Featured Category

எல்லாம் அவாள் செயல் – சுப.வீ.

அனைத்துக் குழப்பங்களுக்கும் அவாளே காரணம் என்று நான் சென்ற கட்டுரையில் கூறியிருந்தேன். அது உண்மை என்பது மெல்ல வெளிச்சத்திற்கு வந்து கொண்டுள்ளது.
பா.ஜ.கட்சியால் ஒருநாளும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. எனவே குறுக்கு வழிகளைத் தேட வேண்டிய நிலையில்தான் அது உள்ளது.

இப்போது அக்கட்சியின் முன்னால் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அ.தி.மு.க.வின் இரண்டு பிரிவுகளில் ஒன்றைத் தன் வயப்படுத்திக் கொண்டு, பின்இருக்கையில் அமர்ந்து அரசை நடத்துவது.

இரண்டாவது, யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையை உருவாக்கி இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துவது.

முதல் முயற்சி பலிக்குமா, பலிக்காதா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.

பன்னீர்செல்வத்த்திற்குப் பின்னால் காவிகள் இருக்கின்றனர் என்பது உண்மைதான்.

அதற்காக அவர்கள் சசிகலாவுக்கு எதிரானவர்கள் என்று யாரும் கருதிவிட முடியாது. சசிகலா குழுவினரை வளைப்பதற்காத்தான், ஜெயலலிதா இறந்த அன்று, ஒரு நாள் முழுவதும் வெங்கையா நாயுடுவை அவர்கள் ‘நேர்ந்து’ விட்டிருந்தனர்.

அதில் ஏதோ சரிவரவில்லை போலிருக்கிறது. பிறகு பன்னீர்செல்வத்தை ஆவியிடம் குறி கேட்க வைத்தனர்.

எனவே இனி எப்போதும் பன்னீரைத்தான் அவர்கள் ஏற்பார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

சசிகலாவும், நடராசனும் சரியாகி விட்டால், பன்னீர்செல்வத்தை அடுத்த நிமிடமே கைகழுவி விடுவார்கள்.

அந்த முயற்சி இன்னும் நடக்கிறது என்பதன் அடையாளம்தான், சு.சாமி சசிகலாவை இப்போதும் ஆதரிப்பதன் பொருள். அவர்களின் ஒரே எண்ணம் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான்.

சசிகலா, பன்னீர் இருவரும் சரிவரவில்லையென்றால், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவார்கள்.

அடுத்து ஒரு பொதுத்தேர்தல் வந்தால் இன்றைய சூழலில் தி.மு.க. மிகப் பெரும் வெற்றி பெறும் என்னும் எளிய உண்மை நம்மைப் போன்றவர்களுக்கே தெரியும்போது, மத்தியில் அரசாளும் அவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா?

அதனால்தான் சசி, பன்னீர், தீபா என்று பலரையும் வளைக்க முயல்கின்றனர். இயலாதெனில் வேறு வழியில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கு இங்கு நடக்குமானால், அது மறைமுகமான பா.ஜ.க. ஆட்சியாகத்தானே இருக்கும்!

அவ்வாறாயின், அதனை உடனே கொண்டு வந்திருப்பார்களே என்று எண்ணலாம்.

கர்நாடக அரசு கலைக்கப்பட்ட போது, அன்று முதல்வராக இருந்த எஸ்.ஆர். பொம்மை தொடுத்த வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புதான் அவர்களின் தயக்கத்திற்குக் காரணமாக உள்ளது.

கர்நாடகத்தில், ராமகிருஷ்ண ஹெக்டே, ஜெ.ஹெச்.படேல், தேவே கவுடா எல்லோரும் சேர்ந்து தொடங்கிய ஜனதா கட்சி 1983இல் அங்கு முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது.

சில காரணங்களால் ஹெக்டே விலகிய பின், பொம்மை ஆட்சிக்கு வந்தார். பிறகு மீண்டும், லோக் தள் கட்சியோடு இணைந்து ஜனதா தள் என்னும் பெயரில் கூட்டணி ஏற்படுத்தித் தேர்தலில் வென்று 1988இல் முதலமைச்சர் ஆனார்.

அவர் கூட்டணியிலிருந்து ஒரு கட்டத்தில்
19 பேர் விலகினர். அதனைக் காரணம் காட்டி, அன்று கர்நாடக ஆளுநராக இருந்த
வேங்கட சுப்பையா ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரை செய்தார்.

ஆனால் சட்டென்று 7 பேர் மனம் மாறி
( நம் பன்னீர்செல்வம் போல) தங்கள் பதவி விலகல் கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். ஆனால் அதனை ஆளுநர் ஏற்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டது.

பொம்மை கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். நீதிமன்றம் ஆளுநர் செய்தது சரி என்று சொல்லி விட்டது. பொம்மை மீண்டும் உச்ச நீதி மன்றம் சென்றார். நீதிபதி குல்தீப் சிங் தலைமையிலான 9 பேரைக் கொண்ட ஒரு பெரிய நீதிபதிகளின் அமர்வு அதனை விசாரித்தது.

அப்போது வழங்கப்பட்ட தீர்ப்புதான், இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் திருப்பமாக அமைந்தது. ஆட்சியைக் கலைத்தது செல்லாது என்று கூறிவிட்டது. பொம்மை மீண்டும் முதல்வரானார்.

அன்றிலிருந்து மாநில அரசுகளைக் கலைப்பதில் மத்திய அரசுகள் நிதானம் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.

இன்றைய மத்திய அரசின் தயக்கத்திற்கும் அதுதான் காரணம்.

எனவே யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்பது உறுதியாக வேண்டும் அல்லது யாரேனும் ஒரு குழு தங்களிடம் சரணாகதி அடைய வேண்டும் என்பதற்காகக் காத்திருக்கின்றனர்.

என்ன செய்தாலும் இன்னும் சில மாதங்கள் அல்லது ஓராண்டிற்கு மேல் யாருடைய ஆட்டமும் செல்லாது. விரைவில் இருள் கலையும்

சு.ப.வீர பாண்டியன்

error: Content is protected !!