Featured Category

முஸ்லீம் தீவிரவாதி கைது- தொடர் 1

மொஹமது அமீர் கான் வழக்கு!

தலைப்பை பார்த்து அதிர்ச்சி வேண்டாம்
(புனைவுகளற்ற உண்மை சம்பவம் இது)

அந்த யுவனுக்கு அப்போது 18 வயது இருக்கும். பாகிஸ்தானில் இருக்கும் தனது உறவினர்களை சந்திப்பதற்கு அனுமதி பெற டெல்லியில் உள்ள தூதரகம் சென்றான். தூதரகத்திற்க்கு வெளியில் குப்தாஜி என்ற நபர் சிறுவனை அழைத்து நீ யார் என்று கேட்டார். அதற்க்கு அச்சிறுவன் தனது பெயர் ஆமிர் என்றும் தூதரகம் வந்த நோக்கத்தையும் கூறியுள்ளான் இந்தியாவிற்காக எதாவது செய்ய விரும்புகிறாயா ? உன் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியில் உதவுகிறோம் அதுமட்டுமல்லாமல் குடும்ப பாதுகாப்பையும் ஏற்றுக்கொள்கிறோம் என குப்தாஜி கூறியிருக்கிறார். அவனும் ஆர்வ மிகுதியில் ஒப்புக்கொள்கிறான்.

பாகிஸ்தானில் சில புகைப்படங்கள் எடுக்க வேண்டும்,அங்கே ஒருவர் சில கோப்புகளை கொடுப்பார் அதையும் வாங்கி வர வேண்டுமென குப்தாஜி கூறியுள்ளார்.முதல் முறை பாகிஸ்தானுக்கு செல்லும் ஆமிருக்கு கனவுகள் எண்ண ஓட்டத்தில் வட்டமிட்டது.

பாகிஸ்தான் சென்ற ஆமிர் சில இடங்களை சுற்றிப்பார்த்தான்.
தன்னிடம் மறைத்து வைத்திருந்த புகைப்பட கருவி மூலம் குப்தாஜி சொன்ன இடங்களை புகைப்படம் எடுக்க முயன்றான். பிறகு, ஒருவர் ஆமிரை அடையாளம் கண்டு, குப்தாஜி சொன்ன கோப்புகளை அவனிடம் ஒப்படைத்தார். வேலை முடிந்தது. ஆமிர் பாகிஸ்த்தானிலிருந்து மீண்டும் டெல்லி வர ரயிலில் புறப்பட்டான்.

ரயிலில் அவனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.பாக் மற்றும் இந்திய காவலாளிகள் அனைவரின் பைகளையும் வரிசையாக சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். பீதியுற்ற ஆமிர் செய்வதறியாது திகைத்துப்போனான் பிடிபட்டால் என்ன ஆகுமென்று நினைத்துப்பார்த்தான்.தன் அருகில் இருந்த கழிவறைக்கு சென்று கண் படாத இடத்தில் கோப்புக்கள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டான்.ஆமிரின் மனது சற்று இளைப்பாறியது, ரயிலில் பயம் தொற்றியவனாக பயணம் செய்ய ஆரம்பித்தான்.

12.2.1998 அன்று டெல்லிக்கு திரும்பிய ஆமிர் தன் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வாங்கிய பெருட்களை எல்லாருக்கும் கொடுத்தான். அங்கே இருக்கும் நடப்புகளைப்பற்றி அனைவருக்கும் சொல்லி மகிழ்ந்தான்.

ஓரிரு நாட்களில் குப்தாஜி அவனை சந்திக்க வந்தார்.

“எங்கே கோப்புகள் மற்றும் புகைப்படங்கள்?? என்று கேட்டார்.

திருதிருவென முழித்த ஆமிர் நடந்ததை எடுத்துக்கூறினான்.

கோபத்தோடு குப்தாஜி ஆமிரை திட்டித்தீர்த்தார்.
“எல்லோரும் செய்கிறார்கள் இதை கூட உன்னால் செய்ய முடியாதா? நீ ஒரு “தேச துரோகி” உன்னை சும்மா விடப்போவதில்லை என மிரட்டினார்.ஆமிர் அவரை சமாதானம் செய்தும் கோபத்தோடு சென்றுவிட்டார் குப்தாஜி.

பிப்ரவரி 20.8.1998 அன்று ( குப்தாஜியை சந்தித்த சில நாட்கள் கழித்து) தொழுகைக்கு சென்றுவிட்டு தன் தாயாருக்காக சில மருந்து வாங்கச்சென்ற ஆமிரை ஒரு வாகனம் இடைமறித்து உள்ளே இருந்தவர்கள் வாகனத்தினுள் தூக்கிப்போட்டார்கள்.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஆமிர் ஒரு தனியறைக்கு கொண்டு செல்லப்பட்டான்.அந்த இரவு முழுவதும் சிலர் தவணை முறையில் வந்து அடித்துச் சித்தரத்தை செய்துவிட்டு போனார்கள். துணி எதுவும் இல்லாமல் அம்மணமாக்கப்ட்டான். அவ்வப்போது சிறு உறக்கம் மட்டுமே அன்றிரவு ஆமிருக்கு கிடைத்த விடுதலை.காலையில் சிலர் அவனிடம் வந்து வெற்றுத் தாள்களில் கையெழுத்து கேட்டார்கள் கையெழுத்து போட மற்றுத்தான். உயிர் போகும் அளவுக்கு மற்றொரு கையை சேதப்படுத்தினார்கள்,வலி பொருக்க முடியாமல் கத்திய ஆமிர் வேறு வழியின்றி கையெழுத்து போட்டுக்கொடுத்தான்.பின்னர் அவனின் பெற்றோருக்கு எழுதுவது போல கடிதம் எழுதி வாங்கி அவன் வீட்டிலிருக்கும் அவன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அவ்வப்போது ஆமிருக்கு உணவு கிடைக்கும்,உணவை விட துன்புறுத்தல்கள் அதிகமாகவே கிடைக்கும்.அடி, உதையோடு சேர்த்து வார்த்தைகளின் மூலம் தன் குடும்பத்தைப்பற்றியும் தன் மதத்தைப் பற்றியும் தகாத வார்த்தைகளைக் கொண்டு வன்மத்தோடு ஏசப்பட்டான். மின்சாரம் மூலமாகவும் அவனுக்கு வேதனையளிக்கப்பட்டது.எட்டு நாட்கள் ஆமிரின் பொழுது இப்படியே கழிந்தது,எட்டாம் நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான் ஆமிர்.

ஊடகங்களும் பொது மக்களும் வெறுப்புடன் ஆமிரை பார்த்தனர் ஆனால் அவனால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.நீதிமன்ற காவலில் சில நாட்கள் விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது மீண்டும் வேறொரு அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டான். அப்போது தான் தெரியவந்தது 26 அக்டோபர் 1997 அன்று நடந்த குண்டுவெடிப்புகள் உட்பட 18 குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆமிரை குற்றவாளி என கைது செய்துள்ளது காவல் துறை.எட்டு நாட்கள் அவன் சட்டவிரோத காவலில் எடுக்கப்பட்டு இந்த வழக்கிற்காக ஜோடிக்கப்பட்டுள்ளான்.

அவனின் கையெழுத்து,நாட்குறிப்புகள் எழுதி வாங்கியது எல்லாம்
இந்த வழக்கை ஜோடிப்பதற்காக என்பதை கூட தெரியாதவனாக இருந்துள்ளான். அதிர்ந்துபோன ஆமிரின் பெற்றோர்கள் நீதிமன்றத்திற்க்கு வந்தனர் அவர்களுக்கு எதுவும் புரியவில்லை.
எங்கே செல்வது யாரை அனுகுவது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றார்கள்.

பிறகு திஹார் சிறையில் அடைக்கப்பட்ட ஆமிர் அதற்க்காக வருத்தப்படவில்லை சற்று நிம்மதியடைந்தான் ஏன் தெரியுமா?
திகார் சிறையில் இருப்பதை விட போலீஸ் காவலில் இருப்பது மிகக்கொடியதாகவே எண்ணினான்.திஹாரில் ஒன்பது வருடகாலம் சிறை வாழ்க்கையை அனுபவித்தான்.மீதி காலம் காசியாபாத் சிறையில் இருந்தான்.பல மாதங்கள் தனி அறையில் அடைக்கப்பட்டான் உளவியல் ரீதியாக சோர்வடைந்தான்.சிறையில் இருந்த நூல்களை வாசிக்க ஆமிருக்கு நேரம் கிடைத்தது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ,சட்ட மாதிரிகளை படித்து சட்ட விழிப்புணர்வுகளை பெற்றான்.

ஆமிரின் பெற்றோர் துவண்டுபோய் இருந்த நிலையில் ஆறுதல் சொல்ல வேண்டிய சொந்தங்கள் ஆமிரின் குடும்பத்தை விட்டு ஒதுங்கி யிருந்தது.யாரும் ஆமிரின் பெற்றோருடன் பேசமாட்டார்கள்.ஆமிரின் தந்தை தொழுகைக்காக செல்லும் பள்ளிவாசலில் கூட யாரும் அவர் கூறும் முகமனுக்கு (ஸலாம்) பதில் கூற மாட்டார்கள்.துன்பத்தில் இருந்த ஆமிரின் பெற்றோரை இது மேலும் மன வேதனையடைய செய்தது.

வழக்கமாக ஆமிரின் நீதிமன்ற அமர்வுகளுக்கு தவராமல் வரும் தந்தை அன்று வரவில்லை.சில நோய்தொற்று காரணமாக மருத்துவ மணையில் சேர்க்கப்பட்டிருந்தார்.ஆமிருக்கு தந்தையை பார்த்து வர அனுமதி கிடைத்தது “மன்னித்துவிடு மகனே என்னால் இந்த முறை நீதிமன்றத்திற்க்கு வர முடியவில்லை ” என்று மருத்துவமணையில் கண்ணீரோடு தந்தை கூறினார்.சில மாதங்களிலேயே ஆமிரின் தந்தை காலமானர்.

ஒரு புறம் ஆமிர் சிறையில் இருக்க மறுபுறம் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்து.பல வருடங்கள் நடந்த விசாரணையின் இறுதியில் போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால் ஆமிருக்கு தண்டணை வழங்க முடியாது என தெரிவித்து நீதிமன்றம். 19 வழக்குகளில் 11 வழக்குகளிருந்து விடுவித்தது.

பிறகு 2012 ஆம் ஆண்டில் மொத்த வழக்கையும் டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.அரசு தரப்பில் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டவை ஆமிர் குற்றவாளி என்பதற்க்கு போதுமான சான்றாக அமையவில்லை

அதில் சில :
குண்டு வெடிப்பு நடந்த ரோசன் டி குல்பி என்ற கடையில் ஆமிர் இருந்திருக்கிறார் அதன் பிறகே குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
அங்கே அவர் இருந்தார் என்பதை மட்டும் வைத்து அவர் குற்றவாளி
என உறுதி செய்ய இயலாது ஏனென்றால் அங்கே பலரும் இருந்திருக்கின்றனர் இதில் அவரை மட்டும் தனிமைப்படுத்தி குற்றவாளியாக்க முடியாது 62 சாட்சிகளில் இரண்டு பேர் மட்டும்
அங்கே அவரை பார்த்ததாக கூறியுள்ளனர்.அது தவிர போலிசாரே சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.


ஆமிர் குண்டு தயாரிக்க பழைய இரும்பு கடையில் இரும்பு வாங்கியிருக்கிறார் என்று அரசு தரப்பு தெரிவித்தது ஆனால் ஆமிர் வாங்கினார் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லை அதைவிட இதில் கவனிக்கப்படவேண்டியது அந்த இரும்பு பாகங்கள் தேசிய இயற்பியல் சோதனைக்கூடத்திற்க்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது, அந்த ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை ஆய்வறிக்கை சோதனைக்கூடத்திலேயே அழிக்கப்பட்டுள்ளது.குண்டு தயாரிப்பதற்காக வேதிப்பொருள்கள் ஆமிர் வாங்கினார் என்பதற்கான எந்த சான்றும் இல்லை.அரசு தரப்பில் சமர்ப்பித்த எதுவும் அரசுக்கு சாதகமாக இல்லை என்பதால் தண்டனையை தள்ளுபடி செய்து ஆமிரை விடுவித்தனர்

இந்த கட்டுரைக்கான நோக்கம் எல்லா மதங்களிலும்,
இனங்களிலும்,நாடுகளிலும் வன்மூறையை கையிலெடுக்கும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் ஆனால் ஒரு முஸ்லீம் கைதாகும்போது அந்த செய்தி பரவும் வேகத்தையும் அதற்க்கு ஊடகங்கள் காட்டும் ஆர்வத்தையும் அவர்கள் நிரபராதி என நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்படும்போது அந்த செய்திகளை துண்டு செய்திகளாக கூட சொல்ல மறுப்பதன் நோக்கம் என்ன?

கைதானாலே ஒருவன் குற்றவாளியாகிவிட முடியுமா?ஆமிர் வழக்கு மட்டுமல்ல நிரபராதிகள் என விடுவிக்கப்பட்ட பட்டியலே இங்கு அதிகம் ஆனால் அதில் சில செய்திகள் கூட செய்தித்தாள்களிலோ, காட்சி ஊடகங்களிலோ காட்டப்படவில்லை. கைதானவர்கள் தான் நிரபராதி என்று தெரிந்தும் படிந்த கரை மாறாமல் மக்கள் மனதில் தீவிரவாதிகளாகவே பதியப்பட்டு இருப்பதை விட கொடுமையான தண்டனை இருக்க முடியுமா?

அரசு ஆமிருக்கு ஈட்டுத்தொகையாக அறிவித்த 5 லட்சம் ரூபாயைக்கூட பல மாதங்கள் போராடி மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டுக்கு பின்னரே பெற்றார்.14 ஆண்டு சிறை வாழ்கையையும் உடல் மற்றும் மனரீதியான தாக்குதல்களையும் இன்னும் முக்கியாக அவருடைய இளமை வாழ்வையும் எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப பெற்றிட முடியுமா ?

தொடரும் ….

  • கலீல் ரகுமான் புதுமடம்

Reference- பயங்கரவாதி என புனையப்பட்டேன் (Framed as a terrorist)

எடிட்டோரியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!