Featured Category

கரி படியும் நிலம்!

 நாகூரின் பிரச்னை மட்டுமல்ல… நம் காலத்தின் பிரச்னை இது
நாகூர் என்றதும் நாகூர்தர்காவும் அதன் மீதமர்ந்து பறக்கும் புறாக்களும் நினைவில் சிறகடிக்கும். நாகூர் பெயரைச் சொன்னதும் ‘ இறைவனிடம் கையேந்துங்கள்..’ என்ற நாகூர் ஹனீஃபாவின் கம்பீரமான குரல் நம் செவி நனைக்கும். சுனாமியின் ஆழிப்பேரலைக்குப் பிறகு நாகூர் துயரத்தின் வடுவாய் நம் இதயங்களில் தங்கிவிட்டது. இந்த எல்லா அடையாளங்களின் மீதும் கரியைப் பூசியிருக்கிறது காரைக்கால் மார்க் துறைமுகம்.

2004 ஆம் ஆண்டு அடிக்கல் நட்டப்பட்டு ‘ ஜோரா கைதட்டுங்க…! இனிம உங்க ஊர் மாறப்போகுது.. மாயமில்லை மந்திரமில்லை… உங்க ஊருக்கு கப்பல்கள் வரும். அதிலிருந்து பருப்பும், எண்ணெயும் கொட்டும், உங்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும்… கல்வி வரும், இரயில் வரும், எல்லாம் வரும்..’ என்ற வாய்ஜாலத்துடன் முதலாளிகள் துறைமுகம் என்ற பெயரில் 2006ஆம் ஆண்டு காலூன்றினர்.

ஆந்திராவைச் சார்ந்த ரெட்டியின் மார்க் குழுமம் Karaikal Port Private Limited என்ற பெயரில் டி.ஆர்.பட்டினம் கீழவாஞ்சூரில் 590 ஏக்கர் நிலப்பரப்பில் நான்காயிரம் கோடி முதலீட்டில் துறைமுகத்தை நிறுவினர். பருப்பு, எண்ணெய் வகையறாக்களைவிட 90 விழுக்காடு நிலக்கரியைத்தான் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்தார்கள். இரண்டு வகையான நிலக்கரியை இறக்குமதி செய்து அவற்றைக் கலந்துகட்டி தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு லாரிகளிலும், சரக்கு இரயில்களிலும் அனுப்பினார்கள்.

ஒரு வேகனில் 56 பெட்டிகள் இருக்கும். அத்தனையிலும் கரி அள்ளிக் கொட்டினால் குபுகுபுவென நிலக்கரித்துகள் காற்றில் பறக்கத் தொடங்கும். ‘மாப்பிள்ளை அவர்தான். ஆனால் சட்டை என்னுடையது..’ என்ற கணக்கில் துறைமுகம் புதுவை அரசின் கீழுள்ள காரைக்காலில் இருந்தாலும் நாகூரிலிருந்து 250 மீட்டர் தூரத்தின் எல்லை ஓரத்தில் அமைந்துள்ளது. காற்று நம்பக்கம்தான் வீசுகிறது. ஆனால் இது அதிஷ்டக் காற்று அல்ல. அழுக்குக்காற்று.

நாகூர், கீழ்வாஞ்சேரி, மேல்வாஞ்சேரி, பட்டினச்சேரி பகுதிகளின் முகத்தில் கரிபூசியது இரண்டு மாநில அரசுகளும் இணைந்து.! ‘ என்ன இது..! ‘ என்று கேள்வி எழுப்பிய தொடக்க காலத்தில் தர்காவிற்கு வெள்ளையடிப்பது, குளங்களைத் தூர்வாறுவது, மருத்துவ முகாம்கள் நடத்துவது என முதலாளித்துவ வித்தைகளைத்தான் மார்க் குழுமம் செய்து காட்டியது.

மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதி, வெளியிலிருந்து ஆள்கள் அதிகம் வரும் புனிதத்தலப் பகுதி அருகில் துறைமுகம் அமைக்கக்கூடாது என்ற எளிய விதியைக்கூட காலில் போட்டு நசுக்கிவிட்டுத்தான் காரைக்கால் துறைமுகம் கட்டியெழுப்பப்பட்டது. ‘இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று வேடிக்கை பார்க்க இயலாத அளவுக்கு மக்களின் வாழ்வோடு விளையாடியது நிலக்கரி. மூச்சுக்குழலை அடைத்து மக்களை பெரும் துயருக்குத் தள்ளியது. விவசாய மண்ணை மலடாக்கியது. நிலத்தடி நீரை உப்புக்கரிக்கச் செய்தது, மீன்பிடித் தொழிலைக் கொன்றழித்தது, சுற்றுப்புறச் சூழலை நாசமாக்கியது. அத்தோடு நிற்கவில்லை இந்த நிலக்கரி பூதம் அந்தப் பகுதியையே மக்கள் வாழத் தகுதியில்லாத பூமியாக மாற்றி வருகிறது.

இது நாகூரின் பிரச்னையல்ல… நம் மண்ணின் பிரச்னை

கார்ப்பரேட்களின் சேவகராகத் திகழும் மத்திய அரசு கெயிலுக்கு அனுமதியளித்தது. மீத்தேனுக்கு திட்டம் வகுத்தது. இப்போது ஹைட்ரோ கார்ப்பேட் என்று குழி தோண்டுகிறது. டெல்டா பகுதிகள் விவசாயம் அழிந்து வரும் இச்சூழலில் இந்தத் துறைமுகம் பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.

இந்த பன்னாட்டு பெருமுதலாளிகளின் சந்தையை நம் மண்ணில் நிலை நிறுத்தும் முயற்சியை நாம் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும். கேரளா பிளாச்சிமடாவிலிருந்து கொக்க கோலா விரட்டியடிக்கப்பட்டதைப் போன்று இந்த முதலாளிகளையும், அவர்களுக்கு அனுமதியளிக்கும் அரசையும் நாம் விரட்டியடிக்க வேண்டும்.

இது நாகூரின் பிரச்னை மட்டுமல்ல. நம் மண்ணின் பிரச்னை. இன்னொரு மெரினா போராட்டமாய் இது உருவெடுக்க வேண்டும். நாகூர் மக்கள் தங்களால் இயன்ற அளவு சன்னமாய் குரல் எழுப்பி வருகிறார்கள். அவர்கள் குரலை உலகறியச் செய்ய வேண்டும். அதனை நம் போராட்டமாக மாற்ற வேண்டும். இந்தப் போராட்டம் மிகப்பெரும் போராட்டமாய் கிளம்பி மீத்தேன், கார்போ ஹைட்ரேட், கெயில், அணு உலை என்று நீண்டு பரவி இந்த மண்ணை பெரும் முதலைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.

(சமரசம் 2017 மார்ச் 1-15)

வி.எஸ்.முஹம்மத் அமீன்

வி.எஸ். முஹம்மத் அமீன்

error: Content is protected !!