பரபரப்பிற்கு தயாராகும் பாலஸ்தீனம் !

உலக முஸ்லிம்களின் முதல் வழிபாட்டு  திசையான  மஸ்ஜிதுல் அக்ஸா என்ற ஆலயம்  வீற்றிருக்கும் அரபு மண் ஃபலஸ்தீன் ஆகும் . ஒரு நூற்றாண்டை கடந்து விட்டோம் ஆயினும் பிரச்னை தீர்க்கப்படவில்லை. ஆம் யூத குடியிருப்பை அங்கீகரிக்க உதவிய பால்ஃபர் பிரகடனம் (Balfour Declaration) 1917 ஆம் ஆண்டில்  கொண்டு வரப்பட்டு ஒரு நூற்றாண்டு முடியப்போகிறது. ஃபலஸ்தீனை பற்றிய விழிப்புணர்வும் அதற்காக உலக அரங்கில் குரல் கொடுப்பவர்களும் மிக சொற்பமே. நம்மை பொறுத்தமட்டில்  அங்கே நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நகர்வுகளை பற்றியும் கண்காணிக்க, அவதானிக்க மேலும் அதன் விடுதலைக்காக ஏதாவதொரு விதமாக உழைக்க  நாம் கடமை பட்டிருக்கிறோம்.

சமீபத்தில்  ஃபலஸ்தீனை சுற்றி நடந்த நிகழ்வையும் முஸ்லிம்
நாடுகளின் நிலையையும் இங்கே பார்வைக்கு உட்படுத்துகிறோம்:

பாலஸ்தீன ஆக்கிரமைப்பாளர்கள்(இஸ்ரேல்) எந்த வருடமுமில்லாத அளவிற்கு 2016 ஆம் ஆண்டில் பாலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துள்ளார்கள் என ஆய்வறிக்கை கூறுகிறது. ஐ நா வின் அமைப்பான United Nations Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) தனது அறிக்கையில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் பாலஸ்தீன ஆக்கிரமைப்பாளர்கள்(இஸ்ரேல்) மேற்கு கரையிலும் கிழக்கு ஜெருசலத்திலும் 1,089 எண்ணிக்கையில்  ஃபலஸ்தீன வீடுகளை இடித்துள்ளார்கள் அதன் விளைவாக 7,101 நபர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது .

இடிக்கப்படும் பெரும்பாலான கட்டிடங்கள் இஸ்ரேலின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக கூறுகிறார்கள்.இஸ்ரேலிய அரசு   பாலஸ்தீனர்களுக்கு  புதிதாக வீட்டை கட்ட அனுமதிப்பதில்லை.
அப்படி அனுமதி அளித்தாலும் சட்ட விரோத அடிப்படையில் கட்டிக்கொள்ள  என்று வற்புறுத்துகிறார்கள். ஆயினும் 5,50,000 யூத குடியிருப்பாளர்களை அனுமதித்து அவர்கள் தங்களின் வீடுகளை விஸ்திரப்படுத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கி உள்ளது.

யூதமயமாக்களும் அக்ஸா மீது தாக்குதலும்:

முஸ்லிம்களின் மூன்றாம் புனிதஸ்தலம் மஸ்ஜிதுல் அக்ஸா நிலை கொண்டுள்ள நகரம் ஜெருசலம். அந்த ஜெரூசலத்தை மையப்புள்ளியாக கொண்டு பல ஆண்டுகளாக அதன  சுற்று வட்டாரங்களை யூத மயமாக்கும் சூழ்ச்சிகள்  நடைபெற்று வருகின்றன . தொடர் யூத குடியிருப்புகள் பலவந்தமாக கிழக்கு ஜெருசலத்தில் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். ஹீப்ரு மொழி வளர்ச்சிக்கான மையங்கள் கலாச்சார நிகழ்வுகள் என ஒருபுறமும், மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு தொழ வருபவர்களை அவ்வப்போது தடுப்பதும், அக்ஸா மீது தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்துதல், அதன் மூலம் மக்களை அச்சுறுத்துதல் என்பது மற்றொரு புறம நடக்கும் கொடுமைகள் ஆகும்.

கடந்த டிசம்பர் மாதம் 1,331 யூத ஆக்கிரமைப்பாளர்களும் 617 யூத மாணவர்களும் 91 இஸ்ரேலிய இராணுவ போலீசார்களுடன் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்குள் நுழைந்தனர். அவர்கள் முக்ராபி வாசல் மூலமாக நுழைந்து சில்சிலா வாசல் வழியே வெளியேறினர். வாசலில் நின்று கொண்டு தல்மூது சடங்குகளை செயல்படுத்தி பாடல் பாடுவது, நடனமாடுவது ,ஹனுகாஹ் மெழுகுவர்த்திகளை ஏற்றுவது போன்ற காரியங்களை செய்து வந்தனர். இதுபோன்ற நிகழ்வுகளின்போது அக்ஸாவின் கதவுகள் கட்டிடங்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்துவார்கள் இராணுவத்தினர்.

அண்மையில் பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் மாநாட்டிற்கு தனது பதிவுச் செய்தியை அனுப்பிய ஹமாஸின் தலைவர் காலித் மிஷால் கூறுகையில் “முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அக்ஸா பள்ளி பிரச்சனைக்கு உட்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக ஜெருசலம் யூதமயமாக்கப் பட்டும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் புனிதம் களங்கப்படுத்தப்பட்டும் வருகிறது.இருப்பினும் அக்ஸாவில் குடியிருக்கும் உங்கள்  இஸ்லாமிய சகோதர சொந்தங்கள் இஸ்ரேலின் தாக்குதல்களை தங்களின் நெஞ்சங்களில் சுமக்கிறார்கள்.இஸ்லாமிய புனித சின்னத்தை பாதுகாக்க அவர்களின் இரத்தத்தை கொண்டு சாட்சி அளிக்கிறார்கள்.” என்று பதிவு செய்தார்.

பாங்கு தடை மசோதா:

பாலஸ்தீனில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்படும் பாங்கை தடை செய்வதும் அண்மையில் தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. ஹெப்ரான் மற்றும் மேற்கு கரையில் அவ்வப்போது இஸ்ரேலிய அதிகாரிகள் பாங்கை நிறுத்துவது வழக்கம். ஜனவரி 2014  ஆம் ஆண்டில்  49 முறையும், டிசம்பர் 2015 ஆம் ஆண்டில்  52 முறையும், கடந்த 2016 ஆம் ஆண்டில் நவம்பரில் 83 முறையும் பாங்கை நிறுத்தி உள்ளார்கள். இந்த வழக்கம் தற்போது ஜெருசலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஜெருசலத்தில் பிஸ்காத் ஸீவு (Pisgat Zeev) பகுதியில் வாழும் சட்ட விரோத குடியேறிகள் மேயர் நீர் பார்காதிடம் ஒலி மாசுபடுகிறதென்றும் ( Noise  pollution ) அருகிலுள்ள பள்ளிகளிலிருந்து தாங்க இயலா அளவிற்கு சப்தம் வருகிறது என்றும் புகார் அளித்ததின் பேரில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த பிரச்சனையை பெரிது படுத்தி ஒரு மசோதாவாக வரையப்பட்டு இஸ்ரேலிய பாராளுமன்றமான நெஸ்ஸட்டில் ( knesset ) முன்மொழியப்பட்டது.

அதனையடுத்து இந்த விடயம் உலகமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக முஸ்லீம் நாடுகள் மற்றும் அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். நேர முறைமைகளை சற்று மாற்றி இரவு 11:00 மணி முதல் காலை 7:00 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்து மசோதா வரையப்பட்டது. இந்த மசோதாவிற்கு பெயரே முஅத்தின் மசோதா ( Muezzin Bill ) ஆகும். பெஞ்சமின் நெதன்யாஹு இதனை சட்டமாக்க துடித்து கொண்டுள்ளார்.

தற்போது இது இஸ்ரேலிய அமைச்சர்களாலும் அங்கீகரிக்கப்பட்டு 22-2-2017 அன்று பாராளுமன்றத்தில் மூன்று சுற்று வாக்கு பெற உள்ளது. மூன்று சுற்றும் கடந்து விட்டதென்றால் statute book எனப்படும் புத்தகத்தில் எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்டு விடும். பிறகு அந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது அபராதமும் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க தூதரகம் ஜெருசலத்திற்கு மாற்றும் சதி:

கடந்த நவம்பர் 2016 ல் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டு ஜனவரியில் ஆட்சியில் அமர்ந்தார். அவரால் நியமிக்கப்பட்ட இஸ்ரேலுக்கான(சட்ட விரோத குடியேறிகள்) தூதர் டேவிட் ஃப்ரீட் மேன் தூதுவராக நியமிக்கப்பட்ட உடன் அளித்த முதல் அறிக்கையில்  டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்ற வேண்டும் என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எந்த சலனமுமின்றி அதற்கான உறுதியை அளித்தார். இந்த நிகழ்வும் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம் போல் அரபு நாடுகள் உட்பட அநேக முஸ்லிம் நாடுகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதில் விஷயமென்னவெனில்  ஃபலஸ்தீனுக்கு எதிராக எந்த அக்கிரமம் நடந்தாலும் தங்கள் உதடுகளால் வார்த்தைகளில் மட்டும் எதிர்ப்பை தெரியப்படுத்தும் அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு துரும்பை கூட நகற்றுவதில்லை.பெஞ்சமின் நெதன்யாஹு டிரம்ப் பதவி ஏற்ற உடன் வாஷிங்டனிற்கு   பயணம் செய்து பேச்சு வார்த்தை நடத்தினார்  68 ஆண்டுகளாக டெல் அவிவில் தூதரகத்தை அமைத்த அமெரிக்கா அதை ஜெருசலத்திற்கு மாற்றுவதென்பது சுலபமான விவகாரம் அல்ல என டிரம்ப் ன் தேசிய பாதுகாப்பு குழுவில் உள்ளவர்கள் அறிவுரை வழங்கிய பின்னர் அந்த விவகாரம் அப்படியே சற்று மௌனமாக்கப்பட்டுள்ளது .  இருந்த போதிலும் இஸ்ரேல்  புதிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பின் மூலம் வெகு சீக்கிரம் தங்களின் சியோனிச சதிகளை அரங்கேற்றி விடலாம் என எதிர்பார்த்து கொண்டுள்ளது

டிரம்ப் பதவி ஏற்ற இரண்டாம் நாள்  ஆக்கிரமிப்பாளர்களுக்கு  5,66 வீடுகளை கிழக்கு ஜெருசலத்தில் காட்டியுள்ளார்கள்  மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6,000 திற்கும் மேலான குடியிருப்புக்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

தொடர்ந்து பாலஸ்தீனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் எண்ணற்ற முகநூல் அக்கவுண்ட்களை முடக்கி உள்ளது. வலைத்தளத்தில் ஃபலஸ்தீன் பற்றி தவறாக சித்தரிப்பதற்கு எண்ணிலடங்கா அமைப்புகள் வேலை பார்த்து வருகிறது. 2016 ம் ஆண்டில் மட்டும் குறைந்த பட்சம் 60,000 பகிர்வுகள் அரபு, ஃபலஸ்தீனுக்கு எதிராக பகிரப்பட்டுள்ளது. தினம் தினம் யுவன்கள் கைது செய்யப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகின்றார்கள்.

அண்மையில் நடந்த மற்றொரு மிக  முக்கிய நிகழ்வு  காஸாவில் ஏவுகணை  தாக்குதல் நடத்தி அச்சுறுத்தியது. அதில் இரண்டு ஃபலஸ்தீனர்கள் வீர மரணம் அடைந்தார்கள் . இதன் மூலம் ஒரு புதிய யுத்தத்திற்கான அழைப்பை விடுத்துள்ளது இஸ்ரேல் என சொல்லப் படுகிறது.

இப்படி பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க உலக முஸ்லிம் நாடுகள்என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்? யார் யார் ஃபலஸ்தீனுக்கு உதவுகிறார்கள்? தீர்வுகாண நகர்வுகள் எங்கே?  நீதிக்கான இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் செயல்பாடு எப்படி நடை பெறுகின்றது  என்பதை  அடுத்த இதழில் காண்போம்.

( தொடரும்………. )

– உஸ்மான் காலித்