மாற்று திறனாளி மாறாத போராளி – ஷஹீத் அபூதுரையா!

ட்டுமொத்த முஸ்லிம்களின் புனித பூமியான ஜெரூசலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா டிசம்பர் 6 ஆம் திகதி தன்னிச்சையாக பிரகடனம் செய்தமையை அடுத்து, பலஸ்தீனத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வரும் இஸ்ரேல், அமைதியான முறையில் எதிர்ப்புப் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் பலஸ்தீன மக்கள் மீது தண்ணீர்த் தாரைப் பிரயோகம், ரப்பர் தோட்டாக்கள் மற்றும் வான் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றது.
அமெரிக்காவின் குறித்த பிரகடனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடாத்திவரும் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைகளில் இதுவரை 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 2008 இல் இஸ்ரேலின் வான் தாக்குதல்களின்போது இரு கால்களையும் சிறுநீரகமொன்றையும் இழந்து, சக்கர நாற்காலியின் உதவியுடன் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்த அபுதுரையாவின் படுகொலை மனிதாபிமானம் கொண்ட எந்தவொரு நெஞ்சையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. ஜெரூசலம் தொடர்பான அமெரிக்காவின் பிரகடனத்தை எதிர்த்து காஸா எல்லையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய ஸ்னைப்பர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

யார் இந்த அபுதுரையா?
29 வயது நிரம்பிய அபுதுரையா காஸா நகரில் ஷாட்டி பிரதேசத்தில் அகதி முகாமில் வாழ்ந்து வந்தவர். 2008 இல் இஸ்ரேலின் வான் தாக்குதலில் தனது கால்கள் இரண்டையும் இழந்தநிலையில், சக்கர நாற்காலியின் உதவியுடன் கார்களை கழுவித் சுத்தப்படுத்தி அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வயிற்றையும் கழுவி வந்துள்ளார். கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கையும் கொள்கை உறுதியையும் சற்றும் இழக்காத அபுதுரைய்யா நண்பர்களின் உதவியுடன் காசா எல்லையில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட நிலையிலேயே இஸ்ரேலின் படையினரால் குறிபார்த்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் இரு கால்களையும் இழந்த இந்த “அச்சுறுத்தலான” இளைஞன்.
ஆர்பாட்டக்காரர்கள் மீது சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சமயம் அபுதுரைய்யாவின் மரணம் நிகழவில்லை. மாறாக, குறிபார்த்துச் சுடும் இஸ்ரேலிய படையினரால் அபுதுரையாவின் தலையை இலக்கு வைத்து துப்பாக்கிச் சன்னம் பாய்ந்துள்ளது. ஆக, இரு கால்களையும் இழந்து, சக்கர நாற்காலியில் நடமாடும் இவ்வாலிபன் இஸ்ரேலிய படையினருக்கு எவ்விதத்தில் பாரிய அச்சுறுத்தலாக விளங்கியிருக்க முடியும்? பலஸ்தீனர்களினதும், ஜெரூசலம் பலஸ்தீனுக்கே உரித்தானது என உரிமை கோருபவர்களதும் உணர்வுகளுடன் விளையாடும் இஸ்ரேலின் ஆணவப் போக்கையே இந்நிகழ்வு உலக்குக்கு தெரிவிப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட நால்வரில் சக்கர நாற்காலியில் நடமாடும் அபுதுரைய்யாவும் ஒருவர். இதுவே பலஸ்தீனர்களினால் சக்கர நாற்காலியில் நடமாடும் இஸ்ரேலி பிரஜையொருவர் கொல்லப்பட்டிருந்தால் மேற்குலக நாடுகள் உட்பட சர்வதேசமே கொதித்தெழுந்திருக்கும். எத்தனை கைதுகள், எத்தனை விசாரணைகள், உலக தலைவர்களின் அறிக்கைகள், கண்டனங்கள் என எத்தனை அமளிதுமளிகள் இடம்பெற்றிருக்கும்; அமெரிக்காவின் ஆக்ரோஷம், இஸ்ரேலின் சீற்றம் பலஸ்தீனில் குண்டுமழையாக உருமாற்றம் பெற்றிருக்கும் என்பதில் எவரும் மறுப்புக் கொள்வதற்கில்லை. கொல்லப்பட்ட ஊனமுற்ற இளைஞன் பலஸ்தீன் பிரஜை என்பதால் இஸ்ரேலும் மேற்குநாடுகளும் மௌனம் காக்கின்றன.
முற்றுகையிடப்பட்ட காஸா பிரதேசத்தில் சக்கர நாற்காலியில் கார் சுத்தப்படுத்தும் ஊழியனாக அபுதுரையா அனுபவித்து வந்திருக்கும் துன்பங்கள் உலகுக்கு வெளிக்காட்டப்படாமலேயே போய்விட்டது. இடுப்புக் கீழ் சில தொங்கும் சதைகளுடன் கைகளினால் இயக்கும் சக்கர நாற்காலியில் மணற்பாங்கான அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இவரது இறுதிக் கிரியைகளில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியா உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது அபுதுரையா பற்றி அவரது நண்பர் கூறுகையில், “பலஸ்தீன கொடியை தாங்கியவாறு சக்கர நாற்காலியில் தனது கஷ்டங்களையும் பொருட்படுத்தாது பலஸ்தீன போராட்டங்களில் தவறாது கலந்துகொள்வார்… இறுதியாக அவர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் பலஸ்தீன கொடியை நெஞ்சில் தாங்கியிருந்தார்” என தெரிவித்தார்.
காஸா சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் அஷ்ரப் அல்கித்ரா கூறுகையில்,, “போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது இஸ்ரேலிய படைகளால் துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளினால் நூற்றுக்கணக்கான மக்கள் வலிப்பு நோய், வாந்தி, மயக்கம், மாரடைப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்…” என தெரிவித்துள்ளார்.
அல்கித்ரா மேலும் கூறுகையில், “இஸ்ரேலிய படையினர் பலஸ்தீன மக்கள் மீது மனிதாபிமானமற்ற வகையில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்….

மருத்துவமனைகள், அம்புலன்ஸ் வாகனங்கள், பலஸ்தீன செய்தி நிறுவனங்கள் என்பன இஸ்ரேலினால் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன… 2008 ஏப்ரல் மாதத்தில் மத்திய காஸா பகுதியில் அமைந்துள்ள அல்புரீஜ் முகாமில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தவேளையிலே இஸ்ரேலின் வான் தாக்குதல் இடம்பெற்றது…. இதில் அபுதுரையா இருகால்களையும் சிறுநீரகமொன்றையும் இழக்க நேரிட்டது… இத்தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டிருந்தனர்” என தெரிவித்தார்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்னதாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த அபுதுரையா அதன் மூலம் சுகவீனமுற்ற தனது பெற்றோர், 6 சகோதரிகள், 3 சகோதரர்கள் கொண்ட குடும்பத்தை தனி ஆளாக பராமரித்து வந்துள்ளார்.
தாக்குதலில் இடுப்புக்கு கீழ் முற்றாக சேதமடைந்தமையால் தொடர்ந்தும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாது போனது. பெரும் சிரமத்துக்கு மத்தியில் கார் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, அதில் நாளொன்றுக்கு 20 டொலர்கள் வரை சம்பாதித்து வந்துள்ளார். அவ்வப்போது சந்தையில் மரக்கறி விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
கால்களை இழந்ததும் வீட்டின் மூலையில் ஒதுங்கித் தனித்துவிடாது, சுய முயற்சியில் வேலை தேடி, சொந்த உழைப்பிலேயே தனது பெற்றோர், சகோதர்களை பராமரித்து வந்த அபுதுரையாவின் வைராக்கியமும் தன்மானமும் கொள்கை உறுதியும் தம்மை பேராச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாது, காஸா இளைஞர்களுக்கு முன்மாதிரியாகவும் அவர் திகழ்ந்து வந்ததாக அவரது நண்பர்கள் நினைவுகூருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்னதாக Shehab News Agency செய்தி ஊடகமொன்றின் செவ்வியில் அபுதுரையா தனது எதிர்காலக் கனவுகள் பற்றிக் குறிப்பிடுகையில் “இப்போது முகாமில் வசிக்கும் நான் ஒருநாள் அல்லாஹ் நாடினால் வீடொன்றை எனது சொந்த உழைப்பில் வாங்குவேன்…. இப்பேட்டியை பார்க்கும் நல்லுள்ளம் கொண்ட அரபு நாட்டு மக்கள் எனக்கு செயற்கை கால்களைப் பொருத்துவதற்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தருவர் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
அபுதுரையா கொல்லப்படுவதற்கு இருநாட்கள் முன்னதாக வெளியிடப்பட்ட முகநூல் காணொளியில் சக்கர நாற்காலி இன்றி இரு கைகளையும் நிலத்தில் ஊன்றியவாறு போராட்டக் களத்தில் நடக்கும் காட்சிகளும், அவர் உரையாற்றும் காட்சிகளும் சமூகவலைத்தளத்தில் தற்போது பரவலாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பது,

“இது எமது நிலம்… அதனை நாம் யாருக்கும் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்… அமெரிக்கா தனது அறிவிப்பை இரத்துச் செய்ய வேண்டும்… அதுவரை எமது போராட்டம் தொடரும்….

ஹஸன் இக்பால்