Featured Category

பஞ்சம் வந்தால் வசூல் மழை பொழியும்-பாகுபலி !

டிமானிடைசேஷன், விவசாய / விவசாயிகள் பிரச்னை, இந்திய மாநிலங்கள் எங்கும் வெடிக்கும் சிக்கல்கள், வரலாறு காணாத வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு… என எல்லா பிரச்னைகளும் சூழ்ந்துள்ள இந்த 2017ம் ஆண்டில்தான் ‘பாகுபலி 2’வின் வசூல் ஆயிரம் கோடிகளை கடந்திருக்கிறது.
இந்திய மக்களிடம் பணமே இல்லை என்று சொல்லப்பட்ட தருணத்தில்தான் –
இந்தியாவில் மட்டுமே ரூபாய் ஆயிரம் கோடி வசூலை இப்படம் இன்னும் சில நாட்களில் ஈட்டப்போகிறது.

மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டாலும் ஏன் சினிமாவை மட்டும் வாழ்வாங்கு வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

இந்தாண்டு ஜனவரியில் மெரினா உட்பட தமிழக நகரங்களில் எல்லாம் திரண்ட அதே மக்கள்தான் இப்போது ‘பாகுபலி 2’ பார்க்க திரையரங்குக்கு செல்கிறார்கள். அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட கையோடு ‘மங்காத்தா’வை எப்படி விழுந்து விழுந்து பார்த்தார்களோ அப்படியே இப்போதும் செய்கிறார்கள்.

இதை எப்படி புரிந்து கொள்வது?

‘லிப்ஸ்டிக்’ வழியாகத்தான்.

இந்த சொல்லுக்கான உபயம் ஷாருக்கான். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தபோது ஒரு பேட்டியில் இதைத்தான் உவமையாக குறிப்பிட்டிருந்தார்.

‘‘பொருளாதார மந்தம் எப்பொழுதெல்லாம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மக்கள் கனவைத் தேடி அலைகிறார்கள். சினிமா உருவாக்கும் கனவுலகில் சஞ்சரிப்பதன் வழியாக நிகழ்கால பிரச்னைகளை தற்காலிகமாக மறக்க நினைக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை பொழுதுபோக்கு என்று பொதுவாக குறிப்பிடுவதைவிட திரைப்படம் என்பதை குறிப்பாக ‘லிப்ஸ்டிக்’குடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது…’’

என்று பொருள் தரும் வாக்கியங்களை உதிர்த்தார்.

சத்தியமான வார்த்தைகள். சந்தேகமிருந்தால் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாற்றங்களை பாருங்கள்.

2008ம் ஆண்டு உலகமே அதிர்ந்தது. அமெரிக்காவின் டிரவுசர் கிழிந்து தொங்கியதை அடுத்து பொருளாதார மந்தம் பிரபஞ்சத்தையே சூறாவளியாக தாக்கியது. உற்பத்திகள் குறைந்து விலைவாசி அதிகரித்தது. பங்குசந்தை சரிந்து வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. வங்கிகள் திவாலாகின.

என்றாலும், அந்த ஆண்டுதான் பல வெற்றிப் படங்களை இந்தி சினிமா இந்தியாவுக்கு கொடுத்தது. அந்தாண்டு தேசிய அளவில் வெளியான இந்திப் படங்களின் எண்ணிக்கை 87. இதன் மூலம் கிடைத்த வருவாய் ஆயிரத்து 189 கோடி ரூபாய்.

இதற்கு அடுத்த ஆண்டு ஓரளவு பொருளாரம் சீரடைந்தது. அந்த வகையில் 2009ல் 90 படங்கள் இந்தியில் வெளியாகின. இதன் மூலம் கிடைத்த தொகை ஆயிரத்து 169 கோடி ரூபாய். அதாவது முந்தைய ஆண்டை விட இரண்டு சதவிகிதம் குறைவு.

அவ்வளவு ஏன்… 2013ம் ஆண்டையே எடுத்துக் கொள்வோம். வரலாறு காணாத வகையில் பணத்தி்ன் மதிப்பு குறைந்திருந்த அந்த வருடத்தின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் வெளியான இந்திப் படங்களின் மூலம் ஆயிரத்து 547 கோடி ரூபாய் திரையுலகுக்கு கிடைத்தது.

அதாவது 2012ம் ஆண்டு இதே காலகட்டத்தில் ரிலீசான படங்கள் மூலம் கிடைத்த தொகையை விட – ஆயிரத்து 420.1 கோடி ரூபாய் – இது எட்டு சதவிகிதம் அதிகம்.

இந்த நிலை இந்தி சினிமாவுக்குத்தான் என தப்புக் கணக்குப் போட வேண்டாம். இந்திய சினிமா அனைத்துக்கும் இது பொருந்தும். வேண்டுமானால் இந்தபுள்ளி விவரத்தைப் பாருங்கள்.

2007ம் ஆண்டு இந்தியாவிலுள்ள அனைத்து மொழிப் படங்களில் இருந்தும் கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா? ஆயிரத்து 400 கோடி ரூபாய். அடுத்த ஆண்டு – 2008ல் – இந்த எண்ணிக்கை 12% அதிகரித்திருக்கிறது. இத்தனைக்கும் இந்த 2008ல்தான் பூமிப் பந்தே பொருளாதார வீழ்ச்சியால் குலுங்கியது என்பதை நினைவில் கொள்க.

ஆனால் 2009ல் பொருளாதாரம் ஓரளவு சீரானதும் 14% வருவாய் குறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் – அதாவது 2012ல்தான் – இந்திய சினிமாவின் மொத்த வருவாய் 2008ல் கிடைத்த தொகைக்கு சமமாக வந்து நின்றது.

கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது இந்தப் புள்ளி விவரங்கள் எதை உணர்த்துகின்றன?

ஷாருக்கான் குறிப்பிட்ட அதே உவமைதான்.

‘லிப்ஸ்டிக்’.

கையில் பணம் இருக்கும்போது ஷாப்பிங் செல்லும் பெண்கள், ஹேண்ட்பேக், ஷூ, டிரெஸ்… உள்ளிட்டவைகளை வாங்குவார்கள். அதுவே பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது வெறும் ‘லிப்ஸ்டிக்’கை மட்டும்தான் கையில் எடுப்பார்கள்.

அதே போல்தான் பொருளாதாரம் சீராக இருக்கும்போது மக்களின் பொழுதுபோக்குக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. தீம் பார்க், ஷாப்பிங் மால்… அது இது என்று அவர்கள் செல்லவும், பணத்தை செலவழிக்கவும் எண்ணற்ற வழிகள் இருக்கின்றன.

ஆனால், பணப் பற்றாக்குறை ஏற்படும்போது சினிமா மட்டுமே ஒரே சாய்ஸ் ஆக அவர்களுக்கு இருக்கிறது.

நடுத்தர மக்கள் தீம் பார்க்க செல்ல வேண்டுமென்றால் நபர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் ஐநூறாவது செலவழிக்க வேண்டியிருக்கும். அதுவே சினிமா என்றால் நபர் ஒன்றுக்கு ரூபாய் 120 போதுமானது.

‘பாகுபலி 2’வின் வெற்றி இந்த ‘லிப்ஸ்டிக்’ தத்துவத்தைதான் உணர்த்தியிருக்கிறது.

2008ல் உலகமே சட்டையை கிழித்துக் கொண்டு அலைந்தபோது ஆமிர்கானின் ‘கஜினி’யும், ஷாருக் கானின் ‘ரப் தே பாணி டி ஜோடி’யும் தலா ரூபாய் நூறு ப்ளஸ் கோடியை கடந்து வசூலித்திருக்கின்றன. ‘சிங் இஸ் கிங்’, ‘ஜோதா அக்பர்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்கள் வெளியானதும் இதே காலகட்டத்தில்தான்.

எமர்ஜென்சி காலகட்டத்தில் ரிலீசான (1975) ‘ஷோலே’ மகத்தான வெற்றியை அடைந்ததையும் மறக்கக் கூடாது. 1977ம் ஆண்டுதானே ‘ஆட்டுக்கார அலமேலு’வும் வந்தது?

இப்படி பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றிப் பெற்ற அனைத்துப் படங்களுக்கு பின்னாலும் ஓர் அரசியல் / சமூக காரணமும் தங்கள் வாழ்நிலையில் மக்கள் படுதோல்வி அடைந்த வலியும் ஏமாற்றமும் இருக்கிறது.

இந்த நிமிடம் வரை தங்கள் பிரச்னை / சிக்கல்களுக்கான தீர்வை எதார்த்தத்தில் அல்ல… கனவுகளில்தான் மக்கள் கண்டடைகிறார்கள். வடிகாலாக சினிமாவையே கருதுகிறார்கள்.

நடைமுறையில் எப்படி தங்கள் பிரச்னையை தீர்ப்பது என்பது குறித்த தெளிவு அவர்களிடம் இல்லை. நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த சித்தாந்தமும் அரசியல் அமைப்பும் அவர்களிடம் போய்ச் சேரவில்லை.

‘பாகுபலி 2’ வெளியான திரையரங்குகளில் கூடும் கூட்டமும், குறிப்பிட்ட சில / பல காட்சிகளுக்கு எழும் கைத்தட்டல்களும் இதைத்தான் உணர்த்துகின்றன.

எந்தெந்த இடங்களில் ஏன் மக்கள் ஆராவாரம் செய்கிறார்கள்… அதன் வழியாக தங்கள் மன அழுத்தங்களை எப்படி சரிசெய்து கொள்கிறார்கள்… அதே மன அழுத்தத்தை ஏன் அரசியல் போராட்டங்களின் வழியே தீர்த்துக் கொள்ள முயலாமல் இருக்கிறார்கள்… அரசியல் அமைப்பு மீது ஏன் நம்பிக்கை இழந்து கனவுலகை தேர்வு செய்கிறார்கள்…

என்பதை எல்லாம் ஆராயாமல் மக்கள் சினிமா போதையில் ஆழ்ந்திருக்கிறார்கள்… என்று தோளைக் குலுக்குவதில் எந்தப் பயனும் இல்லை.

திரைக்கதை ஓட்டை, கதாபாத்திர உருவாக்கத்தில் இருக்கும் போதாமை, அங்கிருந்து சுட்டது… இங்கிருந்து சுட்டது… இவை அனைத்தும் படம் பார்க்கும் பெரும்பாலான மக்களுக்கு தெரியும். அவர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல.

ஆனாலும் ஏன் ஆராவாரத்துடன் ரசிக்கிறார்கள்?

மற்ற நாடுகளில் எப்படியோ… இந்தியாவில் திரையரங்கம் / சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது, சாதி ஏற்றத்தாழ்வற்ற… பணக்காரன் / ஏழை என்ற பாகுபாடற்ற ஒரு பிரதேசம்.

அப்படி ஒரு நிலம் இந்தியாவில் திரையரங்குகளில் மட்டும்தான் இருக்கிறது.

எனவேதான் தங்களுக்கு வீட்டிலோ சமூகத்திலோ அலுவலகத்திலோ எந்தப் பிரச்னை வந்தாலும் தியேட்டருக்கு போய் ஒண்டிக் கொள்கிறார்கள்.

‘பாகுபலி 2’வின் மகத்தான வெற்றி இன்றைய இந்தியாவில் நிலவி வரும் சிக்கல்களையே அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது.

 

– கே. என். சிவராமன்

கே. என். சிவராமன்

error: Content is protected !!