Featured Category

யெமனில் சீரழியும் சிறுவர் போராளிகள்

யெமனின் மிகவும் வறிய பிரதேசமான அல்மாபர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமமொன்றிலுள்ள சிறியதொரு வீட்டுக்கு சயீத் எனும் அச்சிறுவன் தனது விடுமுறையை பெற்றோருடன் கழிக்கின்றான்.மேல்தளத்தை குடும்ப உறுப்பினர்கள் தமது வசிப்பிடமாகவும், கீழ் தளத்தை கால்நடைகளை பராமரிக்கும் தொழுவங்களாகவும் ஒதுக்கியுள்ளனர். கால்நடை வளர்ப்பையே அப்பகுதி வாழ் மக்கள் தமது பிரதான வருமான மூலமாக கொண்டுள்ளனர்.
வருடத்திற்கு இரு மாதங்கள் மட்டுமே விளைச்சலை தரக் கூடிய மாமரங்கள் காணப்படுகின்றன. மின்சார கட்டமைப்பு வசதிகள் இல்லை. சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வெளிச்சத்துக்கு மாத்திரம் பயன்படுத்தி வருகின்றனர்.
சுற்றிலும் மலைப்பாங்கான பிரதேசம். மழைத் தூறல்களுடனான காலநிலை. ஈரமண் வாசம் காற்றை நிறைக்கிறது.பதின்ம வயதுச் சிறுவர்களின் உயரத்தைப் பார்க்கிலும் மிகவும் உயரமான ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவன் 17 வயது நிரம்பிய சயீத். தளர்வான சீருடையை அணிந்துள்ளான். மண் நிறத்திலான நீளக் காற்சட்டையும் கட்டமிடப்பட்ட மேற்சட்டையும் கால்விரல்கள் வெளியே தெரியும் சப்பாத்துக்களும்.
ஆனால் அஹ்மத் சாதாரண பதின்ம வயதுச் சிறுவனல்ல. அவன் ஒரு போர் வீரன். 15 வயது பாடசாலைச் சிறுவனாக இருந்த காலப்பகுதியிலிருந்தே புத்தகப் பையை துப்பாக்கியாகவும், வகுப்பறையை சாவடியாகவும் மாற்றிக் கொண்டு ஜனாதிபதி ரப்பு ஹாதியின் அரசின் ஆதரவு படைகளுடன் இணைந்து யுத்தகளத்தில் பணியாற்றி வருகிறான்.
பெற்றோரின் ஆதரவுடனே இவையனைத்தும் இடம்பெற்றுள்ளமை கவனத்தை ஈர்க்கின்றது. “துணிச்சல் மிக்கவர்களே போர்க்களத்தில் தியாகிகளாக வீர மரணம் எய்துகின்றனர்…. கோழைகள் வீடுகளில் மரணிக்கின்றனர்” என்கிறான் அஹ்மத் ஏ.கே. 47 துப்பாக்கியை தோளில் சுமந்தவாறு.
அக்குடும்பத்தின் ஆண் மக்களில் சயீத் இளையவன். அவனுக்கு மூன்று சகோதரிகளும் உள்ளனர். சயீதின் சகோதரர்களான அஹ்மத் (வயது 38), காலித் (வயது 36) ஆகியோர் தமது பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள். ‘துணிச்சலான மக்களின் பணி யுத்த களத்தில் போராடுவதே’ எனும் எண்ணத்துடன் 17 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தில் இணைந்து கொண்டனர்.
ஆரம்ப பாடசாலைக் கல்வியின்போதே சயீதும் யுத்தகளத்தில் இணைந்து கொள்ள விரும்பினான். 2015 மார்ச்சில் தாய்ஸ் பகுதியில் யுத்தம் உக்கிரமடைந்ததும் சயீதின் தந்தை முராத், “நீ யுத்தகளத்தில் போரிட விரும்பினால் அதற்கான தருணம் இதுவே” என கூறி இராணுவத்தில் இணைத்துள்ளார்..
முராத் 50 வயது நிரம்பிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர். வயதிலும் பார்க்க முதிர்ந்த தோற்றம். ஊன்றுகோல் உதவியுடன் நடமாடும் முதியவர். போரைப் பற்றி பேசும் போது அவரது அரச விசுவாசம் அப்பட்டமாக தெரிகிறது. அவரது கருத்துக்களை வேடிக்கையாக கூட மறுத்துப் பேசினால் கொதித்து எழுகிறார்.
தனது மகன்களை இராணுவத்தில் பணியாற்ற அனுப்பியதோடு நின்று விடாமல், கிராமத்திலுள்ள ஏனைய சிறுவர்களையும் இராணுவத்தில் இணைந்து பணியாற்ற ஊக்குவித்து வருகின்றார்.
இளையவன் சயீத் பற்றி அவர் குறிப்பிடுகையில் “அவன் இனிமேலும் சிறுவன் இல்லை… தேகாரோக்கியமான உடற்தோற்றத்தையும் விசுவாசமிக்க உள்ளதையும் கொண்டுள்ளான்.. பெரும்பாலான வளர்ந்தோருக்கு கூட இல்லாத தகுதிகள் அவனிடம் உள்ளன… யுத்தம் என்று வந்துவிட்டால் வயது ஒரு பொருட்டே அல்ல… விசுவாசமிக்க உள்ளமே இங்கு எடுத்துக்காட்டு… எனது மகன்களைப் போல் துணிச்சலான உள்ளம் படைத்தவர் எவரும் போராடலாம்” என்கிறார்.
யுத்த களத்துக்கு சிறுவர்களை அனுப்புங்கள்- அமைச்சர்
2015 இல் யெமனில் உள்நாட்டு போர் தொடங்கியது முதல் ‘சிறுவர் போராளிகள்’ பிரதான கட்டமைப்பாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். யுத்த வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என போரின் ஆரம்பத்தில் யுனிசெப் ஆய்வறிக்கை மதிப்பிட்டிருந்தது.
சிறுவர்களை போர் வீரர்களாக அனுமதிக்கும் நடைமுறையை கைவிடுவதாக ஹௌதி போராளிகள் மற்றும் அரச ஆதரவு படைகள் ஆகிய இரு தரப்பும் ஆரம்பத்தில் இணங்கி இருந்தும் பின்னர் குறித்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது என யுனிசெப் தெரிவிக்கின்றது.
சிறுவர்களை படை வீரர்களாக மாற்றுவதை ஆதரிப்பது முராத் போன்றவர்கள் மாத்திரமல்ல. மாறாக, ஹௌதி போராளிகளின் அரச நிர்வாக கட்டமைப்பில் இளைஞர், விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹஸன் ஸைத், “மாணவர்களும் ஆசிரியர்களும் படைக்களத்தில் இணைந்து போராடும் வகையில் ஒரு வருடத்திற்கு பாடசாலைகள் இடை நிறுத்தி வைக்கப்பட வேண்டும்” என கடந்த மாதம் 20 ஆம் திகதி தெரிவித்துள்ள கருத்து சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“பாடசாலைக்கு விடுமுறை வழங்கி ஆசிரியர்களையும் மாணவர்களையும் படையில் இணைத்துக் கொண்டால் போரில் வெற்றி பெற முடியா

தா?” என முகநூலில் தனது உத்தியோகபூர்வ கணக்கில் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடக பாவனையாளர்கள் அமைச்சரின் சர்ச்சைக்குரிய பதிவுக்கு தமது பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அதில் ஒருவர் “மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பி விட்டு அமைச்சர்களும் அமைச்சர்களின் பாதுகாவலர்களும் யுத்த களத்துக்கு செல்லலாமே… எமது வெற்றிக்கும் சுபீட்சமான எதிர்காலத்துக்கும் அது வழிவகுக்கும்?” என கிண்டலாக தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும் ஹௌதி போராளிகள் படையில் இணைத்துக் கொள்கின்றமை தொடர்பில் இவ்வருடம் பெப்ரவரி மாதம் பொதுமன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்திருந்தது.
யெமனில் சிவில் நிர்வாகக் கட்டமைப்பின் சின்னாபின்னம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக வடக்கு பகுதிகளில் ஆசிரியர்களின் சம்பளப் பணம் பல மாதங்களாக நிலுவையிலுள்ளது; விளைவாக பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் படையில் இணைந்து போரிட்டு வருகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.
பானிஷைபா பகுதியிலுள்ள அல்பவ்ஸ் பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர் ஜமால் ஐதுரூஸ் அராபிய ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில், “இராணுவ பயிற்சிகளுக்காக இராணுவ முகாமுக்கு நான் சென்றிருந்தபோது அதே முகாமில் எனது மாணவர்கள் பலர் அங்கே இராணுவ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தமையை காணக் கூடியதாக இருந்தது… யுத்தகளத்தில் இணைவதற்கு என்னை விட எனது மாணவர்கள் முன்னதாகவே முன்வந்துள்ளமை என்னை விட எனது மாணவர்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது” என்றார்.
செய்வதற்கு ஏதுமில்லாது சின்னாபின்னமாகியுள்ள நாட்டுக் கட்டமைப்பில் இராணுவத்தில் வழங்கப்படும் கவர்ச்சிகரமான ஊதியத்தால் கவரப்படும் சிறுவர்கள் வலையில் வீழ்ந்து விடுகின்றனர். இராணுவத்தில் 50 அமெரிக்க டொலர்கள் மாதாந்த ஊதியமாக சிறுவர் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
யெமன் தலைநகர் சனாவில் தன்னார்வ அமைப்பில் பணியாற்றும் ஆர்வலர் ஜமால் அல்சமி குறிப்பிடுகையில், “யெமனிய இயல்பு வாழ்க்கையில் சிறுவர்கள் போர்க்களத்தில் சண்டையிடுவதும், காவலரண்களில் பணியாற்றுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது… சிறுவர் போராளிகளில் பெரும்பாலானாவர்கள் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்… இவர்களது வறுமையை சாதகமாகப் பயன்படுத்தி சுரண்டப்படுகின்றனர்… யெமனிய சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது… வறுமையில் வாடும் குடும்பங்கள் பணத்திற்காக தமது சிறுவர்களை பலவந்தமாக இராணுவத்தில் சேர்த்து விடுகின்றனர்” என கவலை தெரிவித்துள்ளார்.
பணத்திற்காக மட்டுமன்றி நாட்டின் மீது கொண்டுள்ள பற்று, விசுவாசம் காரணமாக தமது பிள்ளைகளை இராணுவத்தில் இணைக்க ஆர்வமூட்டும் முராத் போன்ற பல பெற்றோர்களும் இருக்கின்றனர். தான் இராணுவ வீரனாக வர வேண்டும் என 10 வயது முதலே பெற்றோரால் ஊட்டி வளர்க்கப்பட்டதாகவும், நண்பர்களும் உறவினர்களும் அதற்குப் பெரிதும் வரவேற்பளித்ததாகவும் சயீத் கூறுகின்றான்.
“போர்க்களத்தில் எனது அனைத்து மகன்களையும் இழந்தாலும் கூட நான் அதற்கு வருந்தப் போவதில்லை… ஏனென்றால் நான் முன்னாள் போர் வீரன்… எனது தாய்நாட்டுக்கு எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என எனக்குத் தெரியும்” என்கிறார் சயீதின் தந்தை முராத்.

துப்பாக்கியேந்தும் சிறுவர்கள்

தாய்ஸ் பிரதேசத்துக்கு தெற்கில் சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும், தனது சகோதரன் அஹ்மத்தின் மேற்பார்வையில் செயற்படும் கியாமி இராணுவ முகாமில் சயீத் ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியையே இராணுவப் பயிற்சிக்கென செலவழித்தான். ஆனால், மிக விரைவாகக் கற்றுக் கொண்டான். யெமனிய கிராமப்புற சிறுவர்கள் பலரைப் போல சயீதும் ஏ.கே. 47 துப்பாக்கியை கையாளும் விதம் தொடர்பில் பரிச்சயம் பெற்றுக் கொண்டான்.
உள்நாட்டு போர் ஆரம்பிக்க முன்னரும் கூட யெமனில் அனைத்துக் குடும்பங்களும் குறைந்தது ஒரு ரைபிள் துப்பாகியையாவது சொந்தமாக வைத்திருக்கும் வழக்கம் காணப்பட்டது. திருமணம் போன்ற கொண்டாட்டங்களில் வானத்தை நோக்கிச் சுட்டு ஆர்ப்பரிப்பது இவர்களது வழக்கம்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகளவில் துப்பாக்கிகளை உடமையாகக் கொண்டிருக்கும் நாடுகளில் யெமன் முன்னணியில் திகழ்கிறது.

பயிற்சியை முடித்துக் கொண்டதும் அடுத்தபடியாக சயீதும் தாய்ஸ் மாகாணத்தின் ஹைபான் பகுதியில் யுத்தகளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஏடன் துறைமுகத்தை அண்மித்துள்ள முக்கியமான விநியோகப் பாதையொன்றை கைப்பற்றும் நோக்குடன் ஹைபான் பகுதியில் இரு தரப்பினரும் 2015 முதல் தீவிரமாக போரிட்டு வருகின்றனர்.

எதிரிகளின் கண்களில் படாதவாறு உளவு பணிகளில் ஈடுபடுவது எவ்வாறு? போர்த் தீவிர பகுதிகளில் ஸ்னைப்பருக்கு இரையாகாமல் எவ்வாறு உள்நுழைந்து காரியத்தை நிறைவேற்றி விட்டு தப்பிப்பது? என்பது தொடர்பில் சயீதுக்கு சகோதரர்கள் கற்றுக் கொடுத்தனர்.
“சண்டையிடும் உத்திகள் தொடர்பில் கற்றுக் கொள்ள எனக்கு அதிக காலம் தேவைப்படவில்லை… பாடசாலைக் காலத்தில் எனக்குப் பிடித்த பாடம் இஸ்லாமிய வரலாறு… அதில் முஹம்மத் நபியின் வீர வரலாறு போர் நுணுக்கங்கள் பற்றி நிறைய கற்றுள்ளேன்….

அவரைப் பின்பற்றி வாழ நினைக்கிறேன்… என்னை விட மூத்த வீரர்கள் போர்க்களத்தில் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதை சில வாரங்கள் உற்று நோக்கினேன்… பிறகு நானும் தேர்ச்சி பெற்றவர்கள் போன்று சண்டையிடப் பழகிக் கொண்டேன்” என சயீத் தனது இராணுவப் பயிற்சி தொடர்பில் விபரிக்கிறான்.

ஹௌதி போராளிகளுக்கு எதிரான போர்க்களத்தில் தமது படை வீரர்கள் முன்னோக்கிச் செல்லும் போது படை வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஹௌதி போராளிகள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதே போரின் போதான சயீதின் வகிபாகம். எத்தனை ஹௌதி போராளிகள் தனது துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள் என்பது தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும், எழுந்தமானமாக சரமாரியாக சுடுவதே தனக்கு வழங்கப்பட்டுள்ள பணி என்கிறான் சயீத்.

போர்க்களத்தில் இணைந்த ஆரம்ப நாட்களில் தன்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை எனவும், நடு இரவில் திடுக்கிற்று விழித்த பல நாட்களை நினைவுகூருகிறான் சயீத்.
“முதன் முதலாக போர்க்களத்திற்கு சென்ற அன்றைய தினம் துப்பாக்கிச் சன்னங்களினதும் ஷெல் வீச்சுக்களினதும் காதுகளைக் கிழிக்கும் ஓசை என்னைப் பயமுறுத்தியது… உடனடியாக அவ்விடத்தை விட்டும் ஓடித் தப்பிப்பதற்கு எத்தனித்தேன்… போர்க்களத்தை விட்டும் புறமுதுகு காட்டி ஓடுபவன் கோழை எனும் எனது தந்தையின் வார்த்தைகள் என்னை தடுத்து நிறுத்தியது… சில வாரங்களில் துப்பாக்கிச் சன்னங்களின் ஓசை என் காதுகளுக்கு பரிச்சயமாகிப் போனது…”
நாட்டுக்கு சேவை புரிவதைத் தவிர்த்து போர்க்களங்களில் பரஸ்பர சுயநலமற்ற தோழமை உறவுகளைக் கற்றுக் கொண்டதாக சயீத் கூறுகிறான்.
சிறுவர் போராளியாக இராணுவத்தில் இணைந்த பிற்பாடு தான் முன்னர் ஆர்வம் காட்டி வந்த

காற்பந்தாட்ட விளையாட்டுக்களில் தற்போது நேரத்தை செலவழிக்க முடியவில்லை என ஆதங்கம் கொள்கிறான் சயீத். “இரண்டு வருடங்கள் இருக்கும்… இறுதியாக நான் மைதானத்தில் விளையாடி… வாழ்வே சண்டை மயமாகிப் போய்விட்டது… எனது நண்பர்களில் பலரும் விளையாட்டுக்கள், மைதானங்கள் என்பவற்றை மறந்தே போய் விட்டோம்…. ஹௌதி

போராளிகளிடம் இருந்து நாட்டை மீட்கும் மீட்பாளர்களாக நாங்கள் மாறி விட்டோம்…” பெருமிதமாகக் கூறுகிறான் சயீத்.
மாறாக, இராணுவத்தில் யுத்தகளத்தில் சண்டையிடுவதன் மூலம் நாளாந்தம் 5.2 அமெரிக்க டொலர்களை ஊதியமாக பெற்றுக் கொள்கிறான் சயீத். வளர்ந்த இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் அதே தொகை இவனுக்கும் வழங்கப்படுகிறது. யெமனில் சாதாரண ஊழியரின் சராசரி மாதாந்த வருமானத்தை விட அதிகமாகவே சிறுவர் போராளிகளுக்கு வழங்கப்படுகிறது. போருக்கான இராணுவ சீருடைகள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. வீட்டில் அணியும் சாதாரண ஆடைகளுடனேயே போர்க்களத்துக்கும் சென்று போரிடுவதாக கூறுகிறான்.

“எனக்கு நாளாந்தம் வழங்கப்படும் ஊதியமான 5.2 அமெரிக்க டொலர்களில் குடிநீர், குளிர்பானம் மற்றும் மிக முக்கியமாக ‘கட் இலைகள்’ (யெமனில் பிரபலமான ஆபிரிக்க கஞ்சா இலைப் பயிர்கள்) என்பவற்றை வாங்கிக் கொள்வேன்… இதற்கே 2.6 அமெரிக்க டொலர்கள் செலவாகிவிடும்… ‘கட் இலைகள்’ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது… இரவில் விழித்திருந்து படையில் பணியாற்றுவதற்கு ‘கட் இலைகள்’ அத்தியாவசியமாக மாறி விட்டது….” என போதைப் பொருள் பாவனை பற்றி மிக அலட்சியமாக கூறுகின்றான் சயீத்.
‘கட் இலைகள்’ எனும் போதைப் பொருளுக்கு அவன் அடிமையாகியுள்ளான். இவனைப் போன்ற பல சிறுவர் போராளிகள் போதைப் பொருள் இன்றி சீவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சிறு பை நிறைய கட் இலைகள் இன்றி இவர்களால் நாட்களைக் கடத்த முடியாது போயுள்ளது. போரின் இடையே கஞ்சா இலைகளை உள்ளெடுக்க சிறுவர்கள் தமக்குள் அடிக்கடி கூடிக் கொள்வதாக கூறுகின்றான்.

போரின் உக்கிரம்

2016 டிசம்பர் 11… அது ஒரு ஞாயிற்றுக்கிழமை …
தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்களுடன் ஹைபான் மாவட்டத்திலிருந்து ஏடன் – தாய்ஸ் இடைப்பட்ட பிரதான பகுதியை நோக்கி ஹௌதி போராளிகள் முன்னேறிக் கொண்டு வருகின்றனர்.

“முன்னேறி வருகின்ற ஹௌதி போராளிகளை எதிர்த்து பதில் தாக்குதல்களை நிகழ்த்தி அவர்களை பின்வாங்கச் செய்யுமாறு எமது தளபதிகள் எமக்கு கட்டளையிட்டனர்….” பழைய சம்பவங்களை உணர்ச்சிகரமாக நினைவுகூர்ந்து கூறுகின்றான் சயீத்.
சயீத் ஹௌதி போராளிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்கும்போது அத்தனை சத்தங்களையும் கிழித்துக் கொண்டு ஒரு குரல் “சயீத்…… உனது சகோதரன் குண்டடிபட்டுள்ளார்…”

சயீத் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பகுதியிலிருந்து சற்றுத் தொலைவில் சயீதின் சகோதரன் அஹ்மத் (வயது 38), ஹௌதி போராளிகளின் ஸ்னைப்பர் தாக்குதலால் தலையில் குண்டடிபட்டு வீழ்ந்து கிடந்தார்… சயீத் சகோதரனைக் காப்பாற்ற தலைதெறிக்க ஓடிச் சென்றான்… எவ்விதப் பலனுமில்லை… அஹ்மத்தின் உயிர் பிரிந்து விட்டது.

சயீதும் அவனது சக போராளிகளும் இணைந்து அஹ்மத்தின் உடலை தாய்ஸ் நகரிலிருந்து 70km தொலைவில் தர்பாவிலிருக்கும் கலீபா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனது பெற்றோரும் அங்கு வந்து சேர்ந்தனர். போர்க்களத்தில் இருக்கும்போது அடக்கிக் கொண்ட அழுகையை இப்பொழுது அவனால் அடக்க முடியவில்லை… கதறி அழுகிறான் சயீத்…
“ஆனால், எனது பெற்றோரும் சகோதரர்களும் அழவில்லை… அஹ்மத் சொர்க்கம் சென்றுவிட்டார் எனக் கூறி என்னைத் தேற்றினர்… நூற்றுக்கணக்கான எனது சக வீரர்கள் என் கண்முன்னால் குண்டடிபட்டு மரணித்துள்ளனர்.. எனினும், எனது அண்ணனின் இறப்பை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை… ஒவ்வொரு நாளும் அவருடனான இறுதி நினைவுகள் என் மனதில் தோன்றி மறையும்… அவருக்காக நான் ஒவ்வொரு நாளும் பிரார்த்திக்கின்றேன்…” என்கிறான் சயீத்.
அஹ்மதின் இறப்புக்கு பின்னர் சயீத் ஒரு மாதகாலம் வீட்டிலேயே தங்கிய பின்னர் மீண்டும் போர்க்களம் சென்றதாக கூறுகின்றான். 2017 இன் ஆரம்பத்தில் சயீத் அரச இராணுவ தளபதியின் மெய்ப் பாதுகாவலான பணியாற்றவென தாய்ஸ் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டான்.
“ஹௌதி போராளிகளை ஒழித்து நாட்டை மீட்க அர்ப்பணத்துடன் செயலாற்றும் எமது இராணுவ தளபதிக்கு மெய்ப்பாதுகாவலனாக பணியாற்றுவது எனக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம்… நானும் என் சகோதரனைப் போல நாட்டுக்காக உயிரை அர்ப்பணித்து சொர்க்கம் செல்ல விரும்புகிறேன்…” என்கிறான் சயீத்.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுவர் போராளியாக இராணுவத்தில் பணியாற்றுகிறான் சயீத். எனினும், போரில் அரச படைகள் வெற்றி பெரும் நம்பிக்கை தளர்வாகவே காணப்படுகிறது அவனிடம். “தாய்ஸ் நகரை ஹௌதிகளிடம் இருந்து எம்மால் மீட்க முடியவில்லை… எனவே இராணுவ ரீதியாக அன்றி, நாம் அரசியல் ரீதியான தீர்வை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது… போர் முடிவடைந்ததும் நான் இராணுவ வீரனாகவே தொடர்ந்தும் பணியாற்ற விரும்புகிறேன்… யெமனிய இராணுவப் படையில் உயர் பதவிகளை நான் வகிக்க விரும்புகிறேன்… போரில் மிக முக்கியமான தருணங்களில் நான் நாட்டுக்காக பணியாற்றியுள்ளேன்.. போரின் இறுதியில் சிறந்த அங்கீகாரம் எனக்கு வழங்கப்படும் என நம்புகிறேன்” என உறுதிகூறுகிறான் சயீத்.

யுத்த வெற்றியா? வீரமரணமா?

அரச படைகளில் மாத்திரமல்ல, ஹௌதி கிளர்ச்சியாளர்களும் சிறுவர்களை தமது படையில் போராளிகளாக இணைத்துக் கொள்கின்றனர்.

அவனது பெயர் ரஷீத்… வயது 16… யெமன் தலைநகர் சனாவின் மேற்குப் பகுதியின் ஹம்தான் பிரதேசத்தில் வசிக்கின்றான்…. இங்குள்ள மக்கள் ஹௌதி போராளிகளின் ஆதரவாளர்களாக விளங்குகின்றனர்.

ரஷீத் 12 வயதிலேயே கல்வியை இடைநடுவில் கைவிட்டதாக கூறுகிறான்.
“குடும்பத்தின் வறுமை நிலை கல்வியை விட வேலையே முக்கியமாக இருந்தது.. என் தந்தை மற்றும் மூன்று சகோதரர்களுடன் இணைந்து சனா பகுதியில் ‘கட் கஞ்சா இலைகள்’ விற்கத் தொடங்கினேன்” என்கிறான்.

ரஷீத் கடந்த ஒருவருடமாக ஹௌதி கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து அரச படைகளுக்கு எதிராக போரிட்டு வருகிறான். வறுமையை விட பிராந்தியத்தில் நிலவும் ஹௌதி ஆதரவு அதிர்வலைகளால் கவரப்பட்ட ரஷீதின் பெற்றோரின் விருப்பத்தின் பேரிலேயே ரஷீத் போராளியாக மாற்றப்பட்டுள்ளான்.

“சவூதி தலைமையிலான கூட்டுத் தாக்குதல்களில் இருந்து எனது நாட்டை மீட்கவே போராடி வருகிறேன்… என் தந்தை சவூதி தலையீட்டை வெறுக்கிறார்… அதனால் என்னை சவூதிக்கு எதிராக போரிட்ட ஆர்வமூட்டினார்.. எனது நண்பர்கள் பலரும் ஹௌதி போராட்டத்தில் இணைந்துள்ளனர்…நாங்கள் இனிமேலும் சிறுவர்கள் அல்ல” என்கிறான் தனது வயதை மறந்த ரஷீத்.

ரஷீத் இராணுவ பயிற்சிகள் எதனையும் பெற்றிருக்கவில்லை. 12 வயதில் தனது தந்தை வாங்கிக் கொடுத்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சனாவில் சண்டையிட்டு வருகிறான்.
“நான் எவ்வித சண்டைப் பயிற்சிகளையும் பெற்றுக் கொள்ளவில்லை… சண்டைக் களங்களில் போதிய அனுபவம் பெறும் வரை எம்மைப் போன்ற போராளிகள் படையின் பின்பகுதியில் இருப்போம்…” என்கிறான்.

தற்போது ஐந்து சிறுவர்கள் கொண்ட குழுவில் இணைந்து சண்டையிட்டு வருகிறான். ஆரம்பத்தில் வெறும் பார்வையாளனாக மாத்திரமே இருந்ததாக கூறுகிறான்.
“போர்க்களம் செல்லாதவரை எதிரிகளை சுட்டுக் கொல்வது கடினம் என தோன்றும்.. எனினும், போர்க்களத்தில் நுழைந்து விட்டால் இலகுவாகிவிடும்” வயதுக்கு மீறிய வகையில் வாதிக்கிறான் ரஷீத்.

ஹௌதி படைப் பிரிவில் பணியாற்றும் ரஷீதுக்கு இரண்டு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று, அரச ஆதரவு படைகள் முன்னேறி வரும்போது சரமாரியாக சுடுவது; இரண்டு, சண்டை முடிந்ததும் இறந்த உடல்களை அவனது இனிய நண்பர்களுடன் இணைந்து தூக்கிச் செல்வது. தனது பல நண்பர்கள் தன் கண்முன்னால் இறந்துள்ளதாக கூறுகிறான்.

“போரில் ஒருவர் இறந்தால் அவரது குடும்பத்தினர் வருந்த மாட்டார்கள்… கொண்டாடுவார்கள்…. ஷஹீத் அந்தஸ்தை அடைந்து சொர்க்கம் சென்று விட்டான் என்பதால்… சண்டையில் வீர மரணம் ஏற்பட்டு சஹீதாக மரணிப்பதையே விரும்புகிறோம்… யுத்த வெற்றி அல்லது வீர மரணம்… இதுவே எமது இலக்கு” என்கிறான் ரஷீத் பெருமிதமாக…

சவூதி தலைமையிலான படைகள் பின்வாங்கி தமது எல்லைகளை பாதுகாத்துக் கொள்ள நேரிடும் எனவும், அத்தருணத்தில் தான் ஹௌதி தமது வெற்றியை பிரகடனப்படுத்தும் என்கிறான்.
“போர் முடிவடைந்தும் எனது முன்னைய தொழிலான ‘கட் இலைகள்’ விற்பதை மீளவும் ஆரம்பிப்பேன்.”

 

ஹஸன் இக்பால் 

ஹஸன் இக்பால்

error: Content is protected !!