ஜல்லிக்கட்டு தடையும் பீட்டாவின் வேகன் டயட்டும்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழகமும் கிளர்ந்து எழுந்ததன் காரணத்தால் அவசர சட்டத்தை இயற்றி தற்காலிகமாக அனுமதித்து போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் முடிவில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. இச்சூழலில் ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்த பீட்டாவின் வேகன் டயட் உணவு அரசியல் குறித்த பார்வையே இக்கட்டுரை.

நாம் நினைப்பது போல் சில உயர் வகுப்பினர் பொழுது போக்க ஆரம்பிக்கப்பட்டதல்ல பீட்டா. இங்கிலாந்தில் பிறந்து தில்லியில் வளர்ந்து ப்ளோரிடாவில் வசித்து வரும் இங்கிரிட் நியூகிர்க் எனும் பெண்மணியும் அலெக்ஸ் பசெக்கோ எனும் அமெரிக்கராலும் ஆரம்பிக்கப்பட்ட சாதாரண என்.ஜி.ஓ போல் தோற்றமளித்தாலும் அதன் உலகளாவிய வலைப்பின்னலும் டிரில்லியன்களில் புரளும் உணவு வியாபாரமும் பிரம்மாண்டமானது.

இதன் பிரம்மாண்டத்தின் சாட்சியாக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட பீடாவுக்கு ஹாலிவுட்டின் பிரபல  நட்சத்திரங்கள் ஆதரவளிப்பதோடு இந்தியாவிலும் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராயிலிருந்து ஷாஹித் கபூர், வித்யா பாலன், சன்னி லியோன் வரை அதன் தூதுவர்களாய் விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஷில்பா ஷெட்டி புலியை போல் கூண்டில் அடைபட்டு விளம்பரம் கொடுத்தது பீட்டா பிரம்மாண்டத்தின் அடுத்த நிலை. தமிழ் நாட்டிலும் மாதவன், விஷால், தனுஷ் முதல் ரஜினி மகள்கள், த்ரிஷா, எமி ஜாக்சன் எல்லோரும் அதன் ஆதரவாளர்களே. அவ்வளவு ஏன், நம்ம 56 இஞ்ச் மோடி 2014ம் ஆண்டின் சிறந்த வெஜிடேரியனாக பீட்டாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது நம்மில் எத்துணை பேருக்கு தெரியும்.

பீட்டா மிருக வதைக்கு எதிரான அமைப்பாக தன்னை பிரகடனப்படுத்தி கொண்டாலும் அமெரிக்காவின் வளர்ப்பு பிராணிகள் சந்தையை குறி வைத்து போட்டி நிறுவனங்களை அழித்து பீட்டா கொலை செய்த விலங்குகளின். எண்ணிக்கை எண்ணி மாளாது. காளை மாடுளை ஒழித்து ஜெர்சி மாடுகளை வளர்த்து நோயுற்ற சமூகத்தை உருவாக்க நினைக்கும் பீட்டா மறைமுகமாக நாட்டு கோழிகளை அழித்து கே.எப்.சி போன்ற செயற்கை கோழி இறைச்சிகளையும், இயற்கை வேளாண்மைக்கு மாற்றாக மண்ணை மலடாக்கும் உர பூச்சி நிறுவனங்களையும் வளர்த்து விடுவது மாத்திரமல்ல, இயற்கை வளங்களை சுரண்டும் பூச்சி கொல்லி மருந்துகளான கோக், பெப்சி வகையறாக்களின் பரிபூரண ஆசியுடன் வளர்வதாலே பீட்டாவால் மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் எதிராக போராடும் துணிவு உள்ளது. இந்த பிண்ணணியில் தான் பீட்டா தனக்கு ஆதரவாக வழக்காட 2.5 கோடி கட்டணம் கொடுப்பதாக வரும் செய்திகளை பார்க்க வேண்டும்.

பீட்டாவின் உணவு அரசியலின் ஒரு முக்கியமான அங்கம் தான் வேகன் டயட். நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டிராத Vegan Diet தற்பொழுது பீட்டாவின் இந்திய ஏஜெண்ட்கள் மூலம் பிரபலப்படுத்தப்படுகிறது. பொதுவாக உடல் எடையை குறைக்கவோ அல்லது சில உடல் நல உபாதைகளுக்காகவோ ஜி.எம் டயட், ஜுஸ் டயட், தண்ணீர் டயட், பேலியோ டயட் என பல்வேறு டயட்டுகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் பீடா பிரபலப்படுத்தும் வேகன் டயட் இவற்றிக்கெல்லாம் மாறுபட்டது. அது சைவம் என்பதற்கும் மேலாக மாடு போன்ற மிருகங்களிலிருந்து பெறப்படும் பால், தோல் ஆகியவற்றை கூட உபயோகிக்க கூடாது என்று சொல்லப்படும் தீவிர நுனி சைவத்தை வலியுறுத்துகிறது.

பீட்டா சொல்லும் சைவத்திற்கும் பிராமணியத்தின் சைவத்திற்கும் வேறுபாடு இருந்தாலும் சித்தாந்த ரீதியாக மிருக வதை குறிப்பாக மாடுகளின் விஷயத்தில் ஒன்றுபடுகின்றன. உள்ளூர் மாடுகளை ஒழித்து ஜெர்சி மாடுகளை வளர்க்கும் பீட்டாவும் உள்ளூரில் மாட்டு கறிக்கு தடை விதித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் அல் கபீர் எனும் பெயரில் இயங்கும் பரிவாரங்களுக்கும் இலக்கு ஒன்றி போகிறது. 2000 ம் ஆண்டு மிருக வதைக்கு எதிர்ப்பாக என கூறி பாஜகவின் ஆட்சியில் அத்வானியின் ஆசையோடு உள் நுழைந்த பீட்டா அசைவம் இல்லாத இந்தியாவை நோக்கி தன் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தி கொண்டிருக்கிறது. இப்போது புரியும் மாட்டுக்கறிக்காக அக்லாக்கை கொல்லும் பாஜகவின் இலக்கோடு பீட்டா பொருந்தி போவதை.

மேலும் பீட்டா சொல்லும் வேகன் டயட்டை பின்பற்றினால் பி 12 எனும் புரதச் சத்து, இரும்பு சத்து போன்ற குறைபாட்டுக்காக மாத்திரைகளை தான் உட் கொள்ள வேண்டும் என்பது பீட்டாவே ஒத்து கொள்ளும் உண்மை. இருந்தும் இந்த நுனி சைவ டயட்டை பிரபலப்படுத்த பீட்டா எடுக்கும் பிரம்மாண்ட முயற்சிகளின் பின்னால் உள்ள உணவு அரசியல் அபாயகரமானது. கம்பு,சோளம், கேழ்வாகு போன்ற தமிழரின் பராம்பர்ய உணவுக்கு பதில் சோயாவை பீட்டா அளவுக்கு அதிகமாக பிரபலப்படுத்துகிறது. சோயா பயன்படுத்தினால் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை தாண்டி சோயா பிரபலப்படுத்தப்படுவது கம்பு, கேழ்வரகுக்கு பதில் ஐரோப்பிய குளிர் நாடுகளில் விளையும் ஓட்ஸ் பிரபலப்படுத்துவதற்கு ஒப்பானது. ஒற்றை தேசம், ஒற்றை கலாச்சாரத்தை இந்திய மண்ணில் விதைக்க முயலும் பரிவாரங்களுக்கு பீட்டா உற்ற தோழனாய்  இருப்பதில் ஆச்சர்யம் இல்லை தானே.

–  பொறியாளர் ஃபெரோஸ்கான்