Featured Category

’காதலை ஃபேண்டஸி ஆக்கலாம்… காஷ்மீரையுமா?!’

சமீபத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தினைப் பற்றிய பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஒருபுறம் படம் பிடிக்கவில்லை என்றும், மற்றொரு புறம் படத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்கு அறிவு போதவில்லை என்றும், படத்தைப் பற்றிய விவாதங்கள், விமர்சனங்கள் சமூக வலைதளங்களை மட்டுமல்லாமல், உணவகங்கள், பேருந்து நிலையங்கள் என எல்லா இடங்களையும் நிறைத்து வருகின்றன.
மணிரத்னம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த முகங்களில் ஒருவர்தான். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். பெரும்பாலான படங்கள் வெறும் காதலைப் பற்றி மட்டுமே மையக்கதையாகக் கொண்டிருந்த நேரத்தில், நண்பர்களுக்கு இடையேயான ஒரு பந்தத்தைச் சொல்லும், ‘தளபதி’ என்கிற நண்பர்களுக்கான காவியத்தைப் படைத்தவர். இன்றைக்கும் சூர்யா-தேவராஜ் என்று ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்ளும் ‘உயிர் நண்பர்களை’ பார்க்க முடிகிறது என்றால், அந்த அளவுக்கு அவர்கள் இருவருக்குமான காட்சிகளைச் செதுக்கியிருப்பார் மணிரத்னம். தளபதி படத்தில் மட்டுமல்ல… அலைபாயுதே படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ‘பயந்துட்டியா?’, ‘உயிரே போய்டுச்சு’, ‘பொண்டாட்டி செத்தா ஜாலியா இருக்கலாம்-ன்னு பாத்தியா’ என்கிற மாதவனுக்கும் ஷாலினிக்கும் இடையிலான உரையாடல்; மெளன ராகம் படத்தில், ‘உனக்கு என்ன வேணும்னாலும் சொல்லு. வாங்கித் தரேன்’ என்று மோகன் கேட்க ‘எனக்கு விவாகரத்துதான் வேண்டும்’ என்று ரேவதி சொல்லும் காட்சி; அதே படத்தில், ‘நீங்க தொட்டா கம்பளிப் பூச்சி ஊருரா மாதிரி இருக்கு’ என்று ரேவதி சொல்லும் காட்சி… என இன்னும் எத்தனையோ நிதர்சனமான நிகழ்வுகளை, மனிதர்களின் உணர்வுகளை அருமையாகக் காட்சிப்படுத்தி, நம் கண் முன்னே நிறுத்தியவர் மணிரத்னம். இவருடைய ரோஜா, தில் சே, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட அரசியல் படங்கள் மட்டுமல்லாமல் எல்லா படங்களிலும், கதைகளிலும், அவை காட்சிப்படுத்தப்பட்ட விதங்களிலும் நமக்கு பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன என்பதும் உண்மை.

ஒரு கலைஞனுக்கு அவரை நோக்கி வரும் விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் கலைஞனின் பாடு. ஆனால், அதைவிட மிக முக்கியமானது ஒரு கலைஞன் காலத்துக்கு ஏற்றாற்போல் மாறுவதும், அவரின் கலைப்படைப்பை அந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல் தருவதும். ஆனால், அவ்வாறான ஒரு மாற்றம் மணிரத்னம் படங்களில், சற்று காணாமல் போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சமீபத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்திலும் அது அப்பட்டமாகத் தெரிகிறது. குறிப்பாக தேச பக்தியை அவர் காட்டிய விதம்.

படத்தில் ஒரு காட்சியில், கார்த்தியுடன் சேர்ந்து இருவர் பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிக்கும் போது ஒரு லாரியை மடக்கி ஏறுவார்கள். இதில் அந்த ஆப்கானி லாரி ஓட்டுநர், ‘நீங்கள் பாகிஸ்தானியா?’ என்று கேட்பார். அதற்கு அவர்கள் நாங்கள் இந்தியர்கள் (ஹிந்துஸ்தானி) என்பார்கள். அதற்கு அந்த லாரி ஓட்டுநர், ‘நம்ம ஆளுதான்’ என்பார். ஹிந்துஸ்தானிகள் என்று தெரிந்ததும், அவர்கள் தப்ப அந்த லாரி ஓட்டுநர் உதவுவார்.

நடுவில் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டும்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மடக்கிப் பிடிக்க முயற்சி செய்யும்போது, லாரியை அலேக்காகத் தூக்கி, எல்லையில் நடப்பட்டிருக்கும் பாகிஸ்தான் கொடியை சாய்த்துவிட்டு தப்புவதாகக் காட்சிப்படுத்தியிருப்பார். லாரி மீண்டும் ரோட்டுக்கு வரும்போது பாகிஸ்தான் கொடி மெல்ல கீழே சாயும்.

தினம் தினம் மாறி வரும் இந்த உலகில், நாளுக்கு நாள், நொடிக்கு நொடி பிரேக்கிங் நியூஸ் ஓடும் ஊரில், 25 வருடங்களுக்கு முந்தைய (ரோஜா படத்தில், எரிந்துகொண்டிருக்கும் இந்தியக் கொடியை அரவிந்த் சாமி அணைக்கும் காட்சியை) ‘கொடி சென்டிமென்ட்டை’ எப்படித்தான் மணி சார் வைத்தார் என்று தெரியவில்லை. எல்லைகளை மதிக்காமல், எல்லைகளற்ற தேசம் விரும்பும், பயணங்களின்மீது காதல் கொண்ட இளைஞர்களுக்கு இடையே இந்தக் காட்சி சுத்தமாக ஒட்டவே இல்லை.

மேலும், இந்தக் கதை நிகழும் காலகட்டமாகக் காட்டப்படுவது கார்கில் போர் நடைபெறும் காலகட்டம். அந்தக் காலகட்டத்தில், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவு அளித்ததாக வரலாறு சொல்கிறது. பிறகு எப்படி அந்த ஆப்கானி, ஒரு ஹிந்துஸ்தானிக்கு இவ்வளவு வரவேற்பு அளித்தார் என்று புரியவில்லை. அதுமட்டுமல்லாமல், கதை நகரும் ஆண்டு 1999-க்குச் சற்று முந்தைய காலகட்டம். ஆனால், 1990-ல் இருந்து ராணுவச் சிறப்புச் சட்டம் நடைமுறையில் இருக்கும் ஓர் இடத்தில், அதுவும் தெற்காசிய பிராந்தியங்களில் முக்கியமான அணு ஆயுத பலத்தோடு இருக்கும் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் எல்லைப் பகுதியில் எப்படி எல்லோரும் இவ்வளவு எளிதாக இரவு நேரங்களில்கூட வெளியில் சென்று வருகிறார்கள் என்றே தெரியவில்லை. அதுவும் உலகில் மிக அதிக அளவில் ராணுவமயப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றாக உலக நாடுகள் குற்றம் சாட்டும் பகுதி காஷ்மீர். ஆனால், போர்ப் பதற்றத்தில் இருக்கும்போதுகூட யாரும் அங்கு பரிசோதிக்கப்படுவதில்லை; எங்கு வேண்டுமானாலும் போகலாம், வரலாம்; ராணுவமோ, மத்திய சிறப்புப் பாதுகாப்புப் படையோ, காவல் துறையோ கண்டுகொள்ளாது என்றெல்லாம் காட்டினால், அதை சிறுபிள்ளைகூட நம்பாதே.

போர் என்றால் முதலில் பாதிக்கப்படுவது இரு நாட்டு மக்கள்தான்; இந்தப் போரில் 30,000 மக்கள் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறினர். அதனை ஒரு ஃபிரேமில்கூட காட்டவில்லை. அதைக்கூட ஏன் என்று கேட்காமல் ஏற்றுக்கொள்ளலாம். நீங்கள் ‘குவியப்படுத்தி’ காட்டியிருக்கும் ராணுவ கேம்ப்களில் இருந்து 11,000 கடிதங்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குப் பறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த மாதிரியான எந்தப் பரபரப்பையும் காட்டாமல், போருக்கு அடையாளமாக கார்த்தி குண்டு போடச் செல்வதை மட்டுமே காட்டியிருக்கிறீர்கள். அதுவும் அதற்கு முந்தைய காட்சியில் கார்த்தி, அதிதியின் பெற்றோர்களிடம் சண்டை பிடித்து வருவது போன்ற காட்சியை எல்லாம என்னவென்று சொல்வது. உங்களுடைய படங்கள் எல்லாமே விஷுவல் ட்ரீட் ஆக இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். அதற்காக போர் நடைபெறும் ஒரு பகுதியை ஏதோ சொர்க்கலோகமாகக் காட்டியிருக்கிறீர்களே மணி சார்; போரைப் பற்றி அறியாத, யாரைப் பற்றியும் கவலை இல்லாத இன்றைய ‘யோ யோ’ தலைமுறை, போர் என்றால் ’உலுலாய்க்கு’ என்று நினைத்துக்கொள்ள மாட்டார்களா?

படத்தில் மூன்று, நான்கு இடங்களில்தான் காஷ்மீரிகளைப் பார்க்க முடிந்தது. அவர்களும் பெரும்பாலும் ‘வேலைக்காரர்களாகவும், எடுபிடிகளாகவும்’ மட்டுமே இருந்தார்கள். இது சத்தியமாக ஏன் என்று தெரியவில்லை. எங்களுக்கு ஒரு காஷ்மீரைப் பார்த்தது போல் இல்லை. பனிப் பிரதேசம் ஒன்றுக்குத் தமிழ்நாட்டை ஷிஃப்ட் செய்ததுபோல் இருந்தது. அங்கு இருந்தவர்கள் பெரும்பாலும் தமிழ் பேசக்கூடிய மக்கள். பேருக்கு ஒரு ஆந்திரக்காரரையும், ஒரு அச்சம்மாவையும் (மலையாளி), ராணுவத்தில் சில வட இந்திய உடல் மொழியில் உள்ளவர்களையும் சேர்த்திருக்கிறார்கள். மேலும், கார்த்தியின் வசனங்களில் பாரதி வெளிப்படுகிறார். ஆனால், படத்தின் பெரும்பாலான இடங்களில் தமிழ் உச்சரிப்பு கொடுமை.

அதுமட்டுமல்ல, படத்தில் இரண்டு முக்கியமான இஸ்லாமிய கதாபாத்திரங்கள் காண்பிக்கப்படுகின்றன. ஒன்று இலியாஸ். கதாநாயகி கார்த்திக்கைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தும், கேப் கிடைக்கும் போதெல்லாம், இருவரும் சண்டை இடும் போதெல்லாம் கதாநாயகிக்கு ‘ரூட் விடும்’ ராணுவ முகாமைச் சேர்ந்த மருத்துவர். இவர் எப்போதும் ‘லைட்டாக வழிந்துகொண்டே’ இருப்பார். மற்றொருவர் பாகிஸ்தான் சிறையில் கார்த்தியுடன் இருக்கும் போர்க்கைதி. சிறையில் இருந்து தப்பிக்க ‘வெடிகுண்டு’ பயன்படுத்தலாம் என்று சொல்லும் ‘வன்முறை’யில் நம்பிக்கை கொண்ட ஒரு கதாபாத்திரம். அது மட்டுமல்ல. இவரால்தான் ஆப்கானிஸ்தானை அடைவதற்கு முன்னரே மீண்டும் பாகிஸ்தான் போலீஸாரிடம் மாட்டிக்கொள்வார்கள்.

பாம்பே படத்தில்கூட ஏதோ அவ்வளவு படுகொலைகளுக்குப் பின் இரண்டு தரப்பைச் சேர்ந்த தலைவர்களும் அதற்கு வருத்தப்பட்டதாகக் காட்டப்பட்டது. பாம்பே படுகொலைக்குப் பின் பால் தாக்கரே ”இஸ்லாமியர்களுக்கு நாம் யாரென்று காட்டிவிட்டோம்” என்றல்லவா பேசினார்? சிவ சேனா இந்து வெறி கும்பல், எப்படி படுகொலையை நடத்தியது என்று அனைவருக்கும் தெரிந்திருந்தும், ஏதோ இரண்டு தரப்புமே வெறிகொண்டு அலைந்ததாகக் காட்டினீர்கள்? எந்தெந்த வீட்டில் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள் என்று கதவுகளில் குறித்து வைத்து கொலைவெறியாட்டம் நடத்தியவர்களையும், பதிலுக்கு ஒரு சில இடங்களில் தற்காப்புத் தாக்குதல் நடத்தியவர்களையும் எப்படி ஒன்றாகவே பாவிக்க முடியும் என்று தெரியவில்லை. ரோஜா படத்தில், இஸ்லாமியர்களும், தில் சே படத்தில் வடகிழக்கு மக்களும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தமிழீழ விடுதலை அமைப்பும் இப்படித்தான் வன்முறையாளர்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள். பாகிஸ்தானியர்களையும் இஸ்லாமியர்களையும் வெறுப்பதுதான் இந்திய தேசியப் பற்றா? இன்னும் எத்தனை படங்களில் இதனை வைத்தே தேசப் பற்றைக் காண்பிப்பார்கள் என்று தெரியவில்லை.

நீங்கள் அனைவருமே விதவைகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், காஷ்மீரில் அரை விதவைகள் நிறைய இருக்கிறார்கள். அது என்ன அரை விதவை? காஷ்மீரில் சிறப்பு ராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கிறதல்லவா? சிறப்பு ராணுவச் சட்டத்தின் மூலம், இந்திய ராணுவம் அந்தப் பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும், தேடுதல் வேட்டையில் ஈடுபடலாம். அப்போது யாரை வேண்டுமானாலும், வாரண்ட் இல்லாமல், காரணம் சொல்லாமல் கைது செய்யலாம். ஏன், ‘அமைதியை நிலைநாட்டுவதற்காக’ சுட்டுக் கொல்லப்படலாம். அந்தத் தேடுதல் வேட்டையில் பிடித்துச் செல்லப்பட்டு உயிரோடு இருக்கிறார்களா, செத்துவிட்டார்களா என்றுகூடத் தெரியாமல் தங்கள் கணவரை உயிருடனோ அல்லது சாமாதியாகவோ பார்க்க மாட்டோமா என்று காத்திருப்பவர்கள் பேர்தான் அரை விதவைகள். இதெல்லாம் தற்போது நடைபெறுகிறதுதானே என்று யாரேனும் வாதிட நேரிடலாம்.

உங்களுக்கு குனான் புஷ்பாரா கொடூரச் சம்பவம் பற்றித் தெரியுமா? காஷ்மீரில் உள்ள குனான் புஷ்பாரா உள்ளிட்ட கிராமங்களில் இந்திய ராணுவம் 1991-ம் ஆண்டு ‘தேடுதல் வேட்டை’ என்கிற பெயரில் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது. அதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 23. ஆனால், உண்மையில் அன்று இரவு இந்திய ராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல். ஐக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி காஷ்மீரில் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பத்தாயிரம் பேர் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் என்றே தெரியாமல், ‘காணாமல் அடிக்கப்பட்டி’ருக்கிறார்கள். காஷ்மீரில் இன்றைய அளவில் 2,500-க்கும் மேற்பட்ட அரை விதவைகள் வாழ்ந்து வருகிறார்கள். 1989 முதல் 2006-ம் ஆண்டு வரை நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து 510 காஷ்மீரிகளிடம் எடுத்த கணக்கெடுப்பில், 12 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள், பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்த மண்ணைச் சேர்ந்த மக்களிடம்தான் இந்தியப் பிரதமர் மோடி, ‘அவர்கள் தீவிரவாதத்தைக் கைவிட வேண்டும்’ என்றும் ‘அமைதி நிலவ அவர்கள் சுற்றுலாத்துறையை வளர்க்க வேண்டும்’ என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். இந்த நிலையில் உள்ள ஒரு பகுதியை ‘காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீராக’ மட்டுமே நாம் பார்த்தால், கண்முன்னே அரங்கேறி வரும் மற்றொரு மிகப்பெரிய இனப்படுகொலையைக் கடந்துசென்றவர்கள் ஆகிவிடமாட்டோமா? இந்தப் படத்தில், இன்னும் முக்கியமாகப் பார்க்க வேண்டியது, படத்தின் கதாநாயகி ஒரு ‘சுயமரியாதை’ உள்ள பெண். கதாநாயகன் முரட்டு குணம் படைத்த ஆணாதிக்கவாதி. ஆனால், கதாநாயகன் என்னதான் அவருடைய சக ராணுவ வீரர்களுக்கு மத்தியில் வைத்து அசிங்கப்படுத்தினாலும், தள்ளிவிட்டாலும், கதாநாயகர் ஒரு மன்னிப்பு கேட்டதும் மன்னித்துவிடுகிறார்.

 

கடைசியில் விட்டுப் பிரிந்து சென்றாலும், கார்த்தி தேடி வந்து மன்னிப்பு கேட்டதும் இணைந்து விடுகிறார். அதாவது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன். ஆண் முரடன். அவனை மாற்றுவதுதான் பெண்ணுக்கு வேலை. அதிலும் கதாநாயகி வெறுமனே சுயமரியாதை உள்ள ஒரு பெண்ணாகக் காட்டவில்லை. கதாநாயகன் என்ன சொன்னாலும், ‘பனிச்சரிவு ஏற்பட்டு நாம் செத்துவிடுவோம்’ என்று கூறினாலும் ‘நான் ஒரு பெண் என்பதால்தான் இப்படி நடத்துகிறாய்’ என்று சொல்லும் ஒரு வறட்டுப் பெண்ணியவாதி. தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இங்கு நடந்தேறி வரும் வேளையில், பெண்ணியம் என்றாலே ஆண்களை எதிர்ப்பது மட்டும்தான் என்று ஆண்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், இரு பாலினத்திலும் முரண்பாடுகள் கூர்மைப்படுத்தப்படும் இந்த நேரத்தில், பெண்கள் ‘வறட்டுப் பிடிவாதம்’ பிடிப்பவர்கள்தான், பெண்ணியம் என்று பேசி ‘சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாத முட்டாள்கள்’ என்பது போன்றே இந்தப் படம் சித்திரிக்கிறது. கதாநாயகனின் அம்மாவை, அப்பா திட்டும்போது கதாநாயகன், ‘பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்கிறார். ஆனால், தன் காதலியை மட்டும் அடிமையாக நடத்துகிறார். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஆண்கள் ‘பீஸ்ட்’ ஆகவும், பெண்கள் ‘பியூட்டி’யாகவுமே இருக்கப்போகிறார்கள்? மணிரத்னம் அவர்கள் இதனைத் திட்டமிட்டே செய்தாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால், இந்தக் காட்சிகள் நமக்கு இதையே உணர்த்துகின்றன. புதிய சிந்தனைகளை தன்னுடைய படங்களில் வைப்பதற்கு முன்னுதாரணமாக விளங்கும் மணி சார் படங்களில், இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.

தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. முன்பு போல் அல்லாமல் உலக விஷயங்களை நொடிப்பொழுதில் இணையதளங்களில் இளைஞர்கள் பார்த்துவிடுகிறார்கள். காஷ்மீர் பிரச்னை குறித்த புரிதல் மக்களுக்கு வரத்தொடங்கியுள்ளது. ஆனால், இன்னும் இப்படி ‘க்ளிஷே’வாக காட்சிப்’படுத்த’ வேண்டாம். இதுபோன்ற கதைக்களங்களைப் படமாக்கும்போது, தயவுசெய்து அந்தக் கதைக்களத்தைச் சேர்ந்த மக்களிடம் சென்று பேசி, அங்கிருக்கும் நடைமுறைகளை ஆழமாகத் தெரிந்துகொண்டு, படைப்புகளை இயக்குநர்கள் வெளியிட வேண்டும். நாம் ஆப்பிள் சாப்பிடவும், சுற்றுலா செல்லவும், நம்முடைய படத்தைத் திரையரங்குகளில் ஓட்டுவதற்காகவும், வணிக நோக்குக்காகவும் அந்த மக்களை ரத்தம் சிந்த வைக்க வேண்டாம்.

 

-ரமணி மோகனகிருஷ்ணன்

ரமணி மோஹனகிருஷ்ணன்

error: Content is protected !!