Featured Category

சிரியா- இழந்துவரும் இளம் விழுதுகள்!

சொந்த வீடுகளில் இருந்து பல மைல் தூரத்தில் அகதிகளாக சனத்திரள் நிரம்பி வழியும் பெய்ரூட் முகாமில் வாழும் சிறார்கள் எதிர்காலம் பற்றிய கனவுகளை சிதைத்து விட்டு வெறுமனே தமது குடும்பங்களின் உயிர் நிலவுகைக்காக வேலைத்தளங்களில் வாடி வதங்கும் நிலைமை சொல்லொணா துயரில் எம்மை ஆழ்த்துகிறது. சிரிய அகதி சிறார்களில் பாதிக்கும் சற்றுக் குறைவான எண்ணிக்கையானோரே கடந்த வருடம் லெபனான் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 50 வீதமானோர் தமது ஒன்பதாவது வயதிலும் மிகுதியினர் பத்தாவது வயதிலும் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டு விடுவர் என எதிர்பார்க்கப்படுவதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கின்றது.
அகதி முகாமிலிருந்து பாடசாலைக்கான போக்குவரத்துச் செலவைக் கூட சமாளிக்க முடியாமல் திண்டாடும் பெற்றோர் மத்தியில் சிறார்களின் எதிர்காலக் கனவு குதிரைக் கொம்பாகவே உள்ளது. மேலும் லெபனான் நாட்டின் பாடத்திட்டங்களில் சில பிரெஞ்ச் மற்றும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுவதும் சிரிய அகதி சிறார்கள் எதிர்நோக்கும் மற்றுமொரு சவாலாகும். அகதி சிறார்கள் ஏனைய உள்நாட்டு பாடசாலை மாணவர்களின் கிண்டல், கேலிக்கு உள்ளாவதும் சிலவேளை துஷ்பிரயோகப்படுத்தப்படுவதும் பெற்றோர் கருத்திற்கொண்டு வருந்தும் மிக முக்கிய தடைக்கல்லாக விளங்குகிறது. இவ்வாறான காரணிகளைக் கருத்திற்கொண்டே ஆண் சிறார்களை சொற்ப ஊதியத்திற்கு வேலைக்கமர்த்தி பெண் சிறார்களை வீட்டில் தம்முடன் வைத்துக் கொள்ள பெற்றோர் தலைப்படுகின்றனர்.
சிரியா இழந்து வரும் ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினரில் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் விதமாக ஓடே, முஹம்மத் மற்றும் சதாம் ஆகிய மூவரின் தற்போதைய வாழ்வோட்டத்தைச் சற்று அலசுவோம்.
ஓடே (சிரிய அகதி சிறுவன்)
பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அகதி சிறார்களுக்கான பிரத்தியேக பாடசாலையில் சிறார்கள் ஆங்கில நெடுங்கணக்கினை மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்கும் தருணம் பதின்ம வயதுச் சிறுவன் திடீரென எழுந்து அறிவிப்பொன்றைச் செய்கின்றான். “இனிமேல் நான் பாடசாலைக்கு வரப்போவதில்லை……. வேலைக்குச் செல்லப் போகிறேன்” என்பதாக இருந்தது அவனது அறிவிப்பு.

லெபனானின் உள்நாட்டு பாடசாலைக்கு தகுதி காணும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக அகதிகள் பாடசாலையில் பயிலும் 12 வயது நிரம்பிய ஓடே எனும் சிறுவனின் இந்த அறிவிப்பின் பின்னணி என்னவாகத்தான் இருக்க முடியும்? குடும்பத்தின் வறுமையைத் தவிர…..

அலெப்போ நகரை விட்டு அகதிகளாக வெளியேறி சுமார் ஒரு வருடமாகியிருக்கும் நிலையில் ஓடேவின் ஐந்து உடன்பிறப்புக்களுடனும் வயது முதிர்ந்த பாட்டியும் பெற்றோரும் என ஒட்டுமொத்த குடும்பமும் சின்னஞ்சிறு கூரையின் கீழே அகதியாக வாழ்வெனும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படும் சருகாக காலத்தைக் கடத்துகின்றனர்.

“எனது தந்தை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்…. இன்சுலின் இன்றி வாழ்ந்துவிட முடியாத நிலை…. எனது வயது முதிர்ந்த பாட்டியோ உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்…. முள்ளந்தண்டு முறிந்து சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் உயர் கண்காணிப்பு வேண்டி நிற்கின்றார்… இவர்களைக் கவனிக்க அதிக பணம் தேவைப்படுகின்றது….” ஓடே எனும் பதின்ம வயது சிறுவன் உதிர்க்கும் பக்குவப்பட்ட வார்த்தைகள் இவை. “நான் வேலைக்குச் செல்ல வேண்டும்…. நான் மட்டுமன்றி எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றால் மாத்திரமே பசிப்பிணி களைய வாய்ப்புண்டு…. குடும்பத்தின் அன்றாட தேவைக்காக நானும் கடனை மீள செலுத்தவென எனது தந்தையும் சம்பாதிக்க வேண்டும்…..”

ஒரு வருடத்திற்கும் மேலாக செலுத்தி முடிக்கப்படாத வீட்டு வாடகை, இதர கடன்கள் என பொறுப்புக்கள் இமயமாய் அவர்கள் முன்னே நிற்க பதின்ம வயது சிறுவன் ஓடே ஓடியாடி சம்பாதித்துக் கொண்டுவரும் சொற்ப ஊதியம் 6 டொலர்கள் அற்பமாய் கரைந்து போகையில் என்னதான் செய்திட முடியும், இயலாமையில் கையைப் பிசைவதைத் தவிர.
இறைச்சிக் கடைகள், பலசரக்குக் கடைகள், தேநீர் கடைகள் என நிரம்பி வழியும் ஷட்டிலா நகரில் சிறார்கள் தரை துடைக்கவும் பொருட்கள் ஏற்றி இறக்கவும் பாத்திரங்கள் கழுவவும் என சொற்ப ஊதியத்திற்கு இலகுவாக வேலை தேடிக் கொள்கின்றனர். நாளொன்றுக்கு 12 மணிநேரம் ஷட்டிலா நகர சந்தையொன்றில் உழைத்து களைக்கும் இச்சிறுவன் ஓடே கண்களில் தெரிவதென்னவோ கல்விச் சொப்பனமே! “நான் எதிர்காலத்தில் என்னவாக வர வேண்டும் என எனக்கே தெரியவில்லை…. அதற்கு முன்னே இறந்து விடுவேனோ? நான் வளர்ந்த பிறகுதான் என்னவாக வேண்டும் என்பதை தீர்மானிப்பேன்…” சிறுவனின் கள்ளங்கபடம் இல்லாப் பேச்சு நெஞ்சை உருக்குகிறது.

குடும்பத்தின் வறுமை நிலையினையும் கணவரின் உடல்நலமின்மையையும் கருத்திற்கொண்டே சிறுவனின் எதிர்காலத்தை அடகு வைத்துள்ளதாக ஓடேவின் தாயார் கண்ணீர் ததும்பக் கூறுகின்றார். “குடும்ப நிலை கருதி ஓடே மட்டுமல்ல எனது இளைய மகன்கள் (வயது 7, 10) இருவரும் கூட கல்வியைக் கைவிட்டு வேலைக்கு செல்கின்றனர்…உடல்நலமின்மை காரணமாக எனது கணவரால் தொடர்ச்சியான வேலையொன்றில் இருக்க முடியவில்லை….கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் என்னாலும் வேலைக்கு செல்ல இயலவில்லை….. “ அவரது கண்கள் இயல்பாகவே கண்ணீரை ஏந்தி நிற்கத் தயாராகின்றன. “லெபனானில் அகதி வாழ்க்கை வாழ்வதென்பது கொடுமைதான்….. இருப்பினும் சிரியாவில் யுத்த களத்தில் இரத்தம் சிந்துவதைக் காட்டிலும் பரவாயில்லை…”
சிரியாவில் தமது இருப்பிடம் முற்று முழுதாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் இறந்த கால வாழ்வினை மறந்து விட எத்தனிப்பதாகவும் ஓடேவின் தாயார் வெறுமையான பார்வையுடன் கூறினார்.

“ஒன்றுக்கும் பயப்பட தேவையில்லை….. வீட்டு வாடகை, கடன்களை செலுத்தி முடிக்க வேண்டும்…” என்பதுவே சிறுவன் ஓடேவின் பொறுப்பாக இருந்தது.

சதாம் (சிரிய அகதி சிறுவன்):
“நான் வளர்ந்ததும் பலசரக்குக் கடை முதலாளியாக வேண்டும்….”
சிரியாவை விட்டு அகதியாக வெளியேறி நான்கு வருடங்களாக பலசரக்கு கடையொன்றில் பணிபுரியும் மழைக்கும் பாடசாலைக்கு ஒதுங்கிடாத சிறுவனின் கனவு இதுவாக இருப்பதில் ஆச்சரியமில்லைதான்.

“ஒவ்வொருநாளும் 8 மணிக்கு துயில் எழுந்து கடைக்கு வந்து விடுவேன்… வெற்றுப் பெட்டிகளை துடைத்துச் சுத்தம் செய்து பொருட்களை அடுக்கி இறாக்கையில் வைத்து விடுவேன்…. இரவு எட்டு மணி வரை இதுதான்….” வாரத்திற்கு அச்சிறுவன் பெறும் ஊதியம் 43 டொலர்கள். வீட்டு வாடகையை செலுத்தவும் போதுமானதாக இல்லை.

சதாமின் சுகவீனமுற்ற தந்தையால் தொடர்ச்சியாக தொழிலை செய்து விட இயலவில்லை. எப்போதாவது அருகிலுள்ள பள்ளிவாயலை சுத்தம் செய்து சிறுதொகை அன்பளிப்பு பணத்துடன் வீடு வருவார். தாயார் இதய நோயினாலும் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டவர். ஒன்பது பிள்ளைகளின் தாய்.

ஐ.நா. உணவுக்காக வழங்கும் 189 டொலர்கள் உதவிப்பணம் குடும்பத்தின் கால்வயிற்றையேனும் நிறைத்துவிட போதுமானதாக இல்லை. “சதாம் கல்வி கற்க வேண்டிய வயதில் வேலைக்கு செல்வதில் எனக்கு வருத்தமும் ஏமாற்றமும் இல்லாமல் இல்லைதான்…. இருப்பினும் குடும்பச் செலவுகளை சிறுவர்களின் தலையில் சுமத்துவதில் சிறிதும் உடன்பாடு இல்லைதான். …. வேறு தீர்வே இல்லாதபோது என்னதான் செய்வது?”

போரினால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட, சிறுபிராயத்தின் சிற்சிறு இன்பங்களையும் தொலைத்த சிறுவன் சதாம் அமைதியாகவே பேசுகின்றான். “எனக்கும் மற்ற சிறுவர்களைப்போல பாடசாலை செல்ல ஆசைதான்…. சூழ்நிலை அதற்குத் தயாராக இல்லை…. நான் சம்பாதித்தே ஆக வேண்டும் எனும் கட்டாய நிலை…. எனது கடை சொந்தக்காரர் மிகவும் நல்லவர்… கடின வேலை எதுவும் எனக்குத் தர மாட்டார்…. அதனால் எனது வேலை இலகுவாகவே உள்ளது.” உதட்டோரம் ஏந்திய புன்னகை அவனது தாழ்வு மனப்பான்மையை முற்றிலும் மறைக்கப் போதுமானதாக இல்லை.

“லெபனானை விட சிரியாதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது… அங்கே எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர்… திரும்பிச் செல்ல ஆசையாக இருக்கின்றது….. போர்ச் சூழல் விடுவதாயில்லை…”

சிரியாவில் போர் ஆரம்பித்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏலவே பலஸ்தீனிய அகதிகளால் நிரம்பி வழியும் லெபனானை நோக்கி அகதிகளாக படையெடுத்தனர். பெய்ரூட் முகாம்கள் மலிவு வாடகைக்கு வீடுகளை வழங்கிய போதும் போதுமானதாக இல்லை. சிலவற்றில் யன்னல்களே இல்லாத சுகாதாரமற்ற இருப்பிடங்கள்….. கழிவுகளை முறையாக அகற்ற வழியற்ற நிலை….. எங்கு பார்த்தாலும் நாசியை அடைக்கும் துர்நாற்றம் என இவர்களது வாழ்க்கையே போராட்டம்தான்.

சிறுவன் சதாம் மற்றும் அவனது குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 11 பேர் தங்கியிருப்பதென்னவோ ஒரு சில சதுர அடிகளினுள்ளேதான்.

குண்டுகள் பொழிந்து உயிரைப் போக்கிய யுத்த களத்தை வெற்றுக் கண்களால் பார்த்த அனுபவம் இச்சிறுவனின் இதயக் கூட்டுக்குள்ளே செல்லரித்த நூல்களாய் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

“இங்கும் அமைதியில்லை…. அகதி முகாம்களினுள்ளும் மக்கள் சண்டையிட்டு இரத்தம் சிந்திக் கொண்டுதான் இருக்கின்றனர்….” சிறுவனின் ஆதங்கம் தொடர்கிறது……

முஹம்மத் (சிரியா அகதி சிறுவன்)
ஷட்டிலா அகதி முகாம் வளாகத்தில் குட்டைகளை தாண்டி, மின்சாரக் கம்பிகளில் உரசாதவாறு வெகு லாவகமாக துள்ளிக் குதித்தோடிக் கொண்டிருக்கும் குறும்பு நிறைந்த சிறுவன் 12 வயது நிரம்பிய சிறுவன் முஹம்மத்.“நான் இன்னும் “புக்ரா அஹ்லா” (நாளை இன்னும் அழகானது) பாடசாலையில் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்…. வேலைக்கு செல்லாத நேரங்களில் பாடசாலை செல்வேன்……”

குறுகிய படிகளில் ஏறி சிறிது தூரம் தாண்டியதும் அவனது குடும்பத்தினர் வசிக்கும் அடுக்கு வீட்டுத் தொகுதி வந்தது. குடும்ப உறுப்பினர் அறுவர் இரு அறைகளில் வசிக்கின்றனர். படுக்கையறையே வரவேற்பு அறையாகவும் சமையலறையே படுக்கையறையாகவும் அவ்வப்போது இங்கு மாறிக்கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை தான். இரு அறைகள் மாத்திரமே கொண்ட வீட்டில் நிர்ப்பந்தம் அதுவே.

“எனக்கு சிரியா இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது…. இயல்பு நிலை திரும்பி உடைந்து சிதைந்து போன பாடசாலை மீள்நிர்மாணம் செய்யப்பட்டால் நான் திரும்பவும் செல்வேன்…. போர் நிகழ்வுகளை நேரில் கண்டேன்…. இப்போது நினைத்தாலும் மேனி நடுங்குகிறது… சரேலென செல்லும் யுத்த விமானங்களில் சத்தம் இன்னும் செவிப்பறைகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது… இங்கே முகாமில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன்….”
எதையும் வாயிலே உதிர்த்துவிட முன் தாயின் அனுமதிக்காய் அவரது முகம் நோக்கும் இயல்பான சிறுவன் முஹம்மத்.

“இவன் இங்கே மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றான்…. சிரியாவில் இருக்கும்போது சிறு சத்தத்திற்கே அச்சத்தால் நடுங்குவான்… மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தான்…. இங்கே மிகவும் சந்தோஷமாக இருக்கின்றான்…. வேலைக்குச் செல்வதுதான் அவனைக் களைப்பூட்டும் விடயமாக உள்ளது…வீட்டு உபகரணப் பொருட்கள் விற்கும் நிறுவனமொன்றில் வேலை செய்கிறான். வாரத்திற்கு 23 டொலர்கள் சம்பாதிக்கின்றான்……” தாயின் வருத்தம் தோய்ந்த குரல்கள் இதயத்தை கனக்கச் செய்கிறது.

“வேலை இலகுவாகத்தான் இருக்கிறது…. நிறுவன உரிமையாளர் சிலவேளை கோபத்தில் சீறிப் பாய்கிறார்…. அதுதான் பயமாக உள்ளது…. நான் தவறு விடும் தருணத்தில் மாத்திரம்தான்… மற்ற நேரங்களில் மிகவும் நல்லவர்… நான் வளர்ந்ததும் எனது அக்காவின் கணவரைப்போல மருந்தாக உதவியாளராக வேண்டும்….இதுவே என் லட்சியம்…”
முறையான கல்வி, வாழிடம் இன்றிய முஹம்மதின் எதிர்காலக் கனவு வெறும் கனவாகத்தான் இருந்து விடுமோ?

மூலம்: அல்-ஜஸீரா

தமிழில்- ஹஸன் இக்பால்

ஹஸன் இக்பால்

error: Content is protected !!