Featured Category

ஈரான் மீதான அமெரிக்காவின் அடாவடித்தனமும் ஈரானின் பதிலடிகளும்!

அமெரிக்க அதிபராக இஸ்ரேல் சார்பு ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் மத்திய கிழக்கின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு அரபு நாடுகளும் முழு ஒத்துழைப்பை வழங்குவதுதான் பெரும் நகை முரண்.

அரபு நாடுகளின் பாதுகாப்புக்கு ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை முன்வைத்தே அமெரிக்கா தன் அத்தனை அடாவடித்தனங்களையும் செய்துவருகிறது.

இதன் மிகச் சமீபத்திய நகர்வானது, அமெரிக்காவின் பெரிய விமானம் தாங்கி போர்கப்பலான ஆப்ரகாம் லிங்கனை பாரசீக-ஓமான் வளைகுடா பகுதியில் கொண்டுவந்து நிறுத்தி போர் அபாயத்தை உருவாக்கியிருப்பதாகும்.

அணு ஆயுத சோதனை விசயம் தொடர்பாக ஈரானை முன்வைத்து அமெரிக்கா செய்து வந்த பயமுறுத்தல் விளையாட்டு, 2015 ஆம் ஆண்டு ஈரான், அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் ஜெர்மனி, ஃப்ரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செய்து கொண்ட அணு ஆயுத சோதனை ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

மத்திய கிழக்கில் அமைதி என்பதை விரும்பாத ஒரே நாடு இஸ்ரேல். ஒபாமாவின் அப்போதைய அந்த ஒப்பந்ததைக் கடுமையாக எதிர்த்திருந்த இஸ்ரேல், அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து ட்ரம்புக்கு ஆதரவு கொடுத்து கடுமையான லாபியிங்கில் ஈடுபட்டது அனைவரும் அறிந்த விசயம்.

செய்த உதவிக்குப் பிரதிபலனாக, அதிபரானதன் பின்னர் மத்திய கிழக்கின் மிக முக்கிய இரு விசயங்களில் ட்ரம்ப் இஸ்ரேலுக்குச் சாதகமாக அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். அதில் முதல் விசயம் பலஸ்தீன். இஸ்ரேலின் கனவு கொள்கையான ஜெரூசலேமை இஸ்ரேலின் தலைநகராக்குவதற்கான அனைத்து வேலைகளையும் ட்ரம்ப் முன் நின்று செய்கிறார். அதன் ஒரு பகுதிதான், ஜெரூசலேமில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை நகர்த்திய நிகழ்வு. இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக, பலஸ்தீனியர்களின் ஜெரூசலேமை இஸ்ரேலுக்கு ட்ரம்ப் தாரை வார்த்துள்ளார். ஐநாவின் ஒப்பந்தம், சர்வதேச சட்ட வரம்பு என அனைத்தும் இவ்விசயத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டது. இதனால் எழுந்த அரபுநாடுகளின் எதிர்ப்பைச் சமாளிக்க ட்ரம்ப் கைவைத்த அடுத்த விசயம்தான் ஈரான்.

2015 ல் ஒபாமா முன் நின்று போட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை ட்ரம்ப் ஒருதலைபட்சமாக எந்தக் காரணமும் முன்வைக்காமல் 2018 ல் முறித்துக் கொள்வதாக அறிவித்ததோடு, ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்தார். ஈரானிடமிருந்து எந்த நாடும் எண்ணெய் வாங்கக் கூடாது, மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை கொண்டுவரப்படும் என்ற பெரியண்ணன் மிரட்டலும் அதில் உண்டு.

ஒப்பந்தத்தின் அங்கங்களான பிற முக்கிய ஐரோப்பிய நாடுகளில் எதுவும் ஒப்பந்தத்தை முறிக்காத நிலையில், அமெரிக்காவின் அந்த அறிவிப்பு ஒருதலைபட்சமானது. இதனை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என ஈரான் பதிலடி கொடுத்ததோடு,

சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி முதலான நாடுகளுடன் எண்ணெய் விற்பனையைத் தொடர்ந்து வந்தது. அதுவும் டாலரில் அல்லாமல், அந்தந்த நாடுகளின் சொந்த கரன்சியில்!

இந்நிலையில், குறிப்பிட்ட இந்நாடுகளுக்கு இம் மே மாதம் 2 ஆம் தேதிவரை சலுகை வழங்கி அமெரிக்கா கெடுவிதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா, ஜப்பான், சீனா, தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய ஆசிய நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் அனைத்தும் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன.

அமெரிக்காவின் இந்நகர்வுக்குப் பதிலடி கொடுக்கும் முகமாக, பாரசீக வளைகுடாவிலுள்ள ஹோர்முஸ் ஜலசந்தியினை மூடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இந்த ஜலசந்தி, ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையில் வெறும் 35 கிலோமீட்டர் அகலமே கொண்ட நெருங்கிய நீர்வழி. அதிலும் பெரிய எண்ணெய் டேங்கர்களெல்லாம் செல்வதற்கேற்ற நீர்வழிதடம் வெறும் இரண்டு மைல் அகலமேயுண்டு. மிகக் குறுகிய இடமே போக்குவரத்துக்கு உகந்தது என்பதால் கப்பல்கள் மோதி விடாமல் தவிர்க்க, இரு மைலுக்கு இரு வசத்திலுமாக கப்பல்கள் செல்வதற்கும் வருவதற்குமென தனித்தனி வழித்தடங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளன. இந்த இடம் முழுவதையும் ஓமானும் ஈரானும் சொந்தம் கொண்டாடுகின்றன. இப்பகுதியிலுள்ள பல தீவுகள் ஈரானுக்குச் சொந்தமானவை. அத்தீவுகளெல்லாம் ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கடும்பாதுகாப்புடன் எந்நேரமும் போருக்குத் தயாரான ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

ஈரான் இந்த ஜலசந்தியை மூடும்பட்சத்தில், சவூதி, துபை, குவைத், பெஹ்ரைன், கத்தர், ஈராக் முதலான அரபு நாடுகளிலிருந்து உலகச் சந்தைக்கு வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு தடைபடும். இந்த நீர்வழித்தடம் மூலம் சுமார் 30 சதவீதம் எண்ணெயும் 20 சதவீதம் எரிவாயுவும் உலக சந்தைக்கு விற்பனைக்குச் செல்கிறது. எனவே, இந்த ஜலசந்தி அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. இதனை ஈரான் மூடினால், ஒரே நாளில் உலக எண்ணெய் சந்தை நிலைகுலையும்.

இதற்குப் பதிலடி கொடுக்கவே தற்போது அமெரிக்கா தன்னுடைய பெரும் விமானம் தாங்கி போர் கப்பலான ஆபிரகாம் லிங்கனை இந்த ஜலசந்தியின் அருகே கொண்டு வந்து நிறுத்தி போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவது சட்ட விரோதமானது என ஈரானுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அத்துடன், ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையினைச் சர்வதேச தீவிரவாத படையாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மற்றொரு நாட்டின் படையினைத் தீவிரவாத படையாக அமெரிக்கா அறிவிப்பது இது முதல்முறையாகும்.

இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில்,

வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்காவின் அத்தனை படைகளும் தீவிரவாத படைகள் என ஈரானும் அறிவித்துள்ளது. அத்துடன்,

”அமெரிக்கா சைக்காலஜிக்கல் போரை நடத்துகிறது. யுத்தக் கப்பலைக் கொண்டு வந்து பயமுறுத்தி பணிய வைக்க நினைக்கிறது. இது நம்பிக்கையின் மீதான தாக்குதலாகும். அமெரிக்கா எங்கள் நம்பிக்கையைப் பயமுறுத்தல் மூலம் உடைக்க நினைக்கிறது. எங்களுக்கு அமெரிக்காவின் அந்த நம்பிக்கையை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் நன்மைக்காக அமெரிக்கா வளைகுடா பகுதியில் செய்யும் இது போன்ற அத்தனை அடாவடித்தனங்களாலும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. அவர்களின் இந்த அச்சுறுத்தலைக் கண்டு ஈரான் பயப்படப்போவதில்லை. ஈரானின் பொருளாதாரத்தைத் தகர்ப்பதே அமெரிக்காவின் லட்சியம். அதற்குத் துரதிஷ்டவசமாக வளைகுடாவிலுள்ள சில அரபு நாடுகளும் ஆதரவு கொடுக்கின்றன. இதனால் முதல் பாதிப்பே தங்களுக்குத்தான் என்பதை இந்த அரபு நாடுகள் புரிந்துகொள்ளவில்லை.

அமெரிக்காவின் ஒருதலைபட்சமான இந்த நடவடிக்கையிலிருந்து ஈரானின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. எனவே, எண்ணெய் வியாபாரத்துக்கு நாங்கள் க்ரே மார்க்கட்டைப்(Gray Market – இது சட்டரீதியான சந்தை. ஆனால், விற்கும் பொருளின் ப்ராண்ட் நேம் இருக்காது)பயன்படுத்துவோம். அத்துடன், எங்களுடன் ஒத்துள்ள தோழமை நாடுகளிடம் சர்வதேச வியாபாரங்களை டாலர் அல்லாத கரன்ஸியில் செய்வதற்கு வலியுறுத்துவோம். அமெரிக்கா தம் எல்லைவிட்டு நடத்தும் பணப்பரிமாற்றங்களைக் கண்காணிக்கவும் கோருவோம். இது, எல்லை தாண்டிய தீவிரவாத அமைப்புகளுக்குக் கள்ளத்தனமாக ஆயுதம் வாங்க உதவுகிறது. அதனை முடக்குவதற்கான அனைத்து வேலைகளையும் தொடர்வோம்.”என அறிவித்துள்ளது.

அமெரிக்கா தற்போது ஈரானை வைக்கும் குறி, பலஸ்தீனை மொத்தமாக கபளீகரம் செய்வதற்கானது; அங்கே இஸ்ரேல் நடத்தும் கொடூர படுகொலைகளையும் சட்டவிரோத ஆக்ரமிப்புகளையும் விட்டு சர்வதேச கவனத்தைத் திசைதிருப்புவதற்கானது என்பதை அமெரிக்காவுக்கு ஆதரவு நல்கும் அரபு நாடுகள் புரிந்துகொள்ளாததுதான் இதில் மாபெரும் ஆச்சரியமான விசயம்!

-அப்துர் ரஹ்மான் ஜமாலுதீன், கட்டார்

எடிட்டோரியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!