Featured Category

டிக்டாக் – ஒரு கலாச்சாரப் படுகொலை

டிக்டாக் — சமீபகாலமாக , குறிப்பிட்டு கூறவேண்டுமானால் கடந்த 2018 முதலே, உலகினை ஆட்டிப்படைத்து வரும் ஆண்ட்ராய்டு செயலி தான் டிக்டாக். சீனாவை சேர்ந்த Bytedance எனும் செயலி தொழில்நுட்ப நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. சீனாவில் Douyin என்கிற பெயரோடு பிரபலமாகிய இந்த செயலியில் எதை வேண்டுமானாலும் பதிவாக்கி அதற்கேற்ப பாடல் அல்லது இசை சேர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிட இயலும்.

2018ம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 100 மில்லியல் மக்கள் இதனை தரவிறக்கம் செய்துள்ளனர் என்பது வரலாறு. உருவாக்கப்பட்டு ஓராண்டு கழித்து உலகில் சுமார் 75 மொழிகளில் , 150 நாடுகளில் இந்த டிக்டாக் பிரபலமாகிவிட்டது. 3 முதல் 60 நொடிகளில் நீங்கள் எதை வேண்டுமானாலும் காணொளிப்பதிவாக எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டுவிட முடியும். இந்த காணொளிக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது.

சாதாரண மக்கள் மட்டுமல்லாது உலகிலுள்ள சினிமா பிரபலங்கள், பாப்பிசை ராப்பிசை பாடகர்கள், நடனக்கலைஞர்கள்,அரசியல்வாதிகள் என அனைவரது ஆண்ட்ராய்டு போனுக்குள்ளும் நுழைந்தும் ஆதிக்கம் செய்த இச்செயலி இந்தியாவை விட்டுவைக்குமா என்ன? இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்துமே சினிமா தான். சினிமாவில் எதை காட்டினால் நம்புவார்கள். சினிமா எனும் கனவு தொழிற்சாலை இல்லாமல் ஒருநாளும் இயங்காது இந்தியர்களின் தினங்கள். சினிமா பைத்தியங்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் என்ற நிலையில் உலகில் வேறாரை விடவும் டிக்டாக் இந்தியாவில் தான் எல்லைமீறி போய்க்கொண்டுள்ளது என்பதும் உண்மை.

டிக்டாக் கிடைத்த வரப்பிரசாதமாக ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்த சினிமா கனவுகள் நனவாகத்தொடங்கின என்பதை விட எத்தனை அவலட்சணமாக நடந்துகொண்டாலும் அதையும் ரசிக்க ஒரு ரசிக்கர் பட்டாளம் அவர்களுக்கு உருவாக தொடங்கியது. திட்டித்தீர்த்தாலும் வாயார புகழ்ந்தாலும் அதை அமோகமாக ஏற்று குதூகலித்தனர் டிக்டாக்வாசிகள் எனலாம்.

ஆரம்பத்தில் காமெடி டயலாக்குகளால் நிரம்பி வழிந்த டப்ஸ்மாஷ் கலாச்சாரம் பிறகு சினிமா ஆடல் பாடல் என தன் தடத்தை மாற்ற தொடங்கியது இந்திய சமூகம். அதற்கு வசதியாக இந்தியாவின் அனைத்து மொழி சினிமாத்துறை இசைக்களஞ்சிய்மும் அதில் இருந்து கைகொடுத்தது. சினிமா என்றால் ஆபாசம் இல்லாமலா..? ஆபாசமும் கவர்ச்சியும் நிறைந்த பாடல்களும் , அங்க அசைவுகளை அறைகுறையாக காட்டும் ஆடல்களும் தலைதூக்கின. பெரும்பாலும் பெண்கள் தங்களது தனியறை காட்சிகளை பிறர் பார்க்க படம்பிடித்து காட்டினார்கள். தங்களிடமுள்ள கவர்ச்சியை பிறர் பாராட்ட வேண்டும் என்கிற அந்த மனபிறழ்வு நோயில் வீழ ஆரம்பித்தனர். அரைகுறை ஆடை, அரைநிர்வாணமானது, முழுநிர்வாணமாக ஒரு நூல் தான் இடைவெளி எனும் நிலைக்கு படுபாதகமான நிலையில் போய்க்கொண்டிருந்த இந்த டிக்டாக் சீரழிவால் மெள்ள மெள்ள தலைகாட்ட ஆரம்பித்த முறையற்ற காதல். காமுகர்களின் பிரச்சனையால் டிக்டாக் பூதாகாரமானது. தன்னுடன் பாடிய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கைவிட்டது முதல் கைவிடப்பட்ட பெண் நீதி கேட்டு வீடியோக்கள் பதிவிட்டு தனக்கான ஆதரவு தேடியது வரை.

அனைத்து சமூக பெண்களும் விதிவிலக்கில்லாமல் டிக்டாக்கில் இறங்கிவிட்டனர் என்றாலும் அவர்களை திட்டித்தீர்த்த ஆண் பெண் கூட்டமும் அங்கேயே இருந்தது. உனக்கு வேண்டாம் என்றால் டிக்டாக்கை மூடிட்டு போ – என்கிற தடித்த வனங்கள் ஒவ்வொரு வீடியோவின் கீழும் பின்னூட்டங்களாக குவிந்த நிலையிலும் யாரும் அதனை கண்டுகொள்வதாக இல்லை. ஆண்களுக்கு இணையாக நாங்களும் ஆடுவோம், அவர்களுக்கு நிகராக நாங்களும் பாடுவோம் என களமிறங்கிய பெண்கள்தான் பாதிப்பிற்குள்ளானார்களே தவிர ஆண்கள் யாரும் எந்த தலைகுனைவையும் சந்திக்கவில்லை என்பது கசப்பான உண்மை

இந்த சமூகமும் அதன் கண்ணியமும் ஒட்டுமொத்தமாக பெண்களின் கற்பிலும் அதன் ஒழுக்கத்தின் மீதும் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணராத பெண்கள், கண்டிக்கும் ஒவ்வொரு நபரையும் ஆணாதிக்கவாதி என்பார். புத்திமதி கூறும் பெண்களை உங்கள் வீட்டு ஆணுக்கு புத்திமதி கூறுங்கள் என்பார்..தன் வீட்டின் கலாச்சார சீரழவுக்கு வாசல் திறந்து விடுகிறோம் என அறியாமலே.

பெண் போல தன்னை அலங்கரித்துக்கொண்டு சினுங்களுடன் குலுக்கல்நடனமாடிய ஒரு மூன்றாம்பாலின ஆண் ஒருவர், பின்னூட்டமிட்டவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தொடங்கி, மியூசிக்கலியில் சந்தித்த ஒருவனுக்காக பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவனுடன் ஓடவிருந்த பெண் வரையிலுமாகட்டும், அந்நிய நாட்டில் உழைத்துக்கொட்டும் கணவனை மறந்து டிக்டாக்கில் வந்து மேக்கப் போட்டு பாட்டு பாடிய நடுத்தர வயதுப்பெண் தன்னை எதிர்த்து பேசியவர்களுக்காக ஒரு கண்டன வீடியோ போட்டு , அதை பெரிதாக்கிய ஒரு இளைஞர்கூட்டம், அவரை வீடுவரை போய் நேரில் மிரட்டிவிட்டு வந்த பிறகு அந்த கணவர் அந்த பெண்ணுக்கு தலாக் மிரட்டல் விட்டது முதல், ஒருவருக்கொருவர் நையாண்டி செய்து வீடியோக்களை பகிர்ந்து அதை கண்டித்து மறுவீடியோ பதிந்து அதிலொரு பெண் தாம் மன அழுத்தம் காரணமாக தூக்கமாத்திரை சாப்பிட்டேன்..நான் செத்தால் நீங்கள் தான் பொறுப்பு என பகிரங்கமாக இரண்டு மூன்று நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு மிரட்டியது வரையிலும் அத்தனை ஆபத்துகளும் பெண்களுக்கு தான் விழைந்த்தே தவிர ஆதிக்கம் செய்யும் ஆண்களுக்கு அல்ல எனும்போது அதிலிருந்து விலகியிருக்க வேண்டியது பெண்கள் தானே.

எங்களது சுதந்திரம் எங்களது உரிமை எங்களது இஷ்டம் என பெண்களில் சிலர் பெண்ணிய கருத்துக்களை வீராவேசம் பேச தொடங்கி அவர்கள் வித்திட்டது சீரழிவிற்குத்தானே தவிர பெண்களை காப்பாற்றும் அறத்திற்கு அல்ல. பெண்கள் என்றால் அவர்களுடைய இலக்கணம் இது தான், அவர்களின் வரம்புகள் இவை தான் பாரம்பரியமும் மதச்சட்டங்களும் தீவிரமாக வலியுற்றுத்தும் காலத்தில் வாழ்ந்துகொண்டே நாங்கள் அவற்றை மீறுவோம் என எல்லைமீறி தங்களது வாழ்க்கையை தொலைக்கும் பெண்களை என்ன சொல்ல? பெண் சுதந்திரம் என வாய்கிழிய பேசுவோர் எந்த பெண்ணின் மானத்தையும் கற்பையும் காப்பாற்ற முன்னால் வந்து நிற்கப்போவதில்லை. மாறாக எல்லாம் நடந்து முடிந்த பிறகு அந்த பெண்ணுக்கு பாதிப்புண்டாக்கியவரை சாபமிடவும் திட்டித்தீர்க்கவும் தான் வந்து நிற்பார்கள்.

நீங்கள் பாடுவது சூப்பர் தோழி, உங்கள் நடனம் அசத்தல் தோழி என பாராட்டு பின்னூட்டம் இடுவோரின் வீட்டுப்பெண்கள் பொத்திவைத்து பாதுகாக்கப்பட்டுக்கொண்டிருப்பார்களே…இவர்களது பாராட்டுக்காக நாம் ஏன் நமது கண்ணியத்தை இழக்க வேண்டும் என யாரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை.. காரணம் பாராட்டும் பெருமையும் முகஸ்த்துதியும் ஒருவகை போதை போன்றது அது நமது சிந்தையை கலக்கி அடிமைப்படுத்திவிடும்.

சமூகத்தில் அவரவர் உரிமை என விபச்சார விடுதிகளை மூடக்கோரி கூட யாரும் குரல் கொடுக்க நினைக்காத இடத்தில் கலாச்சார சீரழிவைத்தரும் டிக்டாக்கை தடை செய்யக்கோரி பொறுப்பான அரசியல் களத்தில் இருக்கும் மஜகவின் தமீமுன் அன்சாரி மற்றும் பாமகவின் ராமதாஸ் போன்றோர் கூட டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்ததை கூட நம்மால் கூறாமல் தவிர்க்க இயலாது,

இவர்களின் கோரிக்கையை ஏற்ற தகவல் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனும் , இதற்காக முன்னெடுப்பு செய்தார். சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை டில்லியின் உச்சநீதிமன்றம் விலக்கிவிட்டது. இதுபற்றி கருத்து கூறிய டிக்டாக்கின் இந்திய பிரிவு தலைவர் சுமேதாஸ் ராஜ்கோபால் என்பவர், டிக்டாக்கினால் கலாச்சார சீரழிவு என்பதைவிட தங்களது திறமைகளை வெளிக்காட்ட ஒரு சிறந்த வடிகாலாக இது அமைந்துள்ளது தவிர நிறைய பேர் டிக்டாக்கின் மூலம் திரைப்பட வாய்ப்புகள் பெற்று பயனடைவதாக கூறி டிக்டாக்கினை தடை செய்வது இயலாத காரியம் என ஏளனமாக கைவிரித்தார்.

100 பேரில் யாரோ ஒருவர் சினிமாத்துறைக்குள் அனுப்பப்படுகிறார் என்றாலும் மீதமுள்ள 99 பேர் சீரழிந்தாலும் சரியே என்கிற கார்ப்பரேட் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர்களால் என்ன நியாயம் கிடைத்துவிடும். நாமாக பார்த்து நமது குழந்தைகளை அவற்றிலிருந்து தடுத்து வைக்காவிடில் நாளை மேற்கூறிய சம்பவங்களில் ஒன்று நம் வீட்டிலும் நடப்பதை தடுக்க இயலாது. முறையற்ற காதல், ஆபாச நடனங்கள், கிண்டலடித்த காரணத்திற்காக தற்கொலை, மட்டரகமான கமண்ட்டு எழுதியதற்காக கொலை மிரட்டல்கள், அந்நிய ஆணுடன் வெளியில் தெரியும் தங்களது சாதிப்பெண்களை காப்பாற்றுகிறோம் என களமிறங்கி கலவரங்களுக்கு வித்திடுவது என டிக்டாக் ஏற்படுத்தியிருக்கும் சீரழிவுகளை பட்டியலிட்டுக்கொண்டே போகும் அதேவேளையில் இதை அனைத்தையும் சத்தமில்லாமல் கண்டுரசித்து கொண்டிருக்கும் இளைய சமுதாயம் என்னமாதிரியான சைக்கலாஜிகல் மூடில் வளருவார்கள் என்பதை சிந்தித்து பார்த்தால் டிக்டாக், மியூசிக்கலி,டப்ஸ்மாஷ் மற்றும் இதர செயலிகளால் சமுதாயத்திற்கு எந்தவித நன்மையும் இல்லை என பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஆண்கள் செய்யும் டிக்டாக்கால் பிரச்சனைகள் பெரும்பாலும் மூழுவதில்லை ஏன்? அதன் காரணம் எந்த ஆணையும் யாரும் போகப்பொருளாக பார்ப்பதில்லை. ஆணின் அங்க அசைவுகளை பெண்களோ சக ஆண்களோ கூட ரசித்து புகழ்வதில்லை. மேலதிகமாக அவர்களது உலகம் சாதாரண கேலி கிண்டலோடு நின்றுவிடுகிறது. அதுவும் அவர்களது குறிப்பிட்ட அங்கங்களை யாரும் விமர்சிப்பதில்லை. மிக அதிகமாக சாதியை பற்றி பெருமை பேசுபவர்களாக இருப்பார்கள் அதனை தட்டிக்கேட்பவர்களாக இருப்பார்கள்..சாதிப்பிரச்சனை குறித்த சட்டங்கள் இங்கே கடுமையானது என்பதால் ஆண்களும் கூட கொஞ்சம் பயந்து தான் டிக்டாக்கில் இறங்குகிறார்கள், ஆனால் பெண்ணை கற்பழித்தவன் பகிரங்கமாக நடமாடினாலும் அவன் மைனர் வயசு எனக்கூறி தையல் மெஷின் கொடுத்து ஊக்குவிக்கும் நாட்டில் வாழும் பெண்களின் நிலை மிக பரிதாபகரமானது.

மீண்டும் மீண்டும் பெண்களுக்கே தான் உங்களது அறிவுரையா என்றால்…ஆம்… ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே என்பது நமது மூத்தோர் பழஞ்சொல்லாகும். ஒரிடத்தை புனிதமாக்குவதும் அதே இடத்தை சர்வநாசம் ஆக்குவதும் ஒரு பெண்ணின் கைகளிலே உள்ளது. பெண் கெட்டுவிட்டால் அந்த பரம்பரையே கெட்டது என்பதாகத்தான் நாமும் நமது வாழ்வியல் சூழலும் அமைந்துள்ளது. போகாத தூரம் போய் வந்தாலும் பெண்களை ஏசாத ஒரு முன்னேறிய சமூகமாக நாம் இன்னும் வளரவில்லை. பெண்ணியம் எல்லாம் கதைகளுக்கும் கற்பனைகளுக்கும் அழகாக தெரியுமே தவிர யதார்த்த வாழ்க்கைக்கு, சமூகச்சங்கிலிகளால் சிக்குண்ட சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.

நாம் வாழும் சமூகத்தை பொறுத்தவரை நம் வீட்டில் அசம்பாவிதம் நடக்காதவரை அவை யாவும் நமக்கு ஒரு கிசுகிசு மாத்திரமே.அதை வேடிக்கை பார்ப்பார்கள், பிரச்சனைகளுக்கு தார்மீக பொறுப்பு ஏற்க கூறி அரசினை கண்டித்து முகநூல் பதிவுகள் விடுவார்கள் அது மட்டுமே அவர்களுக்கு தெரியும். ஆனால் ஒருமுறை பாதிப்படைந்த ஒரு பெண் மானமரியாதையோடு வாழ இயலாது. நன்மையைவிட தீமைகளே அதிகமிருப்பதால் டிக்டாக் போன்ற அரக்கனிடமிருந்து ஒதுங்கி வாழ்வதே சிறந்தது.

-ரோஸி எஸ் நாசரேத்

எடிட்டோரியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!