Featured Category

டாக்டர் ஆபியா சித்திக்கி கைது – பாகிஸ்தான் உளவுத்துறையின் சூழ்ச்சி!

மெரிக்க படைவீரர்களை கொலை செய்ய முயற்சித்தார் எனும் போலிக் குற்றச்சாட்டின்பேரில் அமெரிக்க நீதிமன்றத்தினால் 86 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, டெக்சாஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய பிரஜையும் உயிரியல் விஞ்ஞானியுமான டாக்டர் ஆபியா சித்தீகி சிறையிலேயே மரணித்து விட்டதாக அண்மையில் எழுந்த வதந்திகள் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்தது.

பாரிய போராட்டங்கள் பாகிஸ்தானில் வெடித்துக் கிளம்புவதற்கு முன்னதாக டெக்ஸாஸ் சிறைச்சாலை நோக்கி உடனடியாக விரைந்த பாகிஸ்தானிய தூதுவர் ஆயிஷா பாரூகி, அங்கே டாக்டர் ஆபியாவை சந்தித்து தான் இரண்டு மணிநேரங்கள் உரையாடியதாகவும் அவரது மரணம் தொடர்பான வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அறிவித்ததை அடுத்தே மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

 

2001 இல் தலிபான்களினால் கடத்தப்பட்டு பின்னர் 11 நாட்களில் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டமையினால் விடுவிக்கப்பட்ட பிரித்தானிய பெண் ஊடகவியலாளரான Yvonne Ridley டாக்டர் ஆபியாவின் விடுவிப்பு தொடர்பில் பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட வஞ்சகங்கள் தொடர்பில் இவ்வாரம் Middle East Monitor தளத்தில் தனது கட்டுரையொன்றில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அக்கட்டுரையின் தமிழாக்கத்தை நவமணி வாசகர்களுக்கு தருகின்றோம்.

 

டாக்டர் ஆபியா வழக்கு விசாரணைகள் இடம்பெற்று 15 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள இந்நிலையில் அடிக்கடி மேலெழும் அவர் தொடர்பான வதந்திகள் பற்றி நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். நீதித்துறை செயலிழந்து வஞ்சிக்கப்பட்ட ஒருத்தியாகவே டாக்டர் ஆபியாவை நான் காண்கிறேன். பாகிஸ்தானிய புலனாய்வுத்துறை மற்றும் அமெரிக்க புலனாய்வுத்துறை இடையே இடம்பெற்ற கபட நாடகத்தில் பலிக்கடாவாக்கப்பட்ட பெண்மணியே ஆபியா.

இவ்விவகாரம் தொடர்பில் நான் மௌனம் களைய வேண்டிய தருணம் வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியினால் வழங்கப்படும் பொதுமன்னிப்பை டாக்டர் ஆபியாவுக்கு பெற்றுக் கொடுத்து டாக்டர் ஆபியாவை விடுவிக்க நான் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். அம்முயற்சிகள் பலனளிக்கும் இறுதித் தருணத்தில் சில தீய சக்திகளின் சுயநலப் போக்கினால் தோல்வியில் முடிவுற்றது.

2013 இல் நான் ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்த காலப்பகுதியில் தலிபான்களின் உயர்மட்ட உறுப்பினர்கள் என்னை அணுகினர். அமெரிக்கா டாக்டர் ஆபியாவை விடுவித்தால் தாம் அதற்குப் பகரமாக 2009 தொடக்கம் 2014 வரை பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டிருந்த ரொபெர்ட் பெர்க்டால் எனும் அமெரிக்க படைவீரரை விடுவிப்போம் என தலிபான் உயர்மட்ட உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இவ்விடயத்தை உடனடியாக நான் அமெரிக்க இராணுவப் பிரிவுடன் தொடர்பு கொண்டேன். எந்தவோர் அமெரிக்க வீரனையும் இழப்பதற்கோ கைவிடுவதற்கோ அமெரிக்க இராணுவம் விரும்பாது என்பதை நான் அறிந்திருந்தேன். எனது நம்பிக்கை வீண் போகவில்லை. கைதிகள் பரிமாற்றப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கைதேர்ந்த அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி உடனடியாக எனது அழைப்புக்கு செவிசாய்த்தார்.

பல வருடங்களுக்கு முன்னர் என்னை பிணைக்கைதியாக வைத்திருந்த தலிபான்களை சந்தித்து ஆபியா-ரொபெர்ட் கைதிகள் பரிமாற்றம் தொடர்பிலான உடன்படிக்கையை மேற்கொண்டேன். இவ்வுடன்படிக்கை எவ்வித நிதிப் பரிமாற்றத்தையும் கோரியிருக்கவில்லை. ஆபியாவை விடுவித்தால் ரொபெர்ட்டை விடுவிப்போம் எனும் நேரடியான ஒப்பந்தமாகவே அமைந்தது.

இவ்வுடன்படிக்கை தொடர்பில் நான் பாகிஸ்தானிய அதிகாரிகள் எவருக்கும் எதுவித தகவலையும் வெளியிடவில்லை. இரகசியமாகவே வைத்திருந்தேன். ஏனெனில், பாகிஸ்தானில் நான் சந்தித்த அரசியல்வாதிகளில் பலர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக இருக்கவில்லை. அத்துடன் இத்தகையதொரு கைதிகள் பரிமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பலர் பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவில் இருந்தனர் என்பதை நான் அறிந்திருந்தேன். ஆப்கானிஸ்தானில் கைபர் கணவாய் பிரதேசம் அருகே டாக்டர் ஆபியாவை அழைத்து வருவதற்கும், அங்கேயே வைத்து ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து ஆபியாவின் விடுதலை பற்றி உலகுக்கு பகிரங்கமாக அறிவிக்கலாம் என திட்டம் வகுத்திருந்தேன்.

ஆபியாவை தம்மிடம் சமர்ப்பித்த மறுகணம் அதே இடத்தில் வைத்தே அமெரிக்க இராணுவ வீரர் ரொபெர்ட்டை ஒப்படைப்பதாக தலிபான்கள் ஒப்புக் கொண்டிருந்தனர். அமெரிக்க தரப்பில் இருந்து எனக்கு அறிவிக்கப்பட்டிருந்த இறுதி நிபந்தனை என்னவென்றால், அமெரிக்க மக்களிடம் காண்பிப்பதற்காக ரொபெர்ட் உயிருடன் இருப்பதற்கான வீடியோ ஆதாரம் ஒன்றை அவர்கள் கோரியிருந்தனர். இக்கோரிக்கைக்கும் தலிபான்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இறுதிக்கட்டமாக தலிபான்களின் உயர்மட்ட உறுப்பினர்கள் இரகசிய சந்திப்பொன்றுக்கு என்னை அழைத்திருந்தனர். அவர்கள் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தலிபான் உயர்மட்ட உறுப்பினர்கள் திக்கித் திணறியவாறு இவ்வாறு கூறினார், ‘டாக்டர் ஆபியா நாம் மீள அழைத்துக் கொள்ளத் தேவையில்லை. வேறு யாராவது கைதிகள் இருப்பின் அவர்களை மீட்டுக் கொள்வோம்’ என தெரிவித்தனர்.

ஆபியாவின் விடுதலை குறித்துப் பேராவலுடன் காத்திருந்த எனக்கு அவர்களின் இச்சடுதி மாற்றம் தூக்கி வாரிப் போட்டது. விளக்கம் கோரினேன். மிகச் சொற்ப தகவல்களையே வழங்கினர். அவர்களின் பதில்கள் திருப்தியளிப்பதாக இல்லை. அவர்களுடன் வாதாடினேன். கைதிகளை விடுவிப்பது குறித்தும் வாக்குத் தவறாமை குறித்தும் இஸ்லாம் காட்டித் தந்த வழிமுறைகள் பற்றிக் காட்டமாக எடுத்துக் கூறினேன். அவர்கள் கிஞ்சிற்றும் மசிவதாக இல்லை.

நான் எங்கே இருக்கிறேன், நான் யாருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நான் சென்று வரும் இரகசிய பயணங்கள் தொடர்பில் எனது நண்பர்களோ குடும்பத்தினரோ எதுவும் அறிந்திராத பாதுகாப்பற்ற நிலையில், தலிபான்களுடன் நான் வாதாடுவது பொருத்தமான ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. எனினும், அமெரிக்க தரப்புடன் நான் இது குறித்து மேற்கொண்டிருந்த பலத்த முயற்சிகள், எனது பயணங்கள் அத்தனையும் வீணாகி விட்டதே என்று நினைக்கும்போது வெறுமையை உணர்ந்தேன். என்னுள் ஏமாற்றத் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இறுதியாக தலிபான்கள் மௌனம் களைந்தனர். ஆபியாவின் விடுவிப்பு தொடர்பான அவர்களது முயற்சிகளை ஏன் சடுதியில் கைவிட்டனர் என்பதற்கான காரணத்தைக் கூறினார். அவர்கள் கூறிய காரணம் என்னை மேலும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. இன்றும் கூட அதன் தாக்கத்தில் இருந்து நான் விடுபடவில்லை என்றுதான் கூற வேண்டும்.

பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவு எமது கைதிகள் பரிமாற்ற இரகசிய உடன்படிக்கையை எவ்வாறோ அறிந்து விட்டதாகவும், ஆபியாவை மீட்கும் முயற்சியை கைவிடுமாறு பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவு தம்மிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாக தலிபான்களின் உயர்மட்ட உறுப்பினர்கள் என்னிடம் கூறினர்.

ஆபியா நாடு திரும்பினால் பாகிஸ்தானிய புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரச்சினை ஏற்படும் எனவும், அதை மீறியும் ஆபியா மீட்கப்பட்டு பாகிஸ்தானுக்கு திரும்பினால் ஆபியாவை இரு நாட்களுக்குள் தாம் சுட்டுக் கொன்று விடுவதாகவும் பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவினர் கூறியுள்ளனர்.

ஆபியா மீது அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள், ஆபியாவின் கைது தொடர்பில் பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவினரின் வஞ்சக நடவடிக்கைகள் பின்னணியில் இருந்திருக்கக் கூடும் என்பதை நான் ஊகித்துக் கொண்டேன். ஆபியாவை தமது வஞ்சக நோக்கங்களுக்கு பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவு பயன்படுத்தி இருக்கக் கூடும் என தோன்றியது.

பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவினரின் குறித்த அச்சுறுத்தலுக்கு தலிபான்கள் ஏன் செவிசாய்க்க வேண்டும் என நான் கேட்டேன். அவ்வாறு நான் கேட்டதும் தலிபான்களின் உயர்மட்ட உறுப்பினர்கள் தமக்குள் கலந்துரையாடி விட்டு, ‘போர்க் களத்தில் படுகாயமுற்ற நூற்றுக்கணக்கான தலிபான் போராளிகளை பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவே பொறுப்பேற்று பாகிஸ்தானில் வைத்து பராமரித்து வருகின்றனர். அவர்களது உதவி ஒத்துழைப்புக்கள் இன்றி எமது அமைப்பு நாம் பலமிழந்து போய்விடும். எங்களுக்கு அவர்கள் வேண்டும். நாம் ஒசாமா பின்லேடனை அமெரிக்காவிடம் கையளிக்க முடியாது என அமெரிக்காவை எதிர்த்து நின்ற தருணம் எமது நாடான ஆப்கானிஸ்தான் எமது கட்டுப்பாட்டில் இருந்தது. அமெரிக்காவுடன் யுத்தத்தை வலிந்து உருவாக்கிக் கொள்ள நாம் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. அவர்களை எம்முடன் போர் தொடுத்தனர். எமது நாட்டை நாம் மீளக் கைப்பற்றிக் கொள்ளும் வரையில் நாம் பலமிழந்தவர்களாகவே உள்ளோம். 2001 இல் நாம் இருந்த வலுவான நிலையில் தற்போது இல்லை. உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்’ என  கூறினர்.

ஆபியாவை விடுவிக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்த ஏமாற்றத்துடன் அவ்விடத்தை விட்டும் வெளியேறினேன். அதன் பின்னர் இன்று வரைக்கும் தலிபான்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

உடன்படிக்கையை தலிபான்கள் முறித்துக் கொண்ட தகவலை காலம் தாழ்த்தாது அமெரிக்கத் தரப்புக்கு தெரிவித்தேன். அமெரிக்க வீரர் ரொபெர்ட்டின் மீள் வருகையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த  அமெரிக்கத் தரப்பு, ஆபியா நாடு திரும்புவதை பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவு விரும்பவில்லை எனும் காரணத்தைக் கேட்டதும் ஆச்சரியமடைந்தனர். எனினும் முயற்சியைக் கைவிடாத அமெரிக்கத் தரப்பு தமது நாட்டு இராணுவ வீரர் ரொபெர்ட்டின் விடுவிப்புக்கு பகரமாக உயர்மட்ட தலிபான் உறுப்பினர்கள் ஐவரை விடுதலை செய்வதாக மீளவும் அறிவித்தது.

இதனை ஏற்றுக் கொண்ட தலிபான்கள் அமெரிக்க வீரரை விடுவித்து தமது ஐந்து உறுப்பினர்களை அமெரிக்க சிறையிலிருந்து மீளப் பெற்றுக் கொண்டது. அந்த ஐவரும் கட்டாரில் தற்போது வசித்து வருகின்றனர்.

டாக்டர் ஆபியா சித்தீகி பாகிஸ்தானிய பிரஜையாக அன்றி, வேறு ஒரு நாட்டின் பிரஜையாக இருந்திருப்பின் இந்நேரத்திற்கு கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை மூலம் ஆபியாவிற்கு விடுதலை கிடைத்திருக்கும். பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவின் தலையீடுகளே இன்னும் அப்பெண்மணி சிறையில் வாடுவதற்கு காரணமாகிப் போயுள்ளது என்பதை நான் அறிந்து கொண்டேன்.

பாகிஸ்தானிய பொதுமக்கள் ஆபியாவை தேசத்தின் மகளாக கௌரவித்து, நினைவுகூர்ந்து அவரது விடுவிப்பு வேண்டி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் அதேவேளை பாகிஸ்தானிய அரசு ஆபியாவின் விடுவிப்பு குறித்து அமெரிக்காவுக்கு ஓர் உத்தியோகபூர்வ கோரிக்கையையேனும் விடுக்கவில்லை என்பது பலர் உள்ளங்களில் எழுந்து நிற்கும் வினாவாகும்.

ஜோர்ஜ் புஷ் ஆரம்பித்து வைத்த பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் தொடர்பில் பாகிஸ்தானிய தரப்பினரால் தேவைக்கென உபயோகிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ள கறிவேப்பிலையே டாக்டர் ஆபியா சித்தீகா.

ஆபியாவின் விடுதலை குறித்து அசமந்தமாக செயற்படும் பாகிஸ்தானிய உயர்மட்ட அதிகாரிகளுடன் அண்மைக்காலமாக நான் வாதம் புரிந்தே வருகிறேன். ஆபியாவின் மீள் வருகை தொடர்பில் உண்மையிலேயே பாகிஸ்தானிய முன்னாள் இந்நாள் பிரதமர்கள், ஜனாதிபதிகள் கரிசனை கொண்டிருப்பார்களாயின், அவர்கள் செய்திருக்க வேண்டியதோ வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொண்டு டாக்டர் ஷாகில் அப்ரிடி – டாக்டர் ஆபியா கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை முன்வைப்பதேயாகும்.

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒஸாமா பின்லேடனை உளவறிந்து அமெரிக்க உளவுத்துறைக்கு துப்பு வழங்கி, அமெரிக்கப் படையினரால் ஒசாமா கொல்லப்படுவதற்கு காரணமாக திகழ்ந்த குற்றத்தில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தானிய தடுப்புக் காவலில் இருப்பவரே டாக்டர் ஷாகில் அப்ரிடி.

பாகிஸ்தான் அப்பொத்தாபாத் நகரில் அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் குடும்ப சகிதமாக பதுங்கி வாழ்ந்து வந்த காலப்பகுதியில் தடுப்பூசி செயற்திட்டம் எனும் போலி முன்னெடுப்பின் மூலம் உளவறிந்த டாக்டர் ஷாகில் அப்ரிடி மீது தேச துரோக வழக்கு சுமத்தப்பட்டுள்ளது. எனினும், டாக்டர் ஷாகில் அப்ரிடியை பாகிஸ்தானிய சிறையிலிருந்து விடுவித்து அமெரிக்காவில் புகலிடம் வழங்க அமெரிக்க அரசு பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது வெகு சீக்கிரத்தில் நிகழும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஒசாமாவின் இருப்பிடம் குறித்து துப்பு வழங்கி தமக்கு உதவிய வகையில் பாகிஸ்தானிய பிரஜையான டாக்டர் ஷாகில் அப்ரிடியின் விடுவிப்பு தொடர்பில் அமெரிக்கா பாரிய கரிசனை கொண்டுள்ள அதேவேளை, தமது சொந்த நாட்டு பிரஜையான டாக்டர் ஆபியா சித்தீக்கா விடயத்தில் பாகிஸ்தானிய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதானது சர்வதேச முஸ்லிம் சமுதாயம் பாகிஸ்தானிய அரசை வெறுப்புடன் நோக்கப் போதுமானதாக அமைந்து விடுகின்றது.

 

-ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்

(மூலம்: Middle East Monitor).

எடிட்டோரியல்

error: Content is protected !!