Featured Category

ஜெருசலம் விவகாரம் OIC மாநாட்டின் தீர்மானங்கள்

ல்குத்ஸ் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாவும், இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை அல்குத்ஸ் நகருக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ள அமெரிக்காவின் உத்தியோகபூர்வ பிரகடனம் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (OIC) உச்ச மாநாட்டின் உத்தியோகபூர்வ அறிக்கை.
அல்குத்ஸ் நகரை ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் தலைநகராக சட்டவிரோதமான முறையில் அங்கீரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பிலும், அத்தீர்மானம் முஸ்லிம் நாடுகள் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது தொடர்பிலும் மதிப்பாய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு துருக்கி ஜனாதிபதியும் இஸ்லாமிய மாநாட்டின் தலைவருமாகிய ரஜப் அர்துகான் அவர்களின் அழைப்பின்பேரில் 2017.12.13 ஆம் திகதி இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பில் உறுப்புரிமை வகிக்கும் சகல நாடுகளினதும் மன்னர்களும் தலைவர்களும் துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் ஒன்றுகூடியுள்ளோம்.
பலஸ்தீன் மற்றும் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் பதற்றங்களை உருவாக்கியுள்ள சூழ்நிலைகள் மற்றும் வளர்ந்து வரும் அச்சப்பாடுகள் தொடர்பில் மதிப்பாய்வுகளை மேற்கொண்ட வகையில்,
ஒட்டுமொத்த முஸ்லிம் உலகுக்கும் பிரதானமாக விளங்கும் அல்குத்ஸ் விவகாரம் குறித்து முன்னின்று வழிநடாத்துபவரும், இம்மாநாட்டை தலைமை தாங்கி நடாத்துபவருமான மேதகு துருக்கி ஜனாதிபதி அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பலஸ்தீனத்துக்கும் முஸ்லிம் உலகுக்குமான பரஸ்பர சார்புடைமையின் பிரகாரம் அல்குத்ஸ் விவகாரம் தொடர்பில் இம்மாநாட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:
01. மறுப்பும் கண்டனமும்:
ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் தலைநகராக அல்குத்ஸ் நகரை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானத்தை மறுத்து அதற்கெதிரான வன்மையான கண்டனங்களை பதிவு செய்கின்றோம்.
அமெரிக்க ஜனாதிபதியின் குறித்த அறிவிப்பானது சட்ட ரீதியான வலிதற்றதாகவும் செல்லுபடியற்றதாகவும் அறிவிக்கின்றோம். பலஸ்தீனிய மக்களின் வரலாற்று ரீதியான, சட்ட ரீதியான, இயல்பான, தேசிய உரிமைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலாகவே குறித்த அறிவிப்பை கருதுகிறோம்; பேச்சுவார்த்தைகள் தொடர்பான முன்னெடுப்புக்களை வேண்டுமென்றே வலுவிழக்கச் செய்த நடவடிக்கையாக குறித்த அறிவிப்பை நாம் கருதுகிறோம்.
பயங்கரவாத்துக்கு தூண்டுதல் அளிப்பதாகவும், அதன் மூலம் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் குறித்த அறிவிப்பு அமைந்துள்ளது. இஸ்லாமிய மாநாட்டு உறுப்பு நாடுகள் ஏனைய நாடுகளுடன் தமது இராஜாங்க உறவுகளைத் தொடரும் போதும், தமது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுக்கும் போது, உத்தியோகபூர்வ சந்திப்புக்களின் போதும் பலஸ்தீன் விவகாரத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.

02. அல்குத்ஸ் நகரின் புனிதத்துவத்தை மீள வலியுறுத்தல்:
பலஸ்தீன் விவகாரமும் அல்குத்ஸ் நகரும் முஸ்லிம் உலகின் பொதுவானதும் மையப்படுத்தப்பட்டதுமான விவகாரம் என்பதை மீள வலியுறுத்துகிறோம். 1967 ஜுன் 4 ஆம் திகதி வரை அல்குத்ஸ் நகரை தலைநகராக கொண்ட பலஸ்தீனின் எல்லைகள், சுயாதீனமும் இறையாண்மையும் கொண்ட நாடாக திகழும் தன்மை, சுய நிர்ணய உரிமை, நிராகரிக்க இயலாத தேசிய உரிமைகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ள போராடும் பலஸ்தீன மக்களுக்கு கொள்கை ரீதியான எமது ஆதரவை புதுப்பித்துக் கொள்கிறோம்.
முதலாவது கிப்லா எனும் வகையிலும், மூன்றாவது புனிதமிகு பள்ளிவாசல் என்ற வகையிலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் எனும் புனிதமிகு பயணத்தை ஆரம்பித்த இடம் என்ற வகையிலும், ஏசு கிறிஸ்து பிறந்த தாயகம் எனும் வகையிலும் அல்குத்ஸ் நகர் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் இதயங்களில் புனிதத்துவம் மிகுந்த ஸ்தலமாக கருதப்படுகின்றது எனும் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறோம்.
அல்குத்ஸ் புனித ஸ்தலத்தை அரசியல் நகராக மாற்ற முனைந்து அதன் புனித தன்மையை களங்கப்படுத்தும் எந்தவொரு முன்னெடுப்புக்களையும் எதிர்த்து நிற்போம் என உறுதிப்படுத்துகிறோம்.
03. இருநாட்டு தீர்வுத் திட்டத்தை மீள வலியுறுத்தல்:
கிழக்கு ஜெரூசலத்தை பலஸ்தீனின் தலைநகராகக் கொண்ட இருநாட்டு தீர்வு திட்டம் தொடர்பில் சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் நாட்டில் அமைதியை ஏற்படுத்தல் மற்றும் 2002 இல் மேற்கொள்ளப்பட்டு 2005 இல் இஸ்லாமிய உச்ச மாநாட்டினால் பொறுப்பேற்கப்பட்ட அரபு சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பில் நாம் கொண்டுள்ள கரிசனையை மீள வலியுறுத்துகிறோம். பலஸ்தீன் விவகாரத்தில் நிலைபேறான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு காத்திரமாக பணியாற்றுமாறு சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுக்கிறோம்.

04. முன்னர் பெற்றுக் கொண்ட தீர்மானங்களை மீள வலியுறுத்தல்:
பலஸ்தீன் விவகாரம் தொடர்பில் முன்னதாக நடைபெற்ற சகல இஸ்லாமிய உச்ச மற்றும் பொது மாநாட்டு கூட்டத்தொடர்களிலும் பெற்றுக்கொள்ளப்பட தீர்மானங்களை உறுதியாகக் கடைப்பிடிப்போம்.
குறிப்பாக, அல்குத்ஸ் நகரை பலஸ்தீனின் நிரந்தர தலைநகராக அறிவித்து, அதன் மீது முற்று முழுதான இறையாண்மையை பலஸ்தீனுக்கு வழங்குவதன் மூலமும் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு முடிவுறுத்தப்படுவதன் மூலமும் மாத்திரமே சமாதானம் எட்டப்படும் எனும் ஜகார்த்தாவில் இடம்பெற்ற இஸ்லாமிய உச்ச மாநாட்டின் தீர்மானத்தை உறுதியாகக் கடைப்பிடிப்போம்.

05. சட்டவிரோத பிரகடனமாக கருதுதல்:
அல்குத்ஸ் நகரின் சட்டபூர்வ உரிமையை மாற்ற எத்தனிக்கும் அமெரிக்காவின் குறித்த அபாயகரமான பிரகடனமானது, வலிதற்ற, செல்லுபடியற்ற, சட்டரீதியற்ற பிரகடனமாக கருதுகிறோம்.
குறித்த பிரகடமானது சர்வதேச சட்டங்களையும் ஜெனீவா உடன்படிக்கையையும் மீறுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையின் இல. 478(1980) மற்றும் இல. 2334(2016) தீர்மானங்களை அமெரிக்காவின் குறித்த பிரகடனம் அப்பட்டமாகவே மீறியுள்ளது.
மேலும் அல்குத்ஸ் விவகாரம் சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் மாத்திரமே தீர்க்கப்பட வேண்டும் என அமெரிக்காவால் கைச்சாத்திடப்பட்ட சமாதான முன்னெடுப்பு விதிகளுக்கு முரணாக குறித்த பிரகடனம் அமைந்துள்ளது. அமெரிக்காவால் கைச்சாத்திடப்பட்டிருந்த சமாதான முன்னெடுப்பு விதிகள், இக்குறித்த பிரகடனத்தை வலிதற்றதாக்குகிறது.

06. பின்விளைவுகளுக்கு அமெரிக்காவே பொறுப்புக்கூறல் வேண்டும்:
இச்சட்டவிரோத அறிவிப்பை மீளப் பெறாத வகையில் ஏற்படுகின்ற அனைத்துப் பின்விளைவுகளுக்கும் அமெரிக்காவே பொறுப்புக் கூற வேண்டும்.
பலஸ்தீன், இஸ்ரேல் விவகாரத்தில் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளராக வகிபாகம் ஆற்றிவந்த அமெரிக்கா தனது அனுசரணையாளர் வகிபாகத்தை மீளப் பெற்றுக்கொள்வதாக நாம் கருதுகிறோம்.
இஸ்ரேலினால் பலஸ்தீன மண்ணில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், சட்டவிரோத குடியிருப்புக்கள், காலனித்துவ கொள்கை, இன ஒதுக்கீடு மற்றும் குறிப்பாக அல்குத்ஸ் நகரில் 1967 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் இனச்சுத்திகரிப்பு என்பவற்றுக்கு அமெரிக்காவின் குறித்த பிரகடனம் ஆதரவளிக்கின்றது என நாம் கருதுகின்றோம்.

07. பிராந்திய அமைப்புக்களுக்கு நன்றி தெரிவித்தல்:
அல்குத்ஸ் நகரின் சட்டபூர்வ அந்தஸ்து தொடர்பில் பலஸ்தீனுக்கு சார்பான நிலைப்பாடுகளை வெளிக்காட்டிய வகையில் சகல பிராந்திய அமைப்புக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பலஸ்தீனிய விவகாரம் தொடர்பில் ஆதரவுகளை மென்மேலும் திரட்டிக் கொள்ளுமாறு அனைத்து பிராந்திய அமைப்புக்களினதும் செயலாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

08. எமது பிரகடனம்:
பலஸ்தீன் நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெரூசலத்தை உத்தியோகபூர்வமாக நாம் பிரகடனம் செய்கிறோம்.
பலஸ்தீன் நாட்டையும் கிழக்கு ஜெரூசலத்தை அதன் தலைநகராகவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.

09. சத்திய பிரமாணம்:
அல்குத்ஸ் நகரையும், அதன் வரலாற்று மற்றும் கலாசார ரீதியான புனிதத்துவத்தையும், அதன் சட்டரீதியான தன்மையையும் பாதுகாப்பதற்கும் தக்க வைப்பதற்கும் தொடரான எமது ஈடுபாட்டை வழங்குவோம் என உறுதி கொள்கிறோம்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் காலனித்துவ, இன ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு அவசியமான சகல முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வோம் எனவும், இஸ்ரேலின் மேற்குறித்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எமது எதிர்ப்பை வெளிக்காட்டுவோம் என உறுதியளிக்கிறோம்.
இஸ்ரேலின் குறித்த கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளுக்கு, பக்கச்சார்பாக ஓரவஞ்சனையுடன் நியாயமற்ற வகையில் ஆதரவளிக்கும் அமெரிக்க காங்கிரஸின் நடவடிக்கைகளுக்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறோம்.

10. சர்வதேச நாடுகளின் ஆதரவுக்கு வரவேற்பு:
பிராந்தியத்திலும் உலகளவிலும் பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாடு தொடர்பில் பதற்றங்களையும் பாரிய எதிரொலிகளையும் ஏற்படுத்தக்கூடியவொன்றாக அமைந்துள்ள அமெரிக்காவின் குறித்த பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த வகையில் சர்வதேச நாடுகளின் ஏகோபித்த தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம்.பலஸ்தீன மக்களுக்கும், அவர்களின் நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்துக்கும் குறிப்பாக அல்குத்ஸின் நிலைப்பாட்டுக்கும் ஆதரவை வெளிக்காட்டுவதாக, சர்வதேச நாடுகளின் குறித்த ஏகோபித்த தீர்மானம் அமைந்துள்ளதாக நாம் கருதுகிறோம்.

11. அரசியல் முன்னெடுப்புக்களுக்கு ஆதரவு:
அல்குத்ஸின் சட்டரீதியான அந்தஸ்து மற்றும் வரலாற்று ரீதியான புனிதத்துவத்தை பாதுகாப்பது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் சகல விதமான சட்ட ரீதியான, அரசியல் முன்னெடுப்புக்களுக்கும் நாம் எமது ஆதரவை வழங்குவோம்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி தொடர்பில் பொதுவாகவும், அல்குத்ஸ் தொடர்பில் குறிப்பாகவும் இறையாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள முனையும் பலஸ்தீன் நாட்டின் சர்வதேச முயற்சிகளை நாம் ஒன்று சேர்ந்து பலப்படுத்துவோம்.

12. சர்வதேச சமூகத்துக்கான அழைப்பு:
1980 இன் UNSCR 478 தீர்மானத்தை தொடர்ந்தும் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
இதன் பிரகாரம் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் அமெரிக்காவின் குறித்த பிரகடனத்துக்கு ஆதரவளிப்பதில் இருந்தும் சர்வதேச நாடுகள் விலகிக் கொள்ள வேண்டும்.
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெரூசலத்துக்கு இடமாற்றுதல் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பை தொடர்ந்தும் வெளிக்காட்ட வேண்டும் என சர்வதேச நாடுகளை வலியுறுத்துகிறோம்.

13. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலையீடு:
ஐ.நா. பாதுகாப்புச் சபை தனது பொறுப்புக்களை உணர்ந்து துரிதமான செயற்படல் வேண்டும்; மேலும் அல்குத்ஸ் நகரின் சட்டபூர்வ உரிமையை மீள வலியுறுத்த வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கிறோம். பலஸ்தீன நிலங்களை சுரண்டும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ரீதியான பாதுகாப்பை வழங்கவும் பலஸ்தீன விவகாரம் தொடர்பான ஐ.நாவின் தீர்மானங்களை உரிய வகையில் அமுல்படுத்தவும் வேண்டும் என நாம் ஐ.நா. பாதுகாப்பு சபையை வலியுறுத்துகிறோம்.

14. ஐ.நா. வின் தீர்மானம்:
ஐ.நா. பொதுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான ஐக்கியப்படுத்தல் தீர்மானம் இல. 377A இன் பிரகாரம் செயற்பட தவறியமை தொடர்பில் ஐ.நா.பாதுகாப்பு சபை கருத்திற் கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக அது தொடர்பில் காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்.

15. எமது ஒருமைப்பாடு:
ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.நா. பொதுக்கூட்டம், மனித உரிமைகள் ஆணைக்குழு, யுனெஸ்கோ மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களின் பலஸ்தீன் விவகாரம் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்போது எமது உறுப்பு நாடுகள் பலஸ்தீன் சார்பாகவே வாக்களிக்கும் என நாம் உறுதி கூறுகிறோம்.
மேற்குறித்த சர்வதேச அமைப்புக்கள் பலஸ்தீன் விவகாரம் தொடர்பில் மாற்றமான கொள்கையினை கடைப்பிடிக்கும் பட்சத்தில் அதனை எமது உறுப்பு நாடுகள் எதிர்த்து நிற்கும்.
மாறாக, எதிரான நிலைப்பாட்டை எமது உறுப்பு நாடுகளில் ஒன்று கடைப்பிடிக்குமாக இருந்தால் அந்நாடு எமது இஸ்லாமிய ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் உடன்படிக்கையை மீறியதாக கருதப்பட்டு, அந்நாடு பொறுப்புக்கூறல் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணிக்கப்படும்.

16. உறுப்பு நாடுகளுக்கான அறிவுறுத்தல்:
அல்குத்ஸ் நிலைப்பாடு தொடர்பில் முழு ஆதரவை வழங்குமாறு எமது அனைத்து உறுப்பு நாடுகளையும் வலியுறுத்துகிறோம்.
அல்குத்ஸ் நகரில் வசிக்கும் உறுதி மிக்க சுதேச பலஸ்தீன மக்களுக்கு சகல உதவிகளையும் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அல்குத்ஸ் விவகாரம் தொடர்பான ஆணைக்குழுவின் நிறைவேற்றதிகாரியான மொரோக்கோ மன்னர் மொஹம்மத் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

17. வெளிப்படையான ஆதரவு:
பலஸ்தீனிய மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்பில் நாம் ஐயப்பாட்டுக்கு இடமற்ற, வெளிப்படையான ஆதரவை வழங்குகிறோம்.
அத்துடன் அமெரிக்காவின் சட்டவிரோத அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட பலஸ்தீனிய மக்கள் மீது இஸ்ரேலிய படையினர் வான்தாக்குதல்களை மேற்கொண்டமைக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இக்கடினமான தருணங்களில் அல்லலுறும் பலஸ்தீனிய மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருப்போம்.

18. நிவாரண உதவிகள்:
இஸ்ரேலின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பலஸ்தீனர்களுக்கு குறிப்பாக அல்குத்ஸ் நகரின் புனிதத்துவத்தை பாதுகாப்பது தொடர்பில் இன்னல்களை அனுபவிக்கும் கொள்கை உறுதி மிக்க அல்குத்ஸ் வாழ் மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

19. அகதிகளுக்கான உதவி:
நியாயபூர்வமான தாயக உரிமைப் போராட்டத்தில் ஈடுபடும் பலஸ்தீன அகதிகளுக்கு காத்திரமான உதவிகள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் விதமாக, ஐ.நா. முகவரகங்களின் செயற்பாடுகளுக்கு உறுப்பு நாடுகளால் வழங்கப்பட்டு வரும் பங்களிப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

20. தன்னிறைவு பொருளாதரத்தை ஏற்படுத்த உதவுதல்:
நிதியியல், சமூகவியல், தொழில்நுட்பவியல் என சகல துறைகளிலும் பலஸ்தீன மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொடரான உதவிகளை அதிகரிக்க வேண்டும் என உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்பு நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்புக்கான முகவரகங்களை வலியுறுத்துகின்றோம்.
பலஸ்தீன் நாட்டில் தன்னிறைவு தேசிய பொருளாதாரத்தை ஏற்படுத்த உதவும் முகமாக பலஸ்தீன் நாட்டுடனான வர்த்தக, நிதித்துறை உறவுகளை உறுப்பு நாடுகள் அதிகரித்துக் கொள்ள வேண்டும். மேலும் கட்டிட நிர்மாணங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றின் அபிவிருத்திக்கு உறுப்பு நாடுகள் ஒத்துழைப்புக்களை வழங்குதல் வேண்டும்.

21. சர்வதேச ஆதரவை திரட்டல்:
அல்குத்ஸ் விவகாரம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இது தொடர்பில் சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச நாடுகளின் தலைமைகள், சர்வதேச அமைப்புக்களுடன் இடைத் தொடர்புகளை மேற்கொண்டு கவனத்தை ஈர்க்குமாறும், சர்வதேச ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறும் எமது இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் நிறைவேற்றதிகார குழுவினைக் கேட்டுக் கொள்கிறோம்.

22. பலஸ்தீன அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை:
அபிவிருத்திக்கான இஸ்லாமிய ஐக்கிய நிதியத்தின் மூலம் அல்குத்ஸ் மற்றும் ஏனைய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பலஸ்தீன அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னுரிமைப்படுத்துமாறும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியை (IDB) கேட்டுக் கொள்கிறோம்.

23. வலியுறுத்தல்:
மேற்குறித்த முன்னெடுப்புக்கள் மூலம் பலஸ்தீனிய அபிவிருத்தியில் பங்காற்றுவதன் தேவைப்பாட்டை உறுதிப்படுத்துவதோடு அதன் பிரகாரம் செயலாற்ற முனைய வேண்டும்.

ஹஸன் இக்பால் 

ஹஸன் இக்பால்

error: Content is protected !!