Featured Category

ஐந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஏமன் யுத்தம் !

ஏமன் நாட்டின் பெரும்பான்மையான 28 மில்லியன் மக்களின் நிலையை, பசியும், வறுமையும் தொடர்ந்து சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. உலகிலேயே மிகமோசமான மனித உக்கிரத்தை ஏற்படுத்திய இரத்தப் போரின் ஐந்தாவது வருடத்தில் இந்த அரேபிய நாடு நுழைய இருக்கிறது.

யமனிய அரசுப் படைக்கும் (சன்னி பிரிவினர்), ஹவுதி படையினருக்கும் (ஷியா பிரிவினர்) இடையே நடக்கும் தொடர்படியான போர், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அம்மக்களை மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. அங்கு நிலவும் வறுமை குறித்து சர்வதேச எச்சரிக்கைகள் தொடர்ந்து அம்மக்களை அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ளது.

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹவுதிப் படையினர் ஏமன் நாட்டின் தலைநகர் சன்ஆவை கைப்பற்ற முயற்சித்ததிலிருந்து இப்போர் தொடங்கியது என்று ஒரு சிலரும், அண்டை நாடான சவூதியின் தலைமையில் அரேபிய இராணுவக் கூட்டணியின் தலையீடு ஏமனில் ஏற்பட்டதிலிருந்து இப்போர் துவங்கியது என வேறு சிலரும் கூறுகின்றனர்.

இத்தொடர்படியான போர் குறித்து கடந்த வியாழக்கிழமை மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கினைப்புக்கான ஐ.நா அலுவலகம் கூறியதாவது:
மக்கள் தொகையின் 80 விழுக்காட்டினர் (சுமார் 24 மில்லியன்) மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு தேவையுள்ளவர்களாகவும், 14.3 மில்லியன் மக்கள் இவ்வுதவிகளின் பக்கம் மிக அவசரத் தேலையிலும் இருக்கிறார்கள்.

மேலும் கூறியதாவது: 20 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையினாலும், அவர்களில் 10 மில்லியன் மக்கள் கடுமையான அளவு பட்டினியாலும் பாதிக்கப்படுகறார்கள். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது நூற்றுக்கு 27 சதவிகித மக்களுக்கு மேற்குறிப்பிட்ட உதவிகள் தேவைப்படுகிறது.

இந்த துயரமான எண்ணிக்கையுள்ள மக்கள் கஷ்டத்தில் வாடினாலும், வருகிற மார்ச் மாதத்தோடு யுத்தத்தின் ஐந்தாவது வருடத்தைத் தொட்டாலும், மக்களின் நிலை மோசமடைந்து கொண்டே வருகிறது.

யமனின் அனைத்து நகர்ப்புரங்களிலும் பிச்சைக்காரர்கள் தங்களை பசி, பட்டினியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள குறைந்தளவு தொகையை எதிர்பார்த்து தெருக்களிலும், சந்தைகளிலும், பள்ளிவாசலிலும் பரவியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவைத்தேடி:

பல மில்லியன் மக்கள் தொடர் வருடானமின்றியே வாழுந்து வருகிறார்கள். இந்நிலை, வாழ்வாதாரத்தைத் தேடி ஒவ்வொரு நாளும் துயரமான பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளயிருக்கிறது.

கிழிந்த ஆடையோடும், மெலிந்த உடலோடும் 12 வயதே நிரம்பிய முஹம்மது முக்பில், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் கூடத்திற்கு விற்பனை செய்து அவற்றை பணமாக்க, சன்ஆ நகரத்தின் தெருக்களில் பிளாஸ்டிக் பொருட்களை ஒன்றுசேர்த்துக் கொண்டிருந்தான். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் ஒரு வாடகை அறையில் வசிக்கும் ஐந்து நபர்கள் கொண்ட தன் குடும்பத்திற்காக தினமும் முக்பில் உழைத்துக்கொண்டிருக்கிறான்.

முக்பில் அனாடோல் செய்தி நிறுவனத்திறகு பேட்டியளித்ததாவது: ஹ{தைதா நகரத்தில் தொடர்ந்து சண்டை நடந்த காணத்தால் நானும் என் குடும்பமும் பல மாதங்களுக்கு முன்னர் அந்நகரத்திலுருந்து இடம்பெயர்ந்தோம்.

அரேபியக் கூட்டணிப்டடைகளின் ஆதரவோடு, யமன் இராணுவப் படைகள் செங்கடலின் ஓரப்பகுதியில் உள்ள நகரங்களை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகின்றனர். ஈரானின் ஆதரவோடு செயல்படும் ஹவுத்திகள் இப்பகுதிகளை தங்கள் ஆக்கிரமிப்பில் வைத்துள்ளனர். சன்ஆ நகரத்தில் வேலை தேடி என் தந்தை பல முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் எவ்வித பயனுமில்லை. வேலை கிடைக்கவில்லை என்றும் அந்த சிறுவன் கூறினான்.

பல மாகாணங்களை ஹவுத்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதில் சன்ஆவும் அடங்கும். சாலைகளிலும், குப்பைக்கூளங்களிலும் மக்கள் எறிகிற தண்ணீர் பாட்டில்கள், எரிவாயுப் பொருட்களின் டப்பாக்களையெல்லாம் ஒன்று சேர்க்கிற வேலையில் எங்களை ஆழ்த்திவிட்டது எங்கள் கடினமான வாழ்வாதார சுழ்நிலை.

ஒரு சில நாட்களில் குடும்பத்திற்கான அத்தியாவசிய உணவுக்காக போதுமான அளவு பிளாஸ்டிக் பொருட்களை என்னால் ஒன்று சேர்க்க முடிவதில்லை. அந்நேரத்தில் பிறர் கொடுக்கும் தர்மங்களைக் கொண்டே உணவு வாங்கும் சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம் என்று கவலையாகக் கூறினான்.

உதவிப் பற்றாக்குறை:

யமனுக்கு சர்வதேச அளவில் உதவிகள் தொடர்படியாக வந்து சேர்ந்தாலும், அதனை சரியான முறையில் கையாள முடியாததால், பலருக்கு உதவிகள் போய்ச்சேரவில்லை என்பதே மிகப்பெரிய குறையாக உள்ளது. இதனால் மக்களின் அவலநிலை தொடர்ந்தும், நீடித்தும் வருகிறது.

அஃபாஃபுல் அபாரா என்ற யமன் பெண் பத்திரிக்கையாளர் அனாடோல் செய்தி நிறுவனத்திற்கு மக்களின் நிலை குறித்து பேட்டியளித்தாவது:
யமன் மக்களின் அவலநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சன்ஆவின் வீதிகளுக்கு செல்லும் போது, தூய்மையான, நல்ல பெண்களெல்லாம் தங்கள் கண்ணீரை சிந்திய நிலையில் மக்களிடம் யாசகம் கேட்கிறார்கள். மக்களிடம் பிச்சை கேட்கும் அளவிற்கு அவர்களைத் தள்ளியது இந்த பட்டினி தான்.

மற்றொரு புறம், தினக்கூலியை மட்டுமே நம்பிய உழைப்பாளிகள் வெளிறிய முகத்தோடு நிற்கும்போது இயலாமையின் அடையாளத்தை அம்முகங்களில் பார்க்கும் காட்சி ஆழ்ந்த துக்கத்தைத் தருகிறது. அதிக கஷ்டத்தில் வாடும் மக்களில் இவர்களும் ஒரு பிரிவினர். போரினால் வேலையற்று இருக்கும் இவர்களின் நிலை பிறரிடம் யாசகம் கேட்கும் அளவிற்கு உள்ளது.

இத்தொடர் போரின் காரணமாக மக்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. வருவாய்க்கான ஆதாரமும், அமைதியுமே இப்பேரழிவை நிறுத்த முடியும்.

இங்குள்ள பசி மற்றும் வறுமையைப் பற்றி ஐ.நா சபையின் அறிக்கைகளும், தொடர்படியான எச்சரிக்கைகளும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. எனினும், நான்கு வருடமாக அதிகமானோருக்கு உதவிகள் போய்ச் சேரவில்லை என்பதே உண்மை. உணவுப்பொருட்கள் ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் சென்றடையவில்லை.

உதவிகள் எங்கே போகிறது யாரிடமிருந்து வருகிறது என ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக அனைவருக்கும் விநியோகிக்க வேண்டுமென ஐ.நா கூறுகிறது. பலர் பட்டினியால் மரணிக்கும் நிலையில், மக்களுக்காக வருகிற பல உணவுப்பொருட்கள் கருப்பு சந்தையில் விற்கப்படுகிறது. கோதுமை மாவின் சப்தம் மட்டும் கேட்கிறது, மாவைப் பார்க்க முடியவில்லை என தேவையிலுள்ளவர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

இந்நெருக்கடியைப் போக்க ஆலோசனைகள்:

பல உதவிகள் வந்து சேர்ந்தாலும், மக்களின் நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால், இந்நெருக்கடியைப் போக்க, மாற்று வழிகளைத் தேடி வருகின்றனர் பல நிபுணர்கள்.
பொருளாதார ஆய்வாளர் சயீத் அப்துல் முஃமின் அனாடோல் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்ததாவது: அனைத்துத் துறைகளிலும் மக்களின் நிலை மோசமாகிக்கொண்டே வருகிறது. குறிப்பாக உணவுப்பொருட்கள் இல்லாமை.

சென்ற வருடம், ஹ{தைதா மாகாணத்தில் செங்கடலின் மாவாலைகள் நல்லமுறையில் செயல்பட்டு, மக்களுக்குத் தேவையான அளவு மாவுகளை வழங்கி வந்தது. ஆனால் இன்று மாவின் பற்றாக்குறை ஏற்பட்டதோடு, அவற்றின் விலையும் பண்மடங்கு அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டின் இறக்குமதிப் பொருட்கள் குறிப்பாக மாவுப் பொருட்கள் மிக மோசமான கெட்டுப்போன நிலையில் உள்ளது. கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரித்தாலும், விலைக்குத் தகுந்தாற்போல் அதன் அளவு இருப்பதில்லை. இதே நிலை தான் அரிசி மற்றும் சர்க்கரைக்கும்.

கடந்த காலங்களில் மழை மிகக்குறைந்த அளவே பெய்ததால், விவசாயப் பொருட்களின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. வரும் மாதங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும். ஹ{தைதாவின் நெருக்கடிக்கு முடிவுகட்டவும், துறைமுகங்களை சரியான முறையில் இயக்குவதற்கும், சர்வதேச ஆதரவோடு மாற்று வழிகளைக் கண்டறியவும் எந்த வழியும் கண்டறியப்படவில்லை.

ஹ{தைதா மாகாணம் மற்றும் அதன் துறைமுகங்களை சரிசெய்ய கடந்த வருட இறுதியில் ஐ.நா வின் தலைமையில் எடுக்கப்பட்ட எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.

மனித நெருக்கடியைப் போக்க முதலில் போர் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் போர் ஒன்று தான் மிகப்பெரிய தீங்காக உள்ளது. இப்போர் இருக்கும் காலமெல்லாம், விளைவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக விவசாயப் பகுதிகளில் எரிபொருள் விலை ஏற்றம், போக்குவரத்து போன்ற பல கஷ்டங்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளார்கள்.

உணவுத்தட்டுப்பாட்டை நீக்கவும், நம்பிக்கையுள்ள இறக்குமதியாளர்கள் உணவை இறக்குமதி செய்து அதை சரியான விலையில் மக்களை சென்றடையச் செய்யவும் சிறந்த வழிமுறைகளை கண்டறிவது சர்வதேச சமூகத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்.

இரண்டு வருடமாக மாத சம்பளத்தை இழந்த வேலையாட்களுக்கு, அவர்களின் மோசமான நிலையைப் போக்கும் விதமாக, சில குறிப்பிட்ட டாலர் தொகைகளை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு சென்றடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென சில தொண்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

தமிழில் – உமர் பைசல்

(மூலம் -அல் முஜ்தமா சஞ்சிகை)

எடிட்டோரியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!