Featured Category

டாக்டர். ஆபியா சித்தீகி: கபட நாடகத்தின் பலிகடா

மெரிக்க போர்ப் படை வீரர்களை கொலை செய்ய முயற்சித்தார், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற போலிக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டவர் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பெண் மருத்துவர் ஆபியா சித்தீகி. சிறையில் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் ஆபியா சித்தீகி சிறையிலேயே மரணமடைந்தார் என்ற வதந்தி கடந்த மே 20ஆம் தேதி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி, ஆபியா சித்தீகிக்கு தங்களது அனுதாபத்தையும், அமெரிக்காவின் அராஜகப் போக்கிற்கு தங்களது கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
ஆனால் ஆபியா சித்தீகியின் மரணம் தொடர்பான செய்தி எந்த செய்தி ஊடகத்திலும் வெளிவரவில்லை. அவரது குடும்பமும் மரணத்தை உறுதி செய்யவில்லை. இந்நிலையில் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆயிஷா பாரூகி ஆபியா சித்தீகி அடைக்கப்பட்டிருந்த டெக்ஸாஸ் சிறைக்குச் சென்று அவர் மரணிக்கவில்லை என்பதை உறுதிசெய்தார். இதன் பின்னரே வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தாலிபான் பிடியில் சிக்கி பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிரிட்டிஷ் பெண் பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி சமீபத்தில் ஆபியா சித்தீகி பற்றி எழுதிய கட்டுரை பல திடுக்கிடும் தகவல்களைத் தாங்கி வந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஆபியா சித்தீகிக்காக பிரார்த்தித்துக் கொண்டும், அவரது விடுதலைக்காகப் போராடிக் கொண்டும் இருக்கும் நேரத்தில் அவரது சொந்த நாட்டின் உளவுத் துறையே ஆபியாவின் விடுதலைக்கு எதிராகவும், முட்டுக் கட்டையாகவும் இருக்கும் செய்தி அனைவரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

யார் இந்த ஆபியா சித்தீகி?

02-03-1972 அன்று பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்த ஆபியா சித்தீகியின் தந்தை முஹம்மது சலாய் சித்தீகி இங்கிலாந்தில் மருத்துவம் பயின்றவர். தாய் இஸ்மத் சமூகப் பணிகளில் பெரிதும் நாட்டம் கொண்டவர். மார்க்கத்தை கற்றுத் தரும் ஆசிரியையாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அவரது மூத்த சகோதரியும் மருத்துவர் ஆவார். 1990ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த ஆபியா மாஸ்சூசெட்ஸ் நிறுவனத்தில் உயிரியல் பட்டப் படிப்பில் சேர்ந்தார்.  பட்டப்படிப்பிற்குப் பின்பு 2001ஆம் ஆண்டு பிராண்டைஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று நரம்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். டாக்டர் பட்டத்திற்குப் பின் சினாய் மருத்துவமனை பணியில் சேர்ந்தார். ஜோன் ஹோப்கிண்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மருத்துவப் பணியோடு பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது ஆய்விற்காக கரோல் வில்ஸன் விருதும் பெற்றார்.

நரம்பியல் தொடர்பான அவரது புதிய கண்டுபிடிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. அவரது ஆய்வுகளில் ஒன்றான நரம்புகளை செயல் இழக்கச் செய்யும் ரசாயனம் பற்றிய ஆராய்ச்சியே ஆபியாவின் மீது அமெரிக்க உளவுத் துறையின் பார்வை விழ காரணமாக அமைந்தது. அவரது கண்டுபிடிப்புகள் யாவும் அமெரிக்காவைத் தாண்டி வெளியில் சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் அவரைக் கண்காணிக்கத் தொடங்கியது. இதற்கிடையில் ஆபியாவிற்குத் திருமணமாகி மூன்று குழந்தைகளும் பிறந்திருந்தனர். ஆபியாவின் கணவர் அம்ஜத் முஹம்மது கான் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார்.

அமெரிக்காவின் சதி:

2002ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் தனது சொந்த நாடான பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்ற ஆபியா 2003ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டார். கடத்தலுக்கும், தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது பாகிஸ்தான் தரப்பு வாதம். ஆனால் ஆபியாவைக் கடத்திய கும்பலில் பாகிஸ்தானியரும், அமெரிக்கர்களும் இருந்தனர் என்று கூறுகிறார் கடத்தலின் போது உடனிருந்த ஆபியாவின் மகன் அஹமது.

நரம்பியல் ஆராய்ச்சியில் பாகிஸ்தான் நாட்டின் அடையாளமாகக் கருதப்பட்ட ஆபியா சித்தீகா கடத்தப்பட்ட  செய்தி அறிந்த பாகிஸ்தான் மக்கள் அவர் என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? போன்ற தகவல்களைக் கேட்டு அரசிற்கு அழுத்தம் கொடுத்தனர். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் பாகிஸ்தான் அரசு மக்களின் கோரிக்கை எதற்கும் செவிசாய்க்கவில்லை. அமெரிக்காவுடனான கள்ள உறவே பாகிஸ்தான் அரசின் மௌனத்திற்குக் காரணமாக இருந்தது.

ஆபியாவிற்கு என்ன ஆயிற்றோ? என்று அவரது உறவினர்களும், மக்களும்  தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பக்ரம் சிறையில் Prisoner 650 என்ற பெயரில் பெண் ஒருவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக செய்தி வெளியானது. சிறைக் காவலர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டும், மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டும் அப்பெண் தனது சுயநினைவை இழந்துள்ளதாக வந்த செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதன் காரணமாக உலக மீடியாக்களின் பார்வை பக்ரம் சிறையை நோக்கித் திரும்பியது. சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் அப்பெண் ஆபியாதான் என்று பாகிஸ்தான் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பேட்டியளித்தார். பிரிட்டிஷ் மேலவை உறுப்பினராக இருந்த நஜீர் அஹமது சித்ரவதைக்கு ஆளாக்கப்படும் பெண் குறித்த கேள்வியை அவையில் எழுப்பினார்.

சொல்லொண்ணாத் துயரம்:

ஆபியா பக்ரம் சிறையில் அடைக்கப்பட்ட போது அது அவருக்கு சிறையாக அல்லாமல் வதைமுகாமாகவே இருந்தது. ஆபியா பெண்களுக்கான கழிவறையைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டார். ஆண்களின் கழிவறையில் ஆண்களின் முன்னிலையிலேயே தனது இயற்கை உபாதைகளைக் கழிக்க நிர்பந்திக்கப்பட்டார். இக்கொடுமையை கண்டு பொறுக்காத ஆண் கைதிகள் அவரை பெண்களின் சிறைக்கு மாற்றக் கோரி போராட்டம் நடத்தும் அளவிற்கு அவரின் மானத்தோடு விளையாடினர். முஆசெம் பெக் என்ற குவாண்டனாமோ சிறைவாசி தனது சிறை அனுபவங்களை நூலாக எழுதினார். குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக சுமார் ஒரு வருட காலம் தான் பக்ரம் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், சிறையில் தனது அறைக்கு பக்கத்து அறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணை பல ஆண் சிறைக் காவலர்கள் அடித்து துன்புறுத்துவதையும், வன்புணர்வுக்கு ஆளாக்குவதையும் கண்டும் மனம் நொந்துள்ளதாகவும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சித்ரவதை தாங்காமல் ஆபியா அழுது, புலம்புவதை சிறையில் இருந்த பலரும் கேட்டுள்ளனர். அவர் உண்ணும் உணவில் பிற கைதிகளை சிறுநீர் கழிக்க வைத்துள்ளனர். சிறையில் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி அவரது தாய் குறிப்பிடும்போது, ‘ஆபியா அடைக்கப்பட்டிருக்கும் அறைக்கு சிறைக்காவலர்கள் வந்து நிர்வாணப்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்குவார்கள். இரத்தம் கசிந்து ஓடும் அளவிற்கு துப்பாக்கியின் பின் புடியினால் மிக மோசமாகத் தாக்குவார்கள், நிர்வாணப்படுத்தப்பட்ட ஆபியாவை கட்டிலில் கை, கால்களைக் கட்டிப் போட்டு சொல்ல முடியாத அளவிற்கு தலையிலும், உடலிலும் தாக்கி சித்ரவதை செய்வார்கள். அவரது உடலில் ரசாயனத்தை ஊசியின் மூலமாகச் செலுத்துவார்கள். உடைகளை பலவந்தமாகக் களைந்து அவரின் தலை முடியைப் பிடித்து இழுத்து வதைப்பார்கள். அனைத்திற்கும் மேலாக புனித குர்ஆனை தரையில் வீசி, நிர்வாணப்படுத்தி அதன் மீது நடக்குமாறு வற்புறுத்துவார்கள். மறுக்கும் பட்சத்தில் கடுமையாக அடித்து துன்புறுத்துவார்கள்’. என்று குறிப்பிட்டுள்ளார். எதற்காக கைது செய்யப்பட்டோம் என்று தெரியாமலேயே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுக்கும், சொல்லொண்ணாத்  துயரத்திற்கும் ஆளாக்கப்பட்டார் ஆபியா சித்தீகி.

ஆபியாவின் நிலையை முதன் முதலில் வெளி உலகிற்குக் கொண்டு வந்தவர் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி. 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் செய்தி சேகரிப்பிற்காக ஆப்கானிஸ்தான் பக்ரம் சிறைக்குச் சென்ற யுவான்னி ரிட்லி ஒரு பெண்ணுக்கு அச்சிறையில் நடந்து கொண்டிருக்கும் கொடுமையைக் கண்டு மனம் பதறிப் போனார். உடனே பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி அக்கொடூரத்தை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். சித்ரவதை செய்யப்படும் பெண் ஆபியாதான் என்பது அப்போது அவருக்குத் தெரியாது.  யாரோ ஒரு பெண் என்ற மனிதாபிமான அடிப்படையில்தான் அவரை சிறையிலிருந்து விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

இதற்கிடையில் அமெரிக்கா பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆபியாவின் மீது இட்டுக்கட்டியது. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு, அமெரிக்க இரட்டைப் கோபுர தாக்குதல் திட்டத்திற்கு துணையாக இருந்தார், தாலிபான் அமைப்பிற்கு பல்வேறு வகைகளில் உதவினார் என அடுக்கடுக்கான பொய்க் குற்றச்சாட்டுகளை  ஆபியாவின் மீது சுமத்தியது. மே 2004 ஆம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான எஃபி.பி.ஐ தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியல் என்றொரு பட்டியலை வெளியிட்டது. அதில் இடம்பெற்றிருந்த ஏழு பேர்களில் ஆபியாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

அமெரிக்கச் சிறைக்கு மாற்றம்:

யுவான்னி ரிட்லியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பின் ஆபியா பற்றிய செய்திகள் ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறத் தொடங்கின. அவருக்கு ஆதரவான குரல்கள் வலுப்பெற்றன. ஆகவே அவரை அமெரிக்கச் சிறைக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை 2008ஆம் ஆண்டு அமெரிக்கா மேற்கொண்டது. அதற்காக வேண்டி, அமெரிக்க உளவுத்துறை  ஒரு நாடகத்தை அரங்கேற்றியது. இத்தனை ஆண்டுகளாக ஆபியா காணாமல் போனது போலவும், பக்ரம் சிறையில் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண் வேறு யாரோ ஒருவர் என்பது போலவும் நாடகமாடியது.

நாடகத்தின் படி, 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆபியாவை அவரது மூத்த மகனுடன் ஆப்கானிஸ்தானில் வைத்து கைது செய்தாகவும், அவரிடத்தில் ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான குறிப்புகள் இருந்ததும், ஆளில்லாத விமானங்களை வீழ்த்துவதற்கான தகவல்கள், உலகளாவிய தாக்குதல் திட்டத்திற்கான வரைபடங்கள் இருந்ததுமே அவரது கைதுக்கான காரணம் எனவும் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  மேலும் அமெரிக்க அதிகாரி ஒருவரை அவரது கைத்துப்பாக்கியைப் பறித்து சுட  முயற்சித்தார் எனவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஐந்து வருடங்களாக ஆபியா எங்கிருந்தார்? என்பது தமக்குத் தெரியாது எனவும் அமெரிக்க அரசு தெரிவித்தது.

ஆனால் ஆபியா சித்தீகி முதலில் பாகிஸ்தான் உளவுத் துறையால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார் என்றும், அமெரிக்க – பாகிஸ்தான் கூட்டுப் படைகளே அவரைக் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்துவிட்டு, காணாமல் போய்விட்டார் என்று நாடகமாடியதாகவும், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இது தெரியும் என்றும் பாகிஸ்தான் போலிஸ் அதிகாரியொருவர் கூறியிருக்கிறார். ஆக, ஆபியாவின் கைது மற்றும் சிறைக் கொடுமைகளுக்குப் பின்னால் அமெரிக்க, பாகிஸ்தானின் சதி இருப்பது தௌளத் தெளிவாகிறது.

86ஆண்டுகள் சிறைத் தண்டனை:

அமெரிக்கா கொண்டு செல்லப்படட ஆபியா நியூயார்க் மாஜிஸ்திரேட் முன்னிiயில் ஆஜர்படுத்தப்பட்டார். 36 வயதான ஆபியா சக்கர நாற்காலியில் அமர வைத்து கொண்டுவரப்பட்ட காட்சியைக் கண்டு அனைவரும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாயினர்.  சிறையில் அனுபவித்த சித்ரவதையின் காரணமாக அவரது தோற்றம் முழுவதுமாக மாறியிருந்தது. பற்கள் உடைந்திருந்தன. மிகவும் பலகீனமாக நிலையில் சுய நினைவை இழந்தவர் போல் காட்சியளித்தார். மூக்கு உடைக்கப்பட்டு உதடுகள் கிழிந்திருந்தன. உடலில் இருந்த காயங்களில் இரத்தம் உறைந்து காணப்பட்டன. சிறையில் இருந்த போது அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். இத்தனை பலகீனமான நிலையிலும் அருகில் இருந்தவரிடம் துணியை வாங்கி தனது தலையையும், கையில்லாத மேலாடையையும் மறைத்துக் கொண்ட நிகழ்வு நீதிமன்றத்தில் கூடியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அச்செயல் அவரது இறை நம்பிக்கைக்கும், இஸ்லாமிய உணர்விற்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது.

இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் இறுதியில்  பிப்ரவரி 2010 அன்று தீர்ப்பு  வழங்கப்பட்டது. தீர்ப்பில் ஆபியா சித்தீகிக்கு 86 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்குவதாக நியூயார்க் நீதிமன்றம் அறிவித்தது. ஆபியாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கராச்சி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இன்றுவரை போராட்டங்களும், அவரை விடுவிப்பதற்காக சட்ட ரீதியான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் எந்தவொரு முயற்சியும் பலன் அளிக்காத காரணத்தால் இன்றுவரை டெக்சாஸ் சிறையில் செய்யாத குற்றங்களுக்கு தண்டனையை அனுபவித்து வருகிறார்.

கபட நாடகம்:      

ஆபியா கைது செய்யப்பட்டு 15 வருடங்கள் கடந்து விட்ட நிலையில்  மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரும் ஆபியாவின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றனர். ஆயினும் பிரிட்டன் பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி ஆரம்பம் முதலே ஆபியாவின் விடுதலைக்காக தன்னால ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் ஆபியா சித்தீகி விஷயத்தில் தான் மௌனம் கலைய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், அமெரிக்க ஜனாதிபதியால் வழங்கப்படும் பொதுமன்னிப்பை ஆபியாவிற்கு பெற்றுத் தந்து அவரை விடுவிக்க தான் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கும் நேரத்தில் சில தீய சக்திகளின் தலையீட்டால் அம்முயற்சி தோல்வியுற்றதாக மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார். அவர் கூறும் தீய சக்திகள் யார் என்பதே அனைவரின் அதிர்ச்சிக்கும் காரணம்.

2013ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சென்றிந்த போது தாலிபான் உயர்மட்ட அதிகாரிகள் தன்னை அணுகியதாகவும், அமெரிக்க அரசு ஆபியாவை விடுவித்தால் தாங்கள் பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ள  அமெரிக்கப் படை வீரர் ரொபெர்ட் பெர்க்டாலை விடுவிக்க தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும், அதன் பின்னர் தான் அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது அவர்களும் கைதிகளின் விடுதலைப் பரிமாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் யுவான்னி ரிட்லி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் கைகூடி வரும் நேரத்தில் தாலிபான் தரப்பு திடீரென, ‘ஆபியாவை மீட்டுக் கொள்வதற்குப் பதிலாக வேறு யாரையேனும் மீட்டுக் கொள்ளலாம்’ என்று கூறிவிட்டார்களாம். காரணம் கேட்டபோது அவர்களிடமிருந்து சரியான பதில் ஏதும் வரவில்லை. மிகவும் வற்புறுத்திக் கேட்டபோது தாலிபான்கள் உண்மை நிலவரங்களைச் சொல்லியுள்ளனர். அமெரிக்கா, தாலிபான் இடையிலான கைதிகள் விடுதலைப் பரிமாற்ற ஒப்பந்தத்தை எப்படியோ அறிந்து கொண்ட பாகிஸ்தான் உளவுத் துறை தாலிபான்களை அணுகி, ‘ஆபியாவை மீட்கும் முயற்சியை கைவிட வேண்டும், அதையும் மீறி ஆபியா மீட்கப்பட்டு பாகிஸ்தான் திரும்பினால் அவரை இரண்டு நாட்களுக்குள் சுட்டுக் கொல்வோம்’ என்று பாகிஸ்தான் உளவுத் துறையினர் கூறியுள்ளனர். உளவுத்துறை அவ்வாறு கூறுவதற்குக் காரணம், ஆபியா விடுதலையானால் அது பாகிஸ்தான் உளவுத் துறையின் உயர் அதிகாரிகளுக்கு  பிரச்சனையாக  உருவெடுக்குமாம்.

ஆபியாவின் மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், ஆபியாவின் கைது நடவடிக்கை ஆகியவற்றின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத் துறையின் வஞ்சக நடவடிக்கைகள் இருந்திருக்கலாம் எனவும், ஆபியாவை தனது வஞ்சக நோக்கங்களுக்கு அவர் சொந்த நாட்டு உளவுத் துறையினரே பயன்படுத்தியிருக்கலாம் எனவும் தான் யூகிப்பதாக யுவான்னி  ரிட்லி தனது கட்டுரையில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளர். ஆபியா சித்தீகி பாகிஸ்தான் குடிமகளாக அல்லாமல் வேறு நாட்டின் குடிமகளாக இருந்திருந்தால் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் மூலம் என்றோ விடுவிக்கப்பட்டிருப்பார் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் மக்கள் ஆபியாவிற்காக ஆரம்பம் முதலே போராடிவரும் நேரத்தில், பாகிஸ்தான் அரசின் சார்பாக இதுவரை அமெரிக்காவிற்கு விடுதலை தொடர்பான ஒரு கோரிக்கைகூட வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதியின் முன்னால் யார் குற்றவாளிகள்?

குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட எந்தக் குற்றவாளியும் ஆபியா சித்தீகி அளவிற்கு சித்ரவதை செய்யப்பட்டு, பல்வேறு கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால் புனையப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, அநீதியான தீர்ப்பிற்கு ஆளாகி இன்றுவரை சிறையில் அணுஅணுவாய் செத்துக் கொண்டிருக்கும் ஆபியா விஷயத்தில் உண்மைக் குற்றவாளிகள் யார்  என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆபியாவிற்கு இழைக்கப்படும் கொடுமைகள் யாராலும் ஏற்றக்கொள்ள முடியாதவை. அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் ஏகாதபத்தியப் போக்கும், அதற்கு துணைபோகும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தன் சொந்த நாட்டு மக்களையே பலிகடாவாக்குவதுதான் வேதனையின் உச்சம். இவர்களின் சுயநலனுக்காக இன்னும் எத்தனை ஆபியா சித்தீகிகள் பலிகடா ஆக்கப்படுவார்களோ? நாமும் எத்தனை ஆபியா சித்தீகிகளை பலிகொடுக்கப் போகிறோமோ?

ராபியா குமாரன்.

Thanks- Samarasm Magazine

 

 

 

 

 

 

 

 

 

 

ராபியா குமாரன்

error: Content is protected !!