Featured Category

அயோத்தி விவகார மத்தியஸ்தர் குழுவின் நோக்கம்:சமரசமா? வில்லங்கமா ?

யோத்தியா பிரச்சினை என்பது வரலாறு, மதம், அரசியல் ஆகியவற்றின் அபாயகரமான கலவையாகும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மத்தியஸ்த குழுவால் இந்த இடத்தை உரிமை கொண்டாடும் தரப்பினர்களுக்கிடையே சமாதான உடன்படிக்கையை கொண்டுவர முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும். ஏனென்றால், ஒரு நடுநிலை குழுவை அமைப்பதன் மூலம் ஒரு சுமூகமான தீர்வை எட்டமுடியும் என்றிருந்தால் இந்த பிரச்சினை என்றோ தீர்க்கப்பட்டிருக்கும். உச்சநீதிமன்றம் வரை செல்லவேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது.

வழக்கு தொடர்ந்துள்ள தரப்புகளின் கோரிக்கைகளை சரியாக ஆராயாமல் அவர்களை ஒருமித்த கருத்தின்படி கொண்டுவர நினைக்கும் நீதிமன்றத்தின் செயல் நடைமுறைக்கு சாத்தியமில்லாததாக உள்ளது. தற்பொழுது, மத்தியஸ்த குழுவில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்களைப் பற்றி பார்ப்போம்.

நீதிபதி பக்கீர் முஹம்மது கலிபுல்லாஹ் தமிழகத்தைச் சேர்ந்தவர். மத்தியஸ்த குழுவின் தலைவராக இருக்கின்றார். வட இந்திய முஸ்லிம்களிடம் நம்பிக்கையைப் பெறாதவர். பல்கலைக்கழகங்களில் வேத ஜோதிடம் கற்பிக்கலாம் என்று இந்து சமூகத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததின் மூலம் முஸ்லிம்களிடையே சர்ச்சைக்குள்ளானவர். முஸ்லிம்களின் கேள்வி என்னவென்றால், வானியல் சம்பந்தமாக முதலில் தன் மதம் என்ன கூறுகின்றது என்பது நீதிபதி கலிபுல்லாஹ் அவரகளுக்கு தெரியுமா? அல்லது நவீனகால வானியல் அறிவியலின் முன்னோடியான இப்னு தைமியாவைப் பற்றிதான் ஏதும் தெரியுமா?

அதைப்போலவே, இந்த குழுவில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராம் பஞ்சுவின் இருப்பும் சந்தேகத்திற்குரிய ஒன்று. இவர் அனுபவமிக்கவராக இருந்தாலும், அரசியல், மதம், வரலாறு சம்பந்தப்பட்ட வழக்குகளில் தீர்ப்பளிப்பதில் புகழ்பெற்றவர் அல்ல. ஆக, இவரும் மத்தியஸ்த குழுவில் பங்குபெற தகுதியானவர் அல்ல.

இக்குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பங்கும் சந்தேகத்திற்குரியது. இவர் ஏற்கனவே இந்த விவகாரத்தில் முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், அவர் முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதின் மீதான தன் உரிமையை விட்டுக்கொடுக்காவிட்டால் நாடு இரத்தக்களரியாகிவிடும் என்று கூறியவர். இதை All India Muslim Personal Law Board முற்றிலுமாக புறக்கணித்தது.

இந்நிலையில் மத்தியஸ்த குழுவால் சுமூகமான நிலையை எப்படி கொண்டுவர முடியும்? ஆக, அரசியல் ரீதியிலான புரிதலில் இந்த வழக்கை அணுகுவதில் இக்குழுவிற்கு அனுபவம் இல்லை. மத ரீதியிலான புரிதலும் குறைந்த அளவே உள்ளது. இந்த சூழ்நிலையில், தங்களுக்கெதிராக மத்தியஸ்த குழுவால் கொண்டுவரப்படுகிற தீர்வுக்கு எந்த தரப்பும் உடன்படப்போவதில்லை. எனவே, இது ஒரு வீணான முயற்சியாக கருப்படுகின்றது.

ஒரு இடப்பிரச்சினை வழக்கை நீதிமன்றம் ஒரு சமூகத்தின் உணர்வின் அடிப்படையில் அனுகாமல், ஆதாரங்களின் அடிப்படையில் அணுக வேண்டும். அவ்வாறில்லாமல், ஒரு நாட்டின் நீதி வழங்கும் அமைப்பே பலவீனமான சமூகத்தின் குரல்வளையை நெருக்கினால், இதைவிட பெரிய கேளிக்கூத்து வேரொன்றும் இல்லை. இங்கு முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் புனிதம் பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களோ இந்தியாவின் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். உலகிலேயே மூன்றாவது பெரும்பான்மை முஸ்லிம்களும் இங்குதான் உள்ளனர். ஆக, தங்களின் மீது பயத்தை திணிப்பதின் மூலம் ஒருபோதும் முஸ்லிம்கள் இக்குழுவின் உடன்பாட்டிற்கு பணிந்து போகமாட்டார்கள்.

முஸ்லிம்கள் தரப்பின் வாதம் என்னவென்றால் ஒருமுறை மசூதி கட்டப்பட்டால் அது எப்பொழுதும் மசூதியாகவே கருதப்படும். ஆக, 500 வருட பழமை வாய்ந்த பாபரி மசூதி இடத்தை முஸ்லிம்கள் உரிமை கோருகின்றனர்.

எந்தவொரு தீர்ப்பும், நம்பகத்தன்மையுள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் அமைய வேண்டும். இந்த ஆதாரங்கள் சட்ட ஆய்வுக்குட்படுத்தப் படவேண்டும். அதே நேரத்தில், ஹிந்து தரப்பிலிருந்து வைக்கப்படுகின்ற ஆதாரங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். பாபரி மசூதிதான் இராமன் பிறந்த இடம் என்பதை ஒருபோதும் ஒத்துக் கொள்ள முடியாது. எனவே, முஸ்லிம்களின் தரப்பு இவ்விஷயத்தில் இணங்கி செல்வது அறிவுடைமையாகாது.

“மசூதி இஸ்லாமில் முக்கிய பங்கு வகுக்கின்றதா ? அரசியல் சாசனத்தால் இது பாதுகாக்கப்பட வேண்டுமா” என்கிற குறிப்பு நீதிமன்றத்தால் வைக்கப்பட்டது. அப்படியென்றால், “பாபரி மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தார் என்றால், இராமன் இறந்த இடம் எது ?” என்ற குறிப்பும் சேர்க்கப்பட வேண்டும்.

முதல் குறிப்பிற்கு பதிலளிக்க வேண்டுமென்றால், ஆம்! இஸ்லாத்தில் மசூதி முக்கிய பங்கு வகுக்கின்றது. அரசியல் சாசனத்தால் இது பாதுகாக்கப்பட வேண்டும். இஸ்லாமிய சட்டப்படி முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை மசூதியில் தான் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், அதன் சப்தம் சொர்க்கத்தில் கேட்காது. அதுமட்டுமல்லாமல், வீட்டில் தொழும் தொழுகையை விட மசூதியில் தொழும் தொழுகைக்கு 27 மடங்கு நன்மை அதிகம்.

இரண்டாவது குறிப்பிற்கு பதில் தரவேண்டுமென்றால், இராமாயணத்தில் 300 வகையான வேறுபட்ட பதிப்புகள் உள்ளன. இவற்றையெல்லாம் மேற்கோல் காட்டினால் இந்து தரப்பின் கோரிக்கையே பிரச்சனைக்குள்ளாகிவிடும்.

“அயோத்தியா இடம் தங்களுக்கே சொந்தம் என்கிற வகையில் முஸ்லிம்கள் தரப்பில் போதுமான ஆதாரங்கள் உள்ளன” என்று முஸ்லிம்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறுகிறார்,

ஆதலால், அரசை தயார் நிலையில் வைக்கும் ஏற்பாட்டை உச்சநீதிமன்றம் செய்ய வேண்டும் , ஒருவேளை எதிர்தரப்புக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டால் ஏற்படும் இரத்தக்களரியை சமாளிப்பதற்காகவும் தான்!

  • எடிட்டோரியல்

எடிட்டோரியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!