Featured Category

இது யாருக்கான அரசு?

2017 ஜனவரி 28 ஆம் நாள் அதிகாலை 3.45 மணிக்கு எம்.டி.பி.டபிள்யூ மேப்பிள் எனும் கப்பலும், எம்.டி.டான் காஞ்சிபுரம் எனும் கப்பலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் எம்.டி.டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்தக் கச்சா எண்ணெய் எண்ணூர் தொடங்கி திருவெற்றியூர், ராயபுரம், மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை என கிழக்குக் கடற்கரை பகுதிவரை சுமார் 32 கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்படலமாகப் பரவியது.
எண்ணூர், திருவொற்றியூர், பாரதியார் நகர் கடற்கரை பகுதிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி மாசடைந்துவிட்டன. கடல் ஆமைகள், மீன்கள், நண்டுகள் போன்ற உயிரினங்கள் கொத்துக் கொத்தாய்ச் செத்து கரையொதுங்கின. இது வெறும் எண்ணெய் சமாச்சாரமல்ல நீண்டகால பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்திருக்கிறது இந்த விபத்து. ‘கச்சா எண்ணெய் கசிவால் சூரிய ஒளி கடலில் ஊடுறுவாமல் ஒளிச்சேர்க்கை தடைபடும். கடலில் கலந்த ‘பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்ஸ்’ பல ஆண்டுகளுக்குப் பிறகும் கடலில் தங்கி பெரும் பேரழிவுக்கு இட்டுச் செல்லும்’ என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்

கடலில் தடுப்பணை ஏற்படுத்தி எண்ணெய் படலம் பரவாமல் தடுப்பது, பாக்டீரியாக்களைத் தூவி சேதத்தைக் கட்டுப்படுத்துதல், நவீன எந்திரங்களின் மூலம் விரைந்து தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், கப்பல் சேதத்தை உடனே பார்வையிட்டு அதற்கான காராணத்தை அறிய முற்படுதல், கப்பல்களை துறைமுகத்தில் விசாரணைக்காலம் முழுமையும் நிறுத்தி வைத்தல், வழக்குத் தொடுத்தல், விசாரித்தல், பாதிப்புகளை ஆய்தல் என்ற பணிகளை மேற்கொள்ளாமல் அரசு வாளிகளைக் கையில் கொடுத்தது.

எந்தவிதமான பாதுகாப்புமின்றி தன்னார்வத் தொண்டர்கள் கை,கால் உறைகளை அணிந்து பாதுகாப்பாய்(!) வாளி எனும் நவீன எந்திரங்களுடன் களம் புகுந்தத செய்தி கரும்படலமாய் மத்திய மாநில அரசுகளின் மீது படியத் தொடங்கியது. அரசு என்ன செய்தது தெரியுமா? வழக்கமான அறிக்கைப் போர்கள்தான் முதலில் தொடுத்தார்கள்

கப்பல் விபத்து குறித்து இரு மாதத்திற்குள் விசாரணையை நடத்தி முடிப்போம் என்று கப்பல் துறை இயக்குநன் ஜெனரல் மாலினி வி.சங்கர் கூறியுள்ளார். எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கப்பல் நிறுவனங்களின் காப்பீடு மூலம் ரூ.125.34 கோடி இழப்பீடாகப் பெற்றுத்தருமாறு மத்திய அரசிடம் முறையிடப் போவதாக மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார். கடலில் ரொம்பவெல்லாம் பாதிப்பில்லை சும்மா 12 கிலோமீட்டர் தூரத்துக்குத்தான் பரவியுள்ளது. அதிலும் 170 டன் எண்ணெய் படலத்தை அகற்றிவிட்டோம் என்கிறார் கடலோர காவல்படை ஐஜி ராஜன் பர்கோத்ரா. மத்திய கப்பல்துறை இணைஅமைச்சர்
‘கச்சா எண்ணெய் கடலில் கலக்கவில்லை. பெட்ரோலிய எரிபொருள்தான் கடலில் கலந்துவிட்டது. நம்மிடமுள்ள நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி மூன்றே நாளில் சரிசெய்துவிடலாம்’ என்று ஒரே போடாகப் போட்டு தான் ஒரு ‘பாஜக’க்காரர் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.

இந்திய கடலோர காவல்படை, காமராஜர் துறைமுக பொறுப்புக் கழகம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய கடற்படை, ஆகியவற்றைச் சார்ந்த பணியாளர்களுடன் மீனவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என 5,700 நபர்கள் இந்தப் பணியில்  5 நாட்களாக ஈடுபடுத்தப்பட்டு, கரையில் சேருகின்ற எண்ணெய் கழிவுகளை ஓரளவு அகற்றியுள்ளனர். பன்னிரெண்டு நாள்கள் கடந்தும் இன்னும் தீர்ந்தபாடில்லை.

பத்து ஆண்டுகளுக்கு முன் லூசியானா கடலில் ப்ரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனி உலகின் மிகப்பெரிய ஆயில் கசிவை நிகழ்த்தியது. அதற்குத் தண்டனையாக கடலைச் சுத்தபடுத்தும் செலவை ஏற்றதுடன், ஆயில்கசிவால் பாதிப்படைந்த கடற்கரைகள், கடற்கரையோர வீடுகள், உணவகங்கள் பாதிப்பையும் கணக்கிட்டு அதற்கு ஈடாக 20 பில்லியன் டாலர் நஷ்ட ஈட்டையும் கொடுத்தது. கம்பேனியின் சி.இ.ஓ பதவி விலகினார். எக்ஸான் கம்பனி இதுபோல அலாஸ்காவில் வால்டேஸ் எனும் கப்பலில் ஆயில்கசிவை நிகழ்த்தியதால் ஆர்ட்டிக் கடலையும் அவர்கள் சுத்தம் செய்து தந்தார்கள்.

இன்று நடந்த விபத்து ஒருதுளி. இன்னும் காத்திருக்கின்றன ஏராளமான ஆபத்துகள். தஞ்சை மண் மீத்தேன் எரிவாயுவிற்காக சிதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. விவசாய பூமிகளின் அடியில் கெயில் எரிவாயுக் குழாயைச் செருகி சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றது. காவிரி, டெல்டா பகுதிகள் விவசாயம் செய்ய இயலா நிலமாக நம் பூமி மலடாகி வருகிறது. கணிம வளங்களை வெட்டியெடுத்து பூமியின் ஆதாரத்தைச் சுரண்டுகிறார்கள். ஆற்றுமணலை வாரியெடுத்து நீராதாரத்தைக் கொல்கின்றார்கள். அணு உலை மூலமாக கூடங்குளம் பெரும் அபாய பூமியாக மாறிக் கொண்டிருக்கின்றது. நாகூர் பகுதியில் மார்க் முதலாளிகளின் ஆதிக்கத்தில் காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. நாகூர் மக்களின் துயரக்குரலை செவிகளில் போட்டுக்கொள்ளாமல் முதலாளிகளைக் காப்பாற்றுவதில்தான் அரசு முனைப்புக் காட்டி வருகிறது. நிலக்கரியால் ஊரே கரியடைந்து சுவாசக்கோளாறினால் பெரும்பாதிப்பை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

மக்கள் பிரச்னைகளைக் குறித்து கவலைப்படாத அரசு மார்க் நிர்வாகம் 4500 கோடி முதலீடு செய்துள்ளதே…! என்றுதான் தலையைத் தடவுகிறது. அண்மையில் நடந்த கப்பல் விபத்தில் கசிந்த எண்ணெய் கசிவுக்கே இந்தப் பாடு என்றால் நாளை அணுக்கசிவு நிகழ்ந்தால் என்னாகும்? என்ற சுப. உதயகுமாரின் கேள்வியின் அழுத்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்னைகளின் போதெல்லாம் அரசு பன்னாட்டு நிறுவனங்களைக் காப்பாற்றுவதில்தான் முனைப்புக் காட்டுகிறதே தவிர மக்களைக் குறித்து கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை. இந்த அரசுகள் நமக்கானவை அல்ல. அவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது, இந்த அரசுகள் பன்னாட்டு ஏவலாளிகளாய்த்தான் செயல்படுகின்றார்கள். மக்கள் நலன் என்பதை கண் துடைப்பிற்கான வார்த்தைப் பதமாகத்தான் பயன்படுத்துகின்றன அரசுகள்.

இன்று நேற்றல்ல போபால் விஷவாயுக் கசிவிற்காக மக்கள் கூக்குரலிட்டபோதும் அவர்களின் கவலை யூனியன் கார்பைட் நிறுவனத்தின் மீதுதான் குவிந்திருந்தன என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது சமரசத்தின் 1985 ஆண்டின் இதழ். ஆட்சி மாறினாலும் அரசின் சிந்தனை மாறவில்லை. அவர்கள் மாற மாட்டார்கள். நாம்தான் மாறவேண்டும்.

(சமரசம் 2017 பிப்ரவரி 1-15 இதழில் பரண் பகுதியிலிருந்து)
-வி.எஸ்.முஹம்மத் அமீன்

வி.எஸ். முஹம்மத் அமீன்

error: Content is protected !!