Featured Category

எது பகுத்தறிவு?

இஸ்லாத்தின் சில சட்டங்கள் அறிவிற்கு ஏற்புடையதாக இல்லையே? என இன்று சிலர் கூக்குரலிடுகிறார்கள்.
இதனையே1966ம் ஆண்டு லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் கல்வி பயிலும்போது ஷைக் மில்லத் அல்லாமா அமானி ஹளரத் அவர்களிடம் கேட்டேன்.

அறிவிற்கு பொருத்தம் என்றால் எந்த அறிவிற்கு? என்று எதிர்க் கேள்வி கேட்டார்கள். எந்த அறிவு என்றால் எனக்கு புரியவில்லையே என்றேன்.

அறிவிலும் பல அறிவு உண்டா? என்று சக மாணவர்கள் வியப்புடன் எங்கள் உரையாடலைக் கேட்டனர்.

அறிவை பற்றி விளக்கும் முன் நீங்கள் எல்லோரும் அவரவர்க்குப் பிடித்தமான பழம் என்னவென்று கூறுங்கள் என்று ஹளரத் அவர்கள் கேட்டார்கள். ஆப்பிள், மாம்பழம், திராட்சை, ஆரஞ்சு என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழத்தை குறிப்பிட அனைத்தையும் புன்முறுவலுடன் கேட்ட ஹளரத் அவர்கள் இறுதியில் சொன்னார்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழத்தை விரும்புவதாக சொன்னீர்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்று கேட்டால் ஒவ்வொருவரும் நீங்கள் விரும்புவதற்கு ஒவ்வொரு காரணத்தை சொல்வீர்கள் இல்லையா? இப்பொழுது ஒருவர் என்னிடம் பழங்களில் சிறந்தது எது ? என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.

நான் ஆப்பிள் என்று சொன்னால் மற்ற பழங்களை விரும்புகிறவருக்கு இந்த பதில் திருப்தியாக இராதது மட்டுமல்ல இதென்ன ஹலரத் சொல்வது அறிவிற்கு பொருத்தமாக இல்லையே? இன்ன பழமல்லவா சிறந்த பழம் என்று தான் விரும்பும் பழத்தைச் சொல்வார்.
ஏன்?

ஏற்கனவே, ஒன்றை பற்றி முடிவெடுத்து தன் மூளையில் பதிவு செய்த பின் மற்றொன்றைப் பார்க்கும் பார்வையும் சிந்திக்கும் முறையும் வேறுபட்டு விடுகின்றன. அவன் விரும்பும் பாதையிலேயே அவனின் அறிவும் வேலை செய்யும்.

ஒரு விஷயம் சரியா ? தவறா? என அறிய விரும்புகிறவன் திறந்த மனத்துடன் அதை ஆராய வேண்டும். அப்பொழுது தான் அவனறிவு தன் இயல்பான தன்மையுடன் சிந்திக்கும் நல்லமுடிவு எடுக்கும். அவ்வாறன்றி, வேறொன்றை தன் இதயத்தில் நிரப்பி அவன் சிந்திக்கும் பொழுது அவன் அறிவு நோய் வாய்ப்பட்டு விடுகிறது. அவன் சிந்திக்கும் முறையும் வேறுபட்டுவிடுகிறது.

அவ்வாறே, இஸ்லாத்தின் சகல அம்சங்களும் “ஸலிமான அக்ல்” நோய்வாய்ப்படாத நல்லறிவுடன் சிந்திப்பவர்களுக்கு இஸ்லாத்தின் சட்டங்கள் சிறந்தவையாக அறிவுக்கு பொருத்தமானவையாகத் தெரியும்.

எனவே தான் உலகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் மற்ற மதத்தினை ஒப்பிட்டு நோக்கி பகுத்தறிவிற்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே எனக் கூறியுள்ளனர்.

ஆனால், குர்ஆன் கூறுவது போன்று உள்ளத்தில் நோய் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இஸ்லாத்தின் சில சட்டங்கள் அறிவிற்கு ஏற்புடையதாக இராது” என்று விளக்கம் தந்தார்கள்.

மவ்லானா அஷ்ரஃப் அலிதானவி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் ஒரு முறை சொன்னார்கள்,

“மனிதர்கள் பகுத்தறிவு பகுத்தறிவு என்கிறார்கள் இது வரை யாரும் பகுத்தறிவிற்கு விளக்கம் தரவேயில்லை. எந்த ஒன்று அவர்களின் கண்ணிற்கு புலப்படவில்லையோ அவர்களின் சிந்தனைக்கு எட்டவில்லையோ அவைகள் எல்லாம் பகுத்தறிவிற்கு முரணானது என்று சொல்வார்கள்.

குழந்தை பிறப்பது எப்படி என்பதை தெரியாத ஒருவன் தன் தாயாரிடம் நான் எப்படி எங்கிருந்து வருகிறேன் என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். தன் ஒட்டிய வயிற்றை சுட்டி காட்டி இங்கிருந்து தான் வந்தாய் என்று சொனால் அவன் நம்புவானா?

எந்த பகுத்தறிவும் புரிந்து கொள்ள முடியாத ஒரு அற்புதம் உடலில் குழந்தை உருவாவது. ஆனால், அது நித்தம் நித்தம் நடை பெறுவதால் அதை ஒரு அற்புதம் என்று யாரும் சிந்திப்பதில்லை.

எந்த ஒரு பகுத்தறிவாளனும் ஒரு சிறு விந்து துளி இன்னொரு ஜீவன் வழியாக குறைந்த எடை உள்ள கருப்பப்பைக்குள் நுழைந்து கர்ப்பப்பையை விட அதிக எடையுள்ள ஒரு ஜீவனை உருவாக்கிறது என்றால் பகுத்தறிவு ஏற்று கொள்ளுமா? அது ஏன் என்று எந்த பகுத்தறிவாளனால் அறிவுப்பூர்வமாக சொல்ல முடியுமா?

சிலருக்கு ஏன் குழந்தை பிறப்பதில்லை ?சிலருக்கு ஏன் ஆண் குழந்தை மட்டும் பிறக்கிறது ? என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் விடை இருக்கிறதா ?

ஏன் எப்படி என்று கேட்டால் அது ஒரு இயற்கையின் வினோதம் என்று சொல்லி விட்டு போய்விடுவான். விஞ்ஞானம் எப்படி என்பதற்கு தான் விளக்கம் தந்திருக்கிறதே தவிர ஏன் என்பதற்கு இதுவரையிலும் விளக்கம் தரவில்லை. எனவே, மனிதன் தன் அறிவிற்கு எட்டாததை பகுத்தறிவிற்கு முரணானது என்று சொல்லுகிறான். அவனது அறிவிற்கு எட்டாவிட்டாலும் நித்தம் நித்தம் நடக்கின்ற பல அற்புதங்களை அவன் பகுத்தறிவிற்கு ஏற்றது என்று சொல்லுகிறான்.”

குர்ஆனும் ஹதீஸும் எதை சொல்லுகிறதோ அதை ஏற்று கொள்கின்றவன் தான் உண்மையான பகுத்தறிவாளன்,

“ஹதீஸே குத்ஸி” யில் அல்லாஹ் முதல் முதலில் அறிவை படைத்தான். அதை பார்த்து முன்னால் வா என்றான் அது முன்னாள் வந்தது. பின்னால் போ என்றான் அது பின்னால் போனது.
இதற்கு ஹளரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். “ இந்த ஹதிஸ் சொல்வது என்னவென்றால் அறிவுள்ளவன் அல்லாஹ் ஏவியதை செயல்படுத்துவான் அல்லாஹ் தடுத்ததை விலக்கி கொள்வான் “

தேவ்பந்த் தாருல் உலூம் பல் கலை கழக நிறுவனர் காஸிம் நாநூத்தவி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் தன் மாணவர்களுடன் உரையாடி கொண்டிருக்கின்ற பொழுது “நபிகள் நாயகம்சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தங்கத்தை ஆண்களுக்கு ஏன் ஹராமாக்கினார்கள்? அதற்கு காரணம் என்ன? என்று ஒருவர் கேட்டார்.

அவரை நோக்கி முறைத்த ஹளரத் அவர்கள் நபி ஸல்லலாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது உன் அறிவிற்கு ஏற்றால் தான் நீ கடைப்பிடிப்பாயா? நீ மூஃமினாக இருந்தால் நபி சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றவுடன் அவர், தவ்பா தவ்பா என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார்.

அதன்பின் மாணவர்கள் அந்த சந்தேகம் எங்களுக்கும் இருக்கிறது. ஏன் ஆண்களுக்கு தங்கம் ஹராம்? என்று கேட்டார்கள். ஹளரத் அவர்கள் சில விளக்கங்களை சொன்னார்கள்.

அதை கேட்ட மாணவர்கள், இந்த விளக்கத்தை அந்த சகோதர ரிடத்திலும் சொல்லியிருக்கலாமே ஏன் நீங்கள் அவரிடம் கோபமாக பேசி அனுப்பி விட்டீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு ஹளரத் அவர்கள், அல்லாஹ்வும் ரஸூலும் ஒரு சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் நமக்கு தெரியாத பல காரணங்கள் இருக்கும். சிலவற்றை நாமாக யூகித்து சில விளக்கங்களை தருகிறோம். அல்லாஹ் அதற்காகத்தான் அந்த சட்டத்தை இறக்கினான் என சொல்ல முடியாது ஆழமான மார்க்க அறிவு இல்லாதவர்கள் அல்லாஹ் விதித்த கடமைக்கு இது தான் காரணம் என்று ஒருவன் சொல்ல அதை தன் மனதில் பதிய வைத்துக் கொண்டால் மற்றொரு திறமையான பேச்சாற்றல் உள்ள ஒருவர் அந்த விளக்கத்தை தவறு என்று நிருபித்தால் அல்லாஹ் வகுத்த அந்த சட்டத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும். எனவே, அல்லாஹ் சொன்னான், நபி சொல்லியிருக்கிறார்கள் அதனால் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஒரு முஃமீன் சொல்வது தான் உறுதியான ஈமானின் வெளிப்பாடாகும். “ என்றார்கள்.

நான் லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வாரில் ஓதும் பொழுது ஒரு பட்டம் பெரும் மாணவர் ஜும்மாவில் தொழுகையின் சிறப்பை பற்றி பேசினார் “ தொழுகை உடற்பயிற்சி செய்வது போன்றாகும் என்று சொல்லி ஸுப்ஹு, லுஹர், அஸர், மஃரிப், இஷா என்று ஒவ்வொரு வக்து தொழுகையும் எப்படி உடற்பயிற்சி ஆகிறது என்று சொல்லி விளக்கினார்.

தொழுகை முடிந்து மதரஸாவிற்கு வந்த பொழுது மதரசாவின் வாயிலில் அமர்ந்து இருந்த அல்லாமா அமானி ஹளரத் அவர்கள் இன்று ஜும்மாவில் என்ன பயான் செய்தாய்?

உடல்நலத்திற்காக தான் அல்லாஹ் தொழுகையை கடமையாக்கினான் என்பதை போன்று உன் பேச்சு இருந்தது. அப்படியானால், ஒருவன் நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன் என் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது எனவே நான் தொழ வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னால் உன்னிடம் பதில் இருக்கிறதா?அது போன்று சிலர் பசியின் கொடுமையை அறிவதற்காக தான் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று பேசுவார்கள். அப்படியானால் பசியால் வாடும் ஏழைகளுக்கு நோன்பு கடமையில்லையா?.

எனவே, நாம் பேசும் பொழுது அல்லாஹ்வின் கட்டளையை நாம் விரும்புகிறோமோ இல்லையோ அதை ஏற்று தான் ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்படி ஏற்று செயல் படும் பொழுது இந்த உலகத்தில் உடலுக்கும் அது நன்மை பயக்கும் என்ற ரீதியில் தான் நாம் பேசவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

என் அறிவிற்கு பொறுத்த மாக இல்லை என்றால் ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என ஒரு முஸ்லிம் சொல்வதற்கும் இறைவன் இருப்பது ,மறுமை என்பதெல்லாம் எங்கள் அறிவிற்கு பொறுத்த மாக இல்லை எனவே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லும் நாத்திக வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் ?

1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6 اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7 صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

இஸ்மாயில் நாஜி

error: Content is protected !!