Featured Category

ஸாலிஹ் யுகம்’ யெமனிய வரலாற்றில் கறுப்புப் பக்கங்களா ?

முன்னாள் யெமனிய ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் கடந்த திங்கட்கிழமை ஹூதி கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹூதி அன்சாருல்லாஹ் அமைப்பின் உயர் மட்டத் தலைவர் மொஹம்மத் அல்புகாதி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
சவூதி தலைமையிலான கூட்டுப்படையினரை எதிர்ப்பதில் ஸாலிஹ் யெமனுக்கு நேர்மையானவராக செயற்படவில்லை எனவும், சவூதியுடன் இரகசிய ஒப்பந்தங்களை அவர் மேற்கொண்டிருந்தார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். ‘ஸாலிஹ் யுகம்’ யெமனிய வரலாற்றில் கறுப்புப் பக்கங்கள் என வர்ணித்துள்ளார்.
கடந்த வாரம் வரை யெமனின் முன்னாள் ஜனாதிபதி ஸாலிஹின் ஆதரவாளர்கள் ஹூதி போராளிகளுடன் இணைந்து யெமனில் சவூதி கூட்டுப்பைடைக்கு எதிராக போராடி வந்த நிலையில், ஹூதி அமைப்பினர் மற்றும் ஸாலிஹ் தரப்புக்கு மத்தியில் ஏற்பட்ட சடுதியான பிளவைத் தொடர்ந்து ஸாலிஹ் , ஹூதி அமைப்பினருக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

யெமனில் ஹூதி போராளிகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் சவூதி தலைமையிலான கூட்டணியுடன் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் எனவும், யெமனின் பேரழிவுக்கு ஹூதி அமைப்பினரே ஒட்டுமொத்தக் காரணம் எனவும் பகிரங்க கருத்து வெளியிட்டிருந்தார்.

ஸாலிஹின் இச்சடுதி மாற்றம் ஹூதி அமைப்பினருக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஸாலிஹ் தமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாகக் குற்றம் சாட்டி ஹூதி போராளிகள் கடந்த திங்கட்கிழமை அவரை படுகொலை செய்தனர்.

யார் இந்த ஸாலிஹ் :
******************************
மத்திய கிழக்கின் வறிய நாடான யெமனில், மூன்று தசாப்த காலமாக நிலவி வந்த அலி அப்துல்லாஹ் சாலிஹின் ஆட்சிக்கு எதிராக 2011 இல் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்தது.

1978 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சி புரிந்து வந்த அப்துல்லாஹ் ஸாலிஹின் சுயநலப் போக்கினாலும் சீரற்ற நிர்வாகத் திறன் காரணமாகவும் யெமனில் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடியது. 2011 இன் ஆரம்பப் பகுதிகளில், வெகுண்டெழுந்த மக்கள் ஆயிரக்கணக்கில் யெமனிய வீதிகளில் சாலிஹின் ஆட்சிக்கு எதிராக திரண்டனர். புரட்சி வலுக்கவே சாலிஹின் பதவி நீக்கமும் புதிய அரசியலமைப்பும் மக்களின் கோரிக்கையாக உருவெடுத்தது.

பணவீக்கம் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துச் செல்ல, யெமனிய பொருளாதாரம் மிக கீழ் மட்டத்தில் இருந்த காலப்பகுதி அது.
2015 இல் வெளியிடப்பட்ட ஐ.நாவின் அறிக்கையின் பிரகாரம் அதிகாரத் துஷ்பிரயோகம், சுரண்டல், ஊழல் காரணமாக அப்துல்லாஹ் ஸாலிஹ் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரச சொத்துக்களை மோசடி செய்துள்ளார் என மதிப்பிடப்பட்டுள்ளது. யெமனின் பொருளாதார சீர்குலைவை அடுத்து பட்டினிச் சாவுகள் அதிகரிக்கவே, அயல்நாடுகளின் மனிதாபிமான நிவாரண பொருட்களையே நம்பி மக்கள் வாழ்ந்து வந்தனர்.

சனா போராட்டங்கள் :

2011 இன் ஆரம்ப கட்டங்களில் யெமன் தலைநகர் சனாவில் அப்துல்லாஹ் சாலிஹின் ஆட்சிக்கு எதிராக மாணவர்களால் வழிநடாத்தப்பட்ட போராட்டங்கள் படிப்படியாக வலுப்பெற்று ஏதென் மற்றும் தாய்ஸ் என நாடு முழுதும் பரவியது. போராட்டங்களின் உக்கிரம் அதிகரிக்கவே கிளர்ச்சியாக உருப்பெற்று நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அப்துல்லாஹ் ஸாலிஹின் அரசு ஈவிரக்கம் பாராது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படுகொலை செய்ததைத் தொடர்ந்து அரச ஊழியர்கள் கொதித்தெழுந்தனர். யெமனிய இராணுவ உயர் மட்டத் தலைமைகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரச நிர்வாகத்தினர் பெருவாரியாக இராஜினாமா செய்யத் தொடங்கினர். அரச இயந்திரம் கவிழ்ந்து போகவே வேறு வழியில்லாது இறுதியில் 2011 மார்ச் மாதம் தான் பதவி விலகிக் கொள்வதாக அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்திருந்தார்.

எனினும், அடுத்த ஒரு மாத காலத்தினுள் ஸாலிஹ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். பதவி விலக மறுத்தார். இந்நிலையில் தலையிட்ட வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் சாலிஹின் குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, எதிர்த்தரப்பு சாலிஹின் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒருசேர இயங்குவதற்கான உடன்படிக்கையொன்றை முன்வைத்தது. பல்வேறு தயக்கங்களின் பின்னர் எதிர்த்தரப்பு இத்தீர்வுக்கு ஒத்துக் கொண்டபோதும் ஸாலிஹ் தெளிவாகவே மறுத்து வந்தார். இது நாட்டில் ஏற்பட்டிருந்த கிளர்ச்சியை மேலும் தூண்டுவதாக அமைந்தது.

தோல்வியுற்ற அரசியல் திடீர் மாற்றம் :
******************************************************
இறுதியில் உக்கிரமடைந்த ஆர்ப்பாட்டங்களினால் நிலைகுலைந்து போன ஸாலிஹ் தனது ஜனாதிபதி பதவியை துணை ஜனாதிபதியாக கடமையாற்றி வந்த மன்சூர் ஹாதியிடம் தற்காலிகமாக கையளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டார். சாலிஹின் ஆட்சியின்போது வளர்த்துவிடப்பட்டிருந்த வேலைவாய்ப்பின்மை, பட்டினி சாவுகள், தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் தெற்கில் தோன்றியிருந்த பிரிவினைவாத அமைப்புக்களின் தோற்றம் என்பன காரணமாக இந்த அரசியல் சடுதி மாற்றம் கூட பெரிதளவில் கைகூடாது போனது.

2012 ஜனாதிபதி தேர்தலில் மன்சூர் ஹாதி தனித்து போட்டியிட்டார். எனினும்,ஷியா ஹூதி உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் அத்தேர்தலை புறக்கணித்தனர். சர்வதேச ஆதரவுடன் இடம்பெற்றிருந்த அபிப்பிராய வாக்கெடுப்பு போன்றதொரு தேர்தலில் 65 சதவீத மக்கள் ஆதரவுடன் மன்சூர் ஹாதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.

தேர்தலின் மூலமாக புதிய ஜனாதிபதியாக மன்சூர் ஹாதி பதவியேற்றும் கூட ஷியா ஹூதிகளின் எதிர்ப்பு வலுத்தமையால் சுயமாக இயங்க முடியாது போனது. இதற்கிடையில் முன்னதாக கீரியும் பாம்புமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த, பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த அப்துல்லாஹ் சாலிஹின் ஆதரவு படைகளும், ஷியா ஹூதிகளும் எதிரிக்கு எதிரி நண்பன் எனும் நியதிக்கமைய வஞ்சகமாக கூட்டிணைந்து ஜனாதிபதி மன்சூர் ஹாதியின் அரச படைகளுக்கு எதிராக தாக்குதல்களை நடாத்த தொடங்கினர்.

2014 செப்டெம்பரில் ஈரானிய ஆதரவு பெற்ற ஷியா ஹூதிகள் யெமனிய தலைநகர் சனாவை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து ஷியா ஹூதிகள் யெமனின் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றிக் கொள்ளத் தொடங்கினர். ஷியா ஹூதிகளின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கவே 2015 இல் ஜனாதிபதி மன்சூர் ஹாதி உயிருக்கஞ்சி யெமனை விட்டும் வெளியேறி சவூதியில் தஞ்சமடைந்தார். இன்றுவரை சவூதியிலேயே அவர் அடைக்கலம் பெற்றுள்ளார்.

சவூதி தலைமையிலான கூட்டுப்படையினரின் தாக்குதல்கள் ஆரம்பம்
யெமனில் வலுப்பெற்று வரும் ஷியா ஹூதிக்களை பிராந்தியத்திற்கான ஒட்டுமொத்த அச்சுறுத்தலாக சவூதி கருதியது. மேலும் ஈரானின் ஆதரவு பெற்று ஹூதிக்கள் பலம் பெற்று வருவது சவூதிக்கு மேலும் சீற்றத்தை தூண்டி விட்டது. சவூதியின் எல்லை நாடான யெமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஷியா ஹூதிக்கள் வேரூன்றுவது தமது எதிரி நாடான ஈரானுக்கு சாதகமாக அமையும் என்பதால் ஹூதிக்களை சவூதி ‘தீவிரவாதிகள்’ பட்டியலில் இணைத்துக் கொண்டது.

10 நாடுகளை கூட்டிணைத்துக் கொண்டு சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் யெமனில் ஹூதிக்களுக்கு எதிரான தீவிர தாக்குதல்களை இன்றுவரை மேற்கொண்டு வருகிறது. எனினும், ஹூதிகளுக்கு தாம் ஆயுதம் வழங்கி ஆதரவு புரிவதான குற்றச்சாட்டை ஈரான் பகிரங்கமாக மறுத்தே வருகிறது. மேலும் சவூதியின் கூட்டுப்படைகளை ஈரான் தடுக்கவுமில்லை.

‘தீர்க்கமான புயல் போர் ’ எனும் குறியீட்டுப் பெயருடன் சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் 2015 மார்ச்சில் தமது தாக்குதல்களை யெமனின் ஹூதி கட்டுப்பாட்டு பிரதேசங்களில் ஆரம்பித்தது. மன்சூர் ஹாதியின் அரசை மீளவும் யெமனில் நிறுவுவதை நோக்காக கொண்டே தமது கூட்டுப்படைகள் யெமனில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், தேவையேற்படின் அரசியல் ரீதியான நகர்வுக்கும் தாம் தயாராக இருப்பதாக சவூதி பகிரங்கமாக அறிவித்தது. எனினும் இன்றுவரை யெமனின் தலைநகர் சனா மற்றும் வடக்கு யெமனிய பகுதிகளை ஷியா ஹூதிகளின் வசமிருந்து கைப்பற்றிக் கொள்ள சவூதி கூட்டுப்படையினால் முடியாதுள்ளமை நிதர்சனம்.

குவைத், பஹ்ரைன், கட்டார், ஜோர்தான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, மொரோக்கோ, செனகல் மற்றும் சூடான் ஆகிய நாடுகளின் படைகள் யெமனில் ஹூதிகளுக்கு எதிராக போரிடும் சவூதி தலைமையிலான கூட்டுப்படையில் அங்கத்துவம் வகித்தன.

எனினும், 2017 ஜுன் மாதம் கட்டார் நாட்டின் மீது தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக சவூதியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து, கட்டாருடனான சகல இராஜதந்திர உறவுகளையும் சவூதி துண்டித்துக் கொண்டது. மேலும் தமது கூட்டுப்படையிலிருந்து கட்டார் படைகளையும் நீக்கிக் கொண்டது. இதன் போது சவூதி கூட்டுபடைகளுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியிருந்தது. இருப்பினும் நேரடியாக கூட்டுப்படையில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் யெமனில் நிலவும் போர்ச் சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்திய அல்கைதா மற்றும் ஐ.எஸ். போராளிகள், அரச கட்டுப்பாட்டின் கீழிருந்த யெமனின் இரண்டாவது நகரான ஏதேன் உள்ளிட்ட தெற்குப் பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டது.

நிலவிவரும் மனிதாபிமான நெருக்கடிகள் :
***********************************************************

33 மாதங்களாக சவூதி கூட்டுப்படையினால் யெமனில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களாலும் துறைமுகங்கள் மற்றும் தரைவழி முற்றுகையினாலும் பொதுமக்கள் பேரழிவுகளைச் சந்தித்து வருகின்றனர்; மனிதாபிமான நிவாரணங்கள் மக்களைச் சென்று சேர்வதில் பாரிய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை சவூதி கூட்டுப்படையின் தாக்குதல்களால் 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா.அறிக்கை தெரிவிக்கின்றது.

யெமனில் 7 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் 18.8 மில்லியன் மக்கள் அடிப்படை மனிதாபிமான உதவிகள் வேண்டி நிற்பதாகவும் ஐ.நா. அறிக்கை தெரிவிக்கின்றது.

2.5 மில்லியன் மக்கள் சுத்தமான குடிநீரின்றி அவதியுறுகின்றனர்.
12 பேரில் ஒருவர் குறைபோஷாக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

பாம்புக்கு பால் வார்த்த ஸாலிஹ்:

யெமனில் போரிட்டு வரும் சவூதி தலைமையிலான கூட்டுப்படை மற்றும் ஷியா ஹூதி ஆகிய இரு தரப்பினரும் குறித்துச் சொல்லக் கூடிய அடைவுகளை பெற்றுக் கொள்ளாத நிலையில் இப்போர் முடிவற்ற முட்டுச் சந்தாகவே காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் ஸாலிஹ் மற்றும் ஹூதிகளுக்கு இடையில் எதிரிக்கு எதிரி நண்பன் எனும் நியதியில் நிலவி வந்த நெருங்கிய தந்திரோபாய உறவுகள் அண்மையில் மெல்ல மெல்ல ஆட்டங்காணத் தொடங்கியது.

ஸாலிஹ் மற்றும் ஹூதி இரு தரப்பினரும் தத்தமது தந்திரோபாயங்கள் தொடர்பில் ஒருவரையொருவர் சந்தேகிக்கத் தொடங்கினர். எனினும் மன்சூர் ஹாதி அரசை மீளவும் யெமனில் நிறுவும் நோக்குடன் போரிட்டு வரும் சவூதி கூட்டுப்படைக்கு எதிராக இயங்குவதில் ஒன்றுபட்டே இருந்தனர்.

தனது பதவிக் காலத்தின் போது அப்துல்லாஹ் ஸாலிஹ் சவூதியுடன் நெருங்கிய நட்புறவை போஷித்து வளர்த்து வந்ததுடன் ஹூதிக்கு எதிராக தீவிரமாக போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மெல்ல வளர்ந்த விரோதங்கள் முற்றி கடந்த வாரம் ஸாலிஹ்- ஹூதி கூட்டணி முடிவுக்கு வந்தது. கடந்த சனிக்கிழமை சவூதி தனது முற்றுகையை தளர்த்தும் பட்சத்தில், சவூதியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு தாம் தயார் என அப்துல்லாஹ் ஸாலிஹ் பகிரங்கமாக அறிவித்ததுடன், யெமனின் சீரழிவுக்கு ஹூதிகளே ஒட்டுமொத்த காரணம் என குற்றம்சாட்டினார்.

“சவூதியுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் யெமனின் அரசியல் பக்கங்களில் புதிய அத்தியாயத்தை தொடங்குவோம். யெமனின் இக்கட்டான நிலைமைக்கு முடிவு கட்டுவோம்” என பகிரங்க அறிவிப்புச் செய்தார்.

சவூதியுடன் சமாதான ஒப்பந்தங்களுக்கு விருப்பம் தெரிவிக்கும் அப்துல்லாஹ் சாலிஹின் இப்பகிரங்க அறிவிப்பு ஹூதிகளுக்கு பாகற்காயாய் கசத்தது; ஹூதிகளின் சீற்றத்தை தூண்டியது. அப்துல்லாஹ் ஸாலிஹ் ‘நம்பிக்கை துரோகி’ என ஹூதி பகிரங்கமாக அறிவித்தது.

படுகொலையில் முடிந்த ஹூதிகளின் சீற்றம்:
****************************************************************
யெமனின் நீண்டகால அரசியல் வரலாற்றுப் பக்கங்களை துரோகங்களாலும் வஞ்சகங்களாலும் சந்தர்ப்பவாதங்களாலும் அலங்கரித்து அலங்கோலப்படுத்திய அப்துல்லாஹ் சாலிஹின் நெடுந்தூரப் பயணம் கடந்த திங்கட்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
பாம்புக்கு பால் வார்த்தால் பலனை அனுபவித்தே தீர வேண்டும் எனும் நியதிக்கமைய, தனது சுயநல கூட்டணியான ஷியா ஹூதிகளினாலே படுகொலை செய்யப்பட்டார் அப்துல்லாஹ் ஸாலிஹ்.

யெமனிய தலைநகர் சனாவில் அப்துல்லாஹ் ஸாலிஹ் பயணித்த கார் மீது ஹூதி போராளிகள் எறிகணை மற்றும் துப்பாக்கித் தாக்குதல் நடாத்தி அவரைப் படுகொலை செய்தனர்.

ஹஸன் இக்பால்.

ஹஸன் இக்பால்

error: Content is protected !!