Featured Category

அவ்ரங்காபாத் கலவரம் – ஸ்பெஷல் ரிப்போர்ட்!

“எந்தவொரு கலவரம் தொடர்ந்து 4மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெறுகிறதோ அக்கலவரத்தை அம்மாநில அரசுதான் முழுவதுமாக இயக்குகிறது.” என்றார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஸ் மந்தீர் அவர்கள். ஹர்ஸ் அவர்கள் கூறியதுதான் உன்மை. சிறுபான்மையினர் மற்றும் தலித்கள் மீதான நாட்டில் நடைபெற்ற கலவரங்கள் அனைத்தும் தொடர்ந்து 4மணி நேரத்திற்கு அதிகமாகவே நடைபெற்றிருகிறது. 2002இல் நடைப்பெற்ற குஜராத் இனசுத்திகரிப்பாக இருக்கட்டும், 2012இல் நடைபெற்ற முஷாபர்நகர் கலவரமாக இருக்கட்டும், சமீபத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடாக இருக்கட்டும் அனைத்தும் ஆக சிறந்த உதரணங்கள்.
இருவேறு பிரிவினருக்கிடையே நடைப்பெறும் சண்டை மற்றும் தாக்குதல்கள் எப்போதும் அதிக நேரம் நீடிப்பத்தில்லை, எதோவொரு தரப்பு சண்டையை நிறுத்திக்கொள்ளும் அல்லது சண்டையின் உக்கிரம் குறைந்து தானாகவே நின்று போகும். ஆனால் திட்டமிட்டு நடைபெறும் கலவரங்கள் தான் எந்த தடையும் இன்றி தொடர்ந்து நடைபெறும். இது மிகப்பெரிய அளவிற்கு நடத்த அந்த மாநில அரசின் உதவிகள் மிகவும் முக்கியம். ஆகையால் தான் குறிபிட்ட சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட அனைத்து கலவரத்திலும் ஆளும் மாநில அரசின் உதவிகரங்கள் இருப்பது விசாரணையில் வெளிவந்துள்ளது.

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நிறைவு விழாவை பாஜக நாடு முழுவதும் நடத்தி வருகிறது.நாட்டின் பொருளாதாரம், அரசியலமைப்பு, மதசார்பின்மை, சமூக நீதி, அமைதி என்று எல்லாவற்றின் மீதும் ஆளும் பாஜக அரசு படுகொலையை நடத்தி நாட்டை அகல பாதளத்திற்கு போய் தள்ளிவிட்டது. குறிப்பாக பாஜக ஆட்சியில் தான் சிறுபான்மை மற்றும் தலித்கள் மீதான கலவரங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதுதான் கடைசி என்று நம்மால் குறிப்பிட முடியாத அளவிற்கு நாட்டில் அங்காங்கே கலவரங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இந்த அனைத்து கலவரத்தின் பின் ஏதோவொரு வடிவத்தில் இந்துத்துவ அமைப்பினர் இருந்து வருகின்றனர். அப்படி நாட்டின் வர்த்தக தலைநகரம் என்றழைக்கப்படும் மும்பைக்கு 350கி.மி. தொலைவில் உள்ள அவ்ரங்கபாத் என்ற வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் திட்டமிட்ட கலவரத்தை கடந்த மே மாதம் நடத்தியுள்ளனர்.

புத்த மதத்தின் அடையாளமான அஜந்தா-எல்லோர குகை, முகலாய அடையாளமான பிபி கா மக்பாரா மற்றும் இந்துக்களின் புராதன கோயில் கிரிஹ்நேஷ்வர் கோயில் இங்கு தான் உள்ளது. மதங்களிடையே எந்த பிரச்சனையும் இல்லாத சமாதான பகுதியாக விளங்கிய பகுதியில் தான் இந்துத்துவ அமைப்பினர் கலவரத்தை நடத்தியுள்ளனர்.

மே மாதம் 9 அன்றுமொடி கரஞ்சி பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வழிபட்டு தளத்தின் குடிநீர் இணைப்பு சட்டவிரோதமானது என்று கூறி அந்த பகுதி நகராட்சி ஆணையம் இணைப்பை துண்டித்தது. இது திட்டமிட்டே நடத்தப்பட்டது என்ற கருத்து அங்கு பரப்பட்ட நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு பிற சமூகத்தினருக்கும் இடையே சண்டை மூண்டது. இச்சண்டை பிறகு சுமூகமாக பேசி களையப்பட்ட நிலையில் இரு சமூக மக்களும் இணக்கமாக போய்விட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு கலவரத்தை நடத்த இந்துத்துவ அமைப்பினர் திட்டமிட்டனர். இதற்காக தீவர திட்டமிட்டு ஒரு கட்டமைக்கப்பட்ட கலவரத்தை நடத்த தொடங்கினர். மே 11 அன்று இரவு மொடி கரஞ்சி, ஷஹகனி, நவாப்புரா, ராஜாபஜார், குல்மந்தி என்று அவ்ரங்கபாத் முழுவதும் கலவரக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான பெட்ரோல், மண்ணெண்ணெய், கற்கள், துப்பாக்கிகள், கூர்மையான ஆயுதங்கள் அங்காங்கே குவித்து வைக்கபட்டது. இந்த கலவரத்தை ஒருங்கிணைத்த சிவசேனா அன்றிரவு 11 மணிக்கு மொடி கரஞ்சி, ஷஹகனி, நவாப்புரா, ராஜாபஜார், குல்மந்தி பகுதிகளில் மின்சார இணைப்பை துண்டித்தது. பல மின் மாற்றி தாக்கி உடைக்கபட்டன. அந்த பகுதியில் இருந்த CCTV கேமராக்கள் அணைக்கப்பட்டன. இப்படி எந்த ஆதாரமும் கிடைத்து விடகூடாது என்று சிவசேனா கண்டிப்பாக இருந்தது.

மேல் குறிபிட்ட பகுதிக்குள் சென்ற கலவரக்காரர்கள் அங்கிருந்த வீடுகள், கடைகள், தளங்கள் என்று அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். கலவரத்தின் போது இந்துக்கள் பாதிப்படைய கூடாது என்று முன்பே மே 7 அன்று இந்து கடை வியாபாரிகளுக்கு சில நாட்கள் கடைகளை மூட சிவசேனா எச்சரிக்கை விடுத்தது. இருந்தபோதிலும் இந்து கடை வியாபாரிகள் அச்சாமல் முஸ்லிம் கடை வியாபாரிகளோடு சேர்ந்து காவல்நிலையம் சென்று மிரட்டல் விடுத்த சிவசேனாவின் லக்ஷிமி நாராயணன் பக்ரிய எனப்படும் லச்சு பஹெல்வான் மற்றும் அவனது கூட்டாளிகள்மீது புகார் அளித்தனர். இருந்தபோதும் காவல்துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மே 11 நள்ளிரவு தொடங்கப்பட்ட அந்த கலவரம் முழு இரவும் தொடர்ந்து நடைபெற்றது. காலை 10 மணி வரை நீடித்த கலவரம் மிகப்பெரிய சேதத்தை முஸ்லிம் தரப்பிற்கு ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள் சொத்துக்களும் சேதமடைந்துள்ளது. பெரும்பாலான CCTV கேமிராக்கள் அனைக்கபட்டபோதும் வீடுகளில் இருந்த, வணிக தளத்தில் இருந்த தனியாருக்கு சொந்தமான கேமிராக்களில் பதிவான வீடியோவில் கலவரம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு  நடத்தப்பட்டது என்பது தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் கலவரத்தில் சிவசேனாவின் முக்கிய தலைவர்கள் நேரடியாக களமிறங்கிருந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர காந்த் கைரே பல வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளார்.

மேலும் கலவரத்தில் கலந்துக்கொண்ட முன்னணி சிவசேனா தலைவர்களின் மகன்களை வழக்கில் இருந்து காப்பற்ற சந்திர காந்த் முயற்சித்தும் வருகிறார். இளம் தலைமுறை கலவரக்காரர்களை சிவசேனா இக்கலவரத்தில் களமிறக்கி அவர்களுக்கு கலவரங்களை எவ்வாறு நடத்திட வேண்டும் என்று பயிற்சி அளித்ததுப் போல் இக்கலவரத்தில் சிவசேனாவின் தலைவர்கள் மகன்கள் பங்கெடுத்தனர்.

இக்கலவரத்தின் கருவாக சொல்லப்படும் சட்ட விரோத குடிநீர் இணைப்பு என்பது இந்துத்துவ அமைப்பினரால் உருவாக்கப்பட காரணம். அவ்ரங்கபாத்தில் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான இணைப்புகள் இதுபோன்று இருக்கிறது. கிரந்தி சௌக் – ஷஹகனி பகுதிக்கிடையே மட்டும் சுமார் 35,000 குடிநீர் இணைப்புகள் இதுபோன்று இருக்கிறது என்று பரவலாக அப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது ஆனால் அங்கெல்லாம் துண்டிப்பு நடவடிக்கையை எடுக்காமல் மொடி கரஞ்சியில் மட்டும் துண்டிப்பு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அதுவும் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டு தளம் என்று குடிநீர் இணைத்து துண்டிக்கபட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்களின் கோபத்தை உண்டாக்கி அவர்களை உணர்ச்சி வசபட்டு சண்டையில் ஈடுபட வைக்க இந்துத்துவ அமைப்பினர் திட்டமிட்டனர். அதுபோலவே நடந்தது. ஆனால் இந்துத்துவ அமையபினர் எதிர்பார்த்த அளவிற்கு நடைபெறவில்லை.

அதேபோன்று இதற்கு முன்பு முஸ்லிம் பழ வியாபாரியான ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறை பயன்படுத்தி லச்சு பெஹெல்வான் உறவினர் ஒருத்தன் முஸ்லிம் பழ வியாபாரியை 10க்கும் குறைவான அடியாட்களை அழைத்து வந்து அடித்து துவைத்தான். முன்பே அந்த வியாபாரியும் அந்த நபரும் சுமூகமாக பேசி சமாதனம் அடைந்தபோதும் சிவசேனாவினர் அவரை தாக்கினர். தாக்குதல் நடைபெற்றபோது அங்கிருந்த சக வியாபாரிகள், பொதுமக்கள் என பலர் கூடி அந்த முஸ்லிம் பழவியாபாரியை பாதுகாத்து சிவசேனாவினரை அடித்து விரட்டினர். அப்போது மிரட்டல் விட்டு சென்ற சிவசேனாவினர் சொன்னது போல் கடைக்கு தீ வைத்தனர். ஆக கிடைந்த எந்த வாய்ப்பும் முஸ்லிம்கள் மீது கலவரம் நடத்த முடியவில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்ட இந்துத்துவ அமைப்பினர் இரு காரணங்களையும் குழப்பி புதிய திட்டத்தை உருவாக்கி முஸ்லிம்கள் மீது கலவரத்தை நடத்தினர்.

நடத்தப்பட்ட அவ்ரங்கபாத் கலவரத்தின் போது முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் கலவரக்காரர்கள் தங்களுடைய வெறியாட்டத்தை கட்டவிழ்த்திய போது அங்குள்ள இந்துக்களின் கடைகளுக்கு எந்த சேதமும் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டனர். கலவரத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான 100 வருட பழமைவாய்ந்த கட்டிடம் எரித்து நாசமாக்கப்பட்டது. அதேபோன்று எதிர்பாராதவிதமாக சேதமடைந்த இந்துக்களின் உடைமைகளுக்கு பாரதிய ஜனதா பொருளாதார உதவி செய்ய முன்வந்தது. ஆனால் முஸ்லிம்களை எட்டிக்கூட பார்க்கவில்லை.

கலவரம் முடிந்த பிறகு காவல்துறையின் துப்பாக்கிகள் கலவரக்காரர்கள் நோக்கி திரும்பாமல் முஸ்லிம்களை நோக்கி திரும்பியது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களே குற்றவாளிகளாக காவல்துறையால் சித்தரிக்கபட்டனர். கைது நடவடிக்கையும் முஸ்லிம் தரப்பில் தான் அதிகம். கலவரத்தில் 17வயது இளைஞனும், 60 வயது முதியவரும் இறந்துள்ளனர்.காவல்துறை சுட்ட குண்டு பட்டு அந்த இளைஞன் இறந்துள்ளான். மற்றொருவரான முதியவர் கலவரக்காரர்கள் வீசிய பெட்ரோல் வெடிகுண்டு வீட்டின் மேற்கூரையில் வெடித்து வீட்டின் மேற்கூரை சரிந்து வீட்டின் உள்ளே சிக்கி இறந்துள்ளார். 60க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக காயங்களோடு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலவரத்தை கட்டுபடுத்த காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இணைய வசதி முற்றிலும் அந்த பகுதிகளில் துண்டிக்கபட்டது. இருந்தபோதும் கலவரத்தில்ஈடுபட்ட சிவசேனா, பாஜகவை சேர்ந்தவர்கள் காவல்துறையால் கட்டுபடுத்தப்படவில்லை. வீதிகளில் சுதந்திரமாக வலம் வந்த கலவரக்காரர்கள் தங்களுடைய வெறியாட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

கடைசியாக கலவரங்கள் எல்லாம் முடிந்த நிலையில் கலவரத்தின் சூத்திரதாரரான லச்சு பெஹெல்வான் முக்கிய குற்றவாளியாக சிறப்பு புலனாய்வு முகமை அறிவித்தது. மேலும் லச்சுவை கைதும் செய்தது. சௌக் காவல் நிலையத்தில் லச்சு மீது கலவரத்தின் சூத்திரகாரர், கலவரத்தை ஏற்படுத்தியவன், பொது சொத்துக்களை சேதம் செய்தவன், கொலைக்கு தூண்டியவன், என்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று எம்.ஐ.எம்(அசாதுதின் ஒவைசி) கட்சியின் ஃப்ரேஸ் கான் மீதும் சிவசேனாவின் ராஜேந்திர ஜன்ஜால் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கலவரத்தில் ஈடுபட்டதாக 3000 நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.லச்சு பெஹெல்வான் முன்னாள் அவ்ரங்கபாத் நகராட்சி துணை ஆணைய அய்யூப் கானின் மகனை கொலை முயற்சி செய்ததாக 2016இல்கைது செய்யப்ப்படவன் என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

கலவரத்தினை தடுத்து நிறுத்தி முஸ்லிம்களை பாதுகாக்க காவல்துறை தவறிவிட்டது என்று காவல்துறை மீது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், எம்.ஐ.எம். போன்ற கட்சிகள் குற்றம் சாட்டினர். பீமா கொரிகன் உன்மை அறியும் குழுவும் இந்த குற்றசாட்டை முன்வைத்தது.

கைது செய்யப்பட்டது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இரண்டு சிவசேனாவின் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரி காவல்நிலையம் சென்ற பிரதீப் ஜாஸ்வால் என்பவர் 1996 இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2009இல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இவர்  சௌக் காவல்நிலையத்தில் இரு சிவசேனா தலைவர்களை விடுவிக்க சொல்லி சண்டையிட்டுள்ளார். விடுவிக்க காவல்துறை அதிகாரிகள் மறுத்ததும் அங்கிருந்த மேசைகளை தூக்கி வீசி நாற்காலிகளை ஒடித்து அராஜகம் செய்துள்ளார். இதற்காகவும் அவர் மீது IPC Act 332,353,504,506 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுபான்மை மற்றும் தலித்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாட்டின் பெயரால் அடித்துக் கொல்லப்பட்டவர்கள் என்றும், லவ் ஜிஹாத் என்று பொய்யுரைத்து அடித்து துவைக்கபட்டவர்கள் என்றும், அம்பேத்கரின் 100பிறந்த நாளை கொண்டடியபோதும், மாநிலம் முழுவது சிறுபான்மை மற்றும் தலித் வெறுப்பரசியல் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக அவ்ரங்கபாத் மாவட்டத்தில் முஸ்லிம் வெறுப்பு அரசியல் அதிகமாக உருவாக்கப்படுகிறது. இது முற்றிலும் அகற்றப்பட வேண்டிய ஒன்று.

பாதிக்கப்படவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதும் மிக முக்கியமானது. வெறும் நிவாரண தொகைகள் பாதிக்கபட்டவர்களுக்கான நிவாரணமாகது. தங்களுடைய இந்த நிலைக்கு காரணமானவர்கள் அவர்கள் கண்முன்னே தண்டிக்கபடுவதை காண்பது சிறந்த நிவாரணமாக, நியாயமானதாகவும் இருக்கும்.

–ஆரூர்.யூசுப்தீன்.

 

 

 

 

 

ஆரூர் யூசுப்தீன்

error: Content is protected !!