யெமனில் நடப்பது என்ன ? ஆய்வுக் கட்டுரை

2015 மார்ச் மாதமளவில் தெற்கு யெமனின் முக்கிய பிரதேசங்களை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றத் தொடங்கிய காலப்பகுதியில் சவூதி தலைமையிலான அரபு நாடுகளின் வான் தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் பிரகாரம் இத்தாக்குதல்களில் 10,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 55,000 பேர் படுகாயமுற்றுள்ளனர்.

ஹூதிகள் வசமிருந்த மிக முக்கியமான துறைமுக நகர் ஹுதைதாவை விட்டும் ஹூதிகள் வெளியேற வேண்டும் எனும் நிபந்தனையுடன் எமிரேட்ஸ் தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டணியினால் காலக்கெடு விதிக்கப்பட்டது. எனினும், கட்டுப்பட மறுத்த ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ஜூன் மாதம் 13 ஆம் திகதி ஹுதைதாவில்  Operation Golden Victory எனும் பெயரில் எமிரேட்ஸ் தலைமையில் சவூதி மற்றும் யெமனின் அரச படைகள் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தன. ஹுதைதா தாக்குதல்களில் மாத்திரம் 156 ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் 28 அரபு கூட்டுப் படையினர் உள்ளடங்கலாக இதுவரை 350 பேர் உயிரிழந்துள்ளனர்.

யார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?

வடக்கு யெமனில் செல்வாக்கு பெற்று விளங்கும் சையித் ஷியா அமைப்பைச் சார்ந்த ஆதரவாளர்கள் ‘ஹூதிகள்’ என விசேடமாக அழைக்கப்படுகின்றனர். யெமனிய மக்கள் தொகையில் 65 சதவீதம் ஸுன்னி முஸ்லிம்களாகவும் 35 சதவீதம் ஷியா முஸ்லிம்களாகவும் விளங்குகின்றனர்.

2011 அரபு வசந்தத்திற்கு பின்னரான ஆரம்ப காலப்பகுதிகளில் பேச்சுவார்த்தை மூலமாக தமது அபிலாஷைகளை வென்றெடுக்க ஷியா அமைப்புக்கள் முனைந்தன. எனினும், காலப்போக்கில் ஏனைய ஷியா பெரும்பான்மை ஆதரவு நாடுகளின் தூண்டுதல்களின் பேரில் யெமனில் அரசியல் கட்சியாக இருந்த ஹூதிகள் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களாக உருவெடுத்தனர்.

வளைகுடா நாடுகளின் அனுசரணையில் இடம்பெறும் பேச்சுவார்த்தை முயற்சிகள் அனைத்தும் ஷியாக்களை வஞ்சிப்பதாக கூறியே வன்முறையைக் கையிலெடுத்தனர்.

நீண்ட காலமாக யெமனில் ஜனாதிபதியாக இருந்த அலி அப்துல்லாஹ் ஸாலிஹை ஆரம்பத்தில் எதிர்த்து வந்த ஹூதிகள் பின்னர் அவருடன் கூட்டிணைந்து செயற்பட ஆரம்பித்தனர். ஜனாதிபதி அப்துல்லாஹ் ஸாலிஹின் உதவியுடன் 2014 செப்டெம்பரில் யெமன் தலைநகர் சனாவை ஹூதிகள் கைப்பற்றிக் கொண்டனர். அதன் பின்னர் தெற்கு பகுதிகள் நோக்கி முன்னேறிய ஹூதிகள் முக்கிய துறைமுகமான ஏதனைக் கைப்பற்றிக் கொண்டனர்.

வளைகுடா நாடுகள் இணைந்து செயற்படுத்திய அரசியல் மாற்றங்களின் பிரகாரம் 2012 இல் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவியிறக்கப்பட்டார். அதுவரை பிரதி ஜனாதிபதியாக செயற்பட்ட மன்ஸூர் ஹாதியிடம் ஜனாதிபதி பதவி ஒப்படைக்கப்பட்டது. சவூதியுடன் இரகசிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார் எனவும் தமக்கு துரோகம் இழைத்து விட்டார் எனவும் குற்றம் சாட்டி 2017 இல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் ஸாலிஹை ஹூதிகள் படுகொலை செய்தனர்.

ஷியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான் நாட்டின் தூண்டுதல்களின் பேரிலேயே ஹூதிகள் யெமனில் கிளர்ச்சிகளை முன்னெடுத்து வருவதாகவும், ஈரானின் நிதியுதவி மற்றும் ஆயுத உதவிகளின் காரணமாகவே ஹூதிகள் பலம் பெற்று விளங்குவதாகவும் சவூதி அரேபியா பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றது.

மத்திய கிழக்கு பிராந்திய ஆதிக்க சக்திகளின் போட்டிகளுக்கு மத்தியில் யெமனில் தொழிற்படும் ஈரானிய பிரதிகளாகவே ஹூதிகளை சவூதி நோக்குகின்றது. எனினும், இக்குற்றச்சாட்டுக்களை ஈரானும் ஹூதிகளும் மறுத்தே வருகின்றனர்.

ஹுதைதா துறைமுக நகரின் முக்கியத்துவம்தான் என்ன?

யெமனின் நான்காவது பெரிய நகரும் செங்கடல் பாதையில் காத்திரமான துறைமுகமொன்றைக் கொண்டதும் 600,000 சனத்தொகை கொண்டதுமான யெமனின் மிக முக்கிய நகரே ஹுதைதா துறைமுக நகராகும். ஹுதைதா துறைமுக நகர் 2014 தொடக்கம் ஹூதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. எனினும், 2017 இல் சவூதி கூட்டுப்படைகள் ஹுதைதா துறைமுகம் மீதான முற்றுகையை ஆரம்பித்தனர்.

யெமனின் ஒட்டுமொத்த மக்களுக்குமான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என்பவற்றின் 80 சதவீதமான தேவைப்பாடுகள் ஹுதைதா துறைமுகம் வழியாகவே இடம்பெற்று வருகின்றன. இவ்வகையில் ஹுதைதா துறைமுகம் ஒட்டுமொத்த யெமனிய மக்களுக்கும் காத்திரமானதாக கருதப்படுகிறது.

எனினும், ஹுதைதா துறைமுகத்தைப் பயன்படுத்தி ஹூதிகள் ஈரானிலிருந்து ஆயுத உதவிகளைப் பெற்றுக் கொள்வதாகவும் மேலும் பல கள்ளக் கடத்தல் வியாபாரங்களில் ஈடுபட்டு வருடாந்தம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக் கொள்வதாகவும் சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.

Operation Golden Victory எனும் பேரில் சவூதி கூட்டுப்படையினால் ஹூதிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகள் ஹுதைதாவை மீட்கும் முன்னெடுப்பில் காத்திரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹுதைதா துறைமுகத்தை ஹூதிகள் யெமனிய அரசிடம் கையளிக்க வேண்டும் எனும் நிபந்தனையிலேயே சவூதி கூட்டுப்படை தாக்குதல் நடாத்தி வருகிறது. 2015 இல் ஹூதிகளினால் பதவியிறக்கப்பட்ட ஜனாதிபதி மன்ஸூர் ஹாதியினால் பெயரளவிலான யெமனிய அரசு தலைமை தாங்கப்படுகிறது.

யெமனை ஹூதிகளிடம் இருந்து விடுவிக்க அதி சிரத்தை கொள்ளும் சவூதியின் உள்நோக்கம் என்ன?

10 நாடுகள் உள்ளிட்ட சவூதி கூட்டுப்படைகள் உட்பட அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளும் யெமனில் ஸ்திரமான அரசியல் நிலைமை உருவாகுவதை விரும்பவில்லை. மில்லியன் கணக்கான பொதுமக்கள், சிறுவர்களின் உயிரை பணயம் வைத்தேனும் யெமனிய உறுதிப்பாட்டை குலைப்பதில் முன்னின்று உழைத்து வருகின்றன.

இற்றைக்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் முதலாம் உலகப் போர் அதன் தீர்க்கமான இறுதிக் கட்டத்தை அடைந்த காலப்பகுதியிலும் ஹுதைதா துறைமுக நகர் முற்றுகைக்குட்பட்டது. அப்போதைய ஆதிக்க சக்திகளாக பிரித்தானியாவும் சவூதியின் அல்சஊத் மன்னர் குடும்பமும் விளங்கின.

ஹுதைதா துறைமுக நகரை பிரித்தானியா கைப்பற்றி முற்றுகையிட்ட அதேவேளை சவூதியின் இப்னு சஊத் குடும்பத்துக்கு விசுவாசமான படைகள் வன்முறைகளையும் படுகொலைகளையும் யெமனில் நிகழ்த்தி மக்களை அச்சத்தின் கீழ் வைத்துக் கொண்டனர். பிரித்தானியாவுக்கும் சஊத் குடும்பத்துக்கு விசுவாசமான படைகளுக்கும் எதிரான மக்கள் கிளர்ச்சிகளை மேலெழ விடாது வேரோடு பிடுங்கியே வந்தனர். இப்போது கூட பொதுமக்களின் படுகொலைகளை நியாயப்படுத்தியும் மக்கள் கிளர்ச்சியின் குரல்வளையை நெரித்து வருகின்றது.

ஆபிரிக்க – ஆசிய வர்த்தகப் பாதையின் கேந்திர நிலையமாக யெமன் விளங்கி வருவதால் வரலாற்று காலப்பகுதியில் கூட இராச்சியங்களுக்கு எப்போதும் அச்சுறுத்தல் விடுக்கும் புவியியல் அமைவிடமாகவே திகழ்ந்துள்ளது. உஸ்மானியா கிலாபத் வீழ்ச்சியின் பின்னர் வடக்கு யெமனில் பலம் பொருந்தி விளங்கிய சையிதி ஆட்சியாளரான இமாம் யஹ்யா, தெற்கு அரேபியாவில் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பிய பிரித்தானியாவுக்கு பாரிய சவாலாக விளங்கி வந்தார்.

நூற்றாண்டுகளாக மேற்குலகுக்கு அடிபணியாத யெமனின் போக்கு இமாம் யஹ்யாவின் காலந்தொட்டே ஆரம்பமாகியது என பிரபல வரலாற்றாய்வாளர் ஈஷா புளூமி Destroying Yemen எனும் தனது நூலில் எழுதிச் செல்கிறார். 1904 இல் யெமனில் ஆட்சிக்கு வந்த இமாம் யஹ்யா தனது தலைமையின் கீழ் பலமிக்க ஆட்சியை உருவாக்கி பிரித்தானியா ஆளுகைக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்.  பிரித்தானியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இத்தாலியின் ஆதரவைத் திரட்டுவதில் வெற்றி கண்டார். அதேநேரம் அந்நாடுகளுக்கு அடிமைப்படுவதையோ வால் பிடிப்பதையோ தவிர்த்துக் கொண்டார்.

இத்தாலியிடம் இருந்து ஆயுத உதவிகளைப் பெற்று இராணுவத்தை வலுப்படுத்திக் கொண்ட இமாம் யஹ்யா வடக்கு, தெற்கு யெமனை ஒருங்கிணைத்தார். யெமனை ஏனைய உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த பிரித்தானியாவை எதிர்த்துப் போரிட்டு பெருமளவான செங்கடல் பரப்பை யெமனின் ஆளுகைக்கு கீழ் கொண்டுவந்தார்.

இரண்டாம் உலகப் போரின் பின்னரும் கூட மேற்குலகின் ஆதிக்கத்தை யெமனில் மேலெழுந்து விடாது பார்த்துக் கொண்டார். இம்முறை பிரித்தானியாவுடன் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. எனினும் 1946 ஆண்டளவில் சுயத்தை இழந்து விடாது அமெரிக்காவின் ஆதரவை பெற்றுக் கொள்வதில் வெற்றி கண்டார். 1959 வரை எவ்வித மேற்குலக அச்சுறுத்தலும் யெமனை அண்டவிடாது சாதுரியத்துடன் செயற்பட்டார்.

ஹுதைதா மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் பொதுமக்களும்

ஹுதைதா மீட்பு நடவடிக்கைகளில் சவூதி கூட்டுப்படைகள் 25,000 துருப்புக்களையும் யுத்த விமானங்கள் மற்றும் வானூர்திகளைக் கொண்டு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றது. அதேவேளை ஹுதைதாவில் 10,000 இற்கு மேற்படாத ஹூதி கிளர்ச்சியாளர்களே எதிர்த் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹுதைதா துறைமுகத்தை இழப்பதானது ஹூதிகளுக்கு பாரிய வீழ்ச்சியாக அமையும் என கருதப்படுகிறது. ஏனெனில், ஹூதிகளின் ஆயுத பலம் மற்றும் வருமான மூலங்கள் ஹுதைதா துறைமுகத்தை மாத்திரமே சார்ந்து நிற்கின்றது. இதன் காரணமாக ஹூதிகள் தாக்குதல்களை துறைமுகத்துக்கு அப்பால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி நகர்த்தி வருகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் வறிய நாடான யெமனில் மக்கள் பட்டினியில் வாடி வருகின்றனர். துறைமுக தாக்குதல் நடவடிக்கைகளினால் முடங்கிப் போயுள்ள அத்தியாவசிய பொருட்களின் பங்கீடுகள் மற்றும் தூய குடிநீரின் கிடைப்பனவு குன்றியுள்ளமை காரணமாக கொலரா நோய் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை எனும் வீதம் பட்டினி இறப்பு அதிகரித்துள்ளதாக அது சுட்டிக் காட்டியுள்ளது.

8.4 மில்லியன் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாலும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாலும் ஹுதைதா தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என சர்வதேச பொதுமன்னிப்புச் சபை கோரியுள்ளது.

 

ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்

(மூலம்: Middle East Eye)