Featured Category

தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் கீழடி!

“கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ் குடி” எனும் வெண்பாமாலை நூலின் வரிகள் நம்முடைய தமிழ் இனமும், நாம் பேசும் தமிழ் மொழியும் இவ்வுலகின் மூத்த முதலானது என்று உணர்த்தும் எழுத்துவடிவ ஆதாரம். இதேபோல் பல சங்ககால நூல்களும் தமிழ் மொழி பற்றியும், சங்ககால தமிழர்கள் பற்றியும் பல வரலாற்று நிகழ்வுகளை காட்சிபடுத்தின.இவ்வளவு எழுத்து வடிவ தரவுகள் இருந்த போதிலும் இதனை உறுதிபடுத்த இதற்கான தொல்லியல் பொருட்களோ அல்லது அகழாய்வு ஆதரங்களோ இல்லை.
இந்த குறைபாட்டை ஓரளவுக்கு ஈடுகட்ட ஒருகிணைந்த இந்திய நாட்டின் சிந்து நதிக்கரையில் நடைபெற்ற இரு அகழாய்வுகள் தமிழர்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை பற்றி உலகிற்கு வெளிகாட்டியது.

இப்போதைய பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநில இரவி நதிக்கரை அரப்பாவிலும், அங்கிருந்து சுமார் 400கிலோமிட்டர் தொலைவில் உள்ள சிந்து நதிக்கரை மொகஞ்சதாரோவிலும் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல வலுவான ஆதாரங்கள் அங்கு கிடைத்தது. மேலும் சிந்துவெளியில் அமைந்துள்ள சில ஊர்களின் பெயர், மலைகளின் பெயர் இன்றளவும் சங்க தமிழ் பெயராக உள்ளது.

இதற்கு அடுத்து தமிழர்களின் பூர்வ வரலாற்றுகளை ஆதர பூர்வமாக நிருபிக்க போதிய முயற்சிகள் இந்தியளவிலும், தமிழக அளவிலும் எடுக்கபடவில்லை.ஆனால் இந்தியாவின் மற்ற இன மக்களின் வரலாற்றுகளை பற்றி அறிய பல ஆய்வுகள் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்று கொண்டே வருகிறது.

இந்திய சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தமிழகத்தில் நடைபெற்ற 200க்கும் குறைவான அகழ்வாராய்ச்சிகளில் அனைத்தும் தமிழர்களின் நாகரிகம்,வாழ்க்கைமுறை மற்றும் கலாச்சாரத்தை பற்றி எந்தவொரு ஆதாரங்களையும்  கொடுக்காத நிலையில் 1947இல் நடைபெற்ற அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியும்,1965 இல் நடைபெற்ற காவேரிபூம்பட்டினம் அகழ்வாராய்ச்சியும் மற்றும் 2005 இல் நடைபெற்ற அதிசன்னல்லூர் அகழ்வாராய்ச்சியும் சங்ககால தமிழர்களின் நாகரிக்கத்தின் சில எச்சத்தை வெளிக்கொணர்ந்தது. இதுவும் முழுமையான ஆதரங்களை கொடுக்கவில்லை.

இந்த மூன்று அகழாய்வுகள் தான் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற பெரியளவிலும் கொஞ்சம் விரிவாகவும் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள். ஆனால் இவைகள் அனைத்தும் சங்ககால தமிழர்களின் சமாதி பகுதிகளாக இருந்தது.இவைகள் தமிழர்களின் முழுமையான வரலாற்று ஆதாரங்களை கொடுக்கவில்லை.இப்படி பல அகழாய்வுகள் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் அனைத்தும் சமாதி பகுதிகளாகவே இருந்தது ஒன்றுகூட வாழ்விட பகுதிகளாக இருக்கவில்லை. இதற்கு அராய்சியாளர்களின் தந்திரமும் ஒரு காரணம். மற்ற பகுதிகளில் எப்படி நதிக்கரை நாகரிக்கத்தை மையமாக வைத்துகொண்டு ஆராய்சி செய்தார்களோ அவ்வாறு தமிழகத்தில் ஆராய்சிகள் நடைபெறவில்லை.

இம்மாதிரியான சோதனை முடிவுகள் வந்தவண்ணம் இருக்கையில் தமிழகத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான வாழ்விட பகுதிகளே இல்லை என்ற ஓர் முன் முடிவிற்கு பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்தனர். இது தமிழ் மக்களின் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது இருந்தது தான் இதில் உள்ள உச்ச சோகம். தன்னுடைய இனத்தின் பூர்விக வரலாறு இல்லை நீங்கள் எல்லோரும் வந்தேறிகள் என்று சொல்லாமல் சொன்ன அச்சமயத்தில் எல்லா தமிழ் மக்களும் திரைப்பட நடிகை,நடிகர்கள் பின்னால் சென்று கொண்டிருந்தனர்.

ஓர் இனத்தின் வரலாற்றை சமாதிகளில் தேடுவது அந்த இனத்தின் முழு வரலாற்றையும் வெளிகொண்டுவராது என்பதை கடந்த 50 ஆண்டுகாலமாக இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறை ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் ஓர் இனத்தின வரலாற்றை சமாதி பகுதிகளுக்குள்ளே தேடி கொண்டிருந்த காலத்தில் இந்திய தொல்லியல் துறை தொல்பொருள் அராய்ச்சியாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் தமிழக சங்ககால வரலற்றுகளுக்கான ஆதாரங்களை வெளிகொண்டுவர சில முயற்சிகளை தொடர்ந்து எடுத்து கொண்டே வந்தார்.

தமிழகத்தில் இதற்கான முயற்சிகள் எடுக்காத நிலையில் பெங்களூர் இந்திய தொல்லியல் துறை சார்பாக அமர்நாத் தமிழக வரலாற்றை உறுதிபடுத்த தமிழகம் பணியமர்த்தபட்டார்.

தமிழர்களின் நாகரிகம் மட்டுமல்ல உலகின் எந்தவொரு இனத்தின்  நாகரிகமும் நதிக்கரையை ஒட்டியே அமைந்திருக்கும். ஆகையால் நதிக்கரை சார்ந்த அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள ராம கிருஷ்ணன் முடிவு செய்து பணிகளை தொடங்கினார்.

இதற்காக அமர்நாத் ராம கிருஷ்ணன் தேர்வு செய்த நதி வைகை நதி. சுமார் 250 கிலோமிட்டர் பயணிக்கும் வைகை நதியின் கரைபகுதிகளை ஆய்வு செய்ய தொடங்கினார். அகழாய்வு குழு 2013-14 ஆம் ஆண்டு இந்த அகழாய்வுகளை தேனி மாவட்டம் முதல் இராமநாதபுரம் மாவட்டம் வரையிலான வைகை நதியின் வழித்தடங்களை பின்பற்றி அதன் கரைக்கு எட்டு கிலோமிட்டர் தூரம் உள்ள பகுதிகளை ஆய்வு பகுதியாக எடுத்து கொண்டு அகழாய்வு சோதனைகளை மேற்கொண்டது.

வைகை நதிக்கரையின் வழித்தடங்களை பின்தொடர்ந்து சங்ககால தமிழகர்களின் எச்சங்கள் கிடைக்கிறதா என்று தனது அகழ்வாராய்ச்சி நோக்கத்தை முன்வைத்தார்.

இதில் அவர் 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயணித்து அங்கு உள்ள வினோத பகுதிகளையும் உள்ளூர்வாசிகளின் தகவலை வைத்தும் 190இடங்களை சோதித்து பார்த்தார்.ஒரு ஆண்டுகள் நீடித்த இந்த அகழாய்வுகளுக்கு ஒளிக்கீற்றாக கீழடி பகுதியில் சங்ககால தமிழர்களின் வாழ்விட பகுதி கண்டுபிடிக்கபட்டது.இத்தனை கால உழைப்பிற்கு பலன் கிடைக்க தொடங்கியது.

கீழடி பகுதியை முகாமிட்ட அமர்நாத் மற்றும் அவரது குழுவினர் 293 குழிகளை தோண்டினர்.இவ்வாறு தோண்டபட்ட கீழடி பகுகளில் சங்ககால தமிழர்களின் முக்கிய வாழ்விட ஆதாரங்கள் கிடைக்க தொடங்கியது.2015 ஆம் ஆண்டு தொடங்கிய அகழாய்வுகளில் சங்ககால தமிழகர்களின் செங்கற்களை கொண்டு கட்டபட்ட கட்டிடங்கள், மண்பாண்டங்கள், தமிழ் எழுத்துகளால் பொறிக்கபட்ட பாத்திரங்கள், இருப்புகளினால் ஆனா ஆயுதம் போன்றவை கிடைத்துள்ளது.

அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் கீழடி மதுரைமற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு மத்தியில் உள்ள ஓர் கிராமம். இங்கு இதற்கு முன்பு 1974 ஆம் ஆண்டு கீழடி பகுதியில் இருந்து சில மண்பாண்ட பொருட்களை அங்குள்ள மாணவர்கள் எதற்சியாக கிடைக்க அதனை அவ்வூர் பள்ளியாசிரியரிடம் போய் கொடுத்தனர். ஆசிரியர் அரசின் அனைத்து தரப்புகளுக்கும் தகவல் தெரிவித்தார் இருந்தும் எந்தவொரு பதிலும் கிடைக்காமல் போனது.

இந்திய தொல்லியல் துறை சார்பாக நடைபெற்று வந்த கீழடி அகழாய்வுகளில் முதல் கட்ட ஆராய்சி முடிந்த நிலையில் அங்கு சங்ககால தமிழர்களின் வாழ்விட ஆதாரங்கள், எச்சங்கள் என்று 5100 ஆதாரங்கள் கிடைபெற்றுள்ளது. அதில் நீர் மேலாண்மை பற்றிய நீர் தடாகம், கால்வாய்கள், பெரிய நீர் தொட்டிகள்,கால்வாய்களை ஒட்டிய ஆறு உலைகள்,வட்ட வடிவ கிணறுகள், மூடிய வாய்க்கால்கள், சுடுமண்ணால் ஆனா குழாய்கள் கொண்ட திறந்த கால்வாய்கள், கழிவு நீர் அகற்றும் வசதி கொண்ட சாக்கடை வசதி போன்றவை கிடைத்துள்ளது.

அதேபோல் எழுத்தனிகள், அம்புகள், சுடுமண்ணால் ஆன முத்திரைகட்டைகள் கிணறுகள்,முத்து மணிகள், தந்தத்தினால் ஆனா தாயகட்டைகள், காதணிகள்,சீப்புகள்,சுடுமண்ணால் ஆன பொம்மைகள், செம்பு, இரும்பு மற்றும் எழும்பினால் ஆன ஆயுதங்கள்,வணிக எடைகல்கள் என்று பல பொருட்கள் கிடைத்துள்ளது.

இதில் மிக முக்கியமாக இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் கீழடிக்கு இருந்த வணிக தொடர்பை உறுதிபடுத்தும் வட இந்திய பிராகிருத எழுத்துக்கள் பொறிக்கபட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. அதேபோல் ஆஃப்கானிஸ்தான், இலங்கை மற்றும் ரோம நாட்டின் உடனான வணிக தொடர்பை கீழடி பகுதி வைத்திருந்ததும் அங்கு கிடைத்திருக்கும் பொருட்களின் மூலம்உறுதிபடுத்தபட்டுள்ளது.

மேலும் தோண்ட தோண்ட பல உலக நாடுகளின் தமிழர்களின் தொடர்புகளை உறுதிபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்த வண்ணம் இருந்தது. பலுசிஸ்தான் நாட்டில் கிடைக்கும் சால்சிதோனி, அகேட் போன்ற அறிய வகை மணிகள் அணிகலன்கள் கீழடியில் கிடைத்துள்ளது.

கீழடியில் கண்டுபிடிக்கபட்ட கட்டங்கள் அனைத்தும் தமிழர்களின் நகர நாகரிகத்தை பறைசாற்றும் வண்ணமாக அமைத்துள்ளது. செங்கற்களை கொண்டு கட்டபட்ட கட்டிடம், தெருக்கள் அமைப்பு, நீர் அமைப்புகள் போன்றவை நகர நாகரிக்கத்தின் அடிப்படைகளை பூர்த்தி செய்துள்ளது.

முதல் கட்டமான கீழடி பகுதியில் 2015, மார்ச் முதல் செப்டம்பர் மாத கட்டத்தில் 4×4  மீட்டர் அளவில் 43 அகழிகள் தொண்டபட்டுள்ளது.இரண்டாம் கட்ட அகழாய்வு 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது அதில் 59 அகழிகள் தொண்டபட்டது.மொத்தமாக 102 அகழிகள் தொண்டபட்டு அதில் தான் 5100 ஆதாரங்கள் எடுக்கபட்டது. கீழடியில் 74தமிழ் பிராமிய எழுத்துகளால் எழுதபட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.

இவைகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இவைகள் கி.மு.200 ஆம் ஆண்டுகளுக்கு முன் எழுதபட்டது என்பது தெரியவந்துள்ளது. மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய தகவல் என்னவென்றால் இந்த கல்வெட்டுகள் மண்பாண்டங்களில் எழுதப்பட்டுள்ளது. பொதுவாக மன்னர்கள் தங்களை பற்றியதை கோவில் சுவருகளிலும், பாறைகளிலும் எழுதுவார்கள்.ஆனால் கீழடியில் கல்வெட்டுகள் பானைகளில் எழுதியிருப்பது. இது சாமானியர்கள் பற்றிய ஆவணங்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.அதேபோல் தனி தனியே பானைகளில் எழுதுவது எழுதியவர்களுக்கே அந்த காப்புரிமை என்ற மரபு அன்றைய காலத்தில் பின்பற்றபட்டத்தை விளக்குகிறது.மேலும் இதில் குறிப்பிட்டுள்ள பெயர்கள் சங்ககால இலக்கியத்தில் காணமுடிகிறது.

 

தொல்லியல் துறையில் கூறபட்டுள்ள நகரமைப்பு கோட்பாடுகளை கீழடியில் பொருத்தி பார்த்தால் கீழடி ஓர் பரிபூரண நகரமைப்புகளை கொண்ட ஓர் நகரம்.

தற்போது கிடைத்துள்ள பொருட்களின் ஆய்வு முடிவுகள் சங்ககால தமிழர்களின் காலம் சிந்துவெளி நாகரிகத்தின் காலத்தை ஒட்டிவருகிறது. ஒருவேளை முழு கீழடியும் அகழாய்வு செய்யபட்டால் சங்ககால தமிழர் நாகரிகம் அதற்கு முன்னதாக உருவாகி நடைமுறையில் இருந்த மூத்த நாகரிகம் என்ற உண்மையும் வெளிவரலாம்.

இப்படி சங்ககால தமிழர்களின் வரலாற்றை உறுதிபடுத்தி கொண்டு வரும் கீழடி சிலரின் மனதில் இடியாக விழுந்தது. தன் இனம் தான் மூத்தது என்று மார்தட்டி கொண்டிருந்தவர்களுக்கு இது எரிச்சலை உணடக்கியது. அப்படி அதை எரிச்சலை அடைந்தவர்கள் பலர் மத்தியத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த காரணத்தால் கீழடி அகழாய்வுகள் நீர்த்துபோக திட்டம் தீட்டபட்டது.

அதன் ஓர் வடிவமே கீழடி அகழ்வாராச்சி குழுவின் முதன்மையான ஆராய்சியாளரான அமர்நாத் அவர்களை பணியிடம் மாற்றம் செய்தது. நாட்டில் எங்கும் இல்லாத ஒரு நிர்வாக ஒழுங்குமுறையை உருவாக்கி அதன் மூலம் அமர்நாத் அவர்களை ஓடிஸா மாநிலத்திற்கு பணி மாற்றம் செய்யபட்டுள்ளார்.

தொல்லியல் துறைக்கு அவசியமில்லாத அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் முறையை உருவாக்கி அதனை பயன்படுத்தி கீழடி அகழாய்வுகளை நீர்த்துபோக செய்ய முயற்சி செய்கிறது மத்திய அரசு.

வருவாய் துறை, நிர்வாக துறை மற்றும் ஆட்சி துறை போன்ற துறைக்கு மட்டும் பொருந்தும் அதிகாரிகள் இடம் மாற்றம் முறையை ஆராய்சி துறைக்கும் உட்படுத்தி மத்திய அரசு தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற தனது செயல்பாட்டை முழுமைபடுத்தியது.

கீழடி அகழாய்வு பணிகள் இரண்டு கட்டம் மட்டும் நடைபெற்ற நிலையில் இன்னமும் பல கட்ட ஆராய்சிகள் மீதம் இருக்கையில் அமர்நாத் இடத்திற்கு வேறு ஒருவரை நியமிப்பது ஒரு போதும் சரியாக இருக்காது.அதுவும் அகழாய்வு துறையில் தொல்லியல் பொருட்களை பாதுகாக்கும் முறையை பற்றி மட்டும் தெரிந்த ஒருவரை ஆராய்சி பணியில் அமர்த்துவது கீழடி அகழாய்வு பணிகளை கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது.

மாற்ற பணிகளை போன்று ஒருவர் மிச்சம் வைத்ததை தொடர்ந்து செய்வது போல் ஆராய்சி பணியில் செய்ய முடியாது. தொடங்கியவரே தான் அதனை முடிக்க வேண்டும்.

அதேபோல் வெறும் இரண்டு ஆண்டுகளில் ஓர் இடத்தை முழுமையாக ஆராய்சி செய்துவிட முடியாது. அதற்கு சில ஆண்டுகள் ஆகும்.இதையெல்லாம் தெரிந்தே மத்திய அரசு இம்மாதரியான ஒழுங்குமுறையை உருவாக்கியுள்ளது.

கீழடி பகுதியின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் மட்டுமே இதுவரைக்கும் ஆராய்சி செய்யபட்டுள்ளது. மீதமுள்ள மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஆராய்சி செய்ய வேண்டும் இதன் மூலம்தான் தமிழர்களின் சங்ககால வரலாற்றை முழுமைபடுத்த முடியும். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசு கீழடி அகழாய்வுகளை தொடர்ந்து நடைபெற செய்ய அமர்நாத் ராம கிருஷ்ணன் அவர்களை தொடர்ந்து பணி செய்ய வழிவகை செய்ய வேண்டும். அதேபோல் அகழாய்வுக்கு தேவையான நிதியையும் ஒதுக்கி மத்திய அரசு சகிப்புத்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்.

அதேபோல் தமிழ் இன மக்கள் கீழடி குறித்த தகவலையும் விழிப்புணர்வையும் தானும் அறிந்து மாற்ற இன மக்களுக்கும் எடுத்து சொல்ல வேண்டும். தொடர்ந்து கீழடி குறித்து பொது தளத்தில் விவாதிக்க வேண்டும். கீழடியை ஒருவேளை மத்திய மாநில அரசுகள் மூடி மறைக்க முற்பட்டாள் அதனை முறியடிக்க அனைத்து இனமான தமிழ் இனமும் அணிதிரண்டு களத்தில் போராட வேண்டும்.

–ஆரூர்.யூசுப்தீன்.

நன்றி – புதிய விடியல்.

ஆரூர் யூசுப்தீன்

error: Content is protected !!