Featured Category

பலஸ்தீன நில தின போராட்டமும் பின்னணியும்

பலஸ்தீனிய மக்களின் தாயக மீட்பு போராட்டமானது சடத்துவ ரீதியான பார்வைகளுக்கும் அப்பால் உணர்வு ரீதியாக உந்தப் பெற்றதாகும். அவ்வாறான உணர்வு ரீதியாக உந்தப்பெற்ற தாயகம் மீதான ஈர்ப்பே இற்றை வரைக்கும் களம் எவ்வளவுதான் பயங்கரமானதாகவும் முடிவுறாததாக இருந்தாலும்கூட பலஸ்தீன மக்களின் இறுதிவரை போராடும் குணத்தை மேலும் வலுப்படுத்துகிறது. பலவந்தமாக பறிக்கப்பட்ட சொந்த பூமியை மீள கோரும் முகமாக நில தின போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 31) காசாவில் ஆரம்பமாகியஇஸ்ரேலுக்கு எதிரான  பலஸ்தீன முஸ்லிம்களின் நில தின போராட்டத்தின்போது இஸ்ரேலிய இராணுவத்தின் மூர்க்கத்தனமான வன்முறைத் தாக்குதல்களில் 17 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர்.  பலஸ்தீனர்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய இராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

1948 இல் யூத ஆக்கிரமிப்பு மூலம் தம்மிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட்ட நிலங்களை கோரி பலஸ்தீனர்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்த நில தின பேரணி மீதான இஸ்ரேலிய துருப்புகளின் கண்மூடித்தனமான ஸ்னைப்பர் தாக்குதல்களுக்கு எவ்வித நியாப்படுத்தல்களையும் கற்பிக்க முடியாதவாறு சர்வதேச ரீதியில் சியோனிச ஆதரவு சக்திகள் மௌனித்துப் போயுள்ளன.

பலஸ்தீனர்கள் தமது தாயகத்திற்கு மீள திரும்புவதையும் குடியிருப்புக்களை அமைத்து வாழ்வாதாரத்தை நடாத்தவும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக பல தசாப்த காலங்களுக்கு முன்னதாகவே ஐ.நா.சபை பலஸ்தீனர்களுக்கு வழங்கியுள்ள பூரண உரிமையினை உலகுக்கு வெளிக்காட்டாது மூடி மறைக்கும் கைங்கரியத்தையே இஸ்ரேல் செய்து வருகின்றது.  கடந்த வெள்ளிக்கிழமை பலஸ்தீன முஸ்லிம்கள் தமது சொந்த நிலங்களில் வாழ்வதற்கான உரிமையை வழங்குமாறு கோரி காந்திய வழியில் அமைதி பேரணி ஒன்றை நடாத்தி சர்வதேச கவனத்தை மீளவும் ஈர்க்க முயன்றவேளை இஸ்ரேல் தனது வழமையான பாணியில் வன்முறையை பிரயோகித்து அடக்க முயன்றது. சர்வதேசத்தின் ஆதரவு அலை பலஸ்தீனுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதில் இஸ்ரேல் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.

தாயக மீட்புக்கான அமைதிப் பேரணி

நில தின அமைதிப் பேரணியானது ஹமாஸ் ஆயுதப் படையினரின் நேரடி வழிநடாத்தலின் கீழ் இடம்பெறும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் போராட்டம் என இஸ்ரேலுக்கு ஆதரவான பிரித்தானிய ஊடகங்கள் சர்வதேசத்திற்கு சித்தரிப்பதில் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்த போதும் அவற்றின் முயற்சிகள் கைகூடவில்லை. மாறாக, ஹமாஸ், பதாஹ் தரப்புக்களின் பேராதரவுக்கு மத்தியில் இடம்பெற்ற இப்பேரணியானது ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களின் உரிமை போராட்டம் என்பதை சர்வதேச நாடுகள் நன்குணர்ந்து கொண்டுள்ளன.

இஸ்ரேல் தனது ஆயுத பலம் கொண்டு அடக்க நினைத்தாலும் காசாவில் ஆரம்பமாகியுள்ள பலஸ்தீனர்களின் நில தின எதிர்ப்புப் போராட்டங்களானது, நக்பா வெளியேற்றம் இடம்பெற்று 70 ஆவது வருடமாகிய எதிர்வரும் மே மாதம் 15 வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  1948 இல் இஸ்ரேலினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமது சொந்த நிலங்களுக்கு மீளவும் திரும்பும் சட்டரீதியான உரிமையை பலஸ்தீனர்கள் கொண்டுள்ளனர் என்பதை வலியுறுத்தும் பொருட்டே இப்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

எழுச்சி பெற்று வரும் பலஸ்தீனர்களின் உரிமைப் போராட்டங்களின் வீரியம் கண்டு திகைத்த இஸ்ரேலிய இராணுவம் 17 அப்பாவிப் பொதுமக்களை சுட்டுக் கொன்றதோடு 150 சிறுவர்கள் உட்பட 1,600 பேரை படுகாயங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இஸ்ரேலின் கண்மூடித்தனமான இத்தாக்குதல்கள் இப்பேரணியை மேலும் ஆறு வாரங்களுக்கு நீடிக்கச் செய்துள்ளதே தவிர பலஸ்தீனர்களின் தாயக வேட்கையை வேரோடு பிடுங்கி எறிய இயலவில்லை.

நில தின பேரணி மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ள ஆயுத அடக்குமுறைகள் சர்வதேசம் மத்தியில் இஸ்ரேலை தலைகுனிவடையச் செய்துள்ளது. காசாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பலஸ்தீனர்களின் அமைதி ஆர்ப்பாட்டங்களை உலகறியச் செய்திட சர்வதேச ஊடகங்கள் அங்கு குழுமியிருந்தன. இப்பேரணியில் பலஸ்தீனர்கள் சார்பில் எவ்வித வன்முறைகளும் இடம்பெறவில்லை என்பதையும் ஹமாஸ் படையினர் ஆயுதங்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதையும் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இன்னும் சொல்லப் போனால் ஹமாஸ் அமைப்பின் கொடி கூட இப்போராட்டத்தில் எவரது கைகளிலும் காணப்படவில்லை, பலஸ்தீன நாட்டுக் கொடிகளையே மக்கள் கைகளிலும் நெஞ்சிலும் சுமந்திருன்தனர்.  இது அமைப்புக்களின் போராட்டமல்ல, மாறாக அமைதியான முறையில் இடம்பற்ற மக்களின் உரிமைப் போராட்டம் என்பதை ஊடகங்களே உறுதிப்படுத்தியிருந்த நிலையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது இஸ்ரேலிய படைகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டமை பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இஸ்ரேலின் அடாவடித்தனமும் போலி நியாயங்களும்

பேரணி மீதான இஸ்ரேலின் அடாவடித்தனங்களை நியாயப்படுத்த பிரித்தானியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் ரீகவ் ஹமாஸ் அமைப்பை பகடைக் காயாக பாவித்து லண்டன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் ஹமாஸ் ஆயுத படையினரின் அச்சுறுத்தல்களே தமது இராணுவத்தின் பதில் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்திருந்ததாக ஊடகங்கள் மத்தியில் போலி நியாயம் கற்பிக்க முயன்றுள்ளார்.

“இஸ்ரேலிய பிரஜைகளின் உயிர்களைப் பாதுகாப்பது இஸ்ரேலிய இராணுவத்தினரின் கடமை. அவ்வாறே அவர்கள் தமது பணியை சரிவர நிறைவேற்றியுள்ளார்கள். இஸ்ரேலிய இராணுவத்திற்கு எனது பாராட்டுக்கள்” என்று அவர் தெரிவித்துள்ளமை நகைப்புக்கிடமானது. யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளிகள் மார்க் ரீகவின் கூற்று அப்பட்டமான பொய் என்பதை திட்டவட்டமாக நிரூபித்து நிற்கின்றன. அமைதியான முறையில் எவ்வித கலகங்களும் இன்றி இடம்பெற்ற பலஸ்தீனர்களின் எதிர்ப்புப் பேரணியை இஸ்ரேலிய படையினர் மற்றும் ஸ்னைப்பர் வீரர்கள் சரமாரியான சன்னப் பிரயோகத்தின் மூலம் கலைக்க முயன்றமை சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கின்ற நிலையில் இஸ்ரேலிய தூதுவரின் போலி நியாயங்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உண்மைக்குப் புறம்பான முறையில் பலஸ்தீனர்களின் அமைதி பேரணி மீதான தாக்குதல்களை சர்வதேசம் மத்தியில் நியாயப்படுத்தி வருகின்றமை இஸ்ரேலிய தரப்புக்கு புதிதானதொன்றல்ல.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதல்களும் அமைதி பேரணியினரை கலைத்த நிகழ்வும் 1948 இல் இடம்பெற்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் மீள் நினைவுறுத்தலாக அடையாளம் காணப்படுகிறது. சிறுவர்கள், பெண்கள், நிராயுதபாணியான ஆண்கள் மீது இஸ்ரேலிய ஆயுத படையினர், ஸ்னைப்பர் வீரர்கள், யுத்த வாகனங்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்கள் அன்று அரங்கேறிய விதத்தை இன்றைய தலைமுறையினருக்கு அச்சொட்டாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தன.

இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கும் பலவந்த ஆக்கிரமிப்புக்களுக்கும் வேறெந்த நாடுகளையும் விட அமெரிக்கா பகிரங்கமாகவே உடந்தையாக திகழ்கிறது. 250 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நேரடி நிதியுதவியை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ள அமெரிக்கா, பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட 70 இற்கும் அதிகமான வரைவு தீர்மானங்களை தனது வீட்டோ இரத்துச் செய்யும் அதிகாரத்தை பயன்படுத்தி வலிதற்றதாக்கியுள்ளது. இதன் மூலம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கொள்கைகளுக்கு அமெரிக்கா பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து வருகின்றது.

இஸ்ரேலிய அரசுக்கு பில்லியன் கணக்கில் நிதியுதவி வழங்கி வரும் அதேவேளை மேலதிகமாக இராணுவ உதவிகளையும் ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி வருகின்றது.

மறுபுறமாக பலஸ்தீன அகதிகளை பராமரிக்கும் ஐ.நா. முகவரகத்திற்கு வருடாந்தம் 1.2 பில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்கி வந்த அமெரிக்கா அண்மையில் அத்தொகையில் 360 மில்லியன் டொலர்களை இடைநிறுத்திக் கொண்டது.

நில தின போராட்டத்தின் பின்னணி

1948 இல் பலஸ்தீன நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமிக்கத் தொடங்கியது முதல் அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த பலஸ்தீனிய முஸ்லிம்கள் மீது பாரபட்சமான கொள்கைகளை இஸ்ரேல் கடைப்பிடித்து வந்தது. இதற்கு எதிராக 1976 மார்ச் 30 ஆம் திகதி இஸ்ரேலிய வாழ் பலஸ்தீனிய முஸ்லிம்கள் இஸ்ரேலுக்கு எதிரான தொடர் போராட்டத்தை பிரகடனப்படுத்தியது.

1970களில் பலஸ்தீனியர்கள் மீது பாரபட்சமான ரீதியில் இஸ்ரேலினால் விதிக்கப்பட்ட வரிச்சுமைகள் தொடர்பில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. 1976 இன் ஆரம்பத்தில் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு திட்டங்களின் மூலம் சுதேசிகளான பூர்வீக பலஸ்தீனர்கள் தமது நிலங்களில் குடியிருப்புக்களை அமைத்துக் கொள்வதற்கோ, விவசாயங்களில் ஈடுபடுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் பலஸ்தீனர்களிடம் இருந்து 5 மில்லியன் ஏக்கர் அளவிலான நிலங்களை இஸ்ரேல் திட்டமிட்டு கைப்பற்றியது.

1976 இல் கலீலி பிரதேசத்தில் பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான 21,000 ஏக்கர் விவசாய நிலங்களை இஸ்ரேலிய அரசு திட்டமிட்ட கொள்கை வகுப்புக்கள் மூலம் பலவந்தமாக சுவீகரித்துக் கொண்டது. இந்நிகழ்வே 1976 மார்ச் 30 எதிர்ப்பு போராட்டம் வலுக்க துரித காரணமாக திகழ்ந்தது. தமக்கெதிரான போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்குவதை உணர்ந்து கொண்ட இஸ்ரேலிய அரசு இரும்புக்கரம் கொண்டு பலஸ்தீனர்களை அடக்கத் துணிந்தது. நசுக்கப்பட்ட பலஸ்தீனர்களின் போராட்ட வேட்கையை தளர்த்தி அச்ச நிலைப்பாட்டுக்குள் கொண்டுவர இஸ்ரேல் எத்தனித்தது.

போராட்டக்காரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டேனும் போராட்டத்தை கலைக்குமாறு தமது இராணுவத்திற்கு இஸ்ரேல் பணித்தது. இராணுவம் கட்டவிழ்த்து விட்ட தாக்குதல்களில் அபுரியா, காதர் காலியாஹ், கதீஜா சவன்னாஹ், ரபாத் சுஹைரி, ஹஸன் தாஹா, அஹ்மத் யாஸின் ஆகிய 6 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். மேலும் பலர் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

எனினும், இஸ்ரேலின் அடக்குமுறைகளை துணிவுடன் எதிர்த்து, தொடர்ந்தும் போராட்டங்களை மேற்கொண்டு அப்போதைய இஸ்ரேலிய நில சுரண்டல் கொள்கையை புறக்கணித்து தமது விவசாய காணிகளை தக்க வைத்துக் கொண்டனர். அன்று முதல் மார்ச் 30 திகதியை பலஸ்தீனர்கள் நில தினமாக பிரகடனப்படுத்தி, நில அபகரிப்புக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த வீர தியாகிகளான பலஸ்தீனர்களை நினைவுகூர்ந்தும் 1948 முதல் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் அடாவடித்தனங்களை எதிர்த்தும் வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய அப்பாவிப் பொதுமக்களில் 26 வயது நிரம்பிய அபுநும்ர் எனும் இளைஞனும் அடக்கம். கைகளில் துப்பாக்கிகள் ஏந்தியிருக்கவில்லை. இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் விடுக்கவில்லை. அமைதியான முறையில் பேரணியில் கலந்து கொண்டிருந்த அந்த இளைஞனின் நெஞ்சை நோக்கிப் பாய்ந்தது இஸ்ரேலிய ஸ்னைப்பர் வீரரின் துப்பாக்கிச் சன்னம். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிர் பிரிவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னர்தான் காசா கடற்கரையில் அவர் வரைந்த மணல் ஓவியம் சமூக வலைத்தளங்களில் பரலாகியுள்ளது. அம்மணல் ஓவியத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் பொறித்திருந்த வாசகம்

“தாயகம் நோக்கி நான் மீண்டு வருவேன்”

 

ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்

(மூலம்: Middle East Monitor)

நன்றி: நவமணி

ஹஸன் இக்பால்

error: Content is protected !!