதரருக்கு கைமாற்றப்படுவது சாத்தியமாயிற்று. 1953 இல் முதல் 2015 இல் மன்னர் சல்மானின் அரியாசனம் வரைக்குமான காலப்பகுதியில் இதுவே சவூதியில் பின்பற்றப்பட்டு வந்தது. நூற்றுக்கணக்கான உத்தியோகபூர்வ இளவரசர்கள் இருக்கின்ற தற்போதைய முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் தலைமுறையில் இவ்வகையிலான ஆட்சிக் கைமாற்றம் சாத்தியமற்றது. முடிக்குரிய இளவரசர் தனது தந்தை மன்னர் சல்மானின் பரம்பரை வழியான தலைமுறைகளை மாத்திரம் அரச பதவியில் அமர்த்த விரும்பலாம். ஆனால், அதற்கு பிரத்தியேக அதிகாரம் வேண்டும்.
மன்னர் சல்மான் தனக்குப் பின்னரான ஆட்சிப் பதவிக்கு, மொஹம்மத் அவரது மூத்த மகனாக இல்லாத போதிலும் ஏன் மொஹம்மத்தை தெரிவு செய்துள்ளார்? எனும் கேள்விக்கு “மொஹம்மத் மிக உறுதியான ஆளுமை மிக்கவர். தக்க சமயத்தில் சாதுரிய முடிவுகளை எடுப்பவர்” என அரசியல் அவதானிகள் கருத்துக் கூறுகின்றனர். கடந்த வாரம் மொஹம்மத் அதனையே செய்துள்ளார்.
படிமுறைப் போக்கிலான. கிரமமான தொடர் மாற்றங்களுக்கு பதிலாக அதிரடியான முன்னெடுப்புக்களை ஏன் அவர் முன்னுரிமைப்படுத்தியுள்ளார்?இதற்கான விடை இன்னும் தெளிவில்லாமலேயே இருக்கின்றது. ஆட்சிக் கவிழ்ப்புக்கான, அரசியல் புரட்சிக்கான முன்னெடுப்புக்கள் மறைமுகமாக நிகழ்ந்திருக்கக் கூடும்; அதனை அறிந்து கொண்ட மொஹம்மத் மேற்படி அதிரடி முன்னெடுப்புக்களை, கைதுகளை மேற்கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பை முறியடித்துள்ளார் என என சவூதி அரசியல் வல்லுநர்கள் ஊகிக்கின்றனர். ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றை செய்யக் கூடிய அத்தனை இளவரசர்களும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் அடியொட்டிய ஊகங்கள் அண்மையில் வானூர்தி விழுந்து நொறுங்கிய விபத்தில் பலியான இளவரசரின் இறப்பிலும் பலத்த சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? போன்ற வாதங்களுக்கு, முடிக்குரிய இளவரசர் மொஹம்மத்தின் அண்மைய அதிரடி முன்னெடுப்புக்கள் எண்ணெய் வார்ப்பதாக அமைந்துள்ளன.
81 வயதாகும் தற்போதைய சவூதி மன்னர் சல்மான் சுகவீனமுற்று இருப்பதால் வெகுவிரைவில் பதவி துறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அரச பதவியைத் தக்க வைக்கும் நோக்குடன் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் தனது தந்தை மன்னராக இருக்கும் காலப்பகுதியிலேயே தனக்குப் போட்டியாகவுள்ளவர்களையும் தன்னை எதிர்ப்பவர்களையும் பதவி நீக்கம் செய்து வருகிறார் என்ற பரவலான கருத்தும் அவதானிகள் மத்தியில் நிலவுகின்றது.
அதிகார மையப்படுத்தல் சவூதியின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குமா எனும் கேள்விக்கான விடை இன்னும் ஒரு தசாப்த காலத்திற்குள் கிடைக்கலாம். எனினும் பாரம்பரிய கொள்கைக்கு சவால் விடுக்கும் வகையில், வாகனம் செலுத்துவதற்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டமை, விளையாட்டரங்குகளில் பெண்களும் அனுமதிக்கப்பட்டமை, இராச்சியத்தின் பிரதான சொத்தான அரம்கோ எண்ணெய்க் கம்பனியின் பகுதியளவிலான உரிமையை விற்றமை போன்ற அதிரடி முன்னெடுப்புக்கள் மூலம் முடிக்குரிய இளவரசர் நாட்டில் பொருளாதார, சமூக மாற்றங்களையும் ஏற்படுத்த முனைவதும் நிதர்சனம். நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கும், இளைய சமூகத்தை கல்வி மையப்படுத்திய நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வதற்கும் முற்று முழுதான, கலப்பற்ற ஆட்சி அதிகாரம் தேவை என முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் கருதுவதாகத் தோன்றுகிறது.
கடந்த மாதம் பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடொன்றில் உரையாற்றுகையில் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் அனைத்து மதங்களையும் ஆதரிக்கும் வகையில் சவூதி அரேபியாவை ‘மிதவாத நாடாக’ மீளக் கட்டமைக்கப் போவதாக வாக்களித்துள்ளார். எனினும் அரசியல் சுதந்திரம் இவரது நிகழ்ச்சி நிரலில் இல்லை போலும். ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த இரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. டுவிட்டர் சமூக வலைத்தள கருத்துப் பரிமாற்றமொன்றுக்கு பல வருடகால சிறைத் தண்டனை விதிப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் சமூக ஆர்வலர்களை விசனம் கொள்ளச் செய்துள்ளது. தற்போதைய சவூதி அரசாட்சியின் போக்கு மிகத் தெளிவாகவே உள்ளது. “எம்முடன் இணைந்து பயணியுங்கள் அல்லது தண்டனையை அனுபவியுங்கள்” என்பதாகவே இவரது போக்கு அமைந்துள்ளது. சாமான்ய மக்களுக்கு மட்டுமல்ல, அரச குடும்பத்தினருக்கும் இச்சுலோகம் பிரயோகிக்கப்படுகிறது.
முடிக்குரிய இளவரசரின் போக்கு தொடர்பில் முன்னர் இருவேறான கருத்துக்கள் நிலவின. தற்போது அரசியல் அவதானிகள் தமது கருத்துக்களில் ஏகோபித்துள்ளனர். இளவரசரின் அதிரடிப் போக்குகள் அரச அதிகாரத்தை வலுப்படுத்தும் பாதையை நோக்கியே பயணிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்துகின்றனர்.

-ஹஸன் இக்பால்

(நன்றி – விடிவெள்ளி செய்தி இதழ் ,இலங்கை )