Featured Category

ஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர்

1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி இலங்கை நாட்டில் தனது தாயாரின் ஊரான மாத்தறையில் பிறந்தார் இர்பான். பிறப்பு முதல் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்கும் வரைக்கும் மாத்தறையில் வசித்துவிட்டு, பிறகு, தனது வாப்பாவின் பிறந்த ஊரான தர்கா நகருக்கு வந்து குடியேறினர்.“தர்கா நகர் ஸாஹிறா கல்லூரியில் தான் நான் கல்வி கற்றேன். பாடசாலைக்கு நடந்து செல்வதில் சிரமங்கள் இருந்தன. இரண்டாம் வகுப்பு வரை நடந்து சென்றேன் ஆனால் பிறகு எனது நாநா(சகோதரர்) தான் என்னை சைக்கிளில் கூட்டிச் சென்றார்.
ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய பின்பு ஆகஸ்ட் விடுமுறை முடிந்ததும் பாடசாலை செல்ல முடியவில்லை. அடிக்கடி கீழே விழுவதும் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல முடியாத பல சிக்கல்கள் இருந்தன. ஐந்தாம் வகுப்புக் கல்வியுடன் பாடசாலை வாழ்க்கை முற்றுப் பெற்றது. வகுப்பில் பாடங்களில் நான் எனது ஏனைய சகோதரர்களைப் போன்று திறமை காட்டவில்லை. பாடசாலைக் கல்வி ஐந்தாம் வகுப்புடன் முடிந்ததும் எனக்கு வீட்டிலே இருப்பது பெரிய சந்தோசத்தைத் தந்தது. பாடசாலை செல்வதிலும், வகுப்பறையில் கூட நடமாட முடியாத நிலை காரணமாக வீட்டில் இருக்க கிடைத்தது மனதிற்கு பெரிய ஆறுலாய் இருந்தது.” என்கின்றார் எழுத்தாளர் இர்பான்.

இர்பானுக்குநேர்ந்தது என்ன? என்னநோய் அவரை பாதித்தது?

Parent Project Muscular Dystrophy டுஷேன் மஸ்கியுலர் டிஸ்ட்ரோபி என்பது ஆண் பிள்ளைகளில் ஏற்படக்கூடிய உயிராபத்தை ஏற்படுத்தும் ஓர் தசைச்சிதைவு நோயாகும். இந்நோய் பிறக்கும் ஆண் குழந்தைகளில் சாராசரியாக 3500 பேரில் ஒருவருக்கு ஏற்படுவதாகக் அறியப்பட்டுள்ளது. (இது பற்றி முதன்முதலில் விவரித்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கிளோம் டுஷேன் என்ற நரம்பு நோய் நிபுணரின் பெயரிலேயே இந்நோய் அழைக்கப்படுகிறது)தசைகளின் வளர்ச்சிக்குத் தேவையான டிஸ்ட்ரோபின் எனப்படும் புரோட்டீன் உருவாக்கத்தில் ஏற்படும் தவறு காரணமாக இந்நோய் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தநோயால் பாதிக்கப்பட்டவரே சகோதரர் இர்பான் ஹாபிஸ்.

இலங்கையில் இது போன்ற 600-700 நோயாளர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.பெரும்பாலும் இப்பிள்ளைகள் பிறக்கும் போது சாதாரண பிள்ளைகள் போல் தோன்றக்கூடும். எனினும், 4 வயதாகும் போது நடத்தல், படிக்கட்டுகளில் ஏறுதல், ஓடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது சிரமத்தைத் தர ஆரம்பிக்கும். 7-8 வயதை அடையும் போது எந்தவிதக் காரணமுமின்றி அவர்கள் கீழே விழ ஆரம்பிப்பர்.

11-14 இடைப்பட்ட வயதை அடையும் போது நடப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமான விடயமாக மாறிவிடுவதால் இப்பிள்ளைகள் நாற்காலிக்கு அல்லது சக்கர நாற்காலிக்கு மாறுவர். 16-17 வயதாகும் போது முள்ளந்தண்டெலும்பு வளைய ஆரம்பிப்பதாலும் மார்புத் தசைகள் பலவீனமடையத் தொடங்குவதாலும் சுவாசித்தல் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படும். நுரையீரல் சரியான முறையில் வளியால் நிரப்பப்படாத காரணத்தால் தடுமல் போன்ற சிறு நோய்களும் இலகுவில் நியுமோனியாவாக மாறி உயிராபத்து ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.

இதயத்தசைகள் பலவீனமடைவதால் இருதயக் கோளாறுகளும் ஏற்படலாம். டுஷேன் நோயாளிகளில் பெரும்பாலானோர் இறப்பது நியுமோனியா அல்லது இருதயக் கோளாறு காரணமாகவாகும்.இந்நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் எதுவுமில்லை. எனினும், இது தொடர்பான ஆராய்ச்சிகள் பாரிய அளவில் வெற்றியைத் தந்து வருகின்றன. தற்போது Ataluran எனும் பெயரில் ஒரு மருந்து ஐரோப்பாவின் EMA எனும் மருந்துகள் அதிகார சபையின் அனுமதியைப் பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் அது சந்தைக்கு வரக்கூடும். Nonsense mutation வகை பரம்பரையலகு விகாரம் காரணமாக ஏற்படும் டுஷேன் நோய்க்கு இம்மருந்து மூலம் குணம் கிடைக்க வேண்டும் இறைவன் அருளால்.

இத்தனை ஆபத்தான நிலையில் இருக்கும்
இர்பான் இதோ பேசுகின்றார்.

“என் வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பாக்கியம் எனது பெற்றோர்.. அவர்கள் இருவரினதும் தியாகம், அளவிலா பாசம் என்னை இன்று வரைக்கும் உயிர் வாழச் செய்துள்ளன. எனது தாயாரின் தியாகம் நிகரற்றது. நான் பிறந்த நாள் முதல் உம்மா அவருடைய இறுதி நாள் வரைக்கும் ஒரு சிறு குழந்தைக்கு எப்படியெல்லால் அரவணைப்பு செய்யப்படுமோ அதே அரவணைப்பை எனக்கும் செய்துகொண்டே இருந்தார். உம்மா இல்லாத உலகை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. வாப்பாவின் செல்வாக்கு எனது அறிவு வளர்ச்சியிலும், ஆத்மீக வளர்ச்சியிலும் இருந்தது. என்னுடைய நோயைப் பற்றிய அறிவும் தெளிவும் இலங்கையில் இந் நோயால் பாதிக்கப்பட்ட வேறெந்த பிள்ளைகளின் பெற்றோரிடத்திலும் இருக்க முடியாது. மிக உயர் தரங்களை அடைந்திருக்கக் கூடிய தனது அதிபர் பதவியைத் துறந்து எனக்காக ஓய்வு பெற்றுக்கொண்டார் எனது தந்தை. எனது வைத்தியரும் எனது தந்தை தான். கிட்டத்தட்ட கடந்த இருபது வருடங்களாக ஒரு வைத்தியரைக்கூட நான் கண்டதில்லை. உம்மாவின் திடீர் மறைவுக்குப் பிறகு என்னைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்று செய்து வருகிறார்.”

மேலும் இர்பான் கூறுகையில்.. “பாடசாலைக் கல்வி இடையில் விடுபட்டதும் எனக்கு ஆங்கில மொழியில் பேசக் கற்க வேண்டும் என்ற ஆசை மனதில் உதித்தது. எனது வாப்பாவின் மூத்த தம்பியின் பிள்ளைகள் ஆங்கில மொழியில் தான் கல்வி கற்று வந்தார்கள். அவர்களுக்கு தமிழ் தெரியாமலிருந்தமையும் எனக்கு ஆங்கிலம் தெரியாமலிருந்தமையும் அவர்களோடு பேசி உறவாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இது என் மனதைப் பெரிதும் பாதித்தது. எப்படியாவது ஆங்கில மொழியைக் கற்று அவர்களுடன் ஒரு நாளைக்கு பேசுவேன் என்று உறுதி பூண்டேன். ஆங்கிலம் படிப்பதை பெரும் சவாலாகக் கருதி எனக்கு நானே ஆசானானேன். எனது தனி முயற்சியால் அச்சவாலை வெற்றிகொண்டேன். எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே!

2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் முதன் முதலில் எழுத ஆரம்பித்தேன். பேஸ்புக் வாயிலாக Iiwords எனும் இளம் எழுத்தாளர்களுக்கான பக்கத்தில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிப் பதிவேற்றினேன். அதில் சந்தித்த நண்பர்களின் ஊக்குவிப்பே எனக்கு எழுதத் தூண்டியது.

2012 ஆம் வருடம் பெப்ரவரி 19ஆம் திகதி எனது முதலாவது வெளியீடாக Silent Struggle என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு வெளியிடப் பட்டது. அமோக வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்தன. இரண்டாம் வெளியீடாக Moments Of Merriment சிறுவர்களுக்கான கதைகள் அடங்கிய புத்தகம் 2014ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி வெளியிட்டேன். 2016 ஜூலை 10ஆம் திகதி மூன்றாவது புத்தகம் Silent Thoughts வெளியாகியது. இந்த புத்தகம் எனது தனிப்பட்ட சிந்தனைகளையும், வாழ்க்கை அனுபவங்களையும், எனது பெற்றோரிடம் இருந்து பெற்ற வாழ்க்கைப் பாடங்களையும் வைத்து எழுதப்பட்டது.

கண்ணீரை பாய்ச்சும் வாழ்க்கைப் பாடங்கள் அடங்கிய Silent Thoughts நூல் விமர்சனங்கள் முகநூலில்ஒரு குறிப்பிட்ட காலத்தில் அமோக வரவேற்பை பெற்றிருந்தன. சகோ. இர்பான் ஹாபிஸ் குறித்து நான் தேட ஆரம்பித்த புள்ளி அதுதான்.

“என் கை விரல்களை மட்டுமே என்னால் அசைக்க முடியும். முதல் இரண்டு நூல்களும் எனது மடிக்கணினியில் ஒன்ஸ்க்றீன் கீபோர்ட் உதவியுடன் மெளஸால் ஒவ்வொரு எழுத்தாக கிளிக் செய்வதன் மூலம் டைப் பண்ணினேன். மூன்றாவது நூலை எழுதும் போது என் விரல்களால் மெளஸை பயன்படுத்த முடியாமல் போயிருந்தது.
ஆகவே எனது ஐபோனில் தான் Silent Thoughts முழுதையும் டைப் செய்தேன்.”

“வாழ்க்கை என்பது ஒரு சோதனைக் களம். சோதனைகள் பல விதமானவை.அவைகளை எவ்வாறு ஒருவர் நோக்குகிறார் என்பதே முக்கியமானது. இறை நம்பிக்கையும் மன பலமும் சோதனைகளைச் சாதனைகளாக ஆக்கிக்கொள்ள உதவுமென திடமாக நம்புகிறேன். சாதித்த மனிதர்களைப் பார்த்து எங்களால் அப்படி முடியவில்லையே என நினைத்து மனம் வாடிப் போகாமல் அவர்களின் வாழ்வினிலிருந்து எமது வெற்றிக்கு சாதகமான விடயங்களை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். பெற்றோரை என்றும் மதிப்பவர்களாகவும் அவர்களின் அன்பைப் பெற்றவர்களாகவும் இருப்பின் இறைவன் என்றும் உங்களைக் கைவிட மாட்டான்.” என்கின்றார் உற்சாக நாயகன்.

இறுதியாக… “இன்று வரைக்கும் இன்னொரு நூல் எழுதுவதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆங்கிலத்தில் சிறுகதை எழுதி பேஸ்புக்கில் பதிவிடுவதில் ஆர்வமாய் உள்ளேன். இரண்டு கதைகள் எழுதினேன். இன்னும் எழுத உத்தேசித்துள்ளேன். தமிழிலும் கவிதை போன்று எழுத முயற்சித்து எழுதியும் உள்ளேன்.அல்லாஹ்வின் அருள் எனக்கு அதிகமாகவே கிடைத்திருக்கிறது என்று சொல்வதில் என் மனம் குளிர்ச்சியடைகிறது. பெற்றோர்களின் தியாகம், சகோதரர்களின் பாசம், உறவினர்களின் உற்சாக வார்த்தைகள், நண்பர்களில் முக்கியமாக பேஸ்புக் நண்பர்களின் உந்துதல் என்பன நான் பெற்ற அருட்கொடைகளாகும்.” என்று சொல்லி முடிக்கின்றார் எழுத்தாளர் இர்பான் ஹாபிஸ்….

 

ஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர் இர்பான் ஹபீஸ்

25 -07 -2018 அன்று இறை அழைப்பை ஏற்றார்.

அனஸ் அப்பாஸ் ,

போர்செய்யும் பேனாக்கள் குழுமம்

அனஸ் அப்பாஸ்

error: Content is protected !!