Featured Category

காணாமால் போகும் கஷ்மீரி பெண்கள்

காணாம் போகும் கஷ்மீரி பெண்கள்கஷ்மீர் மாநிலத்தின் பெண்ணின போராளி அஞ்ஜும் ஸம்ரூதா ஹபீப், அனந்த்நாக் பகுதியில் இயங்கும் பெண்களுக்கான கல்விச்சாலையான, முஸ்லிம் ஃவ்வத்தீன் மர்கஸின் (Muslim Khawateen Markaz) தலைவரும், ஹூரியத் அமைப்பின் தலைவர்களுள் ஒருவருமான இவர் கடந்த 35 ஆண்டுகளாக கஷ்மீரின் போராளியாக அறியப்படுகிறார்.

1980களில் கஷ்மீரி பன்டிட்டுகளின் சமூகத்தில் வரதட்சணை கொடுமைகளும் அதனை தொடர்ந்த மர்ம கொலைகளும் நிகழ்ந்துகொண்டிருந்த காலம். வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் இந்திய குடும்பவியல் சட்டப்படி குற்றம் என தெரிந்தும், வரதட்சணை வராதபட்சத்தில் தீ விபத்துகளை ஏற்படுத்தி பெண்ணை கொல்வது கொலைக்குற்றம் என தெரிந்தும், மிக கொடூரமான நிலையில் பன்டிட்டுகள் சமூகத்தில் இது நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போது ஸம்ரூதாவின் அடுத்த வீட்டுப்பெண்ணான பால்சிநேகிதி வரதட்சணை கொடுமையால் கொல்லப்படுகிறாள். இதனை எதிர்த்து ஸம்ரூதா , காவல்துறை புகாரும், நீதிமன்ற வழக்கும் தொடுக்கிறார்…இப்படி ஆரம்பிக்கின்றது இந்த போராளிப்பெண்ணின் வாழ்க்கை.

Prisoner no.100 – An Account of My Nights and Days in an Indian Prison எனும் சுயசரிதை புத்தகத்தை எழுதி இந்தியாவை பரபரப்பிற்குள்ளாக்கியவர். 2003ல் பொடா சட்டத்தின் கீழ் சந்தேக கேசில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஸம்ரூதா , ஐந்து வருடம் அந்த சிறையில் தாமும் தம்மை போல பலரும் அனுபவித்த கொடுமைகளை புத்தகமாக கொண்டுவந்து அரசியல் உலகில் அடியெடுத்து வைத்தார். இந்தியாவின் அபுக்ரைப் – திஹார் ஜெயில் என கூறி அந்த புத்தகத்தை முடித்தவர் , அப்போதைய திகார் ஜெயிலில் அதிகாரியாக இருந்த கிரன் பேடியின் கவனத்திற்கு சில கொடுமைகளை வெளிக்கொணர்ந்தார். அப்போது கிரன் பேடி அந்த அவலங்களை சரிசெய்வதாக உத்தரவாதம் அளித்தார்.

ஸம்ருதா ஏன் சிறைக்கு சென்றார்?

1980களில் பன்டிட்டுகளின் வரதட்சணை கொடுமைகளை எதிர்த்து வழக்காடிக்கொண்டிருந்த அவருக்கு அவர்களின் வெளியேற்றத்திற்கு பிறகு கஷ்மீரி பெண்களின் குறைமட்ட கல்வி கண்களுக்கு பட்டது. எனவே பெண்களுக்கான கம்பியூட்டர் கல்விச்சாலை ஒன்றை தொடங்கினார். முற்றிலும் இலவசமாக இந்து-முஸ்லிம் பாகுபாடின்றி சமூகத்தில் பின்தங்கியிருந்த கஷ்மீரி பெண்களுக்கு கல்வி வழங்கி வந்தார். 90களின் தொடக்கத்தில் கஷ்மீர் கொஞ்சம் கொஞ்சமாக பதற்றமடைய ஆரம்பித்த நேரம். திடீர் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள்,ஆள்கடத்தல்கள்,தீவிரவாத அச்சறுத்தல்கள் என மெள்ள மெள்ள கஷ்மீர் சுடுகாடாக மாறிக்கொண்டிருந்த நேரம். கஷ்மீரி இளைஞர்களின் மூளைச்சலவை ஒருபுறமும் அவர்களை மீட்டெடுக்க வருகிறோம் என்கிற போர்வையில் இந்திய இராணுவம் உள்ளே புகுந்து தனது பங்கிற்கு எதிர்வினையாற்றியது மறுபுறம் என கஷ்மீர் சீரழிந்து கொண்டிருந்தது. திரைமறைவில் சிறுமிகளும் பெண்களும் திடீர் திடீரென காணாமல் போய்க்கொண்டிருந்தனர். அதிலும் என் கல்விநிறுவனத்திற்கு வரும் வழியில் தொலைந்து போனதாக புகார்கள் நிறைந்துகொண்டிருந்த நேரம். அவர்கள் எங்கும் உயிர்வாழ்கிறார்களா? கற்பழித்து கொல்லப்பட்டார்களா? பிற நாட்டுச்சந்தைகளுக்கு விற்கப்பட்டார்களா? எது தெரியாத நிலையில் நாங்கள். ஒரு வாரத்திற்கு 20 பெண்கள் வீதம் காணாமல் போய்கொண்டிருந்தனர்.

பெண்களின் கல்வியும் , பாதுகாப்பும் கேள்விக்குறியான அதே சமயம் அவர்களது வீட்டின் வருமானம் ஈட்டும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து குடும்பங்கள் பஞ்சத்தில் வீழ்ந்து கொண்டிருந்தது. அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற எங்களால் இயலாத போதும் அவர்களை தற்கொலைகளில் இருந்து மீட்க எங்களால் முடியும் என களமிறங்கிய பெண் போராளி ஸம்ரூதா. சோசியல் ஆக்டிவிஸ்ட், பொலிடிகல் லீடர் என்பதல்லாம் ஒரு சொல்..ஆனால் இவர் வாழ்ந்துகாட்டியது ஒரு சரித்திரம்.

1993ல் ஆல் பார்ட்டி ஹூரியத் கான்பிரன்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கஷ்மீரிகளின் வாழ்வாதாரத்திற்காக ஆங்காங்கு தொடங்கப்பட்ட சிறு சிறு சேவை குழுமங்களும் அமைப்புக்களும் ஹூரியத் கமிட்டியின் ஒரே குடைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என அவ்வழைப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த கமிட்டியில் இணைந்த ஒரே பெண் தலைவராக இருந்தவர் ஸம்ரூதா ஹபீப் ஆவார். ஹூரியத்தில் குழுமிய அனைத்து தலைவர்களின் எண்ணமும் கஷ்மீர் விடுதலை பற்றி மட்டுமே இருந்தது ஆனால் கஷ்மீரி பெண்களின் நிலை பற்றி பேச அங்கு வாய்ப்பு கிடைக்காதிருந்த நிலையில் பெண்களுக்கான சமூக-அரசியல் இடைவெளியை நிரப்பவும் ஆண்களில்லாத இல்லங்களில் பெண்களின் வருமானத்திற்கு வழிவகை செய்யவும் மற்றொரு அமைப்பினை தொடங்கினார் ஸம்ரூதா.

ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை இந்திய அரசு ஒருபுறமும் பாகிஸ்தான் அரசு மறுபுறமும் தங்களை வஞ்சித்து வருவதாகவும், தங்களது அரைவிதவை பெண்களும், ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்ட பெண்களும், ஆண் துணையை இழந்த்தன் மூலம் குடும்ப வருமானத்தை இழந்தும் பெற்றோரை இழந்து அனாதைகளாக்கப்பட்டவருக்கும் ஒரு மீடேற்றமும் தங்களால் செய்து தர இயலவில்லை என கண்ணீர் மல்க விவரிக்கிறார் இந்த போராளி. பெண்களுக்கான மர்கஸ் என்பதை உருதுவில் ஃவ்வத்தீன் என ஏன் வைத்தாய் என ஏழு மாதங்கள் என்னை சிறைப்படுத்தினார்கள். எங்களது தாய்மொழி உருது இல்லையா? அதற்கு எங்களுக்கு உரிமையில்லையா?

1991ல் குப்வாரா மாவட்டத்தில் நிகழ்ந்த குனான் மற்றும் போஷ்போரா கிராமங்களில் இராணுவ படையினரால் நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் பலாத்காரம் உங்களுக்கு நினைவிருக்கும். 13 வயது சிறுமி முதல் 55 வயது பெண்மணிகள் வரை, அவர்களில் ஊனமுற்ற பெண்ணும், மனநிலை சரியில்லாத பெண்ணும் அடுத்த மாதம் பிரசவிக்கப்போகும் 8,9 மாத கர்ப்பிணிகளும் இருந்தார்கள், என் தோழியின் மகளுக்கு மறுநாள் திருமணம் நடக்கவிருந்த்து ஆனால் அந்த இரவு தாயும் மகளுமாக ராணுவ வீரர்களால் நடு இரவில் வீடு புகுந்து கற்பழிக்கப்பட்டார்கள் வெட்டவெளியில் வைத்து கற்பழிக்கப்பட்ட பெண்களின் கணவர்கள் ,தந்தைகள்,மகன்கள் என அனைவரும் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள். இந்த சம்பவங்களில் பைத்தியமான பெண்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? ஒரு பெண்ணை எத்தனை ராணுவ வீரன் கற்பழித்தான் என கூட கணக்கில் வைத்துக்கொள்ள இயலாத அளவிற்கு கொடுமைகள் நிகழ்த்திய இந்திய ராணுவப்படையினரை நம்பி இன்றும் கூட வீடு விட்டு வெளியே வர பயம்கொள்ளும் பெண்கள் எங்களில் உண்டு. இரு கிராமத்து பெண்களும் அதற்கு பிறகு என்னவானார்கள் என்கிற ரிப்போர்ட்டை என்றாவது நீங்கள் படித்து பார்த்ததுண்டா? முடியாது, காரணம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை., அது முழுக்க முழுக்க உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பின் பெயரில் தான் நிகழ்ந்தது, ஆனால் அதன் விளைவுகளை நாங்கள் தான் சுமக்கிறோம். அந்த கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை திருமணம் முடிக்க யாரும் முன்வரவில்லை. அவர்களோடு சம்பந்தம் மட்டுமல்லாது எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள யாரும் தயாரில்லை, 28 வருடங்களாக நடைபிணமாக வாழும் அவர்களுக்கு இந்திய அரசு கொடுக்கும் சன்மானம் தேசவிரோதி பட்டம்.

இதுபற்றி பேசுவதற்காக எங்களுக்கு பல நாடுகள் அழைப்புகள் விடுத்தன. கஷ்மீரில் குனான்-போஷ்போரா சம்பவம் போல அனுதினமும் நடந்தேறிக்கொண்டே தான் இருந்தது, விசாரணைக்காக அழைத்துச்செல்லப்படும் மாணவன் என்னவாகிறான் தெரியவில்லை, 15,16 வயதில் காணாமல் போகும் அவர்கள் 20 வருடங்கள் ஆனாலும் தொலைந்துபோனவர் பற்றிய தகவல் தெரிவதில்லை. கஷ்மீரி பெண்களை பாலியல் சித்திரவதை செய்வதற்காகவே திஹாரில் இயங்கி வருகிறது அந்த சிறைச்சாலை. 10×10 அறையில் மூன்றுபேர், எங்களுக்கு காற்றுக்கூட புக முடியாத இருட்டறைகள். சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, தரை துடைப்பது, தண்ணீர் நிரப்புவது போன்றதான கடினமான வேலைகள் ஆனாலும் திறந்தவெளி கழிவறையில் தான் நாங்கள் கடன்களை முடிக்க வேண்டும்.

கஷ்மீரின் ஆண்கள் சந்தேக கேஸ்களில் மடிவதை போல அதேயளவு பெண்களும் கடத்தப்படுகிறார்கள். 1992 – 2017 ஆகிய 25 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் பெண்கள் எந்தவித தடயமும் இன்றி காணாமல் போயுள்ளனர். எங்களுக்கு நீதி ஞாயம் கிடைத்துவிடாதபடி இந்திய அரசு ஊடக வாயில்கள் உட்பட பத்திரிகை சுதந்திரம், கணினி சேவை என அனைத்து வாயில்களையும் அடைத்தே வைத்துள்ளது. வெளிக்கொணறப்படும் கொடுமை 1% மட்டுமே, எங்களில் நல்லகாலம் பிறந்து வேற்று மாநிலத்தவருடன் திருமணமாகி யாரும் வெளி மாநிலங்களுக்கு போய் இவற்றை வெளியே சொன்னால் மட்டுமே எங்களது கஷ்டங்கள் பிறருக்கு தெரியவரும்.

ஒட்டுமொத்த கஷ்மீரிகளும் தீவிரவாதி என பட்டம்கட்டப்பட்டுள்ளதால் வெளி மாநில திருமண பந்தங்களும் தற்போது இல்லை. வெளிமாநிலத்தில் இருந்து எங்களின் உறவினர் குழந்தைகளுக்கு சாக்லேட் கொண்டு வந்தால் கூட அது போதை வஸ்துவா என சோதனை செய்யப்படுகிறது. கல்வி நிலையங்களுக்கு போகும் பெண்களை பாதுகாப்பு படையினர் இடைமறித்து ஆயுதங்கள் இருக்கிறதா என பைஜாமாக்களை அவிழ்த்து காட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், இந்நிலையில் அவள் கல்வி கற்க வெளியேறி வரமுடியுமா? அவளது பெற்றோர் தான் அனுமதிப்பார்களா? எல்லா விதத்திலும் எங்களை முடக்கி வைத்திருக்கும் இந்திய ஆளும் அரசாங்கங்கள், இங்கே வெற்றிகரமாக தேர்தல் நடத்துகிறோம் என கூறுவதல்லாம் கண்துடைப்பு, தேர்தல்கள் நடத்தினால் 36% பேர் மட்டுமே சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பார்கள் மீதமுள்ள 67% பேருடைய நிலை என்ன? கஷ்மீருக்கு சுதந்திரம் கொடுக்க பொது வாக்கெடுப்பு நடத்த மட்டும் ஏன் தயக்கம்?

மேற்கூரிய விஷயங்களை முனைப்புடன் பேசும் யாவரும் இந்திய அரசிற்கு POTA கைதிகள் ஆவார்கள், அப்படித்தான் நானும் ஆக்கப்பட்டேன். அமெரிக்காவில் சென்று பேசியது, பாகிஸ்தானில் சென்று பேசியது, பாங்காக்கில் சென்று பேசியது என அனைத்தையும் வீடியோ ஆதாரமாக எடுத்து வைத்துக்கொண்டு என் மீது வழக்கு தொடுக்க இந்திய அரசு காத்துக்கொண்டிருந்த்து, 2003 பாங்காக்கில் உரையாற்றிவிட்டு தாய் இமிகிரேசன் வழியாக வந்துகொண்டிருக்கும் என்னை இடமறித்து நிறுத்துகிறார்கள், எனது கடவுச்சீட்டு ,விசா , ஐடி கார்டு அனைத்தையும் சோதனையிட்ட அதிகாரி ,நாம் தேடுவது இவரை அல்ல என்கிறார்… அவரை கைது செய் என எதிர்முனையில் இருந்து உத்தரவு பறக்கிறது. என்னை கைது செய்து , தீவிரவாத குழுக்களுக்கு கொடுக்க பாகிஸ்தானிடம் பணம் வாங்கினேன் என என் மீது வழக்கு தொடுக்கப்பட்டு நான் திஹாரில் அடைக்கப்படுகிறேன். அடுத்த ஐந்து வருடம் வெளியுலகத்தை காணப்போவதில்லை எனினும் என் கல்வி நிலையத்தில் பயின்றதற்காக சூரையாடப்பட போகும் பெண்களை நினைத்து கண்ணீர் வடித்தேன் என்கிறார் ஸம்ரூதா.

2008ல் வெளியே வந்த பிறகும் என்னால் அடங்கிப்போக இயலவில்லை. இன்னும் எங்கள் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுகிறார்கள், கஷ்மீர் விடுதலை மட்டுமே இதற்கு தீர்வு எனும் நிலையில் இந்திய மாநில கூட்டமைப்போடு எங்களால் எப்படி இணைய முடியும். கஷ்மீரை பாகிஸ்தான் நாட்டோடு இணைத்து விடுவார்கள் என இந்திய அஞ்சுமானால், நிச்சயமாக அது நடக்காது. காரணம் இந்திய ராணுவப்படை எங்களை கற்பழித்து கொல்கிறது, பாகிஸ்தானிகள் எங்களை முஹாஜிர்களாக கூட அல்லாமல் முசாபிர்களாக தான் நடத்துவார்கள். அவர்களில் எங்களை யாரும் கற்பழிக்கவில்லை கொலை செய்யவில்லை என்றாலும் இந்தியா அடைத்த ஊடக வாயிலை பாகிஸ்தான் எங்களுக்காக திறந்து வைத்தது, இங்கே அரங்கேறும் கொடுமைகள் அனைத்தும் பாகிஸ்தான் ஊடகங்கள் வாயிலாக வெளியேறி உலகிற்கு அறிவிக்கப்பட ஒரு வாய்ப்பளிக்கிறார்கள் அந்த ஒரு காரணத்திற்காக இங்குள்ளவர்களில் சிலர் பாகிஸ்தானை ஆதரிப்பது போல தெரியலாம் ஆனால் வாகா எல்லை வழியாக போகும் டெல்லி-லாகூர் பேருந்தாகட்டும், சம்ஜௌதா ரயிலாகட்டும் நாங்கள் சுதந்திரமாக அங்கே போய் வர முடியாது.

வெளிநாடு என்றல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், ஆகியவற்றை எங்களது குழந்தைகளுக்கு காணோளி காட்சிகளாக போட்டு காண்பிக்கும் போது இப்படி கூட இருக்குமா? இது மாதிரி கூட செய்வார்களா? இது எந்த நாடு? இங்கே நாங்கள் போக முடியுமா? என எங்களது குழந்தைகள் கேட்கும் போது நினைத்து பாருங்கள் எங்களின் நிலையை. சதா துப்பாக்கி சத்தமும், குண்டுவெடிப்பும், ஊரடங்கு உத்தரவும், சோதனைகள் என்கிற பெயரில் அத்துமீறல்களையுமே கண்டு அஞ்சியஞ்சி வாழ்ந்துவரும் அந்த பிஞ்சுகளின் உள்ளத்தில் ஒரு வசந்தத்தை உருவாக்கித்தந்திடவே நாங்கள் அலைபாய்கிறோம். போரும் இழப்பும் இல்லாத சமூகமாக வாழ எங்களுக்கும் ஆசை இல்லையா என்ன? அமைதியான சூழலில் அழகியல்களை காட்டி ஆபத்தில்லாத ஒரு வாழ்க்கையை எங்களது குழந்தைகளுக்கு உண்டாக்கித்தரவே பாடுபடுகிறோம்…இவை அனைத்தும் சாத்தியப்படும் வரை எங்களது தார்மீக உரிமைப்போராட்டம் தொடரும் அதுவரையிலும் எங்களுக்கு வாழ்வின் எல்லா நாளும் கருப்பு நாட்களே என கூறி முடிக்கிறார் அவர்.

-நஸ்ரத் S ரோஸி

எடிட்டோரியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!