Featured Category

செல்லாத’ மனிதர்களின் வலிகள்

வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நான் உடனுக்குடன் நம்பி விடுவதில்லை. பார்த்த மாத்திரத்திலேயே பகிர்ந்து கொள்ளும் அபாயம் அங்கு அடிக்கடி நிகழ்வதால் பல பதிவுகள் தவறாகவே இருக்கின்றன. சில பதிவுகள் ‘பளிச்’சென்று பொய்யனெத் தெரிந்தால் ‘இப்படி அநியாயத்திற்கு பொய்யைப் பரப்பித் திரியாதீர்கள்’ என்று பதிலளித்து என் சமூகக் கடமையை அவ்வப்போது நிறைவேற்றி வருகிறேன்.
நவம்பர் 8 ஆம் நாள் வந்த செய்தியைக் கண்டும் அதே சமூகக் கடமையாற்றினேன். ‘பிரதமர் மோடி இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்துவிட்டார்.’ என்ற செய்தியைப் படித்ததும் ‘என்ன முட்டாள்த்தனமான செய்தி.. இதனைப் பரப்புபவர்கள் கொஞ்சம்கூட யோசிக்க மாட்டார்களா? ரிசர்வ் வங்கி இருக்கிறது. நிதி அமைச்சர் இருக்கிறார். இவர்கள் சொல்லவேண்டியதை திடீரென அதுவும் இந்த இரவு நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றி ஒரு பிரதமர் இப்படிச் சொல்வதற்கு அவரென்ன கோமாளியா?’ என்றுதான் நான் ஆதங்கத்துடன் அந்த வாட்ஸ் அப் பதிவரைத் திட்டி பதிலளித்தேன். ஆனால் அவர் அனுப்பிய செய்தி உண்மைதான் என்பதை நெடு நேரத்திற்கு என்னால் நம்ப இயலவில்லை.

ஒரே நாளில் பொருளாதார நிபுணராய் அவதாரம் எடுக்க எனக்கு விருப்பமில்லை. இந்த நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிக்குமா? ஒழிக்காதா? இதனால் பலன்பெறுபவர்கள் யார்? இதன் பின்னணி என்ன? என்பதைப் பற்றிப் பேசுவதை விட எளிய மனிதர்களின் வலியைத்தான் நான் பேச விரும்புகிறேன். யார் செய்த தவறுக்கு யார் வீதியில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள்? என்பதுதான் என் கேள்வி. கருப்பு முதலைகளைப் பிடிப்பதற்கு இந்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும்கூட மக்கள் கருத்துக்கேட்பின்றி இப்படி வதைத்துவிட்டு ‘பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று பேசுவதைவிட பொறுப்பற்றதனம் வேறு இருக்க முடியாது.

நோக்கமும் நன்றாக இருக்கவேண்டும். அதனை அடைகின்ற வழிமுறையும் நன்றாக இருக்கவேண்டும். நோக்கம் நன்றாக இருந்து அதனை அடைகின்ற வழிமுறை தவறாக இருக்குமானால் அதுவும் ஒருவகை பயங்கரவாதம்தான். படகில் கருப்பு முதலைகள் தப்பிக்கின்றன என்றால் கடலைத் தூர்த்து படகைப் பிடிக்க நினைப்பது எந்தளவு நகைமுரணோ அதுபோன்றுதான் இந்த செல்லாத சேட்டையும். வீட்டைக் கொளுத்தித்தான் மூட்டைப் பூச்சியை அழிக்கவேண்டுமா? என்பதுதான் எளிய மனிதனின் வினா.

ஐந்து இலட்சரூபாய் கேட்டு ஒரு குழந்தையைக் கடத்திவிட்டால் குழந்தையை உயிருடன் மீட்க ஐந்து இலட்ச ரூபாயைத் தரத்துணியும் அறம்தான் நாம் கண்டுவந்த அறம். குழந்தையை இழந்தால் என்ன பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னொன்று பெற்றுக் கொள்ளலாம். இந்த தீயவனைத் தப்பவிடலாமா? என்று சொல்வதுதான் இந்த ‘பொறுத்துக் கொள்ளுங்களிலும்’ உள்ளது. அந்தத் தீயவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்குத்தான் மாற்றுக்கருத்து இருக்க முடியும்?

கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும், ஊழலையும் ஒழிக்க வேண்டும். இப்படி மக்களை வதைத்து நள்ளிரவு அறிவிப்பில் நாட்டையே நடுவீதிக்கு அழைத்துத்தான் ஒழிப்பேன் என்றால் இது என்ன நிர்வாகம்? இதற்கு எதற்கு ஒரு அரசு? அதிகாரிகள்? நமது காவல், கல்விமுறை, நாடளுமன்றம், வங்கியல்? தொலைக்காட்சியில் செல்லாது என்று சொல்வதாக இருந்தால் அதற்கு ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லையே..! கருப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மக்கள் வதைக்கப்படக் கூடாது. இரண்டையும் சமவிகிதத்தில் பார்ப்பவனுக்குப் பெயர்தான் ஆட்சியாளன். இன்னும் சொல்லவேண்டுமெனில் கருப்புப் பண முதலைகளைப் பிடிப்பதில் சுணக்கம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என் மக்கள் துயரத்திற்கு ஆளாகக் கூடாது என்று எண்ணுபவனே மக்களின் சேவகன். மக்கள் எத்துயரில் மாண்டாலும் கருப்பை ஒழிக்கத்தே தீருவேன் என ஒரு அரக்கனால் மட்டுமே செயலாற்றமுடியும்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் பரவாயில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதுதான் நமது அறம். இங்கு குற்றவாளிகளுக்காக நிரபராதிகள் கொடூரமாய் தண்டிக்கப்படுகிறார்கள். மக்களின் வலி என்பது வரிசையில் நிற்பது மாத்திரமல்ல. துளித்துளியாய் சேமித்த தண்ணீரை குடிக்க இயலாமல் கையில் நீர் மொந்தைகளுடன், தொண்டை வறளும் தாகத்துடனும் பாலைப் பெருவெளியில் சுடுமணலில் சுருண்டு விழும் வலி அது. மனிதனை நேசிப்பவர்களால், மானுடத்தை விரும்புபவர்களால் மட்டுமே உணர முடிகின்ற வலி அது.

நாளைய திட்டங்களுடன் இரவு உறங்கச் செல்பவனின் நம்பிக்கையில் அமிலம் வீசும் செயலை வெறுமனே எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? ஆயிரம் ஆயிரம் வியாபாரிகளின் வணிகத்தில் விசக்கத்தியை எறியும் சொல் அந்தச் ‘செல்லாது’ எனும் வார்த்தை. மண் பார்த்து, விதைத்து, உரமூட்டி, களையெடுத்து, நெல்மணிகளை எண்ணி எண்ணிச் சுவாசிக்கும் விவசாயத்தின் மூச்சுக்குழலை அடைக்கின்ற கொடுஞ்சொல்தான் ‘செல்லாது’ எனும் சொல்.

நேர்மையாய், உண்மையாய், உதிரம் சுண்டிப்போக வெந்துருகி மனைவியையும், பெற்றோரின் நோயையும், பிள்ளையின் பசிவயிற்றையும் நினைத்து நினைத்து தன்பசி மறந்து, ஊண் மறந்து, உறக்கம் களைப்பு சகித்துச் சம்பாதித்த இந்த ரூபாய் இனி வெறும் காகிதம் என்று சொல்லும்போது ஏற்படும் நெஞ்சடைக்கும் சோகத்தில் தேசபக்தியைத் தேடுவதை விட அயோக்கியத்தனம் என்ன இருக்க முடியும்? தீராத வலிகளுடனும், பெரும் நோயுடனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள மருந்துகளைத் தேடிச்சென்ற பொழுதில்தான் ‘உங்கள் பணம் இனிமேல் செல்லாது’ என முகத்திலடிக்கப்படும் வேதனையை தொலைக்காட்சி விவாத அரங்கில் பேசுபவனுக்கு எப்படி உணர்த்த முடியும்?

தூக்கம் கலைத்துப் போட்டுவிட்டு கணவனுக்கும், குழந்தைகளுக்கும் டிபன் பாக்ஸ்களில் உணவு தயாரித்து நிரப்பி, அவர்களைச் சேவித்து தனை மறந்து பரபரப்பாய் ஓடி வியர்வை நனைந்து வங்கிப் பணி வந்து, பொழுது முழுவதும் முண்டியடிக்கும் கூட்டத்தின் சாபம் சுமந்து, விரல் நொடிந்துபோக பணம் எண்ணி எண்ணி, எந்தக் கேள்விக்கும் விடை தெரியாமல், கணக்குகளை எழுதி மாளாமல், வைத்திருந்த தேநீர் அருந்தாமலேயே ஆறிச் சாக காத்திருப்பவர்களின் விழுங்கும் பார்வைகளால் நெட்டிமுறிக்க அஞ்சி, முந்தானையால் முகம் துடைத்து வங்கி நேரம் முடிந்தும் பணம் எண்ணி, எண்ணி எழுதி, எழுதி கணினியில் கணக்குத் தீராமல் வெடிக்கும் தலைவலி சகித்து, வீட்டிலிருந்து ஓயாது வரும் அழைப்பு புறக்கணித்து, புறக்கணிப்பிற்கு நடுவே ‘ கொஞ்சம் லேட்டாவும்.. உங்களுக்குத் தெரியும்தானே…! பிள்ளைங்கள தூங்க வைங்க… நான் வந்து சாப்டுக்கறேன்’ என்று பேசி தீராக் கணக்கு தீர்த்து நாளைய காலை பிரச்னைக்காக இப்போதே தயாராகி நள்ளிரவில் வீடேகி, மீண்டும் அதிகாலை பரபரப்புடன் வங்கி வந்து சேர்ந்து எல்லா ஏச்சுகளையும் வாங்கித் தொலையும் ஆயிரம் ஆயிரம் வங்கி ஊழியர்களின் பெருவலிகளை யாருக்கு யார் உணர்த்துவது?

சுருக்குப் பையில் வாழ்க்கையைச் சேமித்து வைத்துக் காலம் தள்ளும் ஓராயிரம் முதுமைகளை வங்கி வாயிலில் காத்திருக்க வைப்பது என்பது வெறும் வரிசையில் நிற்க வைப்பது மட்டும்தானா? எதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? உண்மையாய் உழைத்துப் பெற்ற அந்த நம்பிக்கைப் பணத்தை நான் விரும்பியபடி செலவழிக்க இந்த மணித்துளியிலிருந்து இயலாது என்ற ஏமாற்றத்தை, ‘நூறு ரூபாய் இருந்தா மட்டும் சாப்பிடு இல்ல வெளிய போ’ என்று ஒரு யாசக நிலைக்குத் தள்ளப்பட்டதை, ஐந்து நிமிடம்கூட காத்திருக்காமல் சமைத்த உணவைப் பாத்திரத்தில் அடைக்கப் பொறுக்காதவனை நாள்முழுவதும் சாலையில், வரிசையில் நிற்கவைத்ததை, வரிசையில் முன்நிற்பவன், பின் நிற்பவன், காவல்துறை, வங்கிக் காவலாளி எல்லாருடைய சுடுசொல்லை, இன்னும் இன்னுமான வேதனைகளை எதற்காகப் பொறுத்துக் கொள்ளவேண்டும்?

சரி…! பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் நான் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்லுங்கள்? யாருடைய தவறுக்காக நான் இங்கு தண்டிக்கப் படுகிறேன்? இங்கு பொறுத்துக் கொள்வதும், தண்டிக்கப் படுவதும் எளிய மனிதர்களுக்கு மட்டுமானதுதானா? வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு மைவிரல் காட்டும் அரசியல் தலைவர்களை, அபிமான நட்சத்திரங்களை, இந்த மைவைக்கும் வைபவத்தில் நாம் காணமுடிவதில்லையே..! ஏன்?

கருப்புப் பணம் என்று நீங்கள் சொல்லிக் காட்டும் பணமெல்லாம் வந்து தீர்ந்ததும் இப்போது இருக்கும் இந்த மிட்டாய்க் கலரும் கருப்பாகாது என்பதற்கான திட்டத்தை கொஞ்சம் விளக்கமாகச் சொல்லித் தாருங்கள். என்னை நான் எப்படியாவது சமாதானப் படுத்திக் கொள்கிறேன்.

கருப்புப்பணத்தை மீட்டுவிட்டீர்கள்… அப்படியே வைத்துக் கொள்வோம். நாடு சுபிட்சம் பெறட்டும். ஆனால் சுரண்டிக் கொழுத்தவர்கள் யார்? எங்கள் இரத்தத்தை உறிஞ்சியவர்கள் எங்கே? இந்த நாட்டைச் சூறையாடியவர்கள் எவர்? நாட்டின் நம்பகத்தன்மையை உடைத்து, காவல், நீதியைக் கேலிக்கூத்தாக்கிய அந்தக் கயவர்களின் முகம் எது? அவர்களுக்கு என்னதான் தண்டனை? பணத்தை மீட்பதை விட முக்கியம் அவர்களை அடையாளப் படுத்துவதுதான். சாக்கடைகளை பெருகவைத்துக் கொண்டு கொசுக்களை அடித்து என்ன பயன்? இந்தக் கள்ளப் பணத்தையும், கருப்புப் பணத்தையும் மீட்கும் உபாயம் இதுதான் என்றால், இது மட்டும்தான் என்றால் ஐம்பது நாளைத் தாண்டியும் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் மீட்கும் பணம் எங்கிருந்து களவாடப்பட்டதோ அங்கு சேர்க்கப் படுமா? கொள்ளையர்கள் தண்டிக்கப் படுவார்களா? இனி கருப்புப் பணத்திற்கான ஓட்டைகள் அடைக்கப்பட்டுவிட்ட உத்தரவாதம் தருவீர்களா? அப்படியானால் என் நாட்டிற்காக எதையும் தாங்கிக் கொள்வேன்.

எங்கள் மீது விழும் சவுக்காரங்களை நாங்கள் சகித்துக் கொள்கிறோம். வாய்வித்தை காட்டும் எங்கள் மன்னரே…! பதில் தர வேண்டிய நீங்கள் வெறும் கேள்விகளைத் தருகின்றீர்கள். எங்களுக்குத் தேவை கேள்விகள் அல்ல, பதில்கள். பொருளாதார மேதைகளின் கணக்குகளுக்கு நீங்கள் அப்புறம் பதில் சொல்லிக் கொள்ளுங்கள். நாட்டின் இதயமான நாடாளுமன்றத்திற்கு பிறகு பதில் தரலாம். எந்தப் பொருளாதாரக் கணக்கையும் அறிய விரும்பாத இந்த நாட்டின் ஒரு எளிய குடிமகனான எனக்குப் பதில் சொல்லுங்கள். யார் செய்த தவறுக்காய் என்னை வதைக்கின்றாய்?

-வி.எஸ். முஹம்மத் அமீன்

வி.எஸ். முஹம்மத் அமீன்

error: Content is protected !!