Featured Category

குருகிராம் மற்றும் குஜராத்தில் கூட்டுப் படுகொலை முயற்சிகள்!

மார்ச் 18 திங்கட்கிழமை, மதிய நேரம். குஜராத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனது வீட்டில் இருந்து புறப்படுகிறார் மித்குமார் நரேஷ்பாய் சாவ்தா.சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு வழியாக தேர்வு மையத்தை அடைகிறார்.

தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த பரபரப்பான நேரத்தில் தான் ரமேஷ் குமார் என்பவன் அவசர உதவி கோருவது போல் நடித்து மாணவனை அழைத்து செல்கிறான். ரமேஷ் குமார் ஓர் பேருந்து நடத்துனர். அவரை மித் குமார் பல தடவை பேருந்திகளில் கண்டதுண்டு. ஆனால் இருவரும் ஒரு போது பேசிக்கொண்டதில்லை.

சாதிவெறியர்களின் தாக்குதலுக்கு உள்ளான மாணவன்

ஒன்றும் அறியா மாணவன் தான் செய்த தவறுதான் என்ன என்று வினவுகிறான்.அதற்கு அந்த அயோக்கியர்களிடம் இருந்து வந்த பதில் நிச்சயம் அவனை கொஞ்சம் தடுமாற வைத்திருக்கும் ” நீ ஒரு தாழ்த்தப்பட்ட பிறவி, நீயெல்லாம் இங்கு வந்து படிக்கும் அளவுக்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை, உயர் சாதி பெண்களிடம் பேசுவதை நிறுத்திக்கொள். உன்னை அடுத்த தேர்வுக்கு இந்த பகுதியில் கண்டால் அத்தோடு நீ காலி என அடுத்தடுத்த சராமாரியான தாக்குதலைத் வாய்மொழியாகவும் தொடுத்தனர் அந்த சாதி(தீ)விர வாதிகள்.

மித் குமாருடன் சேர்த்து வழியில் இன்னொருவனை அழைத்துக்கொண்டு இவர்களின் பைக் கோராட் கிராமத்தை நோக்கி விரைந்தது.நிலைமை எல்லைமீறுவதை உணர்ந்த மித் குமார் தன்னை விடுவிக்கும் படி கேட்டுக்கொண்டான். உதவி என்று அழைத்து வந்து கருவருப்பது பச்சை துரோகம் அல்லவா..! நான் தேர்வெழுத வேண்டும் என சப்தமாக கதறியும் மாபாதகர்களின் கல்நெஞ்சம் கொஞ்சமும் அசரவில்லை.மித் குமார் மரத்தில் கட்டப்பட்டான். மட்டைகளால் ஓங்கி ஓங்கி உயிர் போகும் அளவுக்கு அடிக்கப்பட்டான். அவனது அலறல் சப்தம் யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

படுகாயம் அடைந்த மித்குமார் பொதுத்தேர்வு எழுத முடியாமல் ஒரு வழியாக பாதி உயிருடன் வீடு திரும்புகிறார். மகனை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போன தாய் காவல்துறையில் புகார் அளிக்கிறார். தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செயத காவல்துறைக்கு பாவம் குற்றவாளிகளை கைது செய்யத் தான் நேரமில்லை.

இதேபோன்று இன்னொரு சம்பவம் குருகிராமில் அரங்கேறியது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஈவு இரக்கமின்றி ‘நீ பாகிஸ்தானுக்கு போ’ என்று மிரட்டியாறு கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறது ஓர் மதவாத கும்பல். படுகாயமடைந்தவர்கள் முஸ்லிம்களாக அன்றி வேறு எந்த காரணத்திற்காக வேண்டியும் இப்படி கொடூரமாக தாக்கப்படவில்லை

சவ்கிதார் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மோடியின் ஆட்சியில் தான் எத்தனை அட்டூளியங்கள்? பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க தவறிவிட்டு மத துவேசத்தை ஆதரித்து கள்ள மொளனம் காப்பது தான் மோடியின் பாதுகாப்போ?

பா.ஜ.க ஆட்சியில் தொடர்ச்சியாக மதத்தின் பெயரால் ரத்தம் ஓட்டப்படுவதும், சாதியின் பெயரால் அடித்து ஒடுக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகவே மாறி விட்டது. வெறும் முஸ்லீம் என்பதற்கற்காக ரயிலில் இருந்து தூக்கி வீசப்படுவதும், மாட்டிற்காக படுகொலை செய்வதுமாக வன்முறைத் தாக்குதலை தொடர்ந்து கட்ட விழ்த்து விடுகிறது மத்திய பா.ஜ.க மதவாத அரசு..

பன்முகத்தன்மை கொண்ட நாட்டை காவிகளுக்கு சொந்தமாக்கவே அப்பாவி மக்களின் ரத்தங்கள் ஓட்டப்படுகிறது. இது பாஸிசத்தின் நவீன வடிவம்..!

சவ்கிதார் என்று தன்னை அடையாளப்படுத்த மோடிக்கும் மோடியின் ஆதரவு பா.ஜ.க வினருக்கும் ஒரு துளியும் அருகதையில்லை. சவ்கிதார் என்பது நாட்டு மக்களை பாதுக்காப்பதல்ல. கோடிகளில் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற பண முதலைகளை காக்கத்தான்.

தீவிரவாத தாக்குதலுக்கு ஒரு குறிப்பிட்ட சாரார் மீது அப்பட்டமாக பலி சுமத்துவதும், அவர்களை இந்த நாட்டை விட்டு விரட்டுவதிலேயே குறியாய் இருக்கும் மோடியின் கைக்கூலிகள் மேற்கண்ட இரண்டு நிகழ்வுக்கு வாயை இருக பூட்டிக் கொண்டனர். கல்நெஞ்சம் படைத்தவர்களுக்கு காவி நிறம் மட்டும் தான் கண்களுக்குத் தெரியும். கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் மாட்டின் பெயரால் சூரையாடப்பட்ட அப்பாவிகள் 27 பேர்..!

இவர்களோடு சேர்த்து இன்னும் எண்ணற்ற சிறுபான்மையின மக்களின் மரணத்திற்கு பதிலளித்துவிட்டு சவ்கிதார் பட்டத்தை மோடி சூட்டிக் கொள்ளட்டும்.ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் கருவருக்கத் துடிக்கும் காவிகளின அயோக்கியத்தனம் வெகு விரையில் உலக நாடுகளுக்கு மத்தியில் அம்பலமாகப்போவது உறுதி.

வாய்க்கிழிய வாக்குறுதிகளை அள்ளி வீசி நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சேகரிக்க வரும் பா.ஜ.க வினர் எவரும் சிறுபாண்மையினரை காக்கப் போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

~ அன்புசெல்வன்

எடிட்டோரியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!