Featured Category

ஃபலஸ்தீன் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கத் தயாராகும் இஸ்ரேல்!

சுமார் 57 வருடங்களுக்கு முன்னதாக ஜெர்மனிய நாசிப் படைகளின் தளபதியும் Holocaust என வர்ணிக்கப்படும் யூதப் படுகொலைகளை திட்டமிட்டு செயற்படுத்தியவருமான அடோல்ப் ஈச்மன் என்பவருக்கு இஸ்ரேலிய நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது.

யூதர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், போர்க் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் என 15க்கும் மேற்பட்ட குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டன. ஆறு மாதங்கள் கழித்து மேன்முறையீடு செய்யக் கூடிய அத்தனை வழிகளையும் அடைத்து. 1962 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் நாளில் இஸ்ரேல் அவரது மரண தண்டனையை நிறைவேற்றியது.

இஸ்ரேல் பிரிட்டிஷ் உடைய சட்ட யாப்புக்களை பின்பற்றி வந்தாலும் கூட 1954 ஆம் ஆண்டில் பல்வேறு குற்றச்செயல்களுக்கு மரண தண்டனை விதிப்பதை தடை செய்யும் தீர்மானம் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

போர்க் குற்றங்கள் மற்றும் யூதர்களுக்கு எதிரான படுகொலைகள் ஆகிய இரண்டை தவிர்த்து ஏனைய பல குற்றச்செயல்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவது தடை செய்யப்பட்டது. அன்றிலிருந்து இஸ்ரேலிய சிவில் நீதிமன்றங்கள் மரண தண்டனையை நாசி இயக்கத்தைச் சேர்ந்த, யூதப் படுகொலை புரிந்த குற்றவாளிகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கி வைத்தது.

அத்துடன் இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்களில் கூட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ஏகமனதாக தீர்மானித்தாலே அன்றி மரண தண்டனை விதிக்கப்பட முடியாது. இச்சட்டங்களின் பிரகாரம் கொடிய யூதப் படுகொலைகளைப் புரிந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஜெர்மானிய நாசிப் படைத் தளபதி அடோல்ப் ஈச்மன் மாத்திரமே இஸ்ரேலில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவராவார்.

மிகக் கொடிய யூதப் படுகொலை குற்றச்சாட்டு விதிக்கப்பட்டு மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமின் ஏகமனதான அங்கீகாரம் பெறப்பட்டே மரண தண்டனை நிகழ்த்தப்பட வேண்டும் எனும் சட்ட ஏற்பாடே நீண்ட காலமாக இஸ்ரேலில் அமுலில் இருந்து வருகின்றது.

இது இவ்வாறிருக்க, ஃபலஸ்தீன் சிறைக்கைதிகள் மீதும் உயர்ந்த பட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான பிரேரணையை இஸ்ரேலிய பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் அண்மைக் காலமாக இஸ்ரேலில் சில அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மரண தண்டனை ஆதரவு குழுக்கள் தோற்றம் பெற பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டோர் லிபெர்மனின் வலதுசாரிக் கட்சியான Yisrael Beitenu, அண்மையில் ஏற்படுத்தப்பட்ட காசா போர்நிறுத்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டது.

Yisrael Beitenu எனும் இந்த வலதுசாரிக் கட்சியே ‘ஃபலஸ்தீன் தீவிரவாதிகளும் (அவர்கள் போராளிகள்) மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள்’ என கோரி பாராளுமன்றில்
பிரேரணை ஒன்றை மீளவும் சமர்ப்பித்துள்ளது.

இவ்வருட ஆரம்பத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மரண தண்டனை தொடர்பில் குறிப்பிடுகையில்,

‘குறித்த பிரேரணை தொடர்பில் நான் ஆதரவளிக்கிறேன். ஃபலஸ்தீன் மக்களில் பாதகப் படுகொலைகளை புரியக் கூடியவர்களும் இருக்கின்றனர். அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள். அவர்கள் சட்டத்தின் உயர்ந்த பட்ச தண்டனையை அனுபவிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

மரண தண்டனை தொடர்பில் இதுவரை காலமும் அமுலில் இருக்கும் சட்ட ஏற்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணை மீதான முதல் வாதப்பிரதிவாதங்கள் இவ்வருட ஜனவரியில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களின் அபிப்பிராயங்களுக்கு விடப்பட்டுள்ள குறித்த பிரேரணை சட்ட மூலமாக்கப்பட முன்னர் இரண்டாம் மூன்றாம் அமர்வுகளையும் கடக்க வேண்டியுள்ளது.

காஸா போர்நிறுத்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டணி அரசாங்கத்திலிருந்து Yisrael Beitenu கட்சி விலகியமையானது குறித்த மரண தண்டனை பிரேரணை அங்கீகரிக்கப்படுவதில் கால தாமதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Yisrael Beitenu கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டாலும் கூட ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளின் மரண தண்டனை குறித்த பிரேரணை தொடர்பில் பிரதமர் நெதன்யாகு ஆதரவுப் போக்கையே கொண்டிருப்பதால் பாராளுமன்றில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட பெரும்பாலும் வாய்ப்புகள் நிலவி வருகின்றது.

பிரேரணை சட்ட மூலமாக பாராளுமன்றில் அங்கீகரிக்கப்படுமாயின் பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் வாடுகின்ற ஃபலஸ்தீன் மக்கள் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டியேற்படும் சிக்கலான நிலை தோன்றியுள்ளது. இஸ்ரேலின் மேற்குகரை இராணுவ நீதிமன்றங்கள் தமது நீதிபதிகள் கொண்ட குழாமின் பெரும்பான்மை ஆதரவுடன் ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை விதித்து இலகுவாக தீர்ப்பளிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகி விடக் கூடும்.

இத்திருத்தச் சட்ட மூலமானது பாரதூரமான குற்றச்செயல்கள் புரியும் ஃபலஸ்தீன் மக்கள் மீது மரண தண்டனையை விதிக்கும் இராணுவ நீதிமன்றங்களின் நடைமுறைகளை இலகுபடுத்துவது உடன் நின்று விடாது. மாறாக, அப்பாவிப் ஃபலஸ்தீன் பொதுமக்கள் மீது அடக்குமுறைகள் புரிவதற்கான எதேச்சதிகாரத்தை இஸ்ரேலிய இராணுவ படை வீரர்களுக்கு கடிவாளமில்லாது வழங்கவும் செய்யும் என்பதே தற்போது எழுந்துள்ள பெரிய சவாலாகும்.

‘யூதர்கள் மீதும் யூதக் குடியிருப்புக்கள் மீதும் எவ்வித அச்சமின்றி சுதந்திரமாக பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்த முனைவோருக்கு இச்சட்டம் பெரிதும் கடிவாளமாக இருக்கும்’ என மரண தண்டனைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் Yisrael Beitenu கட்சியின் தலைவர் லிபர்மன் உள்ளிட்ட முன்மொழிவாளர்கள் கூறி வருகின்றனர்.
மரண தண்டனை சட்டமானது இஸ்ரேலில் பொதுவாக நடைமுறைக்கு வந்தாலும் ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளை இலக்காகக் கொண்டே இது நடைமுறையில் செயற்படுத்தப்படும் என்பது தெளிவான உண்மையாகும். யூதர்களின் கட்டாய வெளியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும்ஃபலஸ்தீன் மக்களின் உரிமையை நசுக்குவாதாக இச்சட்ட மூலம் அமையும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க குறித்த சட்ட மூலம் தொடர்பில் மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி என்னவெனில் , நாசிப் படைகள் புரிந்த மாபாதக படுகொலைகளையும் சொந்த நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு வாழ வழியின்றி தவிக்கும் அப்பாவிப் பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் ஒரே தராசில் வைத்து நியாயம் காண முனைவது நகைப்புக்கு இடமளிக்கிறது.

இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்களினால் பக்கச் சார்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, தன்னிச்சையாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைகளில் வாடும் அப்பாவி ஃபலஸ்தீன் மக்கள் மீது மரண தண்டனை சட்டத்தை அமுல்படுத்துவது எவ்வகையில் நியாயம்?

சர்வதேச சட்ட நியமங்களின் பிரகாரம் மேற்குக்கரை பகுதியில் இயங்கும் இஸ்ரேலின் இராணுவ நீதிமன்றமானது சட்ட ரீதியற்றதாகும். ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளுக்கான ஆதரவு அமைப்பின் தலைவர் ஸஹ்ர் பிரான்சிஸ் குறிப்பிடுகையில்,

‘ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் இயங்கும் இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்கள் சட்ட ரீதியான அந்தஸ்து பெற்றதல்ல. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் இடம்பெறும் விவகாரங்கள் குறித்து புதிய சட்டங்களை வகுக்க இஸ்ரேலிய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

கங்காரூ நீதிமன்றங்கள் என அழைக்கப்படும் இஸ்ரேலின் இராணுவ நீதிமன்றங்கள் பிரதிவாதிகள் தொடர்பில் சட்ட ரீதியான, முறையான விசாரணைகளை முன்னெடுப்பதில்லை. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை 8,000 க்கும் அதிகமான ஃபலஸ்தீன் சிறுவர்களுக்கு இந்நீதிமன்றங்கள் முறையற்ற விசாரணை மூலம் தன்னிச்சையாக சிறைத் தண்டனை வழங்கியுள்ளது’ என தெரிவிக்கின்றார்.

ஃபலஸ்தீன் மக்கள் மீது சிறைத் தண்டனை விதிப்பதே சட்ட ரீதியற்ற செயலாகும் என்றிருக்க ஃபலஸ்தீன் மக்கள் மீது மரண தண்டனை நிறைவேற்றும் அதிகாரத்தையும் இராணுவ நீதிமன்றங்களுக்கு வழங்க முயற்சிக்கும் முன்னாயத்தங்கள் சர்வதேச ரீதியில் பெரும் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் காலனித்துவ அரசானது வலதுசாரி அரசியல் மற்றும் பாசிஸ போக்கு தொடர்பில் உலகளவில் எழுந்துள்ள ஆதரவு போக்கை தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்ள முனைகிறதா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

மரண தண்டனை சட்ட மூலம் நிறைவேற்றப்பட முன்னரே இஸ்ரேலிய படைகள் ஃபலஸ்தீன் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஏவுகணை தாக்குதல், ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூடு, தற்பாதுகாப்பு எனும் பேரிலான படுகொலைகள், மொஸாத்தின் திட்டமிட்ட கொலைகள் என்று ஃபலஸ்தீன் உயிர்கள் ஏற்கனவே பலியிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான பல்வேறு கொலைத் திட்டங்களுக்கு மேலாக, அவர்களது பார்வையில் சட்ட ரீதியான இன்னொரு கொலைத் திட்டமாகவே மரண தண்டனை அமுல்படுத்தலும் இருக்கப் போகிறது என்பது வெளிப்படை உண்மை.

-ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்
(மூலம்: அல்ஜஸீரா)

ஹஸன் இக்பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!