ட்ரம்பின் ஜெருசலம் குறித்த அறிவிப்பும்! சர்வதேசத் தலைவர்களின் எதிர்வினையும்!

முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் புனித பூமியாகக் கருதப்படும் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதாகவும், விரைவில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்துக்கு இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடந்த புதன்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நிகழ்த்தப்பட்ட ட்ரம்ப்பின் புதன்கிழமை உரையானது, சர்வதேச ரீதியில் அதிருப்தி அலைகளை தோற்றுவித்துள்ளதுடன் மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு எதிரான முறுகல் நிலைமையை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

“இஸ்ரேலினது தலைநகராக ஜெரூசலத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் தருணம் வந்துள்ளது. தற்போது இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்திருக்கும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை வெகு விரைவில் ஜெரூசலத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இஸ்ரேலின் எல்லைகள் பற்றிய சர்ச்சைகள் தொடர்பில் எமக்கு கரிசனை இல்லை. எனினும், இஸ்ரேல்-பலஸ்தீன் தொடர்பில் நிலவுகின்ற முறுகல் நிலையை தீர்க்கும் வகையில் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் இருக்கும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இத்தான்தோன்றித்தனமான அறிவித்தலுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள பலஸ்தீன தரப்பு “இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இருந்த கடைசி நம்பிக்கையையும் டொனால்ட் ட்ரம்ப் சிதைத்துவிட்டார். ஜெரூசலத்தின் எதிர்காலத்தை அமெரிக்காவே தீர்மானித்து விட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் எதை தீர்வு காண அவர்கள் உதவ போகிறார்கள்? மேலும் வன்முறைகளுக்கும் அழிவுகளுக்குமே அவர் வழிவகை செய்துள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே எந்தவொரு ஜனாதிபதியும் செய்யத் துணியாத காரியத்தை ட்ரம்ப் செய்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த அறிவித்தலானது, பலஸ்தீனர்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு யுத்தமே இறுதி தீர்வு என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது” என தெரிவித்துள்ளது.
நெருப்புடன் விளையாடும் அமெரிக்கா – பலஸ்தீன ஜனாதிபதியின் கண்டனம்

முஸ்லிம்களின் புனித பூமியான ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிதுள்ளமைக்கு எதிராக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

பலஸ்தீன நாட்டின் தலைநகரமே ஜெரூசலம் என்பதை அவர் மீள வலியுறுத்தியுள்ளதுடன், இஸ்ரேல்-பலஸ்தீன பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு அமெரிக்காவுக்கு இனிமேலும் அருகதையில்லை என சாடியுள்ளார்.

“பலஸ்தீனர்களுக்கு சொந்தமான நிலங்களை மெல்ல மெல்ல சுரண்டிவரும் இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்காவின் வெகுமானமே இந்த அறிவிப்பாகும். இதன் மூலம் இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதை பகிரங்கமாக வெளிக்காட்டுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தன்னிச்சையான அங்கீகாரம் ஜெரூசலத்தின் உண்மை நிலைவரத்தை மாற்றி விடப் போவதில்லை. இஸ்ரேலுக்கு சர்வதேச ரீதியில் ஜெரூசலத்தின் சட்ட அங்கீகாரத்தை இவ்வறிவித்தல் வழங்கிவிடாது. ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அமெரிக்கா நெருப்புடன் விளையாடி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

அடுத்த இந்திபாதா ஆரம்பிக்கும் – ஹமாஸ் எச்சரிக்கை

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்தாலோ அல்லது தனது தூதரகத்தை ஜெரூசலத்திற்கு இடமாற்றினாலோ மற்றுமொரு இந்திபாதா ஆரம்பிக்கப்படும் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“அமெரிக்காவின் பக்கச் சார்பான, தன்னிச்சையான இத்தீர்மானதிற்கு எதிராக மற்றுமொரு இந்திபாதாவை நோக்கி பலஸ்தீனிய மக்களை அழைப்பு விடுக்கிறோம். ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்துள்ளமையானது பலஸ்தீன மக்களுக்கு சொந்தமான நிலங்களை இஸ்ரேல் பலவந்தமாக கைப்பற்றிக் கொள்ளும் பாதகச் செயல்களுக்கு அமெரிக்கா பகிரங்க ஆதரவை வழங்குவதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது” என ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன முரண்பாடுகளின் மையமாக அமைந்திருப்பது ஜெரூசலத்தின் மீதான நிலைப்பாடே ஆகும். இது தொடர்பாக ஜோர்தான் வெளிவிவகார அமைச்சர் சபாஃடி தெரிவித்தபோது, ‘இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அறிவிப்பதானது, உலகளாவிய ரீதியிலுள்ள முஸ்லிம்கள் மத்தியிலும், அரேபிய நாடுகள் மத்தியிலும் பாரிய கோபத்துக்கு ஆளாக நேரிடும். இந்த நடவடிக்கையானது, எரிபொருள் பதற்றத்தை உருவாக்குமென்பதுடன், சமாதான முயற்சிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலுடனான சகல இராஜதந்திர உறவுகளும் துண்டிக்கப்படும் – துருக்கி எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் இதீர்மானம் தொடர்பில் துருக்கி ஜனாதிபதி அர்துகான் முன்னதாக கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

“ஜெரூசலம் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் அடையாளச் சின்னமாகும். அமெரிக்காவின் இத்தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் இஸ்ரேலுடனான சகல விதமான இராஜதந்திர உறவுகளையும் துருக்கி துண்டித்துக் கொள்ளும்” என அர்துகான் எச்சரித்திருந்தார்.
இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு துருக்கி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளமை தொடர்பில் ஹமாஸ் அமைப்பு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

“துருக்கி அரசினதும் துருக்கி மக்களினதும் இத்தனித்துவமான தீர்மானம் பலஸ்தீன் விவகாரம் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள உச்சபட்ச கரிசனையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது” என ஹமாஸ் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சமி அபுஸுஹ்ரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மெத்தனப்போக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நம்பிக்கையை சிதறடிப்பதாக அமைந்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை ஒரு தலைப்பட்சமாக அறிவிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் முன்னதாக தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியபோதே, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் குறித்த தீர்மானம் குறித்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிக்கும் பட்சத்தில் இஸ்ரேல் – பலஸ்தீன் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அது முடிவு கட்டுவதாக அமையும் எனவும், மேலதிக முரண்பாடுகளுக்கு எது இட்டுச் செல்லும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஒருதலைப்பட்சமான இந்தத் தீர்மானத்துக்கு, ஜோர்தான், துருக்கி ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இந்த அறிவிப்பைத் தடுக்கும் நோக்கில் சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்ட முற்பட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடனும் கலந்துரையாடியிருந்த நிலையிலேயே, ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.

அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்துக்கு மாற்றுவதற்கு எதிராக மன்னர் சல்மான் எச்சரிக்கை
நிரந்தர அமைதிக்கான இணக்கப்பாடு எட்டப்படும் வரை இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றும் தீர்மானம் முஸ்லிம்களின் ஆத்திரத்தை தூண்டும் செயலாக அமையும் என மன்னர் சல்மான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் முன்னதாக தெரிவித்திருந்தார்.பிராந்தியத்திலும் உலகிலும் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் ட்ரம்பிடம் இருந்து மன்னர் சல்மானுக்கு தொலைபேசி அழைப்புக் கிடைத்தது.

நிரந்தர அமைதிக்கான இணக்கப்பாடு எட்டப்படுவதற்கு முன்னதாக ஜெரூசலத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் அமெரிக்காவின் அறிவிப்புத் தொடர்பில் ட்ரம்பிடம் சுட்டிக் காட்டிய மன்னர் சல்மான் ‘குறித்த தீர்மானம் சமாதானப் பேச்சுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் அத்துடன் பிராந்தியத்தில் பதட்ட நிலையினை அதிகரிக்கச் செய்யும்’ எனவும் தெரிவித்ததாக சவூதி அரேபிய ஊடக முகவரகம் தெரிவித்துள்ளது.

பலஸ்தீன மக்களுக்கும் அவர்களது வரலாற்று உரிமைகளுக்கும் சவூதி அரேபியா ஆதரவளித்து வருவதாகவும், இந்த ஆபத்தான அமெரிக்கத் தீர்மானம் ஜெரூசலத்தினதும் அல்-அக்ஸா பள்ளிவாயலினதும் அந்தஸ்து காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிமகள் மத்தியில் கடும் கோபத்தினை ஏற்படுத்தும் எனவும் மன்னர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அமைச்சரவை அத்தகைய அறிக்கைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையினை முன்னதாக வெளியிட்டிருந்தது.

அது தொடர்பில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமானால் பேச்சுவார்த்தைகளுக்கு எவ்வித குந்தகங்களையும் ஏற்படுத்துவதில்லை என்ற கொள்கைக்கு முரணானதாக அது அமையும் என மன்னர் சல்மானின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சரவையால் கருத்து வெளியிடப்பட்டது.

ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்டு பலஸ்தீன மக்கள் தமக்கான நாட்டை உருவாக்குவதற்கு சவூதி அமைச்சரவை தனது உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளது.

சர்வதேசத்தின் கருத்துக்கள் மற்றும் அரபு சமாதான முன்னெடுப்புக்களின் அடிப்படையில் பலஸ்தீன மக்களுக்கான நியாயபூர்வமான தீர்வினை அடைந்து கொள்வதற்கான தொடர் முயற்சிகளை பாதிப்புக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் ஏற்படும் மிக மோசமானதும் எதிர்மறையானதுமான விளைவுகள் பற்றி அமெரிக்கா கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரவையினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் அதிரடி முன்னெடுப்பின் பின்னணி
ஜெரூசலத்தில் அமெரிக்கத் தூதரகத்தை அமைத்துக் கொள்வதற்கான சட்டமூலம் 1995 இல் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும், அத்திட்டத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் புஷ் மற்றும் ஒபாமா இத்திட்டத்தை ஒத்திவைத்தே வந்தனர். எனினும், முன்னாள் ஜனாதிபதிகளை தான் பின்பற்றப் போவதில்லை என சூளுரைத்து பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் குறித்த சட்டமூலத்தை வெகுவிரைவில் தான் அமுல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பை 1948 இல் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த காலம் முதலே பலஸ்தீன- இஸ்ரேல் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் பக்கச்சார்பு நிலை அப்பட்டமாக சர்வதேசத்துக்கு வெளிக்காட்டப்பட்டது. காலாகாலமாக இஸ்ரேலுக்கு சார்பாக அமெரிக்கா செயற்பட்டு வந்தாலும் இஸ்ரேல்- பலஸ்தீன் விவகாரத்தில் தாம் நடுநிலை வகிக்கும் நாடாகவும், இஸ்ரேல் – பலஸ்தீன் முறுகலுக்கு தீர்வு காண உதவும் நாடாகவும் சர்வதேசம் மத்தியில் போலி பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா முனைந்து வந்தது.

1948 இல் அரப் – இஸ்ரேல் யுத்தத்தில் மேற்கு ஜெரூசலத்தையும் மற்றும் சிரியா, எகிப்து, ஜோர்தான் உடனான யுத்தத்தின் இறுதியில் 1967 இல் கிழக்கு ஜெரூசலத்தையும் இஸ்ரேல் பலவந்தமாக கைப்பற்றிக் கொண்டது. கிழக்கு ஜெரூசலத்தைக் கைப்பற்றிக் கொண்டதும் ஒட்டுமொத்த நகரும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும், ஜெரூசலம் மீதான இஸ்ரேலின் பலவந்த அதிகார உரிமையை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க மறுத்தே வந்தன. இஸ்ரேல்-பலஸ்தீன் முறுகலில் ஜெரூசலத்தின் சட்டபூர்வ உரிமை யாருக்கு என்பதே தனித்து விளங்கும் காரணியாக திகழ்ந்து வந்தது.

ஜெரூசலம் தொடர்பில் சர்வதேசத்தின் நிலைப்பாடு

1947 ஐ.நாவின் நிலப்பிரிப்பு திட்டத்தின் கீழ் வரலாற்று ரீதியில் புனிதத்துவம் மிகுந்த நகரான ஜெரூசலத்தின் அதிகாரம் பலஸ்தீனுக்கோ, இஸ்ரேலுக்கோ வழங்கப்படாது, சர்வதேச கண்காணிப்பின் கீழ் விடப்பட்டது. தூதர் இப்ராஹீம் அவர்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய மூன்று மதங்களும் ஜெரூசலத்தை உரிமை கொண்டாடியதால் ஐ.நா. இந்நகரின் அதிகாரத்தை விசேடமாகக் கையாண்டது.

ஐ.நாவின் இச்சிபாரிசு தொடர்பில் சட்டை செய்யாத இஸ்ரேல் 1948 போரின் மூலம் மேற்கு ஜெரூசலத்தின் பெரும் பகுதிகளை தன்னோடு பலவந்தமாக இணைத்துக் கொண்டு, ஜெரூசலத்தை இஸ்ரேலின் ஓர் அங்கமாக தன்னிச்சையாக உரிமை கொண்டாடியது. 1967 இல் இடம்பெற்ற யுத்தத்தின் மூலம் அப்போது ஜோர்தானின் கட்டுப்பாட்டின் கீழிருந்த கிழக்கு ஜெரூசலத்தையும், சர்வதேச சட்டங்களை மீறிய வகையில் இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.

இஸ்ரேல் பாராளுமன்றில் 1980 இல் ‘ஜெரூசல சட்டமூலம்’ நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலம் என பகிரங்கமாக உலகுக்கு தன்னிச்சையாக அறிவித்தது.
சர்வதேச சட்டங்களை மீறிய வகையில், தான்தோன்றித்தனமாக ஜெரூசலத்தை தமது தலைநகராக இஸ்ரேல் அறிவித்தமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட ஐ.நா. பாதுகாப்புச் சபை 1980 இல் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி, அதன் மூலம் இஸ்ரேலின் குறித்த அறிவிப்பு ‘செல்லுபடியற்றது’ என சர்வதேசத்திற்கு பிரகடனப்படுத்தியது.
அதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் கிழக்கு ஜெரூசலத்தை “முற்றுகையிடப்பட்ட பிரதேசமாக” ஏற்றுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து எந்தவொரு நாடும் ஜெரூசலத்தின் எந்தவொரு பகுதியையும் இஸ்ரேலின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவோ அல்லது இஸ்ரேலின் தலைநகராகவோ அங்கீகரிக்கவில்லை. மாறாக, ரஷ்யா மாத்திரம் விதிவிலக்காக கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துக் கொண்டது. எனினும், இன்றுவரை உலக நாடுகளின் இஸ்ரேலுக்கான தூதரகங்கள் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரிலேயே நிறுவப்பட்டுள்ளன.

ஜெரூசலத்தில் வாழும் பலஸ்தீனர்களின் நிலைப்பாடு
கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேலுடன் தன்னிச்சையாகவும் பலவந்தமாகவும் இணைத்துக் கொண்ட போதும் ஜெரூசலத்தில் வாழ்ந்த பலஸ்தீனர்களை தமது பிரஜைகளாக இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை.
கிழக்கு ஜெரூசலத்தில் வாழ்ந்து வரும் சுமார் 420,000 பலஸ்தீனர்களுக்கு “நிரந்தர வதிவிட அட்டைகளை” மாத்திரமே இஸ்ரேல் வழங்கியுள்ளது. மேலும் தமது பிரஜைகளில் இருந்து இவர்களை வேறுபடுத்தி, பலவேறு அடிப்படை உரிமைகளை மறுத்தும் வருகிறது.
ஜெரூசலத்தில் வாழ்ந்து வரும் பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் பிரஜைகளாகவோ, பலஸ்தீன் நாட்டுப் பிரஜைகளாகவோ அன்றி நாடற்றவர்களாவே நடாத்தப்பட்டு வருகின்றனர். குறித்த பலஸ்தீனர்கள் கிழக்கு ஜெரூசலத்தின் சுதேசிகள் என்பதையும் பொருட்படுத்தாத இஸ்ரேல் அவர்களை குடியேறிகளாகவே நடாத்துகிறது.
அதேவேளை உலகளாவிய ரீதியில் இருந்து இஸ்ரேலில் குடியேறும் எந்தவொரு யூதர்களுக்கும் துரிதமாக இஸ்ரேலிய பிரஜாவுரிமை வழங்கப்படுகிறது. ஜெரூசலத்தில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக் குடியிருப்புக்களுக்கு எதிராக எ.நா. சபை பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

ஜெரூசலத்தை இஸ்ரேலின் அங்கமாக தக்க வைத்துக்கொள்வதை நோக்காகக் கொண்டு பல இஸ்ரேலிய சட்டவிரோத குடியேற்றங்கள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். சுமார் 200,000 யூதர்கள் ஜெரூசலத்தில் குடியமர்த்தப்பட்டு இஸ்ரேலிய இராணுவத்தின் உயர் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
இஸ்ரேல்- பலஸ்தீன் முரண்பாட்டில் மத்தியஸ்தம் வகிக்கும் நடுநிலைவாதியாக சர்வதேசத்திற்கு தன்னை இனங்காட்டி வந்த அமெரிக்காவின் முகத்திரை ட்ரம்பின் முன்னெடுப்பு மூலம் விலகியுள்ளது.
பிரித்தானியா 1917 இல் பல்போர் பிரகடனத்தின் மூலம் பலஸ்தீன மண்ணில் யூதர்களுக்கான நாட்டை தாரை வார்த்துக் கொடுத்து கடந்த நவம்பர் மாதத்துடன் நூறு வருடங்கள் பூர்த்தியாகியிருந்த நிலையில், சர்வதேச ரீதியில் பலஸ்தீன விடுதலை தொடர்பில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் தீர்மானம், சியோனிஸத்திற்கு சார்பான நிலைப்பாட்டையே அமெரிக்கா கொண்டுள்ளமையை சர்வதேசத்திற்கு அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. பலஸ்தீனில் சியோனிஸ தாயகத்தை உருவாக்கி நிலைநிறுத்தும் முயற்சி தொடர்பில் நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியா ஆரம்பித்து வைத்ததை அமெரிக்கா செவ்வனே செய்து முடித்துள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஜெரூசலம் ஃபலஸ்தீனின் தலைநகரம் – OIC அதிரடிமுடிவு 

இஸ்ரேலால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெரூசலம் ஃபலஸ்தீனின் தலைநகரம் என 57 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான இஸ்லாமிய கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஃபலஸ்தீனின் பகுதிகளைச் சட்டவிரோதமாக ஆக்ரமித்து கைவசப்படுத்தி வைத்துள்ள இஸ்ரேல், அதில் உலக முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் யூதர்களின் புனித நகரான ஜெரூசலேமை இஸ்ரேலின் தலைநகராக்க பன்னெடுங்காலமாக முயன்று வருகிறது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையால் மூன்று மதத்தவருக்கும் பொதுவான புனித நகராக அறிவிக்கப்பட்டு ஜோர்தானின் பராமரிப்பின் கீழ் இருந்துவரும் ஜெரூசலேமை இஸ்ரேலின் தலைநகராக உலகின் எந்த ஒரு நாடும் அங்கீகரிக்காததோடு தூதரகங்களை ஜெரூசலேமில் அமைக்க வேண்டுமென்ற இஸ்ரேலின் கோரிக்கையினையும் நிராகரித்தன.

ஆக்ரமித்து கைப்பற்றப்பட்ட ஒரு இடத்தின்மீது ஆக்மிரத்த நாட்டுக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை என்று மூன்றாவது ஜெனிவா மாநாட்டின் ஒப்பந்தம் கூறுகிறது. சர்வதேசச் சட்ட விதிமீறல் செய்யும் இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு கண்டனத் தீர்மானங்களையும் இயற்றியுள்ளது. வளைகுடா நாடுகளின் அமைதிக்குப் பெரும் சவாலாக விளங்கிவரும் ஃபலஸ்தீன் பிரச்சனையின் மையப்புள்ளியான ஜெரூசலத்தை இருநாடுகளின் தலைநகராகவோ அல்லது கிழக்கை ஃபலஸ்தீனுக்கும் மேற்கை இஸ்ரேலுக்குமான தலைநகராக வைப்பதோ அல்லது இறுதிவரை அதனைப் பொதுவான நகராக சர்வதேச கண்காணிப்பில் வைப்பதோ மட்டுமே தீர்வாக ஐக்கியநாடுகள் சபை முன்மொழிந்துள்ளது. ஆனால் இதனை ஏற்காத இஸ்ரேல், ஜெரூசலேமை முழுமையாகக் கையகப்படுத்த முயன்றுவருகிறது.

இதற்கு ஆதரவு கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதரகத்தை ஜெரூசலேமுக்கு மாற்றப்போவதாக கடந்த வாரம் அறிவித்தார். இதன் மூலம், இஸ்ரேலின் ஆக்ரமிப்புக்கு அமெரிக்கா பச்சைகொடி காட்டி தம் ஒருதலைபட்ச ஆதரவினை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார்.

அமெரிக்காவின் இந்நகர்வு அரபு நாடுகள் மட்டுமன்றி, சர்வதேச அளவில் மிகப் பெரும் எதிர்ப்பினை அமெரிக்காவுக்கும் சேர்த்தே உருவாக்கியது. அமெரிக்கா தம் அறிவிப்பினைத் திரும்பப் பெறக் கோரி, பெரும்பாலான நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஃபலஸ்தீனின் இஸ்ரேலுக்கு எதிரான மற்றொரு எழுச்சிக்கு அழைப்பு விடப்பட்டு கடந்த ஒரு வாரமாக பெரும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதனை அடக்க இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை நான்கு ஃபலஸ்தீனியர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், துருக்கி அதிபர் எர்தோகன் 57 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பின் அவசரக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நேற்று இஸ்தான்புலில் கூடிய இக்கூட்டத்திற்கு அனைத்து நாடுகளின் முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்ட முடிவில், கிழக்கு ஜெரூசலேமை ஃபலஸ்தீனின் தலைநகராக அறிவிப்பதாக தீர்மானம் எடுத்து அறிவித்தனர்.

இக்கூட்டத்தில் ஜோர்தான், குவைத், துருக்கி, ஈரான், கத்தர், மொராக்கோ, லெபனான் உட்பட பெரும்பாலான நாடுகளின் அமீர்களும் அதிபர்களும் கலந்து கொண்டனர். ஜெரூசலேமை இஸ்ரேலின் தலைநகராக சவூதியின் சம்மதமின்றி அமெரிக்கா நிச்சயம் அறிவித்திருக்காது என்ற சந்தேகம் ஃபலஸ்தீனியரிடையே எழுந்துள்ள நிலையில், நேற்றைய முஸ்லிம் நாடுகளின் சந்திப்பில் சவூதி, எகிப்து மற்றும் பெஹ்ரைன் நாடுகள் தம் நாட்டின் கீழ்மட்ட நிலையிலுள்ள அதிகாரிகளை மட்டுமே அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டன.

ஃபலஸ்தீன் – இஸ்ரேல் அமைதி பேச்சு வார்த்தையில் இனிமேல் அமெரிக்காவுக்கு எந்த இடமும் இல்லை. மிகத் தெளிவாக தம் ஒரு தலைபட்ச நிலையினைக் காட்டிய நிலையில் இனிமேல் அமெரிக்காவுடன் எப்பேச்சுவார்த்தையும் கிடையாது என ஃபலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் திட்டவட்டமாக அறிவித்தார்.

துருக்கி அதிபர் எர்தோகான், அமெரிக்காவின் அறிவிப்பு அரபு பிரதேசத்தின் அமைதிக்கு மட்டுமல்ல, உலக அமைதிக்கே பங்கம் விளைவிக்கக்கூடியது எனவும் அதன் அறிவிப்பு செல்லுபடியாகாதது எனவும் இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடு எனவும் அறிவித்தார்.

ஈரான் அதிபர் ரூஹானி, ஃபலஸ்தீனின் உரிமைக்காக அனைத்து முஸ்லிம் நாடுகளுடன் இணைந்து எவ்வித நிபந்தனைகளும் இன்றி முழுமையாக இணைந்துபோராட ஈரான் தயாராக இருக்கிறது என அறிவித்தார்.

இதே போன்று இதில் கலந்துகொண்ட கத்தர் அமீர், குவைத் அமீர், ஜோர்தான் மன்னர் உட்பட பலரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

ட்ரம்பின் ஜெருசலம் குறித்த  அறிவிப்பும் , சர்வதேசத் தலைவர்களின் எதிர்வினையும் பலஸ்தீன இஸ்ரேல் விவகாரங்களை சர்வதேச அளவில் கவனிக்கும் வகையில் அரசியல் அரங்கில் சூடு பிடித்துள்ளதில் எந்த வித ஐயமும் இல்லை என்பது தெளிவாகி உள்ளது.

 

– ஹஸன் இக்பால்