பாலஸ்தீனம் பல்போர் பிரகடனத்தின் நூற்றாண்டு நினைவு!

வ்வருடம் நவம்பர் 2 ஆம் திகதியுடன் பல்போர் பிரகடனம் இடம்பெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகின்றது. பலஸ்தீனிய மண்ணில் யூத அரசை நிறுவிக்கொள்ள வேண்டும் எனும் சியோனிஸ்ட்களின் வஞ்சக கனவு, 1917 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் பலஸ்தீனில் யூதர்களுக்கான தேசிய தாயகத்தை உருவாக்குவதாக பகிரங்கமாக வாக்களிக்கும் பிரித்தானியாவின் பல்போர் பிரகடனம் மூலம் சாத்தியமாயிற்று.
இப்பிரகடனமே 1948 பலஸ்தீனிய இனச்சுத்திகரிப்புக்கும் (1948 நக்பா) மற்றும் சியோனிஸ்ட் அரசான இஸ்ரேலுடனான தொடரும் முரண்பாடுகளுக்கு அடிநாதமாக விளங்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அரபுலகின் பின் நவீன வரலாற்றுக் காலப்பகுதியின் மிக சர்ச்சைக்குரியதும் வாதத்திற்குரியதுமான, வரலாற்றாய்வாளர்களை பல தசாப்தங்களாக குழப்பத்தில் ஆழ்த்தியதுமான ஆவணமாக “பல்போர் பிரகடனம்” திகழ்கிறது என்றால் மிகையாகாது.
பல்போர் பிரகடனம் என்றால் என்ன?
யூத மக்களுக்கான தேசிய தாயகமொன்றை பலஸ்தீனில் நிர்மாணித்துக் கொடுப்பதற்கான, 1917 நவம்பர் 2 இல் வெளியிடப்பட்ட பிரித்தானியாவின் பகிரங்க வாக்குறுதி “பல்போர் பிரகடனம்” என அழைக்கப்படுகிறது.
இப்பிரகடனம் எழுத்து மூலமான வாக்குறுதியாக அப்போதைய பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் ஆர்த்தர் பல்போர் என்பவரினால் பிரித்தானிய யூத சமூகத்தின் தலைவரான லியனல் வால்டர் ரொத்ஸ்சைல்ட் என்பவருக்கு கையளிக்கப்பட்டது.
உதுமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னரான பலஸ்தீன் நாட்டின் மீதான ஆதிக்கம் பிரித்தானியாவின் கீழ் இருந்த காலப்பகுதியில், முதலாம் உலகப் போரின்போது (1914-1918) இப்பிரகடனம் இடம்பெற்றது. பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு அல்லது காலனித்துவ ஆட்சியின் ஒரு வடிவமான பிரதிநிதித்துவ ஆட்சியே அப்போது பலஸ்தீன் மீது ஆதிக்கம் செலுத்தியது.
போரில் தோற்ற நாடுகள் தமது ஆதிக்கத்தின் கீழ் உள்ள நாடுகளுக்கான ஆட்சி உரிமையை வெற்றி பெற்ற நாடுகளுக்கு கைமாற்றிக் கொடுக்கும் முறைமை காணப்பட்டது. கைப்பற்றப்பட்ட நாடுகளில் சுயாதீன ஆட்சி நடைபெறும் வரைக்குமான காலப்பகுதியில் அதன் ஆட்சி நிர்வாகம் போரில் வெற்றி பெற்ற நாடுகளின் வசம் வழங்கப்பட்டது.
எனினும், இது தொடர்பில் பலஸ்தீன் நாட்டின் விவகாரம் வேறுபட்டது. போரின் பின்னரான ஆக்கிரமிப்பின் நோக்கங்களை விட்டும் மாறுபட்ட நோக்கத்தை பலஸ்தீன் நாடு தொடர்பில் பிரித்தானியா கொண்டிருந்தது. அப்போது பலஸ்தீனிய சனத்தொகையில் 10 வீதத்திற்கும் குறைவாக காணப்பட்ட யூதர்களுக்கு தேசிய தாயகமொன்றை பலஸ்தீன் மண்ணில் ஏற்படுத்திக் கொடுப்பதே பிரித்தானியாவின் நோக்கமாக இருந்தது.
பலஸ்தீன் மீதான பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் ஆரம்ப காலப்பகுதிகளில், ஐரோப்பாவில் வாழ்ந்துவந்த யூதர்கள் பலஸ்தீன் நோக்கி இடம்பெயர்வதற்கான வழிவகைகளை பிரித்தானியா செய்து கொடுத்தது. இதன் விளைவாக பலஸ்தீன மொத்த சனத்தொகையில் 10 வீதத்திற்கும் குறைவாக காணப்பட்ட யூதர்களின் சனத்தொகை 1922 – 1935 காலப்பகுதியில் 27 சதவீதமாக உயர்வடைந்தது.
“பலஸ்தீனில் ஏற்கனவே வாழ்ந்துவரும் ஏனைய சமூக மக்களின் குடியியல் மற்றும் மத ரீதியான உரிமைகளை பாதிக்கும் வகையில் செயற்படக் கூடாது” என எச்சரிக்கை வாசகத்தை பல்போர் பிரகடனம் கொண்டிருந்தபோதும் பலஸ்தீன அரபிகளின் செலவில் யூதர்களுக்கான சுயாட்சியொன்றை நிறுவதில் பிரித்தானிய பிரதிநிதிதத்துவ அரசு துணை புரிந்தது.

பல்போர் பிரகடனத்தின் முரண்பாடுகள் பல்போர் பிரகடனம் பல்வேறு முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. குறித்த பிரதேசத்தின் பெரும்பான்மை மக்களின் இணக்கத்திற்கு மாற்றமாக, அவர்களின் முன்னிலையில் இல்லாது, ஐரோப்பிய அரசொன்றினால் ஐரோப்பிய நாடு அல்லாத ஒரு பிரதேசத்தின் உள்ளக விவகாரம் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரகடனம் என்றவகையில் பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டதாக விளங்குவதாக பலஸ்தீனிய அமெரிக்க கல்வியியலாளர் எட்வார்ட் கூறுகின்றார்.
சுருக்கமாகச் சொல்வதெனில், சனத்தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக சுதேசிகளைக் கொண்ட ஒருநாட்டில் சுதேசிகளின் விருப்பத்திற்கு மாறாக யூதர்களுக்கான தாயகமொன்றை நிறுவிக் கொடுக்க பல்போர் பிரகடனம் வாக்களித்திருந்தது.
பிரித்தானியாவின் மூன்று போர்க்கால வாக்குறுதிகளில் ஒன்றாகவே பல்போர் பிரகடனம் அமைந்திருந்தது. உதுமானிய பேரரசிலிருந்து சுதந்திரம் பெற்றுத் தருவதாக பல்போர் பிரகடனத்திற்கு முன்னதாக 1915 ஹுசைன் – மெக்மஹோன் ஒப்பந்தத்தின் மூலம் அரபுலகத்திற்கு பிரித்தானியா வாக்களித்திருந்தது.
போருக்குப் பின்னர் பலஸ்தீனின் பெரும்பகுதி சர்வதேச நிர்வாகத்தின் கீழும் எஞ்சிய பகுதி இரு காலனித்துவ சக்திகளுக்கும் பிரித்து வழங்கப்படும் என 1916 சைக்ஸ் – பிகோட் பிரத்தியேக ஒப்பந்தத்தின் மூலம் பிரித்தானிய அரசு பிரான்ஸ்சுக்கு வாக்களித்திருந்தது.
ஏற்கனவே வாழ்ந்துவரும் பலஸ்தீன அரபிகள் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது எனவும், பிரித்தானிய அதிகாரமே நிலவும் எனவும் பிரகடனம் குறிப்பிட்டிருந்தது.
எனினும், “தேசிய தாயகம்” எனும் சர்வதேச சட்டங்களில் முன்னெப்போதுமில்லாத வார்த்தைப் பிரயோகம் மூலம் குறிப்பான சாடையை பிரகடனம் வெளிப்படுத்தியிருந்தது.
“தேசிய அரசு” (National State) என்பதற்கு பதிலாக யூதர்களுக்கான “தேசிய தாயகம்” (National Home) எனும் இரு கருத்துக்களை வெளியிடும் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகம் பிரகடனத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.பிரகடனத்தின் முன்னைய மாதிரி பிரதிகளில் “யூதர்களுக்கான அரசாக பலஸ்தீனை மீளமைத்தல்” எனும் சொற்றொடர் காணப்பட்டிருந்தது. எனினும், பின்னர் இவ்வாசகம் மாற்றப்பட்டது.
1922 இல் சியோனிஸ்ட் தலைவர் சேய்ம் வெய்ஸ்மன் உடனான சந்திப்பின்போது அப்போதைய பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் ஆர்த்தர் பல்போர், பிரதமர் டேவிட் ஜோர்ஜ் ஆகியோர் “பல்போர் பிரகடனம் படிப்படியாக யூத அரசை நிறுவும் பிரகடனமே” என வர்ணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எதற்காக பல்போர் பிரகடனம்?

பல்போர் பிரகடனம் வெளியிடப்பட்டது ஏன்? என்பதற்கான கேள்விக்கு பதில் காணும் வாதங்கள் பல தசாப்தங்களாக வரலாற்றாசிரியர்கள் மத்தியில் நிலவுகின்றன. பல மூலாதாரங்களை சான்றாதாரமாகக் கொண்டு பல விதமான கருத்தாடல்கள் முன்வைக்கப்படுகின்றன.
‘அப்போதைய பிரித்தானிய அரசில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் சியோனிஸ்ட்கள்’ என ஒரு சாராரும், ‘யூத வெறுப்புக் கொள்கை நிலவிய காலப்பகுதி என்பதால் யூதர்களை பலஸ்தீனில் குடியமர்த்துவது தீர்வாக அமையும் எனக் கருதினார்கள்’ என மற்றொரு சாராரும் பிரித்தானியாவின் பல்போர் பிரகடனத்தின் நோக்கம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை முன்வைக்கின்றனர்.
எனினும், பல்போர் பிரகடனத்தின் நோக்கம் குறித்து அனைவராலும் ஏகோபித்த ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சில காரணங்களின் தொகுதி வருமாறு:

எகிப்து மற்றும் சுயேஸ் கால்வாய் மீதான ஏகாதிபத்திய ஆதிக்க வல்லமையை தக்க வைப்பதற்கு பலஸ்தீன் மீதான மேலாதிக்கம் துணை புரியும் என பிரித்தானியா கருதியமை.

போரின் இறுதி வெற்றி வரை தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் தமது அரசுகளை ஊக்குவிக்க வேண்டி, அமெரிக்கா, ரஷ்ய நாடுகளைச் சேர்ந்த யூதர்களின் ஆதரவைத் திரட்டும் பொருட்டு பிரித்தானியா சியோனிஸ்ட் பக்கம் சாய்ந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டமை.

பிரித்தானிய அரசுக்கும் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த யூதர் சமூகத்திற்குமான நெருங்கிய தொடர்புகள்; மேலும் பிரித்தானிய அரச பதவிகளில் யூதர்களின் அங்கத்துவம் அதிகரித்தமை; பிரித்தானிய அரசுக்கு யூதர்கள் பெரிதும் ஆதரவு வழங்கியமை.

ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் பெரிதும் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வந்தமையால் யூதர்கள் மீதான பிரித்தானிய அரசின் பச்சாபம் என்பன பல்போர் பிரகடனத்திற்கு வழிகோலியதாக வரலாற்றாய்வாளர்கள் ஏகோபித்த ரீதியில் ஒன்றுபடுகின்றனர்.

பலஸ்தீன மக்களின் எதிரொலிசிரியா மற்றும் பலஸ்தீன் நாடுகள் மீதான பிரதிநித்துவ ஆட்சி தொடர்பில் பொதுமக்கள் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி வூட்ரூவ் வில்சனினால் 1919 இல் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இவ்விசாரணைக் குழு கிங்-கிரேன் ஆணைக்குழு என அடையாளப்படுத்தப்பட்டது. பெரும்பான்மை பலஸ்தீனியர்கள் சியோனிசத்துக்கு பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தமையால் பிரதிநிதிதத்துவ ஆட்சி முறையின் இலக்குகளின் சீரமைப்புக்கான விதந்துரைப்புக்களை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு பணிக்கப்பட்டது.
பலஸ்தீனத்துடன் எவ்விதத் தொடர்போ உரிமையோ அற்ற அந்நிய ஆங்கிலேயர்களால் பலஸ்தீனத்துடன் எவ்வித உரிமையுமற்ற அந்நிய யூதர்களுக்கு கைமாற்றிக் கொடுக்கப்பட்ட பிரகடனம் என பல்போர் பிரகடனம் தொடர்பில் மறைந்த பலஸ்தீன பிரபல அரசியல் ஆளுமையும் தேசியவாதியுமான அவ்னி அப்துல் ஹாதி தனது சுயசரிதையில் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
1920 இல் ஹைபாவில் அமையப் பெற்ற மூன்றாவது பலஸ்தீனிய காங்கிரஸ் உள்நாட்டு சுதேசிகளின் உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை பல்போர் பிரகடனம் மீறுவதாக குற்றம் சாட்டியதுடன், சியோனிஸ்ட்களுக்கு ஆதரவளிக்கும் பிரித்தானிய அரசை இகழ்ந்துரைத்தது.
பல்போர் பிரகடனம் தொடர்பில் பலஸ்தீனிய மக்களின் உட்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்க வேண்டிய மிக முக்கிய ஊடகமான பத்திரிகை சுதந்திரம் 1914 இல் போரின் ஆரம்ப காலப்பகுதியிலேயே உதுமானிய அரசினால் முடக்கப்பட்டது. 1919 இல் மீண்டும் பலஸ்தீனில் பத்திரிகை வெளிவந்த போதிலும் பிரித்தானிய இராணுவ தணிக்கைகள் பெரிதும் ஆதிக்கம் செலுத்தின.
டமஸ்கஸ் நகரை தளமாக கொண்டியங்கி வந்த “அல்இஸ்திக்லால் அல்அரபி” (Arab Independence) பத்திரிகை 1919 நவம்பரில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. பல்போர் பிரகடனத்தின் இரண்டாம் வருட நிறைவையொட்டி லண்டனில் யூத அமைச்சரான ஹெர்பர்ட் சாமுவேலினால் ஆற்றப்பட்ட பகிரங்க உரைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இப்பத்திரிகையில் வெளியிடப்பட்ட மறுப்புரை ஆக்கம் “எமது நாடு அரபிகளுக்கு சொந்தமானது; பலஸ்தீன் நாடு அரபு நாடு மற்றும் அது அரபு நாடாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும்” என்ற கருத்தை சுமந்து நின்றது.
பல்போர் பிரகடனத்துக்குக்கும் பிரித்தானிய ஆதிக்கத்துக்கும் முன்னதாகவே அரபுலக பத்திரிகைகள் ‘சியோனிச அமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் பலஸ்தீனர்களை அவர்களது சொந்த மண்ணை விட்டும் பலவந்தமாக இடம்பெயரச் செய்வதால் ஏற்படும் விளைவுகள்’ தொடர்பில் காட்டமாக விமர்சித்து வந்தன.
“பல வருடங்களாக மீளாத் துயிலில் இருந்து எதிர்பாராத சம்பவங்களினால் திடுக்கிட்டு விழித்து, சுதாகரித்து மெல்ல மெல்ல விடியலை நோக்கி நகரும் ஒரு நாட்டின் நிலையே பலஸ்தீன நாட்டின் நிலையாக அமைகிறது” என சியோனிச அமைப்பின் வக்கிர எண்ணம் மற்றும் பிரித்தானிய அரசின் அத்துமீறல் கொள்கை தொடர்பிலும் காட்டமாக விமர்சித்து ஜெரூசலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கலீல் சகாக்கினி எழுதியுள்ளார்.
பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் அதிகரித்த யூதர்களின் குடியேற்றங்கள் பலஸ்தீனிய அரபிகளுக்கும் ஐரோப்பிய யூதர்களுக்கும் இடையில் பாரிய பதற்றங்களையும் வன்முறைகளையும் ஏற்படுத்தின. பிரித்தானியாவின் எதேச்சதிகார நடவடிக்கைக்கு எழுந்த முதலாவதும் காத்திரமானதுமான 1920 நேபி மூஸா கிளர்ச்சியானது நான்கு பலஸ்தீனர்களினதும் ஐந்து யூத குடியேறிகளினதும் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது.

பல்போர் பிரகடனத்தின் பின்புலம்

பல்போர் பிரகடனத்தின் முழு முதல் பொறுப்பாளியாக பிரித்தானியா அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் முதலாம் உலகப் போரின் போதான ஏனைய கூட்டணி நாடுகளின் அங்கீகாரம் இன்றி இப்பிரகடனம் உருப்பெற்றிருக்க சாத்தியமில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

“பல்போர் பிரகடனம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி வில்சனின் ஆலோசனை பெறப்பட வேண்டும்” என 1917 செப்டெம்பரில், போரின் போதான அமைச்சரவை கூட்டத்தின் போது பிரித்தானிய அமைச்சர்களால் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. 1917 ஒக்டோபர் மாத அமைச்சரவை அறிக்கையின் பிரகாரம், அப்போதைய “அமெரிக்க ஜனாதிபதி வில்சன் பல்போர் பிரகடனம் தொடர்பில் முற்று முழுதான ஆதரவை அளித்துள்ளார்” என ஆர்த்தர் பல்போர் அமைச்சரவையில் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்போர் பிரகடனத்திற்கு முன்னதாக பிரான்ஸ் நாடும் தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 1917 மே மாதம் ஜூலிஸ் கேம்பன் எனும் பிரான்ஸ் இராஜதந்திரி போலாந்து நாட்டு சியோனிச அதிகாரி நாஹும் சொகொலோவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், யூதர்கள் பலஸ்தீனில் குடியமர்த்தப்படுவது தொடர்பில் பிரான்ஸிய அரசின் ஆதரவை வெளிக்காட்டியுள்ளார்.

“இஸ்ரேல் வாழ் யூதர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டார்களோ அங்கேயே அவர்களுக்கான குடியேற்றங்களை அமைத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு கூட்டணி நாடுகள் ஒத்துழைப்பது நீதியின் அம்சமாகவும் பரிகாரமாகவும் அமையும்” என அக்கடிதத்தில் எழுதியுள்ளார். இதுவே பல்போர் பிரகடனத்திற்கு முன்னோடியாக அமைந்தது எனவும் கருதப்படுகிறது.

பலஸ்தீன மக்கள் மீதான எதிர்விளைவுகள்

பிரித்தானிய அரசினால் பயிற்றுவிக்கப்பட சியோனிச ஆயுதக் குழுக்களினால், சொந்த மண்ணிலிருந்து 750,000 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட 1948 பலஸ்தீன இனச்சுத்திகரிப்புக்கும் (நக்பா) பல்போர் பிரகடனமே முன்னோடியாக அமைந்தது. இவ்வகையான அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என எதிர்வுகூறி பிரித்தானிய அமைச்சரவையில் எழுந்த சிற்சில எதிர்வாதங்களையும் கருத்திற்கொள்ளாது பல்போர் பிரகடனத்திற்கு பிரித்தானிய அரசு முற்று முழுதான அங்கீகாரத்தை வழங்கியது.

தற்போதைய பலஸ்தீன் நாட்டின் அபிவிருத்திக்கும் பல்போர் பிரகடனத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக உறுதிபட கூற முடியாது போனாலும், பலஸ்தீன் பிராந்தியத்தில் சிறுபான்மை யூதர்கள் மேலாதிக்கத்தை பெற்றுக் கொள்வதற்கும் பலஸ்தீன அரபிகளின் செலவில் தமக்கென ஓர் அரசை உருவாக்கிக் கொள்ளவும் பிரித்தானிய அரசே மூல காரணம் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

1947 இல் பிரித்தானியா தனது ஆதிக்கத்தை முடிவுறுத்திக் கொண்ட சமயம் பலஸ்தீன் விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பில் விடப்பட்டது. இத்தருணம் இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவுக்கு ஆதரவாக செயற்படவென யூதர்கள் கொண்ட ஆயுதப் படையொன்று உருவாக்கம் பெற்றிருந்தது.

அரசு ஒன்று உருவாகும் பட்சத்தில் இயங்குவதற்குத் தயார்படுத்தும் விதமாக யூத முகவரகங்கள் போன்ற தன்னாட்சி நிறுவனங்களை நிறுவி செயற்பாடுகளைத் தொடர பிரித்தானிய அரசு யூதர்களுக்கு அனுமதி வழங்கியிருந்த அதேவேளை பலஸ்தீனியர்களின் தன்னாட்சிக்கு தடை விதித்திருந்தது. பிரித்தானியாவின் இக்கைங்கரியமே 1948 பலஸ்தீனிய இனச்சுத்திகரிப்புக்கு வித்திடுவதாக அமைந்து போனது.

 

மூலம்: அல்ஜஸீரா 

ஹஸன் இக்பால்