Featured Category

தலைவலிக்குத் தலையணை மாற்றும் அவலம்!

சமூகத்தின் நன்மை கருதி ஒன்றுகூடல்களை நடாத்தி, முடிவுகளை எடுத்து, அவற்றை செயற்படுத்தி, எதிர்பார்க்கப்படும் அந்த நன்மைகளை அடைந்து கொள்ள முயற்சிப்பது உண்மையில் சாலச் சிறந்த ஒரு விடயமாகும்.
சமூகத்துக்குப் பிரச்சினைகள் வரும் போதெல்லாம் எல்லாத் தலைமை(?)களும் ஒன்றுகூடி விடயங்களைக் கலந்துரையாடுவதும் அவற்றினடியாக சில தீர்மானங்களுக்கு வருவதும் நல்ல விடயமாகும்.

பிரச்சினைகள் முற்றுகின்ற போது அல்லாஹ்வின் பக்கம் மீளுமாறு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துவதும், அதிகம் பிரார்த்தனைகளிலும் இஸ்திஃக்பாரிலும் ஈடுபடுமாறும் நோன்பு நோற்குமாறும் கூறுவதும் நல்ல விடயமாகும்.

ஆனால் இவையனைத்தும் நோயை மிகச் சரியாக அடையாளம் காணாமல் அவ்வப்போது வரும் வலியைக் குறைத்துக் கொள்வதற்கான Pain Killers என்பதுதான் உண்மை.

அல்லது நோயை சரியாக அடையாளம் கண்டும், தமது இலாபத்துக்காக அதனைக் குணமாக்காமல் இழுத்தடிக்கும் சில மருத்துவமனைகள் போல இங்கும் சரியான தீர்வை அமுல்படுத்தாமல் பிரச்சினைகளைத் தொடர்ந்தும் திரைக்குப் பின்னால் வைத்திருப்பதாகக் கூட இருக்கலாம்.

அவ்வப்போது சமூகத்தின் வலி கடுமையாகும் போது எல்லோரும் ஒன்றுகூடுகின்றார்கள். ஆனால் உள்ளங்கள் ஒன்றுபடுவதில்லை. உடன்படுவோம் என்று வாயால் கூறி எழுத்தில் எழுதி வைத்தாலும் உள்ளங்கள் ஒன்றுபடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். பயங்கர அரசியலாலும், இன்னும் பல்வேறு நோய்களாலும் இந்த ஒற்றுமை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

சாக்கடைக்குள் இருந்து கொண்டு அத்தர் பூசிக் கொள்ளும் இந்த நடவடிக்கைகள் எந்தவிதமான நீண்டகால சாதகமான விளைவுகளையும் தர மாட்டா.

யாரும் யாருடனும் சேர்வதற்கும் தயாரில்லை, ஏனென்றால் எல்லோரும் தலைவர்களாக இருக்க வேண்டும். உளப்பூர்வமாக ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும் தயாரில்லை, ஏனென்றால் எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டும் என்ற நடைமுறைச் சாத்தியமற்ற வெறி. ஒருவரையொருவர் மனதார அங்கீகரிக்கவும் தயாரில்லை, ஏனென்றால் நாம் மட்டுமே சரி அடுத்தவர்களெல்லாம் பிழை என்ற அடாவடித்தனமான பெருமை.

இஸ்லாமியப் பணியில் இருப்பவர்கள், ஒன்றிணைதல், ஒத்துழைத்தல், அங்கீகரித்தல் என்ற மூன்றில் ஏதாவதொன்றில் உளப்பூர்வமாக இல்லாவிட்டால் நான்காவது நிச்சயம் அழிவாகத்தான் இருக்கும்.

அப்படி நாமே நமக்கான அழிவுப் பாதையைத் தெரிவு செய்து கொண்டு வெற்றியையும் விடிவையும் தேடிக் கையேந்துவதும் பாவமன்னிப்புக் கோருவதும் அல்லாஹ்வையும் அவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிரபஞ்ச நியதிகளையும் அவமதிப்பதற்குச் சமன்.

முதலில் பிரிவினை என்ற இந்தப் பாவத்துக்கான தவ்பாவைச் செய்ய வேண்டும். அந்தத் தவ்பா பள்ளிவாயலில் எல்லா மின்விளக்குகளையும் அணைத்து விட்டு தவ்பா தவ்பா தவ்பா என்று உதட்டில் தட்டிக் கொள்ளும் ரெடிமேட் தவ்பாவல்ல. மாற்றமாக களத்தில் பட்டப்பகலில் வெளிப்படையாக அதே நேரம் உள்ளூர உண்மையுடன் நடக்கும் தவ்பாவாகும். அதற்குத் தயாரில்லாவிட்டால் கூடுகின்ற கூட்டங்களும் எடுக்கின்ற முடிவுகளும் ஒரு நாளும் உருப்படியான எந்த விளைவுகளையும் தரமாட்டா.

”நிராகரிப்பவர்கள் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக (பாதுகாவலர்களாக) இருக்கின்றனர், நீங்கள் அவ்வாறில்லாவிட்டால் பூமியில் ஃபித்னாவும் பெரும் ஃபஸாதுகளும் ஏற்படும்’’ என்று அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் பிரச்சினை என்னவென்பதையும் தீர்வையும் மிக அழகாகவும் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் சொல்லிவிட்டான்.

துறைமுகத்தில் நங்கூரமிட்டுக் கொண்டு ஆழ்கடலில் மீன்பிடிக்க கனவு காண்பது சுத்த முட்டாள்தனமேயன்றி வேறில்லை. நங்கூரத்தை எடுத்துவிட்டு பயணத்தை ஆரம்பிக்காதவரையில் எமது பிரார்த்தனைகளும் இஸ்திஃக்பார்களும் உதடுகளுக்கிடையால் வெளியேறும் காற்றாக மட்டுமே இருக்கும். அல்லாஹ்வின் சந்நிதானத்தைச் சென்றடையக்கூடிய சக்தி அவற்றுக்குக் கிடையாது.

அப்பான் அப்துல்ஹலீம்

error: Content is protected !!