Featured Category

துருக்கியத் தேர்தல்களும் பதினொரு மத்ஹபுகளும்!

உலகளவில் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கின்ற நிகழ்வுகளில் அனைவரும் தத்தமது புரிதல்களிலிருந்தும், விளக்கத்திலிருந்தும் கருத்துச் சொல்வதென்பது சாதாரணமானது. அவ்வாறு கருத்துச் சொல்கின்ற உரிமையும் அனைவருக்குமுண்டு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் நடைபெற்று முடிந்த துருக்கியத் தேர்தல்கள் தொடர்பிலான பலதரப்பட்ட பார்வைகளின் தொகுப்பாக இப்பதிவை இட விரும்புகிறேன். இது நவரசங்களும் கருத்தில் கொள்ளப்பட்ட நிலையில் பிறந்த பதிவு என்பதைக் கருத்தில் கொள்க!
1. முஸ்லிம் உலகின் அவலங்களால் நியாயமான அளவு உளத் தாக்கங்களோடு இருப்பவர்கள்.

எர்டோகனின் கடந்த கால முன்னெடுப்புகள் பலவற்றை வைத்து அவரின் வெற்றியை இவர்கள் முஸ்லிம் உம்மத்தின் சோதனைகளுக்கான விடிவாக அடையாளப்படுத்துகின்றனர். ஆனால் அரசியலை அதன் எல்லைகளுக்கு வெளியே வைத்து உணர்வுபூர்வமாக வியாக்கியாணம் செய்வதில் இவர்கள் கைதேர்ந்தவர்களாவர். எர்டோகனின் ஆகர்ஷணம், ஜனவசியம் என்பவற்றால் எல்லை தாண்டிய செல்வாக்குக்குற்பட்டவர்களாக இவர்களை அடையாளப்படுத்தலாம்.

2. முஸ்லிம் உலகின் அரசியல் சீரழிவுதான் அதன் அவலங்களுக்குக் காரணம் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.

எர்டோகனின் வெற்றியை இவர்கள் முஸ்லிம் உலகின் அரசியல் எழுச்சியின் அடையாளமாகக் கருதி கொண்டாடுகிறார்கள். கருத்து வேற்றுமையும், தமக்கிடையே முரண்பாடுகளும் உள்ளவர்கள் கூட இந்த விடயத்தில் ஒன்று பட்டிருப்பதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. எர்டோகனின் அரசியல் ஆரம்பப் பள்ளி, அரசியல் நகர்வுகள், முன்னெடுப்புகள், அவரது ஆகர்ஷண ஆளுமை, அவரது பிராந்திய மற்றும் சர்வதேச உறவு தொடர்பான நிலைப்பாடுகள் என்பன இந்தக் கருத்தில் உள்ளவர்களது கொண்டாட்டங்களுக்குப் பின்னால் உள்ள காரணிகளாகும்.

3. உஸ்மானிய சாம்ராஜ்யம் துருக்கியில் மீண்டும் உயிர் பெறும், எர்டோகன் அதை சாதிப்பார் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள்.

இந்தத் தரப்பினர், துருக்கியத் தேர்தல்களையும் எர்டோகனின் வெற்றியையும் ஓர் ஆன்மீக விளக்கத்துக்கு உட்படுத்துகின்றனர். அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்தான விளக்கங்கள்,
ஆன்மீக ரீதியிலான தூண்டுதல்கள், ஆன்மீகச் சொல்லாடல்கள் என்பவற்றை தேர்தல் களம் சூடுபிடித்திருந்த காலத்திலிருந்து அவதானிக்க முடியுமாக இருந்தது. துருக்கிய ஸூஃபி பின்புலத்தின் தாக்கம் எர்டோகன் விடயத்திலான இவர்களது நிலைப்பாட்டில் அதிகம் தாக்கம் செலுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது.

4. உலகம் (யூத) இலுமினாட்டிகளின் கையில் இருக்கின்றது, அவர்களின் நாட்டத்தின் பிரகாரமே பூமி சுற்றுகிறது என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.

‘இன்ஷா அல்லாஹ்’ என்ற வார்த்தைக்குப் பகரமாக ‘இன்ஷாஅ இலுமினாட்டி’ என்று பாவிக்கின்ற இவர்கள், துஆ செய்து கொண்டிருப்பது மட்டும் தான் முஸ்லிமின் தலையாய பணி என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களாவர். இவர்களது கருத்தின் பிரகாரம் உலகின் வெற்றி தோல்விகள் யாவும் இலுமினாட்டிகளின் லவ்ஹுல் மஹ்ஃபூல் பிரகாரமே இடம் பெறுகின்றன. அந்தப் பலகையில் இல்மனைட்டால் தயாரிக்கப்பட்ட பேனை இவற்றை எழுதிய பின்னர், அது உயர்த்தப்பட்டு மையும் காய்ந்து விட்டதாக இவர்கள் நம்புகின்றனர். அந்த வகையில் Protocols of Zion மற்றும் இலுமினாட்டி கூட்டணியின் வேதத்தில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதன் பிரகாரம் உரிய தினத்தில் உரிய நேரத்தில் இலுமினாட்டிகளின் துருக்கியப் பிரதிநிதியான எர்டோகன் வெற்றி பெற்றிருக்கிறார். ‘இப்படியாக தம்மைப் போல் மைவெளிச்சம் பார்க்கக் கூடிய சக்தி ஏனைய முஸ்லிம்களுக்கு இல்லாததன் அவர்கள் அறியாமையில் எர்டோகனைக் கொண்டாடுகின்றனர்’ என இவர்கள் கருதுகின்றனர். தமது இந்த நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக, துருக்கிய இஸ்ரேலிய வியாபாரத் தொடர்புகளையும், எர்டோகனின் தேர்தல் பிரச்சாரமொன்றின் போது வீசிய காற்றால் அவரது கட்சியின் கொடி ஐந்து செக்கன்கள் அளவு நீளமான காலம் முக்கோண வடிவில் மடிந்திருந்ததையும் இவர்கள் முன்வைக்கின்றனர்.

5. ஹிஸ்புத் தஹ்ரீர்

கிலாஃபத் மீண்டும் வர வேண்டும் என்ற உளப்பூர்வமான ஆசை கொண்டவர்களாக இவர்களை அடையாளப்படுத்துவதில் தப்பிருக்காது. ஆனால் இவர்களது பிரச்சினை யாதெனில், கிலாஃபத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான நடைமுறை சாத்தியமான எந்தத் திட்டங்களும் இவர்களின் கைவசமிருப்பதாகத் தெரியவில்லை. மாற்றமாக முஸ்லிம் உலகின் பல்வேறு வகையான தளங்களில் தொழிற்படும் பலரையும், அவர்கள் இன்னும் கிலாஃபத்தைக் கொண்டுவரவில்லை என்று தூற்றுவதற்கான பல்வேறு திட்டங்கள் இவர்களிடம் இருக்கின்றன. அந்த வகையில் ‘எர்டோகனிடமும் கிலாஃபத்தைக் கொண்டு வருமாறு நாம் ஒரு மனுவை சமர்ப்பித்தோம், ஆனால் அதை அவர் கணக்கெடுக்கவில்லை, எனவே இவரெல்லாம் எப்படி ஒரு முஸ்லிமுக்கான தகுதியோடு இருக்க முடியும்?, ட்ரம்புக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை, 1989 தொடக்கம் 1993 வரை துருக்கியின் ஆட்சியாளராக இருந்த Liberal Secularist ஆன Turgul Ozal இடமும் போய் கிலாஃபத்தை மீளக் கொண்டு வருமாறு நாம் கோரிக்கை விடுத்தோம் (ஆக மொத்தத்தில், கோரிக்கைகளால் கிலாஃபத்தை மீளக் கொண்டுவர முனைப்புடன் செயற்படுகிறார்கள், ஒரு Liberal Secularistஐயும் விட்டு வைக்கவில்லை என்றால் பாருங்களேன்), அவர் எமது கோரிக்கையை கண்ணியப்படுத்தினார், எம்மைக் கைது செய்யவில்லை. ஆனால் எர்டோகன் எம்மவர்களைக் கைது செய்தார். கிலாஃபத்துக்காகப் போராடும் (அதாவது கோரிக்கை விடுக்கும்) ஹிஸ்புத் தஹ்ரீரினரைக் கைது செய்த ஒருவர் எப்படி முஸ்லிம்களின் ஆட்சியாளராக இருக்க முடியும்?, (அப்போ எர்டோகன் Liberal Secularistஆ அல்லது Islamistஆ? கன்ஃப்யூஸ் பண்றீங்களே!) ஏதோ வெற்றி பெற்று விட்டார், இன்னொரு ஐந்து வருடத்துக்கு உட்கார்ந்து தூற்றுவதற்கு ஆள் கிடைத்து விட்டார், பஞ்சாயத்து முடிஞ்சி, எல்லாரும் கலைஞ்சு போ, அரசியல்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கெல்லாம்? பிச்சுப்புடுவன் பிச்சு’ என்பதாக நீண்டு செல்கின்றன இவர்களின் செய்திகள்.

6. தீவிர இடதுசாரிகள்

வலது என்ற ஒன்று இருப்பதால்தான் தாம் இடதாக இருக்கிறோம் என்பது இவர்களில் பலருக்கு விளங்குவதில்லை. வலதும் வலது சார்ந்தவைகளும் இவர்களுக்கு இரத்தக் கொதிப்பை ஏற்படுத்துகின்ற அம்சங்களாகும். எனவே வலதை எதிர்ப்பதை தமது பிறவிக் கடனாக நினைத்து செய்து வருவார்கள். எர்டோகன் இடதாக இல்லாமலிருப்பதும், வலதோடு அவருக்குள்ள உடன்பாடுகளும் ‘எர்டோகன் உலகில் வாழ்வதற்கே தகுதியற்றவர், அரசியல் செய்வதற்கே தகுதியற்றவர்’ என்பது போன்று கற்பிதப்படுத்தும் தீவிர எதிர்ப்பிஸத்தை இவர்களுக்கு மத்தியில் விதைத்திருக்கின்றன. வலதை சார்ந்திருப்பவர்கள் யாவரும் பல்வேறு வித்தியாசமான அரசியல், பொருளாதார, அதே நேரம் புவியரசியல் காரணங்களுக்காக அந்தத் தெரிவை மேற்கொண்டிருப்பவர்கள் என்ற எளிய யதார்த்தத்தை இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அந்த வகையில் இவர்களின் பார்வையில் மோடியும், ட்ரம்பும், எர்டோகனும் எவ்வித வித்தியாசங்களும் கண்டு பிடிக்க முடியாத பிறவிகளாவர். உலகின் பிரச்சினைகளுக்கான தீர்வு வலதை வெட்டியெறிந்து விட்டு இடதை அனைவரும் கட்டியணைத்துக் கொள்வதாலேயே சாத்தியம் என்பதுதான் இவர்களுடைய நிலைப்பாடு. நடைமுறைச் சாத்தியமற்ற Imaginary Egalitarian Society ஒன்றை தெய்வீகத்தனமாக Glorify பண்ணி வைத்துக் கொண்டு அனைத்தையும் பார்ப்பதன் விளைவாகவே இந்நிலை தோற்றம் பெற்றிருக்கலாம்.

7. வளைகுடாவின் அரசியல் கண்ணாடிகளால் துருக்கியைப் பார்ப்பவர்கள்.

‘சவூதி ஓர் ‘இஸ்லாமிய தேசம்’ (இத்தனைக்குப் பிறகும்!) எனவே சவூதியின் நலனுக்கு மாற்றமான எதுவும் இஸ்லாத்துக்கெதிரானது’ என்ற ரீதியில் முஸ்லிம் உலக அரசியலை நோட்டம் விடுபவர்களே இந்தத் தரப்பினராவர். அந்த வகையில் கட்டாருக்கும் துருக்கிக்கும் உள்ள உறவு, சவூதியின் சர்வதேச உறவு தொடர்பான நிலைப்பாடுகளில் துருக்கிக்குள்ள உடன்பாடின்மைகள் என்பன துருக்கியைப் பற்றிய இவர்களது நிலைப்பாடுகளில் செல்வாக்குச் செலுத்துகின்ற முக்கியமான காரணிகளாகும். எனவே மன்னராட்சி எனும் ‘அற்புதமான ஜனநாயகத்தை’ப் பற்றி பேச முடியாத நிலையில் இருந்து கொண்டு, துருக்கியின் தியேட்டர்களில் உள்ள கதிரைகளை எண்ணி அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்கள். அரசியல் மாற்றங்கள், பிராந்திய வலுச்சமநிலை, நவீன உலக ஒழுங்கின் இயல்புகள் பற்றியெல்லாம் இவர்கள் அலட்டிக் கொள்வதில்லை என்று கூட சொல்வது பொருத்தமில்லை. ஏனெனில் அவ்வாறான விடயங்கள் இருப்பது பற்றிக் கூட இவர்களுக்குத் தெரியாது. சர்வம் சவூதி!

8. எங்கே இருக்கின்றது என்று தெரியாத ‘இஸ்லாமிய தேசத்தின்’ கௌரவ அங்கத்தவர்கள்.

கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை அப்படியொரு பெயரில் ஒரு பறக்கும் தட்டு சுற்றிக் கொண்டிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சில காலங்களுக்கு முன்பு அந்தப் பறக்கும் தட்டு தடயமின்றி மறைந்து போய்விட்டது. ஆனால் அதில் வந்திறங்கியதாக நம்பப்படும் சில அபூர்வ பிறவிகள் இப்பிரதேசங்களிலும் சுற்றித் திரிகின்றன. ஒருவகையான கொலை வெறியோடு நடமாடும் இவர்களுக்கு எர்டோகனுடன் ஆலமுல் அர்வாஹிலிருந்தே ஏதும் பிரச்சினைகள் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. எர்டோகனின் போட்டோக்களுக்கு பயில்வான்தனமான அகமிய விளக்கங்கள் வழங்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். இவர்களுக்கும் ஹிஸ்புத் தஹ்ரீரினருக்கும் ஜென்மப் பகை இருந்தாலும் கூட, போட்டோக்களுக்கான அகமிய விளக்கங்கள் வழங்கும் விடயத்தில் இரு தரப்பினரும் ஒரே மத்ஹபையே பின்பற்றுகின்றமை பலரும் அவதானிக்கத் தவறிய முக்கிய அம்சமாகும். இந்தக் குறிப்பிட்ட (போட்டோ) கிளையம்சத்தில் இன்னும் பல மத்ஹபினரும் இதே நிலைப்பாட்டில் (பெரும்பாலும் ஃபிக்ஹில் வித்தியாசமான பல மத்ஹபுகள் ஏகோபித்து உடன்பட்ட ஒரே கிளையம்சம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்!) இருக்கின்றமை சந்தோஷத்துக்குரிய விடயமாகும். மேற்குறிப்பிட்ட பறக்கும் தட்டானது சந்தேகத்துக்கிடமான முறையில் துருக்கி எல்லைக்குள் நுழைய முற்பட்ட போது அசிங்கப்பட்டதிலிருந்து இவர்கள் துருக்கியின் மீது கடும் காண்டில் உள்ளனர்.

9. ‘உள்நாட்டு மற்றும் உள்வீட்டு விவகாரங்களில் கவனமும் சிரத்தையும் இருப்பதன் அடையாளம் சர்வதேச விவகாரங்களைப் பற்றி எழுதாமலும் பேசாமலும் இருப்பதே’ என்ற மத்ஹபில் இருப்பவர்கள்.

இவர்களுக்கு எர்டோகனுடனோ, துருக்கியுடனோ பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால் வீட்டின் எல்லைக்கு வெளியே நாட்டில் நடப்பதை யாரும் எழுதினால் அல்லது பேசினால், அவர்களை உள்வீட்டு விவகாரங்களில் கரிசனையற்றவர்களாகவும், அவ்வாறே நாட்டின் எல்லைக்கு வெளியே சர்வதேசத்தில் நடக்கின்ற விவகாரங்கள் பற்றி யாரும் எழுதினால் பேசினால் உடனே ஆஜராகி அவர்களை தேச விவகாரங்களில் கரிசனையற்றவர்களாகவும் அடையாளப்படுத்துவதில் இவர்களுக்கு ஒரு தனியான இன்பம் இருக்கின்றது.

10. மீம்ஸ் வல்லுனர்கள் மற்றும் தனியான உள்நாட்டுப் பிறையினர்.

இவர்கள் இந்த அத்தனை மத்ஹபுகளோடும் ஒப்பிடும் போது பரிதாபகரமான நிலையில் இருக்கும் பாவப்பட்ட மத்ஹபினராவர். சமூக வலைத்தளங்களின் ட்ரெண்டை வைத்து ‘நீ புடுங்குற ஆணியெல்லாம் தேவைல்லாத ஆணிதான்’ பாணியில் ஆப்பஸிஷன் மைன்ட் செட்டுடன் கருத்தாய்ப் பேசுபவர்களாக இந்த மத்ஹபினரை அடையாளப்படுத்தலாம். கிடைக்கும் தலைப்புகளையெல்லாம் வைத்து Popularity Contest செய்வதில் அதிக கரிசனை எடுத்துக் கொள்வார்கள். End of the day இவர்களுக்கு எர்டோகனும் முக்கியமில்லை, வடகொரியாவும் முக்கியமில்லை. ஆனால் அட்டென்டன்ஸ் ரொம்ம்ம்ம்ப முக்கியம் என்பதை ஞாபகத்தில் கொள்ளவும்.

இவை போக பதினோராவது மத்ஹபொன்றும் இருக்கின்றது. இந்த கருத்துவேறுபாட்டுக்குரிய அம்சத்தை, மார்க்க, ஆன்மீக, உணர்ச்சித் தட்டுகளில் வைத்து நிறுக்காமல் அரசியல் சமன்பாடுகளால் அளவிடும் மத்ஹபினரே அவர்கள்.

அப்பான் அப்துல்ஹலீம்

error: Content is protected !!