Featured Category

ஹமாஸ் விஞ்ஞானி கொலை! மொஸாத்தின் பின்னணி என்ன?

டந்த சனிக்கிழமை மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் வைத்து பலஸ்தீனைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினருமான பாதி அல்பத்ஸ் (வயது 35) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமையானது, பலஸ்தீன அறிவியலாளர்களின் நிலவுகைக்கு இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாட்டினால் தொடர்ந்து விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தலை மீண்டும் புதுப்பித்துள்ளது.
அல்பத்ஸ் காசாவில் மின்சக்தி பொறியியல் துறையில் கற்று பின்னர் மலேஷியாவில் அதே துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். சக்தி வளங்கள் மற்றும் சக்தி சேமிப்பு துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ள அல்பத்ஸ் அது தொடர்பில் பல நூல்களை வெளியிட்டுமுள்ளார்.
பலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகிக்கும் ஹமாஸ் அமைப்பு தெரிவிக்கையில், அல்பத்ஸ் தமது அமைப்பின் மிக முக்கிய உறுப்பினர் என்றும் அவரது படுகொலைக்கு இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
“விசுவாசமான உறுப்பினராக திகழ்ந்த அல்பத்ஸ் பலஸ்தீனின் இளம் அறிவியலாளர்களின் முன்னோடியாக விளங்கினார். சக்தி வளங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் இவர் ஆற்றியுள்ள பங்களிப்புக்கள் அளப்பரியவை” என ஹமாஸ் சிலாகித்துள்ளது.
அல்பத்ஸின் தந்தை குறிப்பிடுகையில், படுகொலையின் பின்னணியில் இஸ்ரேலின் மொசாட் இருப்பதாக தாம் உறுதியாக நம்புவதாகவும், மலேஷிய அதிகாரிகள் இது குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் உளவுத்துறை தொடர்பில் பரிச்சயம் மிக்கவரும், Rise and Kill First எனும் மொசாட் உளவுத்துறையின் தந்திரோபாயங்கள் தொடர்பில் ஆய்வு நூலை எழுதியவருமான இஸ்ரேலிய புலனாய்வு ஊடகவியலாளர் ரோனன் பெர்க்மன் கூறுகையில், அல்பத்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ள விதம் தொடர்பில் தாம் ஆராய்ந்தபோது மொசாட் கையாளும் உபாயங்கள் அத்தனையும் அதில் தெளிவாய்ப் பிரதிபலிப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளார்.
“அல்பத்ஸ் படுகொலையில் துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து காரியத்தை செவ்வனே தடயங்கள் இன்றி செய்து முடித்துள்ளனர். இஸ்ரேலுக்கு வெளியே தமது எதிரிகளை திட்டமிட்டு படுகொலை செய்யும் இஸ்ரேலின் மொசாட் பிரிவின் கடந்தகால படுகொலை சம்பவங்களை ஒப்பிடுமிடத்து இதே மாதிரியான தப்பித்தல் உபாயங்களை காணக் கூடியதாக உள்ளது. மேலும் பல நுணுக்கமான விடயங்கள் இப்படுகொலை மொசாட்டின் திட்டமிட்ட செயல் என்பதை வெளிக்காட்டி நிற்கின்றன” என இஸ்ரேலிய புலனாய்வு ஊடகவியலாளர் ரோனன் பெர்க்மன் அல்ஜசீராவுக்கு தெரிவித்துள்ளார்.
மொசாட்டின் படுகொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியல்
படுகொலை செய்யப்பட வேண்டிய நபர்களைத் தீர்மானிக்கும் செயன்முறையானது பல்வேறு படிநிலைகளைக் கொண்டது. இதில் இஸ்ரேலிய உளவுப் பிரிவு தமது புலனாய்வு பகுதி மற்றும் அரசியல் தலைமைகளுடன் கூட்டிணைந்து இயங்குகின்றது. சிலவேளை சாதாரண இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் இராணுவத்தினர் கூட இப்பணிகளுக்கென மொசாட்டினால் நியமிக்கப்படுகின்றனர்.
அல்பத்ஸ் கொலை விவகாரத்தை எடுத்துக் கொண்டால் ஹமாஸ் அமைப்பின் முக்கிய புள்ளி மற்றும் பலஸ்தீனின் மிகச் சிறந்த அறிவியல் சொத்து எனும் அடிப்படையில் அவரை கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் மொசாட் முன்னகர்த்தி இருக்கக் கூடும். உலகளாவிய ரீதியில் மொசாட்டின் உளவு வலைப்பின்னல் வியாபித்தி இருகின்றமையால் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களின் முற்று முழுதான தகவல்களை இலகுவில் மொசாட்டினால் சேகரித்துக் கொள்ள இயலுமாக உள்ளது.
ஹமாஸ் அமைப்பினரின் துருக்கி மற்றும் லெபனான் இடையேயான தொடர்பாடல்கள், அசைவுகள், நகர்வுகள் என அத்தனையும் இஸ்ரேலிய உளவுப் பிரிவினால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றதாக மூலங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் மொசாட்டின் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினரும் பலஸ்தீனின் தலைசிறந்த அறிவியலாளருமான அல்பத்சை உள்ளடக்கியிருப்பது ஆச்சரியமில்லை.
ஹமாஸ் அமைப்புடனான தொடர்பை அல்பத்ஸ் ஒருபோதும் மறைத்து வைத்திருக்கவில்லை எனவும் எப்போதும் அதனை பகிரங்கமாகவே வெளிக்காட்டி வந்தார் என அல்பத்ஸின் நெருங்கிய நண்பர் அல்ஜசீராவுக்கு தெரிவித்துள்ளார். “ஹமாஸ் அமைப்பினருடன் காத்திரமான தொடர்புகளை அல்பத்ஸ் எப்போதும் பகிரங்கமாகவே பேணி வந்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.

மொசாட்டின் துப்பறியும் செயன்முறைகள்

கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியலில் அல்பத்ஸ் பெயர் இணைக்கப்பட்டதும் குறித்த நபரைக் கொலை செய்வதனால் தாம் அடைந்து கொள்ளப்போகும் சாதக, பாதகங்கள், அதன் பின்விளைவுகள் பற்றி மொசாட் கூடிக் கலந்தாலோசிக்கும். பின்னர் இலக்கு உறுதியானதும் குறித்த பணியை செவ்வனே நிறைவேற்றும் வழிமுறைகள், செய்ய வேண்டிய நபர் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மதிப்பிடப்படும்.

மொசாட்டின் சிறப்புத்தேர்ச்சி பெற்ற பிரிவினால் கொலை செய்யப்பட வேண்டிய நபர் குறித்து உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டதும் அது குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணக் கோவை VARASH என அடையாளப்படுத்தப்படும் இஸ்ரேலிய உளவுப் பிரிவின் உயர் மட்டத் தலைமைகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.

VARASH பிரிவினாலே இறுதிக் கட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். படுகொலை செய்ய வேண்டிய நாள், பணியை நிறைவேற்ற வேண்டிய நபர்கள், அதற்கான மூல வளங்கள் என்பன VARASH இனால் வழங்கப்படும்.

எனினும், குறித்த ஆவணம் இஸ்ரேலிய பிரதமரினால் கைச்சாத்திடப்பட்ட பின்னரே நடைமுறைக்கு கொண்டுவரப்படும். மொசாட்டின் இலக்குகள் அத்தனையும் இஸ்ரேலிய பிரதமரின் அனுமதிக்குப் பின்னரே செயற்படுத்தப்பட வேண்டும் என்பது இஸ்ரேலின் உள்ளக விவாகர நடைமுறைகளில் ஒன்றாகும்.

அதேவேளை மொசாட்டின் இறுதிக் கோப்பு ஆவணத்தில் கைச்சாத்திட பிரதமர் மேலும் இரு அமைச்சர்களை தெரிவு செய்வார் எனவும், பொதுவாக பாதுகாப்பு அமைச்சர் அதில் உள்ளடங்குவர் எனவும் இஸ்ரேலிய புலனாய்வு ஊடகவியலாளர் பெர்க்மன் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.
பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் படுகொலை தொடர்பில் தேவையான மேலதிக முன்னெடுப்புக்களை நோக்கி நகரும். படுகொலைத் திட்டமானது சில மாதங்கள் தொடக்கம் பல வருடங்களாகவும் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். திட்டம் நிறைவேற எடுக்கும் காலமானது, படுகொலை செய்யப்படும் நபரின் கனதியையும், அந்நபரை கொலை செய்வதற்கு அணுக வேண்டிய அணுகுமுறைகளின் கடினத் தன்மையையும் பொறுத்து வேறுபடும்.
Caesarea unit – மொசாட்டின் இரகசிய புலனாய்வு பிரிவு

இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் உள்ளக பிரிவுகளில் ஒன்றே Caesarea unit ஆகும். உலகளாவிய நாடுகள் குறிப்பாக அரபு நாடுகளில் வேவு பார்ப்பதற்கென நபர்களைப் பணிக்கமர்த்துதல், அவர்களுக்கான பணிப்புரைகள், கட்டளைகளை வழங்குதல் மற்றும் நிர்வகித்தல் பணிகள் Caesarea unit இனால் மேற்கொள்ளப்படும்.
Caesarea unit 1970 களின் ஆரம்பப் பகுதிகளில் பிரபல இஸ்ரேலிய உளவாளியான மைக் ஹராரி என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. அரபு நாடுகள், மத்திய கிழக்கு முழுதும் பரந்து விரிந்த வலைப்பின்னலொன்றை Caesarea பிரிவு மறைமுகமாக நிர்வகித்து வருகின்றது. இதன் மூலம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தில் தமது பணிகளைக் கனகச்சிதமாக நிறைவேற்றிக் கொள்ளும் ஆளுமையை மொசாட் வளர்த்துக் கொண்டுள்ளது.
Caesarea பிரிவின் ஸ்தாபகரான இஸ்ரேலிய பிரபல உளவாளியான மைக் ஹராரி சில

வருடங்களின் பின்னர் Kidon எனும் தொழில்முறை கொலையாளிகளைக் கொண்ட படுபயங்கரமான உளவுத்துறையின் உட்பிரிவை ஆரம்பித்தார். ஆயுதங்களை வெகு லாவகமாக கையாளும் தலைசிறந்த படுகொலை வல்லுநர்கள் மற்றும் தொழில்முறை சிறப்புத்தேர்ச்சி பெற்ற உளவாளிகள் இப்பிரிவில் நியமிக்கப்படுவர். இஸ்ரேலிய இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர்களே தற்போது Kidon பிரிவில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
கோலாலம்பூரில் அண்மையில் இடம்பெற்ற திட்டமிடப்பட்ட படுகொலையில் மொசாட்டின் Kidon பிரிவு வீரர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. மொசாட்டின் கொலைசெய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் பலஸ்தீன அறிவியலாளர்கள், வளவாளர்கள் மாத்திரமன்றி சிரியா, லெபனான், ஈரான் மற்றும் ஐரோப்பியாவைச் சேர்ந்த நபர்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

மொசாட்டின் தந்திரோபாய நகர்வுகள்

அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான CIA இன் Special Activities Center (SAC) பிரிவை ஒத்ததே மொசாட்டின் Kidon பிரிவு ஆகும். அமெரிக்காவின் பாராளுமன்றத்தின் அனுமதி பெற்ற உயர் இரகசிய திட்டங்கள் மற்றும் கொலை நிகழ்ச்சி நிரல்கள் என்பன CIA இன் Special Activities Center (SAC) எனும் பிரிவினாலேயே நிறைவேற்றப்படுகின்றன. இவ்வகையில் மொசாட்டின் kidon மற்றும் CIA இன் Special Activities Center (SAC)பிரிவும் தமது செயன்முறைகளில் பல ஒத்த நடவடிக்கைகளை கையாளுகின்றன.

இஸ்ரேலிய பிரபல புலனாய்வு ஊடகவியலாளரான பெர்க்மன் தனது நூலில் குறிப்பிடுகையில், பலஸ்தீனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் இரண்டாவது இந்திபாதா ஆரம்பித்த, 2000 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை 500 இற்கும் மேற்பட்ட படுகொலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இவற்றில் தமது இலக்குகளாக கருதப்பட்ட 500 நபர்கள் உட்பட 1,000 பேரை மொசாட் இரகசியப் படைப் பிரிவு படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கின்றார்.

இரண்டாவது இந்திபாதா காலகட்டத்தில் மொசாட் உளவுத்துறை 1,000 இற்கும் மேற்பட்ட படுகொலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவற்றில் 168 திட்டங்களே வெற்றியளித்தன எனவும் பெர்க்மன் குறிப்பிடுகின்றார்.

அதன் பின்னர் ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் ஹமாஸ் தலைமைகளை இலக்காகக் கொண்ட 800 படுகொலைத் திட்டங்கள் காசா மற்றும் வெளிநாடுகளில் மொசாட் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரபு நாடுகளுக்கும் மொசாட் உளவுத்துறைக்குமான உறவுகள்

மொசாட் உளவுத்துறையானது அரபு நாடுகளின் புலனாய்வுத்துறை முகவரகங்களுடன் வரலாற்று ரீதியானதும் ஒழுங்குபடுத்தப்பட்டதுமான உறவுகளையும் மறைமுக, நேரடி தொடர்புகளையும் பேணியே வருகின்றது. குறிப்பாக ஜோர்தானிய மற்றும் மொரோக்கோ புலனாய்வு முகவரகங்களுடனான மொசாட்டின் தொடர்புகள் காத்திரமானவை.

அண்மைக் காலமாக எகிப்து மற்றும் வளைகுடா நாடுகளில் அரச சார்பற்ற புலனாய்வு முகவரகங்களுடன் மொசாட் தனது உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. எந்தளவுக்கெனில், மொசாட்டின் கிளைப் பிராந்தியங்களாக மறைமுகமாக அவை இயங்குமளவுக்கு மொசாட் தனது ஆளுமை அதிகாரங்களை வியாபித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தனது இரகசிய திட்டமிடல்களை செயற்படுத்தும் கேந்திர நிலைய முகவரகத்தை ஜோர்தான் தலைநகர் அம்மானில் மொசாட் நிறுவியுள்ளது.
காது துவாரத்தினுள் நச்சுத் திரவியத்தை விசிறுவதன் மூலம் 1997 இல் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மெஷாலை ஜோர்தானில் வைத்து மொசாட் உளவுத்துறை கொலை செய்ய எத்தனித்தது. எனினும், அப்போதைய ஜோர்தானிய அரசர் ஹுஸைன் அவர்களின் முயற்சினால் மொசாட்டின் சதித் திட்டம் தோல்வியைத் தழுவியது.

இஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள நல்லிணக்க ஒப்பந்தங்களை முறித்துக் கொள்வதாகவும்,ஜோர்தானில் அமைந்துள்ள மொசாட்டின் உளவுப் பிரிவு முகவரகங்களை இழுத்து மூடுவதாகவும் அப்போதைய ஜோர்தானிய அரசர் ஹுஸைன் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்து குறித்த உயிர்கொல்லும் நச்சு பதார்த்தத்தின் வீரியத்தை இல்லாமற் செய்யும் மருந்தை மொசாட் ஜோர்தானுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தக்க சமயத்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மெஷாலின் உயிர் காப்பாற்றப்பட்டது.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மெஷாலை ஜோர்தானில் வைத்து படுகொலை செய்வதற்கு மொசாட் திட்டம் தீட்டியமை தொடர்பில் அப்போதைய ஜோர்தானிய உளவுப் பிரிவு தலைவர் சமித் பாதிக் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, தம்முடன் கலந்தாலோசித்து செய்திருந்தால் வெற்றிகரமாக காரியம் கைகூடியிருக்கும் என மொசாட் தலைமையிடம் அவர் கூறியிருந்ததாக இஸ்ரேலிய புலனாய்வு ஊடகவியலாளர் பெர்க்மன் தனது நூலில் சுட்டிக் காட்டுகின்றார். பெர்க்மனின் ஆய்வின் பிரகாரம் ஜோர்தானுக்கு அடுத்தபடியாக 1960கள் தொடக்கம் மொசாட்டின் மிக நெருங்கிய நட்பு நாடாக மொரோக்கோ விளங்கி வருகிறது.

பெர்க்மன் தனது நூலில் குறிப்பிடுகையில் “இஸ்ரேலிடமிருந்து புலனாய்வு மற்றும் தொழில்நுட்ப துறைகளில் காத்திரமான பல உதவிகளை மொரோக்கோ பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு பிரதியுபகாரமாக அப்போதைய மொரோக்கோ மன்னர் ஹஸன் மொரோக்கோ வாழ் யூதர்களை இஸ்ரேலில் குடியேறுவதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். அத்துடன் அரபு நாடுகள் முழுவதையும் கண்காணிப்பதற்காகவும் வேவு பார்ப்பதற்குமென மொரோக்கோவில் தமது கேந்திர நிலையமொன்றை நிறுவுவதற்கு மொசாட் அனுமதிகளையும் பெற்றுக் கொண்டது.”

1965 இல் மொரோக்கோ தலைநகர் ரபாட்டில் இடம்பெற்ற அரப் லீக் உச்சி மாநாட்டின்போது அரபு நாடுகளின் தலைமைகள் ஒன்றுகூடும் மேடைகளில் இரகசிய ஒலிப்பதிவு கருவிகளைப் பொருத்தி ஒட்டுக் கேட்பதற்கும் மொரோக்கோ உளவுப்படை மொசாட்டுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் அளவுக்கு மொரோக்கோ, மொசாட் உறவுகள் பலம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன. குறித்த அரப் லீக் உச்சி மாநாட்டில் அரபு நாடுகள் கூட்டிணைந்து இராணுவப் படைகளை உருவாக்குவது வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாட் மட்டுமே. இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாட் இரகசிய உளவாளி, நமது இஸ்ரேலிய தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அரசியல் கொலைகளை உத்தியோகபூர்வமாக செய்வதற்கு மொசாட் உளவுத்துறைக்கு இஸ்ரேல் பரந்துபட்ட அதிகாரத்தை வழங்கியுள்ளது.

பலஸ்தீனர்களில் புத்திஜீவிகளும் கல்விமான்களும் உருவாகுவதும், சர்வதேச ரீதியில் காத்திரமான பங்களிப்புக்களை அவர்கள் வழங்குவதும் இஸ்ரேலின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் என்பதை நன்கறிந்து கொண்ட இஸ்ரேலிய அரசு, மொசாட் உளவுத்துறையைப் கனகச்சிதமாக பயன்படுத்தி அழித்தொழிக்க திட்டமிட்டு வருகின்றமை புதியதொரு விடயமல்ல.

தமிழில்: ஹஸன் இக்பால்

(மூலம்: அல்-ஜஸீரா)

ஹஸன் இக்பால்

error: Content is protected !!