Featured Category

சாவிற்கு நடுவில் வாழ்வு – சிரியா ரிப்போர்ட்!

சிரியாவின் மேற்கு பகுதியிலுள்ள இட்லிப் மற்றும் ஃகூவ்தா பிரதேசங்கள் சிரியாவின் எதிர் தரப்பு போராளி குழுக்களின் வசம் உள்ளன. இதில் ஃகூவ்தா பிரதேசம், நுஸ்ரா ஃப்ரண்ட் என முன்னர் அறியப்பட்டிருந்த ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் மற்றும் ஃப்ரீ சிரியன் ஆர்மி, ஜெய்ஷ் அல் இஸ்லாம் முதலான பல போராளி குழுக்களின் வசம் உள்ளது.
இப்பிரதேசத்தில் சிரிய இராணுவம் நுழைய முயற்சி செய்ததைத் தொடர்ந்து, சிரிய இராணுவத்தினர் சிலரை ஃப்ரீ சிரியன் ஆர்மி பிடித்து கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி, இப்பிரதேசத்தின் மீது வான்வழி தாக்குதலை ரஷ்ய, சிரிய படைகள் மேற்கொண்டன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150 க்கும்  மேற்பட்ட குழந்தைகள் உட்பட 500 க்கும்  மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்த தீர்மானம் :
++++++++++++++++++++++++
ஃகூவ்தா மீதான தாக்குதல்  ஆரம்பித்த உடனேயே இதனை நிறுத்துவதற்கான முயற்சிகளை சிரியாவுக்கான ஐ.நா மனித உரிமை கழகம் ஆரம்பித்தது. குவைத் மற்றும் ஸ்வீடன் இணைந்து ஐ.நாவில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வந்தன.
“எந்த அறிக்கைகளையும் ஏற்க மாட்டோம்” என அமெரிக்காவின் ரஷ்ய பிரதிநிதி வாஸ்லி நெபன்ஸ்யா (Vassley Nebenzya) கூறியுள்ளார். இது தொடர்பான ஓட்டெடுப்பு கடந்த வெள்ளியன்று நடக்க இருந்த நிலையில், தீர்மானத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர ரஷ்யா நிர்பந்தித்ததைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும் அவர், சிரியாவின் வெள்ளை தலைகவசம் (White Helmets) என்று அழைக்கப்படும் சிரியாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பை “தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு” இருப்பதாக கூறினார்.
“சிரியாவில் யுத்தத்தைத் தொடர்ந்திட உலகெங்கிலும் உள்ள தீவிரவாதிகளை அமெரிக்கா புகுத்துவதாக” அமெரிக்காவின் சிரிய நாட்டின் தூதுவர் பஷர் அல் ஜாபரி சுட்டிக்காண்பித்தார்.. இந்த உண்மையை மறைக்கும் மையநீரோட்ட மீடியாக்களையும் அமெரிக்காவையும் குற்றம் சாட்டியுள்ளார்.
அல் ஜஸீராவின் மூத்த பத்திரிகையாளர் ஜேம்ஸ் பே கருத்து தெரிவிக்கையில், “ஒரு சராசரி மனிதன் தன் தேசத்தை எப்படியெல்லாம் பாதுகாக்க முயற்சிப்பானோ அந்த அளவிற்கு பஷர் அல் ஜாபரியின் வார்த்தைகள் உள்ளன” என்றார்.
“சர்வதேச விதிமுறைகள் மீறப்பட்டு திறம்பட போர் குற்றங்கள் அரங்கேறி இருப்பதை ஜாஃபரி மேற்கோள்காட்டுகிறார்.” “அவர் ரஷ்ய அரசால் ஆதரவளிக்கப்பட்டவர். அவர்கள், கடந்த இரண்டு வருடங்களில் போருக்கு உதவி செய்தும் போர் சூழலை தக்க வைத்து வெற்றி பெறுவதற்கான எல்லாவற்றையும் செய்கின்றனர் என்று நியூயார்க் நகரின் ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் ஜேம்ஸ் பே கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று, ஞாயிற்று கிழமை 30 நாட்களுக்கான போர் நிறுத்த தீர்மானம் ஐ.நாவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இத்தீர்மானம் கொண்டுவரப்பட்ட சில மணித் துளிகளிலேயே கௌடா பிரதேசத்தினுள் ரஷ்ய மற்றும் சிரிய படைகள் வான் மற்றும் தரை வழியாக உள்ளே நுழைந்துள்ளன.
இப்படையில் அங்கம் வகிக்கும் ஈரான் ஆயுதப்படையின் தலைவர் முஹம்மது பக்ரி கூறும்போது, ஐநாவின் தீர்மானத்தை மதிக்கிறோம்; ஆனால் அது தீவிரவாதிகள் மீதான தாக்குதலைக் கட்டுபடுத்தாது. ஹயாத்தே தஹ்ரீர் அல் ஷாம் முதலான தீவிரவாதக் குழுவின் மீதான தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.
சிரிய இராணுவத்தின் தரப்பில் பின் ஜாவித் கூறும்போது, தீவிரவாதிகளின் சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளே எங்களின் முக்கிய டார்கெட்கள். தீவிரவாதிகளின் கைகளிலிருந்து ஃகூவ்தாவை மீட்பதன் முக்கிய கட்டம் இது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இப்பிரதேசத்தில் சிரிய அரசு தடை செய்யப்பட்ட வாயு குண்டுகளைப் பிரயோகித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிரிய அரசின் தீயணைப்பு படையான வெள்ளை ஹெல்மெட், விஷ வாயு தாக்கி குழந்தை ஒன்று இறந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விஷ வாயுவைப் போராளிகள் தரப்பே பயன்படுத்தியுள்ளது என்றும் அரசு தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஒரு வார காலத்தில் நடந்த தாக்குதலினால், 40 சதவீதத்துக்கு அதிகமான மருத்துவ உதவி முற்றும் அழிந்துள்ளதாக சிரியாவுக்கான ஐ நா மனித உரிமைகள் அமைப்பின் மருத்துவ பிரிவு கூறியுள்ளது.
உணவும் மருத்துவமும் ஃகூவ்தா பிரதேசத்தின் உடனடி தேவை. அது சரியான முறையில் கிடைக்கவில்லையேல், அடுத்து வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் வாழ்க்கை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கிழக்கு ஃகூவ்தாவில் வாழும் அதிகமான மக்கள் பலரும் வெளியேறிக் கொண்டு இருக்கின்றார்கள். இருந்த போதிலும் அங்கு
வசிக்கும் ஒரு சில மக்கள் பதுங்கிக் கொள்ள வழியின்றியும், வாழத் தெரிவு இன்றியும் இருக்கின்றார்கள்.
டௌமா (Douma) பகுதியில் வசிக்கும் ரஃபாத் அல் அப்ராம் மகிழ்வுந்து பழுதுகளை சரி செய்யும் தொழிலாளி ஆவர். கடந்த சில தினங்களில்,
தொடர்ந்து இரு முறை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களாலும் அவரது தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.
“என்னிடம் இருக்கும் கருவிகளை கொண்டு போரில் சேதமான மகிழ்வுந்துகளை பழுது பார்க்கிறேன்”
சில நேரங்களில் தொடர்ந்து பயன்படுத்துவதால் சேதமடையும் ஆம்புலன்ஸ் வாகனங்களை பழுது பார்க்கிறேன்” என்று அல் ஜஸீரா பத்திரிகையாளரிடம் உரையாடினார்.
அவரது மனைவியும் பதின்ம வயது அடைந்த இரு மகள்களும் போர்ச் சூழலில் வீட்டிலேயே இருக்கின்றனர். ஒவ்வொரு தினமும் , தங்களை சுற்றி நடக்கும் செய்திகளை சேகரித்து வீட்டிற்கு
வரும்போது, அருகில் இருக்கும் நபர்களுடன் சேர்ந்து கூடிப் பேசுவதில் கழிகின்றது அப்ராம் போன்றோரின் வாழ்நாள்
“சில நேரங்களில் நான் வேலை செய்யும் இடங்களில் குண்டு வெடிப்பு நடைபெறும்.உடனடியாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியாவதை தடுக்க ;சிவில் டிஃபன்ஸ் அமைப்புகளுடன் சேர்ந்து உதவி செய்வேன்.”என்கிறார் அப்ராம்.
வீட்டிற்கு வரும்போதெல்லாம், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை கண் கூடாக பார்ப்பதால் மனதளவில் பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.
“பெற்றோர்கள் தங்களின் இறந்த குழந்தைகளை சுமந்து அழுகையுடன் கதறிக் கொண்டே ஓடுவதையும், கால்களை இழந்த தன் மகனை தூக்கி கொண்டு ஓடும் தந்தையையும்,ஏதாவது ஒரு மூலையில், இடிபாடுகளில் சிக்கி கதறிக் கொண்டு இறைவனிடமும் மீட்புபணியினரிடமும் தங்களின் உறவினர்களை காப்பாற்றுங்கள் என்று துயரப்பட்டு கண்ணீர் வடிக்கும் தருணம் அவர்களை சமாதானப்படுத்த முயற்சிப்பேன்.
ஆனாலும், எங்களைச் சுற்றி நடக்கும் திகிலூட்டும் பயங்கரவாத செயல்களால் அவர்களுடன் அமர்ந்து நானும் அழுவேன்” என்றும் அவர் கூறினார்.
அந்திமமாகும் சிரியா
++++++++++++++++++++++++++++
2013 ஆண்டு சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் எல்லையில் உள்ள கிராமப் புறங்களில் ஏற்பட்ட புரட்சிகள் காரணமாக சிரியாவின் அசாத் அரசு முற்றுகை இட்டது. அப்போது அங்கிருந்த மக்கள் தொகை மொத்தம் 400,000 பேர் ஆகும்.
இந்த முற்றுகையின் இறுதி முடிவு மிகப்பெரிய தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. அத்தியாவசிய உணவுகள் கூட விலை அதிகமாக இருந்தது.அது தற்போதைய 5 டாலருக்குச் சமமானது.
போதிய உணவு இல்லாமையால் ஊட்டச்சத்து பற்றாக்குறை என்பது எதிர்பாராத விதமாக அதிகமாக இருந்தது. அமெரிக்கா ஐக்கிய நாடுகளின், CHA அலுவலகத்தின் அறிக்கையின்படி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 11.9% பேர் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் காணப்பட்டனர்.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரேயொரு மருத்துவ உதவி குழுவை நஷாபியா (Nashabieh) பகுதியில் சிரிய அரசு அனுமதித்தது. ஆனால், ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் அனுமதியளிக்கபபடவில்லை.
நிஷ்மா அல் ஹத்ரி (Nishma al Hatri) அல் ஜஸீரா பத்திரிகையாளரிடம் அளித்த நேர்காணலில், எனது கணவரும், 10 வயது நிரம்பிய எனது குழந்தை சாராவும் போர் விமானங்களின் சப்தத்தை கேட்டு பயந்து எழுந்தார்கள்.
குண்டுவெடிப்புகளுக்கு நடுவிலும், எங்களுக்கு அருகில் நடந்த தாக்குதலில் தகர்க்கப்பட்ட கட்டிடங்களை சுத்தம் செய்வதிலும், உயிருக்கு பயந்து ஏதாவது ஒரு அறையில் பதுங்குவதும், வாழ்வையோ சாவையோ தினமும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் வாழ்கின்றோம்
“நானும் என் தோளில் சாய்ந்து தூங்கும் என் மகள் சாராவும் திடீரென எழுவோம்”. “இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு மத்தியில் தான் வாழ்கின்றோம்” என்கிறார் ஹத்ரி.
மேலும் கூறுகையில்,
நான் ஏன் வெளியே சென்று விளையாட முடியவில்லை?
நான்ஏ ன் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியவில்லை?
நான் ஏன் என் நண்பர்களை பார்க்க முடியவில்லை?
என்று என் மகள் ஒவ்வொரு முறையும் கேட்கிறாள்.
என்னிடம் எந்த பதிலும் இல்லை!”
32 வயது நிரம்பிய ஹத்ரி ஒரு ஆசிரியை. ஆனால், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் போரின் பாதிப்புகளால் மூடப்பட்டது. சில பள்ளிகள் சிதிலமடைந்தன. எதுவாயினும், மனம் தளராமல் தன்மகள் சாராவுக்கும் அருகில் வசிக்கும் குழந்தைகளுக்கும் பாடம் நடத்திக் கொண்டு தான் இருக்கிறார் சிரியாவின் சகோதரி ஹத்ரி.
ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அவரது கணவர் வெளியில் சென்றுவிட்டு, வரும்போது முடிந்த அளவு பார்லி வாங்கி வருவார். காலை மற்றும் இரவு உணவுக்காக அதை வைத்து ரொட்டிகளையும், அரிசிகளை சமைத்தும் வைத்து விடுகிறார். சில நேரங்களில் கணவர் வெறுங்கையுடன் தான் வீடு திரும்புவார்.
குறிவைக்கப்படும் மருத்துவமனைகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
துருக்கியின் எல்லையோரத்தில் காஸியன்டெப் (Gaziantep) பகுதியிலிருந்து பேசிய அல் ஜஸீரா பத்திரிகையாளர் உஸாமா பின் ஜாவித் கூறுகையில்,
கிழக்கு ஃகூவ்தா பகுதியின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மருத்துவ மனைகளின் நிலையென்பது வார்த்தைகளால் “விவரிக்க முடியாத நிலை”ஆகும். தற்காலிக காப்பகங்களில் பணியாற்றும் மருத்துவர்கள்
எதிர்நோக்குவது அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும் சடலங்களே.
“இடைவிடாது சரமாரியாக தொடுக்கப்பட்ட ராக்கெட்டுகளும் குண்டுகளும் போர் விமானங்களின் ஏவுகணைகளும் ஏற்படுத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவி புரியவே அவர்கள் முயல்கின்றனர்.” என்கின்றார் ஜாவித்.
சிரியா-அமெரிக்கா மருத்துவ கூட்டுறவு, அவர்களிடம் போதிய மருத்துவ உதவியாளர்களும் இடமும் பற்றாக்குறையாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை பராமரிக்க குறைந்தப் பட்சம் ஒரு காப்பகத்திற்கு 22 ஆட்கள் தேவை என கடந்த வாரம் தகவல் தெரிவித்துள்ளது.
சிரியாவின் விடுதலை மருத்துவர்கள் யூனியனின் பிரதிநிதி அஹ்மத் அல் மஸ்ரி (Ahmedal Masri) அல் ஜஸீரா பத்திரிகையாளரிடம் கூறுகையில்,
“சிரிய அரசு ஒவ்வொரு சாமானியனின் வாழ்வை அழித்து கொண்டிருக்கிறது.மிகப் பயங்கரமான வெடிகுண்டு தாக்குதலை சிரியாவின் அரசு நடத்துகிறது.இதன் விளைவாக, கிழக்கு ஃகூவ்தா பகுதியின் பல மருத்துவ மனைகள் தகர்க்கப்பட்டும் மருத்துவ வேலையாட்கள் கொல்லப்பட்டும் இருக்கின்றனர். எங்களின் மூன்று மருத்துவக் காப்பகங்களில் ஒன்றைத் தாக்குதல் தொடுத்து அழித்து விட்டனர். அதில் ஒருவர் கொல்லப்பட்டார்; மூன்று பேர் காயமுற்றனர் என்றார்.
சாமானியர்களுக்கு எதிரான போர்
+++++++++++++++++++++++++++++++++
சிரியாவின் மீட்புப்படை ஒன்றில் (Syrian Civil Defence) பணிபுரியும் முஹம்மத் ஆதம், கிழக்கு ஃகூவ்தா பகுதியில் நடைபெற்ற “பேரழிவை” பற்றி அல் ஜஸீரா பத்திரிகையாளரிடம் ரிப்போர்ட் அளிக்கையில்,
“வீடுகளில் வசிக்கும் சாமானியர்கள் மீதும், பாடசாலைகள் மீதும், மருத்துவமனைகள் மீதும், சிவில் பாதுகாப்பு காப்பகங்கள் மீதும் நடத்தப்படுகின்ற ஒரு திட்டமிட்ட முறையான தாக்குதல்களை
குறித்து தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்” .இவைகள் அனைத்தும் இந்த சமூகத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கும் செயல்கள் ” என்றார்.
“சிரியா மற்றும் ரஷ்ய அரசுகளின் போர் விமானங்கள் வானில் நோட்டமிடுவதால்,கட்டிடங்களின் அடித்தளத்தில் நில அறைகளில் வாழும் சகோதரர்கள் சூரிய வெளிச்சத்தை பார்ப்பதே கிடையாது.
அடுத்த நேரம் அல்லது நாளில் நாங்கள் உயிருடன் தான் இருப்போம் என்று இவ்வுலகம் சொன்னாலும் எங்களுக்கு தெரியாது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கிழக்கு ஃகூவ்தா பகுதியின் வானில் பறந்த போர் விமானங்களும் இடைவிடாது பொழியப்பட்ட ராக்கெட் லாஞ்சர்களும் எங்களை விட்டு அகலவே இல்லை” என்றார்.
உரத்த சிந்தனை
“இங்கு நடைபெறுவது ஒரு இனச் சுத்திகரிப்பு ஆகும். மேலும் மனித உரிமைக்கு எதிரான தாக்குதல்கள் என்றும் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும். அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், இஸ்ரேல், துருக்கி, அரபு நாடுகள், ஐ எஸ் ஐ எஸ், நுஸ்ரா, குர்திஷ் படைகள், எண்ணற்ற போராளி குழுக்கள் பலரும் முதலாளித்துவம், கம்யூனிஸம், பாரசீகம், அரபு அதிகாரம், ஐரோப்பிய காலனியம், உதுமானிய துருக்கி அதிகாரம் ஆகியவற்றின் அதிகார வெறியினிடையே கிலாஃபத்தின் பெயரிலும் இரத்த கோர தாண்டவம் நடக்கிறது என்பதே உண்மை.
சிரியாவின் குழந்தைகளின் சாவை காண சகிக்காமல் ஏக இறைவனை இடது சாரிகள்  ஏசுவதில் எந்த அர்த்தமும் இல்லை . இந்த பூமியில்  தன்னை கடவுளாக நினைத்து மக்களை கொடுத்து கொத்தாக கொள்ள முனையும் ஏகாதிபத்திய சக்திகள் மீது மக்கள் தனது சிந்தனையை  திருப்புவது அறிவுடைமை ஆகும். சிரியாவின் வெடிகுண்டு தாக்குதல் என்பது  சாமானியர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்” என்பதில் எள்ளளவும் மாற்றுக கருத்து இல்லை.
-அபூஷேக் முஹம்மத்

அபூஷேக் முஹம்மத்

error: Content is protected !!