Featured Category

பரீட்சை எழுதும் பரிதாபம்!

உலகில் ஏற்படக்கூடிய சமூக அரசியல் மாற்றங்கள் சாதாரண மனிதனின் வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது  என்பதற்கு கடந்த 70 ஆண்டுகளாக  நடைமுறையில் இருந்துவரும் இன்றைய கல்வி முறையும் அது ஏற்படுத்தும் பாதிப்புகளும் இதன் எதார்த்த அடையாளங்கள்.
இந்திய முதலாளித்துவ கல்வி அமைப்பில் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு 150 ஆண்டுகள் ஆகின்றன. துவக்கத்தில் மாணவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாத இந்த தேர்வு முறை இன்று இந்திய சமூகத்தில் மிகப்பெரும் உளவியல் நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்துவருகிறது.

இன்று தமிழகத்தில் 9 இலட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.மாணவர்களிடம் தேர்வு பயம் மண்டை உச்சிக்கு ஏறி நிற்கிறது.

பிள்ளைகள் சரியாக  உண்ணாமல் உறங்காமல் பாடப் புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு இதையெல்லாம் எதற்கு படிக்கின்றோம் இதன் காரண காரியங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் விளங்காமல் சப்தம் எழுப்பி மனப்பாடம் செய்யும் கொடுமை நடக்காத வீடுகளே இன்று கிடையாது.

பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தால் வாழ்வே முடிந்து விட்டது.
பிச்சை தான் எடுக்க வேண்டும் மேலும் வெளியே தலை காட்ட இயலாத அளவிற்கு அவமானமாகப் போய்விடும் என்ற சமூக பொருளாதாரா அச்சத்தினால் பெற்றோர்களே  பிள்ளைகளை மனரீதியாக நோவினை செய்யும்
கொடுமை குடியரசு இந்தியா தனது குடிமக்களுக்கு வழங்கிய மிகக் கேவலமான வாழ்க்கைப் பாடம்.

அறியாத பருவத்தில்  ஓடி ஆடி குதித்து விழுந்து புரண்டு அடித்து உடைத்து அறிந்துகொள்ளும் அறிவு.
விவரம் தெரியத் துவங்குகிற நேரத்தில் சக வயது நண்பர்களுடன் ஒவ்வொரு பேச்சிலும் நடவடிக்கைகளிலும் தவறிழைத்து தவறிழைத்து பெறுகின்ற பாடம்.
மூத்த வயதுடைவர்களுடன் உரையாடுவதில் பேசத் தெரியாமல் அதிகப்பிரசங்கித்தனமாக பேசி சற்று அவமானத்துடன் பெறுகின்ற பண்பாட்டுப் பாடம்.

தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் குறித்த புரிதல் இல்லாத போது, அவை பல சந்தேகங்களை எழுப்பும் போது  ஒவ்வொன்றாக தன் தந்தையிடம் அல்லது தான் பெரிதும் மதிக்கும் ஆசானிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் இயல்பான இயற்கையான பாடம்.

பருவ வயதின் கவர்ச்சியால் மாற்றுப் பாலினம் குறித்து தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஆர்வம். தெரிந்து கொள்கின்ற போது அடைகின்ற ஆனந்த அறிவு.

சமூக அரசியல் பொதுநலன் சார்ந்த விவகாரங்களில் தன்னலம் கருதாமல் காட்டும் இளமைத்துடிப்பு அதன் மூலம் தன்னைச் சுற்றிய மனிதர்களின் இயல்புகளை புரிந்து கொள்ளும் அறிவு.

இதோடு சேர்த்து…

பூமியில் தான் படைக்கப்பட்டதின் காரணத்தை தன் முன்னோர்களிடமிருந்து மூத்த ஆசான்களிடமிருந்து  பயின்று கொள்ளும்  முறைப்படுத்தப்பட்ட பாட முறை

இப்படி வாழ்வு முழுவதும் ஆசை ஆசையாக தேடித் திரிந்து வாசித்து சிந்தித்து ஏற்ற இறக்கத்துடன் கற்றுக்கொள்ளும் இயற்கை அமைப்பிற்குப் பெயர் தான் கல்வி.

இப்படி கற்றவர்களுக்குப் பெயர் தான் கல்வியாளர்கள்.
வாழ்வின் எவ்வளவு பெரிய புயலையும் தாங்கி நின்று சமாளிக்கும் சக்தி படைத்தவர்கள். அப்படிபட்டவர்களால் தான் முழு மனித சமூகமும் பயனடைய முடியும்.

சிந்தனைக்கு இடம் தராத சொல்லுவதை கேட்டு அப்படியே செய்து முடிக்கும் அடிமைகளை உருவாக்க வடிவமைக்கப்பட்ட மெக்காலேவின் குமாஸ்தா கல்வி முறையின் தொடராக  கடந்த 30 ஆண்டுகளாக முதலாளித்துவ சுரண்டல் சிந்தனைகளும் புகுத்தப்பட்ட இன்றைய கல்வி முறையில் பயிலும் பிள்ளைகளின் உள்ளமும் உடலும் இப்படித் தான் சிதைக்கப்படும்

தேர்வுகள் மூலம் அறிவை அளவீடு செய்யும் இந்த முட்டாள் தனத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.விரும்பியதை ஆசை ஆசையாக படிக்கும் சூழலை பிள்ளைகளுக்கு உருவாக்க வேண்டும்.

இது குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் சமூகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியமும் அவசரமும் பெருகிவருகிறது.

வெறுமனே பேசுவதால் கருத்து சொல்வதால் மட்டும்
இது நிலை மாறிவிடாது

-CMN  சலீம்

CMNசலீம்

error: Content is protected !!