Featured Category

கோலன் பள்ளத்தாக்கு விவகாரம் – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை கூட்ட சிரியா வலியுறுத்தல்!

கோலன் குன்று பகுதிகளை இஸ்ரேலின் பகுதியாக அமெரிக்கா அறிவித்திருப்பது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்று சிரியா கருத்து தெரிவித்திருக்கிறது.

கோலன் குன்று பகுதிகளை இஸ்ரேலின் பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்து அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை கூட்ட சிரியா அழைப்பு விடுத்துள்ளது.

கோலன் குன்று பகுதிகளை, இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் பகுதியாக அறிவித்திருக்கும் ஐ.நா சபையின் தீர்மானத்தை மீறி, திங்களன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கோலன் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

1967 அரபு-இஸ்ரேலிய போரின்போது, சிரியாவில் இருந்த கோலன் குன்று மற்றும் ஹைட்ஸ் பகுதியில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதியை இஸ்ரேல் போரின் விளைவாக ஆக்கிரமித்திருக்கிறது.

AFP கண்டறிந்த ஒரு கடிதத்தில், பிரான்ஸ் மூலம் ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவிடம், சிரியா உடனடியாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய முனைந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கோலனின் தற்போதைய நிலையை பற்றியும், பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை நிரந்திர உறுப்பினர் நாடே மீறி உள்ளதை பற்றியும் பேசவும் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், பிரெஞ்சு தலைமையோ உடனடியாக செயலில் இறங்காமல், அதற்கான தூதர்கள் கோரிக்கை பற்றி பரிசீலனை செய்வார்கள் என்று அறிவித்தது. புதன்கிழமையன்று, இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையில் ஐ.நா.வின் UNDOF எனப்படும் அமைதிகாக்கும் உடன்படிக்கையை புதுப்பிக்கும் கூட்டத்தில் கோலானின் தற்போதைய நெருக்கடி நிலையை பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய திருப்புமுனை:

சிரியாவின் முக்கிய நட்பு நாடான லெபனானின் ஷியா இயக்கமான ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் அமெரிக்காவின் இந்த முடிவை எதிர்ப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சிரியாக்கள் தங்கள் நிலத்தை திரும்பப் பெறவும், ஃபலஸ்தீன் மக்கள் தங்கள் “சட்டபூர்வ உரிமைகளை” அடைவதற்கும் ஒரே வழி, “எதிர்ப்பு, எதிர்ப்பு, எதிர்ப்பு” என்றும் அவர் கூறியுள்ளார். டிரம்ப்பின் இந்த நடவடிக்கை “அரபு-இஸ்ரேலிய மோதலின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்” என்று அவர் விவரித்தார்.

மேலும், இது அமைதி உடன்படிக்கையான “நிலத்திற்கு பதிலாக சமாதானம்” என்ற கருத்தை தகர்த்தெறியும் செயல் என்று அவர் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். இந்த மாத கடைசியில் துனிஷியாவில் நடக்கவிருக்கும் உச்சி மாநாட்டில், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருது தெரிவித்தார். அடுத்து , இது உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் ஆர்பாட்டங்களை தடுக்க தவறிவிட்டது என்று சிரியாவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்த அரபு லீக்கிற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக பாதுகாப்பு சபையில் பங்குபெறும் ஐந்து ஐரோப்பிய நாடுகள், டிரம்ப்பின் இந்த முடிவை நிராகரித்து, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்தது.

வாஷிங்டனின் நெருங்கிய கூட்டாளிகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் போலந்துடன் இணைந்து, ஐரோப்பிய நிலையில் மாற்றம் இல்லை என அறிவித்து, கோலான் ஐ.நா. தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்ட சர்வதேச சட்டத்திற்கு இணங்க, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் நிலப்பகுதியாக கருதப்படும் என்றும் தெரிவித்தது.

அமெரிக்க தூதர் ஜொனாதன் கோஹன், மத்திய கிழக்கில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், அமெரிக்காவின் இந்த முடிவிற்கு காரணம் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் மற்றும் ஈரான் அரசு தான் என கூறியுள்ளார்.

மேலும் கோஹன் கூறுகையில், “கோலான் பள்ளத்தாக்கை சிரிய மற்றும் ஈரானிய நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வர அனுமதிக்கப்படுவது, அங்கே அசாத்தின் கண்மூடித்தனமான அட்டூழியங்களுக்கும், ஈரானின் துஷ்பிரயோகத்திற்கும் வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “கோலன் பள்ளத்தாக்கில், இஸ்ரேலின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யாத எந்த ஒரு அமைதி உடன்படிக்கையும் இருக்க முடியாது” என்று அவர் கூறினார்.

சீனாவும், ரஷ்யாவும், ஃபலஸ்தீன் நாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் இரு நாடுகளான, இந்தோனேசியா மற்றும் தென் ஆப்பிரிக்காவும், அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்பு நாடான குவைத்தும் குழு கூட்டத்தின் போது அமெரிக்க முடிவை எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர்.

  • சையத் அமீன்

மூலம் – அல்ஜஸீரா
https://www.aljazeera.com/news/2019/03/syria-requests-urgent-security-council-meeting-golan-190327065204978.html

எடிட்டோரியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!